வடக்கில் தொடர் மழை 45 ஆயிரம் பேர் பாதிப்பு

மீட்பு பணிகளில் படைவீரர்கள்

0 890

வடமாகாணத்தில் கடந்த நான்கு நாட்களாக பெய்யும் கனத்த மழை காரணமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அத்தோடு மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரையில் இந்த ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த 13 ஆயிரத்து 646 குடும்பங்களை சேர்ந்த 44 ஆயிரத்து 959 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 2,661 குடும்பங்களைச் சேர்ந்த 8539 பேர் 52 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ஐந்து மாவட்டங்களில் பாரிய பாதிப்பு கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 31,234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் 1021 குடும்பங்களைச் சேர்ந்த 3589 பேரும், கண்டாவளையில் 7386 குடும்பங்களைச் சேர்ந்த 24,032 பேரும், பச்சிளம்பாலையில் 1068 குடும்பங்களைச் சேர்ந்த 3613 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 1394 குடும்பங்களைச் சேர்ந்த 4649 பேர் 26 நலன்புரி  முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ள அனர்த்தத்தின் காரணமாக 4 வீடுகள் முழுமையாகவும் 148 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய வெள்ளத்தின் காரணமாக ஐந்து பிரதேச செயளாலர் பிரிவுகளைச் சேர்ந்த 12,651 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, ஒட்டுச்சுட்டானில் 739 குடும்பங்களைச் சேர்ந்த 2397 பேரும், புதுக்குடியிருப்பில் 1891 குடும்பங்களைச் சேர்ந்த 6330 பேரும், துணுக்காய் பிரதேச செயலகப்பிரிவில் 310 குடும்பங்களைச் சேர்ந்த 928 பேரும், கரைத்துரைப்பற்றில் 822 குடும்பங்களைச் சேர்ந்த 2915 பேரும், மாந்தை கிழக்கு பிரதேச செயலமகப்பிரில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 81 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 1240 குடும்பங்களைச் சேர்ந்த 3805 பேர் 25 நலன்புரி  முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ள அனர்த்தத்தின் காரணமாக 2 வீடுகள் முழுமையாகவும் 3 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

மன்னார்

கடும் காற்று மற்றும் வெள்ளத்தின் காரணமாக மன்னார் மாவட்டத்தின் இரு பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் நகரில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேரும், நானாட்டான் பிரதேச செயலகப்பிரிவைச் சேர்ந்த 12 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் நகரில் பாதிக்கப்பட்ட 85 பேரும் நலன்புரி நிலையமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மற்றும் யாழ்ப்பாணம்

வவுனியா வடக்கு பகுதியில் வெள்ள அனர்த்தத்தின் காரணமாக 77 குடும்பங்களைச் சேர்ந்த 281 பேரும், யாழ். மாவட்டத்தின் மருதங்கேணி பிரதேசத்தில் 273 குடும்பங்களைச் சேர்ந்த 708 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிவாரணங்களை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்பு

கடும் மழை மற்றும் வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள மக்களுக்குத் தேவையான உடனடி நிவாரணங்களை வழங்குவதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடமாகாண ஆளுநர், இராணுவத் தளபதி மற்றும் அரசாங்க அதிபர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஞாயிற்றுக்கிழமை பணிப்புரை விடுத்துள்ளார்.

இன்றும் மழை தொடரும்

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் காணப்படுகின்ற தளம்பல்நிலை காரணமாக வட மாகாணத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய பலத்த மழை தொடருமென எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார். வவுனியா, மன்னார் மாவட்டங்களிலும் மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் 75 மில்லி மீற்றரை விட அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதிகூடிய மழை வீழ்ச்சி

கடந்த 21ஆம் திகதி முதல் பெய்யும் கடும் மழையின் பின்னர் வவுனியா மாங்குளத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 365.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.  மேலும் ஒட்டுசுட்டானில் 302.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கிளிநொச்சியில் 273.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், ஆனையிறவில் 220.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், அநுராதபுரம் அதாவெட்டுனவெவ பிரதேசத்தில் 201 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் ஆகக் கூடிய மழைவீழ்ச்சியாக பதிவாகியுள்ளன.

மீட்பு பணிகள்

வெள்ளம் மற்றும் மழையின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளில் சுமார் 1078 இராணுவ வீரர்களும், பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஐந்து மாவட்டங்களிலும் மீட்பு பணிகளுக்காக 36 விமானப்படையினரும், 644 இராணுவத்தினரும், 398 பொலிஸாரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.