நாட்டை கட்டியெழுப்புவதற்கு முஸ்லிம் கட்சிகளுக்கும் அழைப்பு

நாட்டு நலனை புறக்கணித்தால் வரலாற்றில் துரோகிகளாவோம் என கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

0 84

(எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்)
நாட்டை கட்­டி­யெ­ழுப்பும் வேலைத்­திட்­டத்தில் ஒற்­று­மை­யுடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு முஸ்லிம் கட்­சி­க­ளுக்கும் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க அழைப்பு விடுத்தார். அத்­தோடு, ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வ­தன்­மூலம் அர­சாங்­கத்தின் திட்­டங்­களை விரை­வு­ப­டுத்­த­மு­டியும். யதார்த்­தத்தை புரிந்­து­ கொள்­ளாமல் புறக்­க­ணித்து செயற்­ப­டு­வதால் நாடு மீண்டும் பெரும் ஆபத்­துக்குள் தள்­ளப்­பட்­டு­விடும். பொறுப்பை மறந்து செயற்­பட்டால் வர­லாறும் எம்மை துரோ­கி­க­ளாக பெய­ரிடும். எனவே, நாட்டை கட்­டி­யெ­ழுப்பும் கனவை நன­வாக்க தமிழ், முஸ்லிம் கட்­சிகள் உட்­பட அனைத்து கட்­சி­க­ளுக்கும் மீண்டும் அழைப்பு விடுக்­கிறேன் என ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

ஒன்­ப­தா­வது பாரா­ளு­மன்­றத்தின் ஐந்­தா­வது கூட்டத் தொடரை ஆரம்­பித்து வைத்து ஆற்­றிய கொள்கைப் பிர­க­டன உரை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

ஆரம்பம் முதல் இன்று வரை உலகம் பல்­வேறு நெருக்­க­டி­களைச் சந்­தித்­தது. நாடுகள் நெருக்­க­டி­களைச் சந்­தித்­தன. தனிப்­பட்ட வாழ்க்­கை­யிலும் நெருக்­கடி ஏற்­பட்­டது. சில சம­யங்­களில் நெருக்­க­டி­யி­லி­ருந்து விடு­பட முடிந்­தது. வேறு சில சந்­தர்ப்­பங்­களில், நெருக்­க­டி­யி­லி­ருந்து மீள முடி­ய­வில்லை. நெருக்­க­டியைச் சபித்துக் கொண்­டி­ருப்­பதன் மூலம் நெருக்­க­டி­யி­லி­ருந்து மீள முடி­யாது. நெருக்­க­டிக்­கான கார­ணங்­களை விமர்­சிப்­பதன் மூலம் மீள முடி­யாது. நெருக்­க­டி­களைச் சரி­யாக நிர்­வ­கிப்­பதன் மூலம் தான் உல­கமும் நாடு­களும் தனிப்­பட்ட வாழ்க்­கை­யிலும் நெருக்­க­டி­களைத் தீர்க்க முடிந்­துள்­ளது.

முறை­மையில் மாற்றம் இருக்­கா­விட்டால் சிஸ்டம் சேஞ்ச் பற்றி தொண்டை கிழியக் கத்­தி­னாலும் நாம் அடிப்­ப­டையில் இருந்து மாறா­விட்டால் முறை­மைைய மாற்ற எம்மால் முடி­யாது. அதனைச் சுட்டிக் காட்டும் வகையில் கடந்த காலம் , நிகழ்­காலம், எதிர்­காலம் பற்­றிய பல விட­யங்­களை இச்­ச­பையில் கோடிட்டுக் காட்ட விரும்­பு­கிறேன்.

2022 பெப்­ர­வ­ரியில் இந்த நாடு இருந்த நிலை, நம் அனை­வ­ருக்கும் நினைவில் இருக்கும். 2023 பெப்­ர­வரி மாத­ம­ளவில், இந்த நாட்டை ஒரு சிறந்த நிலைக்கு கொண்டு வர முடிந்­தது. இந்த வருடம் பெப்­ர­வ­ரி­யாகும் போது கடந்த ஆண்டு பெப்­ர­வரி மாதத்தை விட சிறந்த நிலைக்கு நாடு முன்­னே­றி­யுள்­ளது.

