உலமா சபை முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகள் சிறையில் ஞானசாரரை நலம் விசாரித்தனர்

0 1,353

ஊடகவியலாளர் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேர ரை, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் மற்றும் முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் அசாத் சாலி ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று முனதினம் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

ஞானசார தேரர் சுகவீனமுற்று சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையிலேயே மேற்படி குழுவினர் அவரைச் சந்தித்துள்ளனர்.

இக் குழுவில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பேச்சாளர் அஷ்ஷெய்க் பாஸில் பாரூக், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் பிரதித் தலைவர் ஹில்மி அகமட், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி, சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹமட் ரசூல்தீன் ஆகியோர் பங்கேற்றனர்.

இச்சந்திப்பு தொடர்பில் அசாத் சாலி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்துக்கும் பொதுபலசேனா அமைப்புக்குமிடையே கசப்புணர்வு நிலவிவந்தது. இதனை நீக்கி பரஸ்பரம் இரு சமூகங்களும் அன்னியோன்யத்தை வளர்த்துக்கொள்ளும் நோக்கில் இருதரப்பும் பலசுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தன. அந்த சந்தர்ப்பத்திலேயே ஞானசார தேரர் சிறைவாசம் சென்றதால் எமது முயற்சியிலும் தடையேற்பட்டது .

முஸ்லிம் அமைப்புகளின் முக்கியஸ்தர்களும் பொதுபலசேனா செயலாளர் ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினரும் இரு சமூகங்களுக்கும் மத்தியில் நிலவிவரும் சந்தேகங்கள், கசப்புணர்வுகளைப் போக்கி பரஸ்பரம் அன்னியோன்னியத்தை வளர்த்துக்கொள்ளும் நோக்கில் சுமார் 5– 6 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு வந்தோம்.

இதன் விளைவாக காலி கிந்தோட்டையில் இடம்பெற்ற சம்பவத்துக்கும் ஞானசார தேரர் நேரில் சென்று, பிரச்சினையை மேலும் வளரவிடாது சுமுக நிலையை ஏற்படுத்தினார். அதேபோன்று மியன்மார் அகதிகள் விடயத்திலும் உருவான விரும்பத்தகாத விடயங்களுக்கும் பரிகாரம்காண தேரர் பங்களிப்புச் செய்தார். தொடர்ந்து எழுந்த திகன சம்பவத்தின்போது மரண வீட்டுக்கு நேரடியாகச் சென்று அசம்பாவிதங்கள் மேலும் தொடராது அங்கும் போதிய தெளிவினை ஏற்படுத்தினார்.

எங்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த கலந்துரையாடல் கூட்டங்கள் மூலமே இரு சமூகங்களுக்குமிடையே இத்தகைய ஐக்கிய நிலை ஒன்று உருவாகி வந்தது. இந்த சந்தர்ப்பத்திலேதான் பிறிதொரு வழக்கொன்றின் காரணமாக தேரர் சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டது. அதனால் வளர்ந்து வந்த சுமுக நிலை தற்காலிகமாக தடைப்பட்டுப் போயுள்ளது. இப்போது ஞானசார தேரர் சிறையில் சுகயீன முற்றிருப்பதை அறிந்தே நாம் அவரை சுகம் விசாரிக்கச் சென்றோம்.

ஏற்கனவே நாம் அவருடன் நடத்திய பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின்போது எங்களுக்குள் இருந்த எத்தனையோ பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு கொண்டோம். எமது மதம், சமூகம் குறித்த தெளிவினைப் புரியவைத்தோம். அனாலேயே அன்று தலைதூக்கி வந்த நிலைமை சீராகியது. புரிந்துணர்வொன்று ஏற்பட்டது. அதனாலேயே இன்று வரையும் நிம்மதியாக வாழும் நிலை உருவாகியிருக்கிறது.

எதிர்காலத்திலும் பொதுபலசேனா எம்முடன் பேசி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம் அசம்பாவிதங்கள் எழாது தவிர்த்துக்கொள்ளலாம். எதனையும் பேசித்தீர்த்துக் கொள்வதன் மூலமே ஐக்கியமாக வாழும் நிலையை ஏற்படுத்தலாம் என்றார்.

இதேவேளை “அவரது விடுதலைக்கான முயற்சிகளில் ஈடுட்டீர்களா?” என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது,

“இப்போது அவரது உடல் நலன் பார்க்கவே சென்றோம். அவர்நல்ல சுகத்துடன் இருக்கிறார்” என்றார்.

“ஞானசாரதேரரை விடுவிப்பது பற்றி ஜனாதிபதியுடன் கதைத்தீர்களா?” என்று ஊடகவியலாளர்கள் வினவியபோது, “இதுவரையும் இல்லை. அது விடயமாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளோம்” என அசாத் சாலி மேலும் பதிலளித்தார்.

இதேவேளை,  இக்குழுவில் பங்கேற்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பேச்சாளர் மௌலவி பாஸில் பாரூக் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“நாம் ஞானசார தேரருடன் சுமார் 5–6 சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு அன்று எழுந்த பல சந்தேகங்களுக்கும் தீர்வு கண்டோம். எமது அல்குர்ஆனில் அவருக்கு ஏற்பட்ட பல சந்தேகங்கள், கருத்து வேற்றுமைகளுக்கு உலமா சபையால் நாம் போதிய தெளிவுகளை வழங்கினோம். எல்லாவற்றையும் அவர் ஏற்றுக்கொண்டார்” என்றார்.

இதேவேளை  ஞானசாரரின் சுகம் விசாரிக்கச் சென்ற இக்குழுவினருக்கு பொதுபலசேனாவின் நிறைவேற்றதிகாரி திலந்த விதாரண நன்றி தெரிவிக்கையில், எமது பொதுச் செயலாளர் ஞானசார தேரரைப் பார்வையிட வந்த உலமா சபைக்கு முதலில் நன்றி தெரிவிக்கிறேன். அத்துடன் அஸாத் சாலி மற்றும் முஸ்லிம் கவுன்ஸிலைச் சேர்ந்த ஹில்மி ஆகியோருக்கும் விசேடமாக நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

நாம் அன்று கலந்துரையாடலில் ஈடுபட்டதாலேயே எங்களுக்குள் சுமுக நிலை ஒன்று ஏற்பட்டது. அதனால் சமூகங்களுக்கிடையே பல பிரச்சினைகளைத் தீர்ப்பதில் முன்மாதிரி காட்டினோம். ஞானசார தேரர் சிறையிலிருந்து விடுதலையாகி வெளிவந்த பின்னர், யார் உண்மையாக அவருக்காக நடந்து கொண்டார்கள் என்பதைக் கண்டு கொள்வார்.

எமக்கு இனி இருக்கும் பொது எதிரி வறுமைதான். இதனை விரட்ட நாம் அனைவரும் கைகோர்த்து நிற்க வேண்டும். அதேபோன்று, நாட்டிலிருந்து ஊழல் மோசடிகளையும் விரட்டியடிக்க வேண்டும். இவற்றுக்காக சிங்கள, முஸ்லிம், இந்து, கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த அனைவரும் கூட்டணியமைத்துச் செயற்பட முன்வர வேண்டும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.