யுத்த நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மறுப்பு ரஃபா மீதான முற்றுகைக்கும் முஸ்தீபு

0 213

ஏ.ஆர்.ஏ.பரீல்

இஸ்ரேல் – காஸா போர் நிறுத்­தத்­துக்கு மறுப்புத் தெரி­வித்­துள்ள இஸ்­ரே­லிய பிர­தமர் பெஞ்­சமின் நெதன்­யாகு காஸாவை முழு­மை­யாக கைப்­பற்­றிக்­கொள்ளும் வரை இஸ்­ரேலின் தாக்­கு­தல்கள் தொடரும் என அறி­வித்­துள்ளார்.
இந்­நி­லையில் காஸாவின் தெற்கு நக­ர­மான ரஃபா நகரைத் தாக்­கு­­மாறும் இஸ்­ரே­லிய பிர­தமர் தனது படை­யி­ன­ருக்கு உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார். அத்­தோடு ரஃபா நக­ரி­லி­ருந்து மக்­களை வெளி­யேற்­று­வ­தற்கும், ஹமாஸ் போரா­ளி­களை ஒழிப்­ப­தற்­கு­மான திட்­டத்தை அமைச்­ச­ர­வைக்குச் சமர்ப்­பிக்­கு­மாறும் இஸ்­ரே­லிய படை­யி­ன­ருக்கு பெஞ்­சமின் நெதன்­யாகு உத்­த­ர­விட்­டுள்ளார்.

எகிப்­திய எல்­லை­யி­லுள்ள இந்­ந­கரில் காஸாவின் 24 இலட்சம் மக்­களில் அரைப் பங்­கினர் தங்கி வாழ்­வ­தாக ஐ.நா. அறி­வித்­துள்­ளது. காஸாவின் ரஃபா நகர் மீது இஸ்ரேல் தாக்­குதல் நடத்­துவ­தால் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் உயி­ரி­ழக்கும் ஆபத்து நில­வு­வ­தாக ஹமாஸ் இயக்கம் எச்­ச­ரித்­துள்­ளது. அத்­தோடு காஸா ரஃபா நகர் மீதான இஸ்ரேல் படை­யெ­டுப்பு பேர­ழிவினை ஏற்­படுத்தும். ஆயி­ரக்­க­ணக்­கானோர் பலி­யா­வ­தற்கும், காயங்­க­ளுக்கு உள்­ளா­வ­தற்கும் அது வழிகோலும் எனவும் ஹமாஸ் அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டுள்­ளது. இத்­த­கைய அழி­வுகள் ஏற்­பட்டால் அதற்கு அமெ­ரிக்கா, சர்­வ­தேச சமூகம், இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்பு என்­பன பொறுப்­பாகும் எனவும் ஹமாஸ் தெரி­வித்­துள்­ளது.
ஹமாஸின் போர் நிறுத்த ஒப்­பந்த நிபந்­த­னை­களை ஒரு போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்று தெரி­வித்­துள்ள இஸ்­ரே­லிய பிர­தமர் இன்னும் சில மாதங்­க­ளுக்குள் முழு­மை­யான வெற்­றியை எய்­துவோம் என்றும் சூளு­ரைத்­துள்ளார்.

ரஃபா நகரை காலி­யாக்­குங்கள்
காஸாவின் தெற்கு நக­ர­மான ரஃபா­வி­லி­ருந்து சிவி­லி­யன்­களை வெளி­யேற்­று­மாறும் இஸ்­ரே­லிய பிர­தமர் இரா­ணு­வத்­தி­ன­ருக்கு உத்­த­ர­விட்­டுள்ளார். இஸ்­ரேலின் காஸா­வுக்கு எதி­ரான யுத்­தத்­தி­னை­ய­டுத்து சுமார் 15 இலட்சம் பலஸ்­தீ­னர்கள் அக­தி­க­ளாக ரஃபா நகரில் தஞ்­ச­ம­ைடந்­துள்­ளனர்.

ரஃபா மீதான இஸ்­ரேலின் படை­யெ­டுப்பு பெரும் அழி­வு­களை ஏற்­ப­டுத்தும் என அமெ­ரிக்கா இஸ்­ரேலை எச்­ச­ரித்­துள்­ளது. மற்றும் ஐரோப்­பிய யூனியன் ஐக்­கிய நாடுகள் சபையும் இது குறித்து எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளன.

ரஃபா நக­ரி­லி­ருந்து பொது­மக்கள் அனை­வ­ரையும் வெளி­யேற்­றுவது என்­பது சாத்­தி­ய­மற்­றது என அப்­ப­குதி மக்­க­ளுக்கு உத­வி­களை வழங்கி வரும் அமைப்­புகள் தெரி­வித்­துள்­ளன.

