எம்.எச்.எம்.அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வு: பேசப்பட்டவையும் பேசப்படாதவையும்!

0 162

எம்.எல்.எம்.மன்சூர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் ஸ்தாபக தலை­வரும், முன்னாள் அமைச்­ச­ரு­மான எம் எச் எம் அஷ்ரப் அவர்­களின் 75 ஆவது பிறந்­த­நா­ளை­யொட்டி அவ­ரு­டைய வாழ்­வையும், பணி­க­ளையும் நினை­வு­கூரும் ஒரு நிகழ்வு கடந்த வாரம் கொழும்பில் இடம்­பெற்­றது.

அஷ்ரப் தனது அர­சியல் வாழ்வின் பிற்­கா­லத்தில் உரு­வாக்­கிய தேசிய ஐக்­கிய முன்­னணி (NUA) என்ற கட்­சியை தற்­பொ­ழுது தன் கைவசம் வைத்­தி­ருக்கும் சர்ச்­சைக்­கு­ரிய அர­சி­யல்­வாதி ஆசாத் சாலி இந்­நி­கழ்வை ஏற்­பாடு செய்­தி­ருந்தார்.

முன்னாள் ஜனா­தி­ப­திகள் இருவர், பாரா­ளு­மன்­றத்தின் சபா­நா­யகர், பல் சமயத் தலை­வர்கள், பெருந்­தொ­கை­யான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் பல்­துறை பிர­மு­கர்கள் ஆகி­யோ­ரையும் உள்­ளிட்ட பெருந்­தொ­கை­யானோர் இந்­நி­கழ்வில் பங்­கேற்­றி­ருந்­தனர். மறைந்த அமைச்­சரின் மனைவி, மகன் மற்றும் குடும்­பத்­தி­னரும் அங்­கி­ருந்­தார்கள்.

சுதந்­தி­ரத்­துக்குப் பிற்­பட்ட இலங்­கையின் அர­சியல், பாதைகள் பிரியும் மிக முக்­கி­ய­மான ஒரு வர­லாற்றுத் தரு­ணத்தில் வந்து நிற்கும் ஒரு பின்­பு­லத்தில் இந்த நினை­வேந்தல் நிகழ்வு இடம்­பெற்­றி­ருக்­கி­றது என்­ப­தனை இங்கு குறிப்­பிட வேண்டும். அர­சியல் களத்தில் ஒரு­போதும் இல்­லாத அள­வுக்கு தெளி­வற்ற நிலையும், ஒரு வித­மான குழப்­பமும் நிலவி வரும் சூழ்­நி­லையில் அடுத்து வரும் தேர்­தல்­களில் ‘யாருக்கு வாக்­க­ளிப்­பது’ என்­பதை தீர்­மா­னித்துக் கொள்ள முடி­யாத ஒரு பெரும் தடு­மாற்ற நிலையில் இலங்கை மக்கள் இருந்து வரு­கி­றார்கள். அதே வேளையில், பிர­தான கட்­சி­க­ளுடன் சந்­தர்ப்­ப­வாத கூட்­டுக்­களை உரு­வாக்கிக் கொண்டு அர­சியல் பிழைப்பு நடத்தி வரும் சிறு கட்­சி­களும் ‘யாருடன் கூட்டுச் சேரு­வது‘ என்­ப­தனை தீர்­மா­னிக்க முடி­யாமல் திணறிக் கொண்­டி­ருக்­கின்­றன.

மறு­புறம், உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களை அடுத்து இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்­கொண்ட ஒரு போதும் இல்­லா­த­வா­றான ஒடுக்­கு­முறை மற்றும் அற­க­லய மக்கள் எழுச்­சி­யுடன் இணைந்த விதத்தில் ‘இன மத நல்­லி­ணக்­கத்­துடன் கூடிய ஒரு புதிய இலங்கை தேசம்’ தொடர்­பாக துளிர்த்­தி­ருக்கும் நம்­பிக்­கைகள் என்­ப­வற்றின் பின்­ன­ணி­யிலும் இது முக்­கி­யத்­துவம் பெறு­கி­றது.

