குஜராத் பல்கலைக்கழக விடுதியில் ரமழான் மாத இரவுத் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்

0 156

எம்.ஐ.அப்துல் நஸார்

குஜராத் மாநி­லத்தில் பல்­க­லைக்­க­ழக வளா­கத்தில் தொழு­கையில் ஈடு­பட்­டி­ருந்த முஸ்லிம் மாண­வர்கள் மீது தாக்­குதல் நடத்­திய சம்­பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இந்­தி­யாவின் மேற்கு குஜராத் மாநி­லத்தில் உள்ள பல்­க­லைக்­க­ழக விடு­திக்குள் நுழைந்த தீவிர வல­து­சாரி கும்­ப­லொன்று, புனித ரமழான் மாதத்தின் இரவு நேர தொழு­கையில் ஈடு­பட்­டி­ருந்த மாண­வர்­களை தாக்­கி­யதில் குறைந்­தது நான்கு வெளி­நாட்டு மாண­வர்கள் காய­ம­டைந்­த­தாக உள்ளூர் ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

பிர­தமர் நரேந்­திர மோடியின் சொந்த மாநி­ல­மான குஜ­ராத்தில் அமைந்­துள்ள பல்­க­லைக்­க­ழ­கத்தில் நடை­பெற்ற இந்தத் தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக உள்ளூர் பொலிஸார் தெரி­வித்­துள்ள அதே­வேளை, ‘தாக்­கு­தலில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்கப்­ப­ட­வுள்­ள­தாக’ இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை உறு­தி­ய­ளித்­தது.

குஜராத் மாநி­லத்தின் அக­ம­தா­பாத்தை தள­மாகக் கொண்ட பல்­க­லைக்­க­ழக வளா­கத்தில் பள்­ளி­வாசல் இல்­லா­ததால், ரமழான் தராவீஹ் தொழு­கைக்­காக மாணவர் விடு­தியில் சனிக்­கி­ழமை இரவு ஒரு சிறிய முஸ்லிம் மாண­வர்கள் குழு ஒன்­று­கூ­டி­ய­தாக உள்ளூர் ஊட­கங்­க­ளுக்குத் குறித்த மாண­வர்கள் தெரி­வித்­தனர். சிறிது நேரத்­தி­லேயே, ஒரு கும்பல் தடிகள் மற்றும் கத்­தி­க­ளுடன் விடு­திக்குள் நுழைந்து, அவர்­களைத் தாக்­கி­ய­தோடு அவர்­களின் அறை­களை சேதப்­ப­டுத்­தி­யது என அவர்கள் மேலும் தெரி­வித்­தனர்.

’15 மாண­வர்கள் கொண்ட குழு தொழு­கையில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்­த­போது மூன்று பேர் வந்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என கூச்­ச­லிட ஆரம்­பித்­தனர். நாங்கள் அங்கு தொழு­கையில் ஈடு­ப­டு­வ­தற்கு ஆட்­சே­பனை தெரி­வித்­தனர்’ என ஒரு மாணவர் கூறி­ய­தாக உள்ளூர் ஊட­கங்கள் தெரி­வித்­தன.

‘சிறிது நேரம் கழித்து, சுமார் 250 பேர் வந்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூச்­ச­லிட்­டனர். அவர்கள் கற்­களை வீசி­ய­தோடு விடுதி சொத்­துக்­க­ளையும் சேதப்­ப­டுத்­தினர். ‘அவர்கள் அறை­க­ளுக்குள் வைத்தும் எங்­களைத் தாக்­கினர். அவர்கள் எமது மடிக்­க­ணி­னிகள், தொலை­பே­சி­களை சேதப்­ப­டுத்­தி­ய­தோடு எமது மோட்டார் சைக்­கிள்­க­ளையும் உடைத்­தனர், அது மட்­டு­மல்­லாது காற்றுச் சீராக்கி மற்றும் ஒலிக் கட்­ட­மைப்­புக்­க­ளையும் அவர்கள் தாக்கி அழித்­தனர்’ என ஆப்­கா­னிஸ்­தானைச் சேர்ந்த ஒரு மாணவர் உள்ளூர் என்­டி­ரிவி வலை­ய­மைப்­பிடம் தெரி­வித்தார்.

எக்ஸ் சமூக வலைத்­த­ளத்தில் வெளி­யி­டப்­பட்ட காணொ­ளிகள் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட மாணவர் விடு­தி­க­ளையும், ஒரு கும்பல் மாண­வர்­களின் மோட்டார் சைக்­கிள்­களை நீண்ட தடி­களைக் கொண்டு தாக்கி அழித்­த­தையும் காட்­டின.

‘எங்­களால் இப்­ப­டி­யான சூழலில் வாழ முடி­யாது,’ என ஒரு ஆபி­ரிக்க மாணவர் ஒருவர் தனது விடு­தியில் இருந்து படம்­பி­டித்த காணொ­ளியில் கூறி­யுள்ளார்.

பின்­ன­ணியில், பலத்த கூச்­சலும், குறித்த கும்பல் பொருட்கள் அடிப்­பது, உடைப்­பது, அடித்து நொறுக்­கு­வது போன்ற சத்­தங்­களும் கேட்­கின்­றன.

‘நாங்கள் படிப்­ப­தற்­காக இந்­தியா வந்தோம், இப்­போது ரமழான் காலம். முஸ்­லிம்கள் தொழு­கையில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருக்கும் நேரத்தில் நாங்கள் தாக்­கப்­ப­டு­கிறோம். இப்­போது அவர்கள் எமது மோட்டார் சைக்­கிள்­களை உடைக்­கி­றார்கள், எல்­லாமே கீழ்த்­த­ளத்தில் நடை­பெ­று­கின்­றன’ எனவும் அவர் தெரி­வித்தார்.