ரஃபா நகரில் ஹமாஸின் 4 படைப் பிரி­வினர் நிலை கொண்­டுள்­ளனர். அவர்­களை அழிக்க வேண்­டு­மாயின் அப்­ப­கு­தி­யி­லி­ருந்து பொது­மக்­களை வெளி­யேற்­றியே ஆக வேண்டும் என இஸ்­ரே­லிய பிர­தமர் தனது அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்ளார்.

ரஃபா நகர்
காஸாவின் தென்­ப­குதி நக­ரான ரஃபா காஸா­வுக்கும் எகிப்­துக்கும் இடை­யி­லான குறுக்­கிடும் நிலை­ய­மாகும் (Crossing Point) ரஃபா மீது இஸ்ரேல் தாக்­குதல் நடத்தி வரு­வது நிலை­மையை மேலும் மோச­மாக்கும். ஏற்­க­னவே மோச­ம­டைந்­துள்ள மனி­தா­பி­மான நிலைமை மேலும் மோச­ம­டைந்து பொது­மக்கள் பல்­வேறு இன்­னல்­க­ளுக்கு உள்­ளாகும் நிலைமை ஏற்­படும் என ஐரோப்­பிய யூனி­யனின் உயர்­நிலை இரா­ஜ­தந்­திரி ஜோசப் பொரல் சமூக வலைத்­த­ள­மொன்றில் எழு­தி­யுள்ளார்.

இதே­வேளை ரஃபா நகர் எதிர்­நோக்­க­வுள்ள நிலைமை தொடர்பில் ஐ.நா. செய­லாளர் நாய­கத்தின் பேச்­சாளர் ஸ்டெபன் டுஜாரிக் கருத்து தெரி­விக்­கையில், ‘ரஃபா நகர் பொது­மக்­களின் நிலைமை குறித்து நாங்கள் மிகவும் கவ­லைப்­ப­டு­கிறோம். அங்­குள்ள பொது­மக்கள் பாது­காக்­கப்­பட வேண்டும். இதே­வேளை அங்­குள்ள மக்கள் பல­வந்­த­மாக இட­மாற்றம் செய்­யப்­ப­டக்­ கூ­டாது எனக் கூறி­யுள்ளார்.

இஸ்ரேல் ரஃபா மீது இரா­ணுவ நட­வ­டிக்­கை­களை மேற்கொண்டுள்ளதால் அங்­குள்ள மக்கள் மத்­தியில் கவலை மேலிட்­டுள்­ளது. அவர்கள் பீதி­யிலே நாட்­களைக் கடத்­து­கி­றார்கள் என பலஸ்தீன் அக­தி­க­ளுக்­கான ஐ.நா.வின் உதவி நிறு­வ­னத்தின் (UNRWA) தலைவர் தெரி­வித்­துள்ளார். ரஃபா­வி­லுள்ள மக்கள் தாம் எங்கு இடம் பெயர்ந்து செல்­வது என்று புரி­யாத நிலையில் தடு­மாறிக் கொண்­டி­ருப்­ப­தா­கவும் UNRWA ஐ.நா. ஏஜன்­சியின் தலைவர் பிலிப் லஸா­ரினி தெரி­வித்­துள்ளார்.

ரஃபா நகர் மக்கள் தூக்­க­மின்றி தாக்­கு­த­லுக்கு அஞ்சி பீதியில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இதே­வேளை இஸ்ரேல் ரஃபா மீதோ அல்­லது வேறு எப்­ப­கு­தி­யிலோ இரா­ணுவ தாக்­கு­தல்­களை மேற்­கொள்­வ­தாயின் இஸ்ரேல் அப்­பாவி பொது­மக்­களின் பாது­காப்­பினை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும் என ஐ.நா.பாது­காப்புச் சபையின் பேச்­சாளர் ஜோன் கிர்பி தெரி­வித்­துள்ளார். ரஃபா மீதான இரா­ணுவ நட­வ­டிக்கை அம்­மக்கள் மீது பாரிய அழி­வு­க­ளையே ஏற்­ப­டுத்­து­மே­யன்றி அவர்­க­ளுக்கு எவ்­வித நன்­மை­யையும் ஏற்­ப­டுத்­தாது எனவும் அவர் கூறி­யுள்ளார்.