ஒரு நிகழ்ச்­சியில் கட்­டா­ய­மாக யார் கலந்து கொள்ள வேண்டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றதோ அவர்கள் அவ்­வி­டத்தில் இல்­லா­தி­ருப்­ப­தனை ஆங்­கி­லத்தில் `Conspicuous by Absence’ என்று சொல்­வார்கள். அதா­வது, ‘அந்த இடத்தில் இல்­லா­தி­ருப்­பதன் கார­ண­மாக மற்­ற­வர்­களின் கவ­னத்தை ஈர்ப்­ப­வர்கள்’ என்று சொல்­லலாம். அந்த வகையில், 1988 தொடக்கம் 2000 வரையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியில் அஷ்­ரப்பின் சக பய­ணி­க­ளாக இருந்து வந்த பல பிர­மு­கர்­களை அங்கு காண முடி­ய­வில்லை. அதே போல, கிழக்­கிலும், வன்­னி­யிலும் அவர் உரு­வாக்கிக் கொடுத்த முஸ்லிம் வாக்கு வங்­கியை இப்­பொ­ழுது தமது கட்­டுப்­பாட்டில் வைத்துக் கொண்­டி­ருக்கும் (மறைந்த தலை­வரின் பணி­களை அதே விதத்தில் முன்­னெ­டுத்துச் செல்­வ­தாக கூறிக் கொள்­வ­துடன், அவரை நினைவு கூர்ந்து புறம்­பாக நினை­வேந்­தல்­களை நடத்தி வரும்) இரண்டு முக்­கிய தலை­வர்­க­ளையும் அங்கு காண முடி­ய­வில்லை.

பல விஷ­யங்­க­ளிலும் துணிச்­ச­லான விதத்தில் தனது கருத்­துக்­களை முன்­வைக்கும் ஆசாத் சாலி, நிகழ்வை ஏற்­பாடு செய்­தவர் என்ற முறையில் இதற்­கொரு விளக்­கத்தை அளித்­தி­ருக்க வேண்டும். SLMC மற்றும் ACMC போன்ற கட்­சிகள் தற்­போது முன்­னெ­டுக்கும் முஸ்லிம் அடை­யாள அர­சியல், ‘நுஆ’ வுக்கு ஊடாக அஷ்ரப் முன்­னெ­டுக்க விரும்­பிய அர­சி­ய­லி­லி­ருந்து எவ்­வாறு வேறு­பட்­டது என்­ப­தனை யாரா­வது விளக்கிக் கூறி­யி­ருக்­கலாம்.

ஒரு தலைவர் மறைந்த பின்னர் இவ்­விதம் வரு­டாந்தம் நடத்­தப்­படும் நினை­வேந்தல் நிகழ்­வு­களின் முக்­கிய நோக்கம் அவ­ரு­டைய வர­லாற்றுப் பாத்­தி­ரத்தை மதிப்­பி­டு­வ­தாகும். ஆங்­கி­லத்தில் அதனை `Legacy’ என்று சொல்­வார்கள். அதா­வது, அவர் நமக்கு விட்டுச் சென்­றி­ருக்கும் (நல்­ல­வையும், மோச­மா­ன­வை­யு­மான) விட­யங்கள் மற்றும் சம­கால வர­லாற்றில் அவர் உரு­வாக்கும் தாக்கம் என்­ப­வற்றை அப்­படிச் சொல்­லலாம்.

பிர­பா­கரன் மற்றும் அஷ்ரப் ஆகிய இரு­வ­ரி­னதும் வர­லாற்றுப் பாத்­தி­ரங்கள் (Legacies) முறையே இலங்கை தமிழ் அர­சி­ய­லிலும், முஸ்லிம் அர­சி­ய­லிலும் மிக ஆழ­மான தாக்­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யவை. சொல்லப் போனால் இன்றும் கூட வடக்கு கிழக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் அர­சியல் இவ்­வி­ரு­வரும் விட்டுச் சென்­றி­ருக்கும் விழு­மி­யங்­களைச் சுற்­றியே சுழன்று கொண்­டி­ருக்­கி­றது. தத்­த­மது சமூ­கங்­களின் தலை­வி­தியை நிர்­ண­யிப்­பதில் அவ்­வி­ரு­வ­ரி­னதும் வகி­பா­கங்கள் தொடர்­பாக விருப்பு வெறுப்­பற்ற மதிப்­பீ­டுகள் (Objective Analysis) எவையும் இது­வ­ரையில் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­க­வில்லை. ‘பெருந்­த­லைவர்’, ‘மாம­னிதர்’ போன்ற முன்­னொட்­டுக்­க­ளுடன் தலை­வர்கள் திரு­நி­லைப்­ப­டுத்­தப்­படும் பொழுது அவர்கள் தொடர்­பாக கறா­ரான விமர்­ச­னங்­களை முன்­வைப்­ப­வர்கள் அநே­க­மாக ‘துரோ­கி­க­ளா­கவே‘ பார்க்­கப்­ப­டு­கின்­றார்கள். இலங்கை தமிழ் மற்றும் முஸ்லிம் சமூ­கங்­களின் பொதுப் புத்தி சார்ந்த நிலைப்­பா­டுகள் இன்­னமும் அவ்­வி­த­மா­கவே இருந்து வரு­கின்­றது.