கடந்த ஆண்டு பண­வீக்கம் 50.06 சத­வீ­த­மாக இருந்­தது. இன்று அது 6.4சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. உணவுப் பண­வீக்கம் 54.4 சத­வீ­த­மாக உள்­ளது. இன்று அது 3.3 சத­வீ­த­மாக உள்­ளது. அன்று ஒரு டொலரின் பெறு­மதி 363 ரூபாய். இன்று 314 ரூபாய். 2022 ஆம் ஆண்டின் இறு­தியில், வரவு செலவுத் திட்ட முதன்மை பற்­றாக்­குறை மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில் 3.7 சத­வீ­த­மாக இருந்­தது. ஆனால் 2023 இல் முதன்மை வரவு செலவுத் திட்­டத்தில் உப­ரியை ஏற்­ப­டுத்த முடிந்­தது. சுதந்­தி­ரத்­திற்குப் பின்­ன­ரான 76 வரு­டங்­களில் இலங்­கை­யா­னது முதன்­மை­யான வரவு செலவுத் திட்ட உப­ரியை ஏற்­ப­டுத்­திய 6 ஆவது சந்­தர்ப்பம் இது­வாகும்.

தெரி­வு­செய்­யப்­பட்ட கடனைச் செலுத்த முடி­யாத நிலையை 2022 ஏப்ரல் 12 ஆம் திகதி இலங்கை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­தது. அந்த சமயம் எமது அந்­நியச் செலா­வணி கையி­ருப்பு பூஜ்­ஜியம் வரை சரிந்­தது. தற்­போது அந்த நிலை மாறி­விட்­டது. 2023 டிசம்பர் நில­வ­ரப்­படி, நமது அந்­நியச் செலா­வணி கையி­ருப்பு 4.4 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளாகும். குறு­கிய காலத்தில், சுற்­றுலாத் துறையில் குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்றம் அடைந்­துள்ளோம். 2022 ஆம் ஆண்டில் நம் நாட்­டிற்கு வந்த சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்கை 194,495 ஆகும். 2023 இல் அந்த எண்­ணிக்­கையை 1,487,303 ஆக அதி­க­ரிக்க முடிந்­தது. இந்த ஆண்டு ஜன­வ­ரியில் 200,000 இற்கும் அதி­க­மான சுற்­றுலாப் பய­ணிகள் வருகை தந்­தனர்.

மேலும், 2023இல் பல சாத­க­மான நகர்­வு­களை முன்­னெ­டுத்தோம். கோட்டா முறையில் வழங்­கப்­பட்ட எரி­பொருள் விநி­யோக முறை முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டது. தற்­போது தொடர்ந்து மின்­சாரம் விநி­யோ­கிக்­கப்­ப­டு­கி­றது. எரி­பொருள் தட்­டுப்­பாடு இல்லை. விவ­சா­யத்­திற்குத் தேவை­யான உரங்கள் தட்­டுப்­பா­டின்றி கிடைக்­கி­றது. மீன­வர்­க­ளுக்கு எரி­பொருள் தட்­டுப்­பாடு இல்லை. வாக­னங்கள் தவிர அனைத்து இறக்­கு­மதி கட்­டுப்­பா­டு­களும் இப்­போது நீக்­கப்­பட்­டுள்­ளன. நாட்­டுக்கு அத்­தி­யா­வ­சிய உணவு மற்றும் மருந்­து­களை இறக்­கு­மதி செய்­வதில் எந்த பிரச்­சி­னையும் இல்லை. மேலும், உற்­பத்தித் தொழிற்­து­றை­க­ளுக்குத் தேவை­யான மூலப் பொருட்­களின் விநி­யோக வலை­ய­மைப்பில் எந்தத் தடையும் இல்லை.

2022 ஆம் ஆண்டின் இறு­தியில் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி 7.8 சத­வி­கி­த­மாக சுருங்­கி­யது. 2022 முதல், தொடர்ந்து 6 காலாண்­டு­களில் எதிர்­ம­றை­யாக இருந்­தது. ஆனால் 2023ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 1.6 சத­வீத வளர்ச்­சியை எட்­டினோம். நமது பொரு­ளா­தாரம் விண்கல் வேகத்தில் சரிந்­தது. ஆனால் தற்­போது எமக்கு அதனை மாற்ற முடிந்­துள்­ளது. அதை மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்த்­தி­யுள்ளோம். நாங்கள் வீ (V) வடிவ மீட்பு அல்­லது வீ(V) வடிவ மீட்­சியைப் பெற்று வரு­கிறோம்.