கடந்த வருடம் அக்­டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் இயக்கம் தென் இஸ்ரேல் மீது கொண்ட தாக்­கு­தல்­களில் 1200க்கும் மேற்­பட்ட இஸ்­ரே­லி­யர்கள் பலி­யா­னார்கள். அன்று முதல் தொடர்ந்து இடம்­பெற்று வரும் இஸ்ரேல் காஸா யுத்தம் கார­ண­மாக இது­வ­ரையில் சுமார் 28000 பலஸ்­தீ­னர்கள் பலி­யா­கி­யுள்­ளனர். இவர்­களில் பெரும்­பான்­மை­யினர் பெண்­களும், சிறு­வர்­களும் குழந்­தை­க­ளு­மாவர். அத்­தோடு சுமார் 67 ஆயிரம் பேர் காயங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளனர் என ஹமாஸின் சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

பல்­வேறு நாடுகள் கண்­டனம்
பலஸ்­தீன அக­திகள் பெரும் எண்­ணிக்­கையில் தஞ்சம் புகுந்­தி­ருக்கும் ரஃபா நகர் மீது இஸ்ரேல் பிர­தமர் தாக்­கு­தல்­களை மேற்­கொள்ள உத்­த­ர­விட்­டி­ருக்­கின்­ற­மையை உலக நாடுகள் கண்­டித்­தி­ருக்­கின்­றன.

‘காஸாவின் சனத்­தொ­கையில் அரை­வாசிப் பேர் ரஃபா நக­ரிலே தஞ்சம் புகுந்­துள்­ளனர். பல்­வேறு பகு­தி­க­ளி­லி­ருந்தும் வந்­த­வர்கள் அவர்கள் என ஐக்­கிய இராச்­சி­யத்தின் வெளி­வி­வ­கார செய­லாளர் டேவிட் கமரூன் தெரி­வித்­துள்ளார். ‘இரா­ணுவ நட­வ­டிக்கைகளி­னால் அதிக மனித உயி­ரி­ழப்­புகள் ஏற்­ப­டலாம்’ என டென்மார்க் வெளி­வி­வ­கார அமைச்சர் ஹேன்க் ப்ரூயின்ஸ் தெரி­வித்­துள்ளார்.
இதே­வேளை ரஃபா நகர் மீ­­தா­ன இஸ்­ரே­லின் தாக்­குதல் மிகவும் கொடூ­ர­மான விளை­வுகளை ஏற்­படுத்தும் என சவூதி அரே­பியா எச்­ச­ரித்­துள்­ளது.
ஆயி­ரக்­க­ணக்­கான மக்­களின் உயிர்கள் பலி­கொள்­ளப்­படும் என ஹமாஸ் அமைப்பும் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

இரு பணயக் கைதிகள் மீட்பு
ரஃபா நகர் மீது தாக்­கு­தல்­களை மேற்­கொள்ளும் இஸ்­ரேலின் திட்­டத்தை உலக நாடுகள் கண்­டித்­துள்ள நிலை­மை­யிலும் ரஃபா நகரில் ஹமாஸ் குழு­வி­னரால் பணயக் கைதி­க­ளாக சிறை வைக்­கப்­பட்­டி­ருக்கும் இஸ்­ரே­லி­யர்­களை மீட்கும் நட­வ­டிக்­கையில் இஸ்ரேல் இரா­ணுவம் கள­மி­றங்­கி­யுள்­ளது.

ரஃபா நக­ரி­லி­ருந்து இரு இஸ்­ரே­லிய பணயக் கைதி­களை இரா­ணுவ நட­வ­டிக்­கையின் மூலம் மீட்­டுள்­ள­தாக இஸ்­ரே­லிய பாது­காப்பு படை­யினர் தெரி­வித்­துள்­ளனர். மீட்­கப்­பட்ட இரு பணயக் கைதி­களும் இஸ்­ரே­லிய வைத்­தி­ய­சா­லையில் வைத்­திய சோத­னை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டனர். அவர்கள் நல்ல தேகா­ரோக்­கி­யத்­துடன் இருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பர்­ணான்டோ சைமன் மார்மன் (60) மற்றும் லுயிஸ் ஹார் (70) ஆகிய இரு­வரே மீட்­கப்­பட்­டுள்­ளனர். இந்த இரு பணயக் கைதி­களும் ரஃபாவின் கட்­டி­ட­மொன்றின் இரண்டாம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக இஸ்ரேலிய ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.

பலஸ்தீனர்களை ரஃபா நகருக்கு குடியேறுமாறும் அப்பிரதேசமே பாதுகாப்பானது என ஏற்கனவே அறிவுறுத்தியிருந்த இஸ்ரேல் கடந்த திங்கட்கிழமை அந்நகர் மீது பாரிய தாக்குதல்களை நடாத்தியிருக்கிறது. இத்தாக்குதலில் 67 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸின் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.