பேரம் பேசும் சக்தியை முஸ்லிம் தலைமைகள் இழந்துவிட்டன

ஐக்கிய சமாதான முன்னணி தவிசாளர் பஷீர்

0 604

அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டதன் மூலம் முஸ்லிம் அரசியலில் பேரம் பேசும் சக்தியையும் தனித்துவத்தையும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இழந்து விட்டன என ஐக்கிய சமதானக் கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் ஷேகுதாவூத் தெரிவித்தார்.

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாடு காத்தான்குடி ஹோட்டல் பீச்வே மண்டபத்தில் நேற்று நடைபெற்றபோது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த மாநாட்டில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி உட்பட கட்சியின் பொருளாளர், உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள், அதன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபுக்கான பிராத்தனை இடம் பெற்றதுடன் கட்சியின் புதிய உயர்பீட உறுப்பினர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் கணக்கறிக்கை, ஆண்டறிக்கை என்பன வாசிக்கப்பட்டன.

இதில் தொடர்ந்துரையாற்றிய பசீர் ஷேகுதாவூத், தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியில் இருப்பது போல இன்று இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் எதிர்க்கட்சியில் இருந்திருந்தால் சரியாக சமத்துவமாக தமிழ் அரசியல் சக்திகளோடு தமிழ் பிரதிநிதிகளோடு இருந்து பேசுகின்ற சக்தி முஸ்லிம்களுக்கு கிடைத்திருக்கும். போய் அமைச்சுப்பதவிகளை எடுத்தவுடனே அந்த சக்தி இல்லாமாலாகிவிட்டது. அதுவும் இன்னுமொரு பகுதியினைகூட எடுப்பதற்கு இன்னுமொரு போராட்டம் செய்கின்றார்கள்.

இந்த அமைச்சுப்பதவிகளினால் முஸ்லிம் சமூகத்திற்கு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை.

அதைத்தான் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் இனப்பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம்களுக்கு சமத்துவமான பங்கு வேண்டுமெனக் கூறினார். தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. அந்த நீதி இன்னுமொரு சமூகத்தை சுட்டுவிடக் கூடாது.

அதற்காக சரியான உரையாடல்களை செய்வது, சரியான பேரம் பேசுதல்களை முஸ்லிம் சக்திகள் செய்ய வேண்டும்.

அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் உலகில் வாழ்கின்ற முஸ்லிம்களை சீரழிக்ககூடிய வகையிலே அமைதி, சமதானம் என்ற பெயருடான இஸ்லாமிய மார்க்கத்தை வன்முறை என்று கூறுகின்றன. இஸ்லாமிய மார்க்கத்தை அடிப்படைவாதம் என இந்த அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் கூறுகின்றன.

அப்படி இட்டுக்கட்டி முஸ்லிம்களுக்குள்ளேயே குழுக்களை உருவாக்கி அவர்களை மோதவிட்டு பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கி முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைத்து முஸ்லிம்களின் இரத்தத்தை பாய வைத்து இவ்வாறு முஸ்லிம்களை சீரழிக்கின்றனர். இதற்காக மறைந்த எமது தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் இரத்தக் கண்ணீர் வடித்தார்.

இன்றிருக்கின்ற அரசாங்கம் என்பது மேற்குலகிற்கான கைப் பொம்மையாகும். தமது பொருளாதாரக் கொள்கைளை கொண்டு வருவதற்கும் இந்தப் பிராந்தியத்தில் இலங்கையை இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் மேற்குலகுக்கும் தாரை வார்த்துக் கொடுக்கின்ற அரசியலை செய்கின்றவர்களுடன் தான் முஸ்லிம்களும் இருக்கின்றனர்.

முஸ்லிம்களின் பெரும்பாலான வாக்காளர்கள் இவ்வாறுதான் இருக்கின்றனர். அவ்வாறு முஸ்லிம்கள் மாற்றப்பட்டுள்ளார்கள்.

ஆகவேதான் இந்தப் புதிய சூழ்நிலையை கையாள்வதற்கு, முஸ்லிம்களுடைய அரசியல் அபிலாசைகளை ஏற்றுக் கொள்வதற்கு மறைந்த தலைவர் அஷ்ரப் சென்ற பாதையில் இன்னும் சீர்திருத்தங்களை செய்துகொண்டு முன்னேறுவதற்கு அஷ்ரப் கொண்டுவந்த கொள்கைகளை விடாப்படியாக இருந்து அந்தக் கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

தனிக்கட்சி பறிபோய் விட்டது. தனியலகை கொலை செய்து விட்டனர் முஸ்லிம்கள். இன்று தமிழ் மக்கள் பலமாக இருக்கின்றார்கள். தமிழ் மக்களுக்கு பலாலியில் ஒரு விமானம் நிலையம் உள்ளது. திருகோணமலையில் ஒரு துறைமுகம் இருக்கின்றது. காங்கேசன்துறையில் ஒரு துறைமுகம் இருக்கின்றது.

ஒரு தனித்தேசிய இனமாக காலூண்றி தனது மண்ணிலே நிற்பதற்கான அனைத்து வளங்களையும் தமிழ் தலைவர்கள் அன்று செய்தார்கள். அந்த ஜனநாயக அரசியலைத்தான் நமது தலைவர் எம்.எச்.அஷ்ரபும் செய்தார்.

தென்கிழக்கு அலகு என்பதை பிரகடனப்படுத்தினார். ஒரு தேசிய இனத்துக்கான பிராந்தியம் என்பது முக்கியமாகும்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதிகளை நிலத்  தொடர்பற்ற வகையில் இணைத்து அதனை ஓர் அலகாக ஆக்குவது என்பது தோல்வியடைந்த திட்டமல்ல.

தனிநபர்கள் தமது சொந்தக் கம்பனியாகக் கட்சியை பாவிக்கின்றார்கள். தமது குடும்ப நலன்களை பார்ப்பதற்காக, தமது பொருளாதாரத்தினை விருத்தி செய்வதற்காக முற்சிக்கின்றார்கள். தன்னுடைய சொல்லைக் கேட்டு அடிமைகளாகப் பின்னால் வரவேண்டுமென நினைக்கின்றார்கள். அதற்கேற்ற வகையில் கட்சிகளின் யாப்புக்களை திருத்துகின்றார்கள்.

எனவேதான், தலைவர் அஷ்ரபின் தனித்துவமான   கொள்கையை மீண்டும் நிலைநிறுத்துகின்ற கட்சியாகத்தான் இந்த ஐக்கிய சமதானக் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளோம்.

எங்களுக்குப் பதவி தேவையில்லை. எனக்கும் ஹஸன் அலிக்கும் இருக்கின்ற ஒரேயொரு கடமை இவ்வளவு அனுபவங்களையும் சுமந்துவந்து சரியான பாதைக்கு முஸ்லிம் அரசியலை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதேயாகும் என மேலும் அவர் தெரிவித்தார்.

 

Leave A Reply

Your email address will not be published.