நாம் அடைந்த விசே­ட­மான வெற்­றி­யாக அதனைக் குறிப்­பி­டலாம். வீழ்ச்­சி­ய­டைந்த நாடு­களின் பொரு­ளா­தார மீட்சி மிகவும் கடி­ன­மா­னது மற்றும் வேத­னை­யா­னது. ஆனால் ஏனைய நாடு­களைப் போல நீண்ட கால சிர­மங்கள் மற்றும் வலிகள் இல்­லாமல் நமது பொரு­ளா­தா­ரத்தை மீட்­டெ­டுக்க எம்மால் முடிந்­தது.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்­களில் இந்த சிக்­க­லான மறு­சீ­ர­மைப்புத் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த எதிர்­பார்க்­கிறோம். இது நமது பொரு­ளா­தா­ரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வரு­வ­தற்­கான அடிப்­ப­டை­யாக அமையும். மேலும் கடன் அழுத்­தத்­தி­லி­ருந்து விடு­ப­டு­வ­தற்­கான பாதையின் மைய­மாக இது மாறி­விட்­டது.

சர்­வ­தேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபி­வி­ருத்தி வங்கி ஆகி­யவை இந்த ஆண்டு 2 வீதம் முதல் 3 வீதம் பொரு­ளா­தார வளர்ச்­சியை எட்ட முடியும் என்று கணித்­துள்­ளன. 2025இல் அதை 5 சத­வீ­த­மாக உயர்த்த நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறோம்.

இந்த நாட்டில் ஊழல் ஒரு சாபக்­கே­டாக மாறி­விட்­டது என்­பதை பலரும் ஒப்­புக்­கொள்­கி­றார்கள். ஆனால், முறை­மை­யான சட்ட விதி­களால் மாத்­தி­ரமே ஊழலை ஒழிக்க முடியும் என்­பதை பலர் உண­ர­வில்லை. திரு­டர்­கயைப் பிடி­யுங்கள் என்று கூச்சல் போடு­வதால் மாத்­திரம் திரு­டர்­களைப் பிடிக்க முடி­யாது. திரு­டர்­களைப் பிடிப்­ப­தற்கு, வலு­வான சட்ட விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள் மற்றும் அறி­வியல் முறைகள் தேவை. அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்­தக்­கூ­டிய பயிற்சி பெற்ற அதி­கா­ரி­களும் தேவை. ஊழல்­வா­தி­களை நீதியின் முன் நிறுத்­தினால் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண முடியும் என்று பலர் நினைக்­கி­றார்கள்.

இது ஒரு மாயை. ஊழலைத் தடுக்­கவும் கடு­மை­யான சட்ட விதி­மு­றை­களை உரு­வாக்க வேண்டும். மேலும் ஊழல்­வா­திகள் கடு­மை­யாக தண்­டிக்­கப்­பட வேண்டும். ஊழலை ஒழிக்க இந்த இரண்டு விட­யங்­களும் ஒன்­றாக செயல்­ப­டுத்­தப்­பட வேண்டும். அதற்­காக, ஊழல் தடுப்புச் சட்­டத்தை நிறை­வேற்­றினோம்.

கால­நிலை மாற்றம் குறித்து நாம் ஏற்­க­னவே கவனம் செலுத்தி வரு­கிறோம். இது தொடர்­பான ஆய்வுப் பணி­களை மேற்­கொள்­வ­தற்­காக, இலங்­கையில் கால­நிலை மாற்றம் தொடர்­பான சர்­வ­தேச பல்­க­லைக்­க­ழ­கத்தை நிறு­வு­வ­தற்­கான அடிப்­படை நட­வ­டிக்­கைகள் ஏற்­க­னவே மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