ஆப்­கா­னிஸ்தான், உஸ்­பெ­கிஸ்தான், இலங்கை, பங்­க­ளாதேஷ் மற்றும் பல ஆபி­ரிக்க நாடு­களைச் சேர்ந்த மாண­வர்கள் தாக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, இரு மாண­வர்கள் பலத்த காய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வரு­வ­தாக இந்­தியன் எக்ஸ்­பிரஸ் செய்தி இணை­ய­தளம் தெரி­வித்­துள்­ளது.

சூத்­தி­ர­தா­ரி­க­ளுக்கு எதி­ராக
கடு­மை­யான நட­வ­டிக்கை
‘இரவு 10:30 மணி­ய­ளவில் மாண­வர்கள் குழு­வொன்று தொழு­கையில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்­தனர். சுமார் 20- , 25 பேர் வந்து, நீங்கள் ஏன் இங்கு தொழு­கையில் ஈடு­ப­டு­கின்­றீர்கள்? தொழு­கையில் ஈடு­பட வேண்டும் என்றால் பள்­ளிக்கு செல்ல வேண்டும் என்று அவர்­க­ளிடம் கூறி­யி­ருக்­கி­றார்கள்,’ என அக­ம­தாபாத் பொலிஸ் ஆணை­யாளர் ஜி.எஸ் மாலிக் ஞாயிற்­றுக்­கி­ழமை ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் தெரி­வித்தார்.

‘அவர்­க­ளுக்குள் வாக்­கு­வாதம் ஏற்­பட்டு, வெளியில் இருந்து வந்­த­வர்­களால் கற்கள் வீசப்­பட்டு அவர்­க­ளது அறைகள் அடித்து நொறுக்­கப்­பட்­டன.’ 20, 25 பேருக்கு எதி­ராக முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும், குற்றம் சாட்­டப்­பட்­ட­வர்­களுள் ஒருவர் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார். இந்த சம்­பவம் தொடர்பில் விசா­ரணை நடத்த ஒன்­பது குழுக்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன எனவும் அவர் தெரி­வித்தார்.

தாக்­குதல் தொடர்பில் 5 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். மாநில அரசு ‘சூத்­தி­ர­தா­ரி­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்கும்’ என எக்ஸ் சமூக வலைத்­த­ளத்தில் இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது,

‘இந்த தாக்­கு­தலில் இரண்டு வெளி­நாட்டு மாண­வர்கள் காய­ம­டைந்­தனர். அவர்­களுள் ஒருவர் மருத்­துவ சிகிச்­சைக்குப் பின்னர் வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து வெளி­யே­றி­யுள்ளார்’ என ஊடகப் பேச்­சாளர் ரந்தித் ஜெய்ஸ்வால் தெரி­வித்தார்.

பிர­தமர் நரேந்­திர மோடி மற்றும் உள்­துறை அமைச்சர் அமித் ஷா ஆகி­யோ­ரிடம் ‘உறு­தி­யான செய்­தியை வெளிப்­ப­டுத்த இந்த விட­யத்தில் தலை­யி­டு­வார்­களா ? என தெற்கு நக­ர­மான ஹைத­ரா­பாத்தைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அசா­துத்தீன் ஓவைசி கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

‘என்­ன­வொரு வெட்­கக்­கேடு. முஸ்­லிம்கள் தங்கள் மதத்தை அமை­தி­யாக கடைப்­பி­டிக்கும் போது மட்­டுமே உங்­க­ளது பக்தி மற்றும் மத முழக்­கங்கள் வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன’ என அவர் எக்ஸ் சமூக வலைத்­த­ளத்தில் பதி­விட்­டுள்ளார்.

‘உள்­நாட்டு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வெறுப்பு இந்­தி­யாவின் நல்­லெண்­ணத்தை அழித்து வரு­கி­றது’ என அவர் இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் எஸ்.ஜெய்­சங்­கரைக் டேக் செய்து பதி­விட்­டுள்ளார்.

இந்து தீவிர வல­து­சாரிக் குழுக்கள் பொது இடங்­களில் முஸ்­லிம்கள் தொழு­கையில் ஈடு­ப­டு­வ­தற்கு எதி­ராக பிரச்­சாரம் செய்­கின்­றன. இந்த மாத ஆரம்­பத்தில், தலை­நகர் புது­தில்­லியில் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் வீதி­யோ­ரத்தில் தொழு­கையில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்த முஸ்லிம் ஆண்­களை காலால் உதைத்­ததன் கார­ண­மாக பத­வி­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்டார்.

சர்வதேச மாணவர்கள் ‘கலாச்சார கூருணர்வு’ தொடர்பில் பயிற்சி பெற வேண்டும் என குஜராத் பல்கலைக்கழக உபவேந்தர் டாக்டர் நீர்ஜா ஏ குப்தா உள்ளூர் ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.

‘இவர்கள் வெளிநாட்டு மாணவர்கள், நீங்கள் வெளிநாடு செல்லும்போது, நீங்கள் கலாச்சார கூருணர்வு தொடர்பில் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த மாணவர்களுக்கு திசைமுகப்படுத்தல் அவசியமாகும். நாங்கள் அவர்களுடன் அமர்ந்து, கலாச்சாரம் தொடர்பான திசைமுகப்படுத்தலை வழங்குவோம், அவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பது தொடர்பிலும் கலந்தரையாடுவோம்,’ எனவும் குப்தா தெரிவித்ததாக என்டிரிவி மேற்கோள் காட்டியுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.