சவூதி அரேபிய இளவரசர் தலால் பின் அப்துல் அஸீஸ் தனது 87 ஆவது வயதில் மரணம்

0 539

சவூதி அரேபிய மறுசீரமைப்புக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வந்த இளவரசர் தலால் பின் அப்துல் அஸீஸ் தனது 87ஆவது வயதில் மரணமடைந்ததாக கடந்த சனிக்கிழமை சவூதி அரேபிய அரண்மனை அறிவித்தது.

அல்சௌத் குடும்பத்தின் மூத்த உறுப்பினரும் கோடீஸ்வர முதலீட்டாளர் அல்வலீத் பின் தலாலின் தந்தையுமான இளவரசர் தலால் பின் அப்துல் அஸீஸ் நீண்டகாலமாக சுகவீனமுற்றிருந்தார்.

தொடர்பாடல் அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் உள்ளடங்கலாக 1950கள் மற்றும் 60களில் பல்வேறு முக்கிய பல பதவிகளை அவர் வகித்தார்.  அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்பட வேண்டுமெனக் கோரிய குழுவுக்கு தலைமை தாங்கியதோடு சவூதி அரேபிய அரச குடும்பத்தின் பரம எதிரியாக இருந்த முன்னாள் எகிப்திய ஜனாதிபதி கமால் அப்துல் நாஸருடன் கூட்டிணைந்து செயற்பட்டதனால் சவூதி அதிகாரிகளால் கடவுச்சீட்டு முடக்கப்பட்டதையடுத்து இளவரசர் தலால் பின் அப்துல் அஸீஸ் 1960களில் வெளிநாட்டில் வாழவேண்டியேற்பட்டது.

1964 ஆம் ஆண்டு பைஸல் பின் அப்துல்அஸீஸ் அல்சௌத் மன்னராகப் பதவியேற்றதன் பின்னர் நாடு திரும்பிய இளவரசர் தனது ஆக்ரோஷமான செயற்பாடுகளைக் குறைத்துக்கொண்டார். 2011 ஆம் ஆண்டு உலகின் முதல்நிலை எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி அரேபியாவின் மன்னர் பதிவிக்கான வாரிசுரிமையினை மேற்பார்வை செய்யும் சபையிலிருந்து விலகினார்.

சவூதி பெண்களுக்கு பணியாற்றுவதற்கான உரிமை, வாகனம் செலுத்துவதற்கான உரிமை என்பவற்றிற்கு ஆதரவளித்த இவர் சவூதி அரேபியாவின் இராணுவச் செலவுகள் குறைக்கப்பட வேண்டும் எனவும் கோரிவந்தார்.

தலைநகர் றியாதில் ஞாயிற்றுக்கிழமை ஜனாஸா தொழுகை இடம்பெறும் என சவூதி அரேபிய அரண்மனை அறிவித்தது.

இளவரசர் தலால் றியாதிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார். எனினும் எங்கு வைத்து மரணம் சம்பவித்தது என்பது தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.