இந்­நி­கழ்வின் பெரும்­பா­லான உரைகள் ஆங்­கில மொழியில் நிகழ்த்­தப்­பட்­டமை அதற்கு ஓர் அந்­நி­யத்­தன்­மை­யையும், மேட்­டிமைத் தோர­ணை­யையும் வழங்­கி­யது. அமான் அஷ்ரப் தனது தந்­தையின் நற்­பண்­பு­களை எடுத்துக் கூறி விட்டு, ஆசாத் சாலிக்கு நன்றி தெரி­வித்து தனது உரையை முடித்துக் கொண்டார்.

‘நுஆ’ கட்­சியின் எதிர்­கால திட்­டங்கள் எவை, அஷ்­ரப்பின் நோக்கும் பணி­களும் (Vision and Mission) எவ்­வாறு முன்­னெ­டுத்துச் செல்­லப்­படும், SLMC மற்றும் ACMC போன்ற கட்­சிகள் செய்து வரும் அர­சியல் குறித்த ‘நுஆ’ வின் (அல்­லது அமான் மற்றும் பேரியல் போன்­ற­வர்­களின்) நிலைப்­பாடு என்ன என்­பன போன்ற விட­யங்கள் அங்கு பேசப்­ப­ட­வில்லை. முக்­கி­ய­மாக, ‘அனை­வ­ரையும் அர­வ­ணைக்கும் ஐக்­கிய இலங்கை’ (Inclusive United Sri Lanka) என்ற அஷ்­ரப்பின் கனவை நன­வாக்­கு­வ­தற்கு ‘நுஆ’ என்­னென்ன திட்­டங்­களை வைத்­தி­ருக்­கி­றது என்­பது குறித்து ஆசாத் சாலியோ அல்­லது அஷ்ரப் அமானோ ஒன்றும் சொல்­ல­வில்லை.

‘எவ­ரு­டைய மன­தையும் புண்­ப­டுத்­தாத, எவ­ரு­டைய பெய­ரையும் குறிப்­பி­டாத கண்­ணி­ய­மான கனவான் இயல்­பி­லான’ பேச்­சுக்கள் அர­சி­ய­லுக்குப் பொருந்­து­பவை அல்ல. அந்த வகை­யான பேச்­சுக்­களை நிகழ்த்­து­வதோ அல்­லது திட்­ட­வட்­ட­மான ஒரு கருத்தைச் சொல்ல வேண்­டிய/ நிலைப்­பாட்டை எடுக்க வேண்­டிய தரு­ணத்தை வெறும் புன்­ன­கை­யுடன் கடந்து செல்­வதோ அர­சியல் அபி­லா­ஷை­களை கொண்­டி­ருப்­ப­வர்கள் செய்யக் கூடாத காரி­யங்கள்.

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா தனது உரையில் அஷ்­ரப்பின் வசீ­க­ர­மான ஆளுமை, தலை­மைத்­துவப் பண்­புகள், பன்­முகத் திறன்கள், தேசிய நல்­லி­ணக்­கத்­துக்­கான அவ­ரு­டைய பங்­க­ளிப்­புக்கள் போன்ற விட­யங்­களை தொட்டுச் சென்றார். அதே வேளையில், ‘அஷ்­ரப்பின் அகால மரணம் குறித்து இன்­னமும் எனக்கு சந்­தேகம் இருக்­கின்­றது’ என அதி­ர­டி­யாகச் சொன்ன அவர் ‘சமா­தா­னத்தை விரும்­பாத சில சக்­திகள் அதன் பின்­ன­ணியில் இருந்­தி­ருக்­கலாம்’ என்றும் குறிப்­பிட்டார். ஆனால், சமா­தா­னத்தை விரும்­பாத அந்தச் சக்­திகள் எவை என்­ப­தனை அவர் திட்­ட­வட்­ட­மாக கூற­வில்லை.