கடந்த காலத்தில் இருந்து தற்­போது வரை விவ­சா­யத்தில் ஈடு­பட்டு வரு­கிறோம். பயி­ரி­டு­கின்றோம். ஆனால் இன்னும் காலா­வ­தி­யான முறை­க­ளையே பின்­பற்றி வரு­கிறோம். பல தசாப்­தங்­க­ளாக எந்த விவ­சாய நவீ­ன­ம­ய­மாக்கல் பணி­க­ளையும் நாங்கள் முன்­னெ­டுக்­க­வில்லை. அடுத்த மூன்று, நான்கு போகங்­களில் உலர் வல­யத்தில் விவ­சாய நிலங்­களின் உற்­பத்­தியை இரண்டு, மூன்று மடங்­கினால் உயர்த்தும் திட்­டத்தை செயல்­ப­டுத்தி வரு­கிறோம். அதற்­கான கொள்கை ரீதி­யி­லான முடி­வு­களை நாங்கள் எடுத்­துள்ளோம். இம்­மாதம் முதல் ஒவ்­வொரு மாவட்­டத்­திலும் ஒரு பிர­தேச செய­லகப் பிரிவு தெரிவு செய்­யப்­பட்டு இப்­ப­ணிகள் ஆரம்­பிக்­கப்­படும்.

அதேபோல் எமது நாடு ஒரு தீவாகும். அதற்கு உகந்த வகை­யி­லான பாது­காப்பை உறுதி செய்யும் வேலைத் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து பாது­காப்பு வலை­ய­மைப்­புக்­களும் அதற்­கேற்ப நவீ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன.

புல­னாய்வு அமைப்­புகள், பாது­காப்பு உப­க­ர­ணங்கள், பயிற்சி முறைகள், படை­யினர், இரா­ணுவ உப­க­ர­ணங்கள், மூலோ­பாய நட­வ­டிக்­கைகள் உள்­ளிட்ட அனைத்துத் துறை­க­ளையும், நாட்டில் ஏற்­ப­டக்­கூ­டிய பல்­வேறு சவால்­களை எதிர்­கொள்ளும் வகையில் தயார்­ப­டுத்தி வரு­கிறோம். நமது வெளி­நாட்டு உற­வு­களை மறு­ப­ரி­சீ­லனை செய்ய வேண்­டி­யது காலத்தின் தேவை­யாகும். அதே போல் பூகோள அர­சியல் நகர்­வு­களின் மாற்­றங்­க­ளுக்கு ஏற்ப பொரு­ளா­தார வாய்ப்­புக்­களைப் பெறும் வகையில், உரிய பலன்­களைப் பெறும் வகையில் மறு­சீ­ர­மைக்க வேண்டும். எனவே, அனைத்து நாடு­க­ளு­டனும் அணி­சேராக் கொள்­கை­யு­டனும் நட்­பு­றவு அடிப்­ப­டை­யிலும் வெளி­நாட்டு உற­வு­களைத் பின்­பற்ற வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அதற்­கேற்ப நமது வெளி­யு­றவுக் கொள்­கைகள் காலோ­சி­த­மா­ன­தாக மாற்ற வேண்டும்.

மேலும், ஒன்­பது மாகா­ணங்­க­ளி­னதும் பொரு­ளா­தா­ரத்தைப் பலப்­ப­டுத்த அவ­சி­ய­மான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும். அர­சி­ய­ல­மைப்பில் மாகாண சபை அதி­கா­ரங்­களின் மூன்­றா­வது அத்­தி­யா­யத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­வாறு மாகாண சபை­க­ளுக்கு சில அதி­கா­ரங்­களை உரிய வகையில் வழங்­குவோம்.
அர­சியல் அபி­லா­ஷை­களை மனத்தில் வைத்­துக்­கொண்டு, தேர்­தலில் பெறும் வாக்­கு­களை இலக்­காகக் கொண்டு, நிறை­வேற்ற முடி­யாத வாக்­கு­று­தி­களை வழங்கி அல்­லது வீண்­கதை பேசி எம்மால் முன்­நோக்கிச் செல்ல முடி­யாது.

மாறாக எதிர்­காலச் சந்­த­தியின் வாழ்க்கைத் தரத்தை முன்­னேற்­று­வ­தற்­கான வேலைத் திட்­டத்தை தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுத்துச் செல்ல வேண்டும்.
இந்த மாற்­றத்தைக் குறு­கிய காலத்தில் செய்­து­விட முடி­யாது. அதற்­காக நீண்ட கால முயற்­சியும் அர்ப்­ப­ணிப்பும் அவ­சி­யப்­படும். அதே பாதையில் தொடர்ந்து சென்றால் 2048 ஆம் ஆண்­டுக்குள் வளர்ச்­சி­ய­டைந்த நாடாக மாறலாம். எந்த நெருக்­க­டிக்கும் குறு­கிய கால தீர்­வுகள் இல்லை. இரண்டு நாட்­களில் எந்த இலக்­கையும் அடைய முடி­யாது.

