உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபடுத்தி ஹொரவ்பொத்தானையில் கைதுசெய்யப்பட்ட மூவரிடம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஐவர் உயர் நீதிமன்றில் மன்னிப்பு கோரினர்

0 172

எப்.அய்னா

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களின் பின்னர் அது தொடர்பில் சந்­தேக நபர்­க­ளாக கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்பட்­டி­ருந்த, பின்னர் நீதி­மன்றால் விடு­விக்­கப்­பட்ட ஹொரவ்­பொத்­தானை, கெப்­பித்­தி­கொல்­லாவ பகு­தியைச் சேர்ந்த மூவ­ரிடம், ஹொரவ்­பொத்­தானை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி உள்­ளிட்ட ஐவர் உயர் நீதி­மன்றில் சிங்­கள சம்­பி­ர­தாயப்படி மரி­யாதை செலுத்தி மன்­னிப்பு கோரினர். இந்த சம்­பவம் கடந்த ஏப்ரல் முதலாம் திகதி பதி­வா­னது.

தாம் சட்ட விரோ­த­மாக கைது செய்­யப்பட்டு, ஒரு மாதத்­துக்கு மேலாக தடுப்புக் காவலின் கீழ் வைக்­கப்பட்­டி­ரு­ந்த­மை ஊடாக தமது அடிப்­படை உரிமை மீறப்­பட்­டுள்­ள­தாக கெப்­ப­தி­கொல்­லாவ பகு­தியை சேர்ந்த சைனுல் ஆப்தீன் இர்பான், சைனுல் ஆப்தீன் கலீ­ப‌­துல்லாஹ், நஹார்கே சக­ரீய்யா ஆகிய மூவர் தாக்கல் செய்த அடிப்­படை உரிமை மீறல் மனுக்கள் விசா­ர­ணைக்கு வந்த போதே பொலிஸார் இவ்­வாறு மன்­னிப்பு கோரினர்.

இந்த சம்­பவம் தொடர்பில், குறித்த நபர்­களை மீள ஒரு போதும் விசா­ரணை செய்யப் போவ­தில்லை எனவும் இதன்­போது ஹொரவ்­பொத்­தானை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி உள்­ளிட்­டோ­ருக்­காக ஆஜ­ரா­கிய அரசின் சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் மாதவ தென்­னகோன் உயர் நீதி­மன்றில் உறு­தி­ய­ளித்தார்.

உயர் நீதி­மன்ற நீதி­யர­சர் எஸ். துரை­ராஜா தலை­மை­யி­லான நீதி­யர­சர்­க­ளான குமுதி விக்­ர­ம­சிங்க மற்றும் அச்­சல வெங்­கப்­புலி ஆகியோர் முன்­னி­லையில் இவ்­வ­ழக்கு விசா­ரணை செய்­யப்பட்­ட­போதே இந்த மன்­னிப்பு கோரலும் உறு­தி­ய­ளிப்பும் இடம்­பெற்­றது.

மனுக்­களின் பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்பட்­டுள்ள அப்­போ­தைய ஹொரவ்­பொத்­தானை பொலிஸ் பொறுப்­ப­தி­காரி ரொஷான் சஞ்­ஜீவ, அப்­பொலிஸ் நிலை­யத்தின் சார்ஜன் பிரே­ம­ரத்ன, சார்ஜன் சிசிர, கான்ஸ்­ட­பிள்­க­ளான ஜய­தி­லக மற்றும் கெப்­ப­தி­கொல்­லாவ பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி ஆகி­யோரே தனிப்­பட்ட ரீதியில் மன்றில் ஆஜ­ராகி இவ்­வாறு மரி­யாதை செலுத்தி மன்­னிப்புக் கோரி­ய­வர்­க­ளாவர்.

இதன்­போது பிர­தி­வா­தி­க­ளுக்­காக மன்றில் ஆஜ­ரான பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் மாதவ தென்­னகோன் மன்றில் பின்வரு­மாறு குறிப்­பிட்டார்.

‘இந்த மனு­தா­ரர்­க­ளுக்கு எதி­ராக ஹொரவ்­பொத்­தானை நீதி­மன்றில் பயங்­க­ர­வாத தடை ச‌ட்­டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. கடந்த 2022 ஆம் ஆண்டு அவ்­வ­ழக்கில் இருந்து அவர்கள் விடு­வித்து விடு­தலை செய்­யப்­பட்­டனர்’ என தெரி­வித்தார்.

உயிர்த்த தின தாக்­கு­தல்­களின் பின்னர் கிடைக்கப் பெற்ற தக­வ­லுக்கு அமைய 5 பேர் மொத்­த­மாக ஹொரவ்­பொத்­தானை பொலி­ஸாரால் கைது செய்­யப்பட்­டுள்­ளனர். அவர்­க­ளது வங்கிக் கணக்­கு­களில் 100 கோடி ரூபா வரை பணம் சஞ்­ச­ரித்­துள்­ள­தாக அப்­போது ஊட­கங்­க­ளிலும் செய்­திகள் வெளி­யி­டப்­பட்­ட­தாக மன்றில் மனு­தா­ரர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

எனினும் பின்னர் நீதி­மன்றம் தம்மை முற்­றாக விடு­வித்­த­தா­கவும் அவ்­வா­றான நிலையில் தமது அடிப்­படை உரிமை மீறப்பட்­டுள்­ள­தா­கவும் மனு­தா­ரர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர்..

இந்த மூன்று மனு­தா­ரர்­க­ளுக்கும் மேல­தி­க­மாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள எம்.பி. நெளபர், எல்.பி.ஜெஸ்மின் ஆகியோரும் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில் அவை இன்னும் நிலுவையில் உள்ளன.

மனுதாரர்களுக்காக சட்டத்தரணி எமர்ஸா டீகல் மற்றும் தாஹிரா லாபிர் ஆகியோர் முன்னிலையாகினர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.