எனவே, இந்த சபையில் உள்ள அனை­வரும் முதலில் மனதைத் தயார்­ப­டுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்­டுக்­கொள்­கிறேன். எதிர்­கா­லத்தில் இளை­ஞர்­க­ளுக்கு வேலை வாய்ப்பை உரு­வாக்க, அவர்­க­ளுக்­கான சிறந்த நாட்டைக் கட்­டி­யெ­ழுப்ப, நாம் அனை­வரும் சரி­யான பாதையில் செல்ல வேண்டும். அதற்­காக நம் மனதைத் தயார்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும். நாம் அனை­வரும் ஒன்­றி­ணைந்து இந்த சவாலை ஒற்­று­மை­யுடன் எதிர்­கொண்டால் மட்­டுமே நமது பய­ணத்தைத் துரி­தப்­ப­டுத்த முடியும். தமக்குக் கிடைக்கும் அந்­தஸ்த்­துகள் பற்றி கனவு காணும் சிலர், அந்த நாட்டை விடவும் பத­வி­களை அதி­க­மாக நேசிக்­கின்­றனர். அந்த பத­வி­க­ளுக்­காக நாட்­டுக்குப் பொய்­யான வாக்­கு­று­தி­களை வழங்­கு­கின்­றனர். நாட்­டையும் மக்­க­ளையும் ஏமாற்­று­கின்­றனர். நடை­மு­றையை உண­ராமல் கனவுப் பாதையில் செல்ல முற்­படும் பட்­சத்தில் அனர்த்­தங்­களை எதிர்­கொள்ள நேரிடும்.

நாட்டைக் கட்­டி­யெ­ழுப்பும் கனவை நன­வாக்க அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்­டு­மென மீண்டும் கேட்டுக் கொள்­கின்றேன். அதற்­காக ஒற்­று­மை­யாக கலந்­து­ரை­யா­டுவோம். நாங்கள் செயல்­ப­டுத்தும் முறையை விட சிறந்த மாற்று முறைகள் இருந்தால், அவற்றைக் கூறுங்கள். அவற்றை ஆழ­மாகப் ஆராய்வோம். அது குறித்தும் கலந்­து­ரை­யா­டுவோம். அவற்றில் நாட்­டுக்குச் சிறந்­த­தென கரு­தப்­படும் யோச­னையைச் செயற்­ப­டுத்­துவோம். அவ்­வா­றான பேச்­சுக்­களில் கலந்­து­கொள்ள நாம் தயா­ரா­கவே இருக்­கிறோம். அவ்­வா­றான பேச்­சுக்­க­ளுக்­கு தயார் எனில், அந்தக் கலந்­து­ரை­யா­டல்­க­ளுக்கு சர்­வ­தேச நாணய நிதியம், உலக வங்கி ஆகி­ய­வற்றின் பிர­தா­னி­க­ளையும் அழைப்­பிக்க முடியும்.

19 ஆம் நூற்­றாண்டில் மகா­கவி பார­தியார் தனது நாடு பற்றி எழு­திய கவி­தை­யொன்று நினை­விற்கு வரு­கி­றது. அதனை சிங்­க­ளத்தில் மொழி பெயர்த்­தவர் பேரா­சி­ரியர் சுனில் ஆரி­ய­ரத்ன முப்­பது கோடி முக­மு­டையாள் உயிர் மொய்ம்­புற ஒன்­று­டையாள் இவள் செப்பு மொழி­பதி னெட்­டு­டையாள் எனில் சிந்­தனை ஒன்­று­டையாள்.

அவ்­வா­றான எண்ணம் எமக்கு ஏன் வர­வில்லை? பல்­வேறு எண்­ணங்கள் இருந்­தாலும் பல்­வேறு இனங்­களைச் சார்ந்­த­வர்­க­ளாக இருந்­தாலும், பல்­வேறு பகு­தி­களில் வாழ்ந்­தாலும், பல்­வேறு பிரச்­சி­னைகள், நம்­பிக்­கைகள் இருந்­தாலும், பல்­வேறு அர­சியல் கட்­சி­க­ளுக்கு ஆத­ர­வாக இருந்­தாலும், எமது நாட்­டிற்­கா­கவும் அதன் எதிர்­கா­லத்­திற்­கா­கவும் ஒரு­மித்த எண்­ணத்­துடன் ஒன்­று­பட முடி­யாமல் இருப்­பது ஏன்? எமது நாட்டு இளைய சமூ­கத்தின் எதிர்­கா­லத்­திற்­காக ஒன்­று­பட முடி­யா­தி­ருப்­பது ஏன்?

மீண்டும் – மீண்டும் உங்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கிறேன். பொது நோக்­கத்­துடன் ஒன்­று­ப­டுங்கள். மாற்­றத்தை நம்­மி­லி­ருந்து ஆரம்­பிப்போம். எமக்கு நாமே ஒளி­யாவோம். இந்தச் சபையைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சியல் கட்­சி­களில் பல தசாப்­தங்­க­ளாக என்னை விமர்ச்­சித்­த­வர்­களே ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­னவில் உள்­ளனர். நாட்டின் நன்­மைக்­கா­கவும், இளை­யோரின் எதிர்­கா­லத்­திற்­கா­கவும் பொது­ஜன பெர­மு­னவின் பெரும்­பா­ளா­ன­வர்கள் பழைய பகையை மறந்­து­விட்டு ஒன்­று­பட்­டுள்­ளனர்.

ஐக்­கிய மக்கள் சக்­தியில் இருப்­ப­வர்கள் என்­னுடன் பல கால­மாக அர­சி­யலில் ஈடு­பட்­ட­வர்கள். நான் அர­சி­ய­லுக்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­வர்­களும் உள்­ளனர். நாட்­டுக்­கான பொதுப் பய­ணத்தில் இணைந்­து­கொள்ள பொது­ஜன பெர­மு­னவால் முடி­யு­மாயின் ஐக்­கிய மக்கள் சக்­தியால் அதனை செய்ய முடி­யா­தி­ருப்­பது ஏன்? மக்கள் விடு­தலை முன்­னணி நல்­லாட்சி அர­சாங்­கத்தின் காலத்தில் எம்­முடன் நெருக்கமாக செயற்பட்டது. ஊழல் ஒழிப்பு பிரிவின் அலுவலகத்திற்கு ஆனந்த விஜயபாலவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. அவ்வாறிருக்க நாட்டின் பொது முன்னேற்றத்திற்கான பயணத்தில் இணைய முடியாதிருப்பது ஏன்? இந்தச் சபையில் உள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள் என்னுடன் இணைந்து பணியாற்றியுள்ளன. எனினும், நாட்டிற்காக இந்தக் கட்சிகளுக்கு பொதுப் பயணத்தில் ஏன் இணைந்துகொள்ள முடியாது.

நாம் தேர்தலில் வெவ்வேறாக போட்டியிடுவோம். ஆனால் நாட்டின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் இணைந்துகொள்வோம். அதனால் நாட்டை முன்னேற்ற பொது நிலைப்பாட்டுடன் – பொதுவான எண்ணத்துடன் ஒன்றுபட முன்வாருங்கள் என மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். மாற்றத்தை எம்மிலிருந்து ஆரம்பிப்போம். எமது மனங்களைத் திருத்திக்கொள்வோம். எமக்கு நாமே ஒளியாவோம். நாம் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம். தனிப்பட்ட நோக்கங்களுக்காக அன்றி நாட்டின் பொதுக் கனவை நனவாக்க ஒன்றுபடுவோம்.

அடுத்த சந்ததியின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம். எம்மீது சாட்டப்பட்டிருக்கும் பொறுப்புக்களை நாம் நிறைவேற்றுவோம். பல்வேறு தனிப்பட்ட நோக்கங்களுக்காக, இந்த பொறுப்புக்களைப் புறக்கணித்தால் வரலாற்றில் நாம் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுவோம். அதனால் புதிய பயணத்தைத் தொடர்வோம். புதிய எதிர்காலத்தை, புதிய நாட்டை உருவாக்குவோம். வாருங்கள் ஒன்றுபட்டு நாம் புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.