ஆனால், அஷ்­ரப்பின் மர­ணத்தின் பின்னர் சந்­தி­ரிகா தொடர்ந்து ஐந்து ஆண்­டுகள் நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக இருந்­தி­ருக்­கிறார். தேசிய உளவுப் பணி­யகம், இரா­ணுவ உளவுப் பிரிவு மற்றும் சிஐடி என்­பன முழு­வதும் அவ­ரு­டைய கட்­டுப்­பாட்டின் கீழ் இருந்து வந்த அமைப்­புக்கள். நிறை­வேற்று ஜனா­தி­பதி என்ற முறையில் தனக்­கி­ருந்த அப­ரி­மி­த­மான அதி­கா­ரங்­களை பயன்­ப­டுத்தி, அர­நா­யக்­கவில் இடம்­பெற்ற ஹெலி­கொப்டர் விபத்து தொடர்­பான மர்­மத்தை அந்த அமைப்­புக்­க­ளுக்கு ஊடாக துலக்கிக் கொள்­வ­தற்கு தன்னால் எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கைகள் எவை என்­ப­த­னையும் அவர் சொல்­லி­யி­ருக்க வேண்டும்.

தேர்தல் ஆணை­யத்தின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தனது உரையில் தனக்கும், பேரி­ய­லுக்கும், ஆசாத் சாலிக்­கு­மி­டையில் இருந்து வரும் பொது­வான ஒரு அம்­சத்தை மிகவும் சுவா­ர­சி­ய­மாகக் குறிப்­பிட்டார் (மூவரும் கம்­யூ­னிஸ்டு அப்­பாக்­களின் பிள்­ளைகள்). அவர் சுட்டிக் காட்­டிய முக்­கி­ய­மான ஒரு விடயம் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பின்­பற்­றப்­படும் 5% வெட்டுப் புள்ளி தொடர்­பான சர்ச்சை (ஜனா­தி­பதி பிரே­ம­தா­ச­வுடன் பேரம் பேசி, முன்னர் 12.5% ஆக இருந்து வந்த வெட்டுப் புள்­ளியை 5% ஆகக் குறைக்கச் செய்­தது அஷ்­ரப்பின் அர­சியல் வாழ்க்­கையின் முக்­கி­ய­மான ஒரு மைல் கல்).

ஜேவிபி போன்ற கட்­சி­க­ளி­னதும், சிறு­பான்மைச் சமூ­கங்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சி­க­ளி­னதும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எண்­ணிக்­கையை குறைக்க வேண்டும் என்ற நோக்­கத்­துடன் சிங்­கள வல­து­சாரி சக்­திகள் இந்த 5% வெட்டுப் புள்ளி மீண்டும் பழைய அள­வான 12.5% க்கு உயர்த்­தப்­பட வேண்­டு­மென இப்­பொ­ழுது பரப்­புரை செய்து வரு­கின்­றன. விகி­தா­சார தேர்தல் முறையின் கீழ் மாவட்ட மட்­டத்தில் பிர­தான அர­சியல் கட்­சி­களே பொது­வாக அதிக ஆச­னங்­களை பெற்றுக் கொள்­கின்­றன. அதன் கார­ண­மாக, அவற்­றுக்கு ஒவ்­வொரு மாவட்­டத்­திலும் அதிக எண்­ணிக்­கை­யி­லான எம்பி க்களும் கிடைக்­கின்­றனர். தேசப்­பி­ரிய சுட்டிக் காட்­டிய ஒரு விடயம், அவ்­விதம் அதிக எம்பி க்களை அக்­கட்­சிகள் பெற்றுக் கொள்ளும் பொழுது பட்­டி­யலில் கடை­சியில் வரும் சிலர் 12.5% த்துக்குக் குறை­வான வாக்­கு­களைப் பெற்று பாரா­ளு­மன்­றத்தில் பிர­வே­சிக்­கி­றார்கள் என்­பது. ஆகவே, வல­து­சா­ரி­களின் வாதத்தை இதன் மூலம் தேசப்­பி­ரிய முறி­ய­டிக்­கிறார்.

வாக்கு வங்கி எது­வு­மில்­லாத, பதிவு செய்­யப்­பட்ட வெறும் பெயர்ப் பலகை கட்­சி­யொன்றை வைத்­தி­ருப்­பது இலங்கை அர­சி­யலில் உயர் ஆதா­யங்­களை எடுத்து வரக் கூடிய ஒரு சிறந்த முத­லீ­டாக இருந்து வரு­கி­றது என்­ப­தனை அண்­மைக்­கால சம்­ப­வங்கள் எடுத்துக் காட்­டி­யுள்­ளன. 2020 பாரா­ளு­மன்றத் தேர்­தலின் போது பொது­பல சேனா­வுக்கு தனது கட்­சியை வாடகைக்கு விட்டு ‘அபே ஜனபலய’ என்ற கட்சியை பதிவு செய்து வைத்திருந்த பிக்கு பயனடைந்தார். அதே போல, ‘சமகி ஜன பலவேகய’ என்ற தனது கட்சியை சஜித் அணிக்கு வாடகைக்கு விட்டு, அதன் மூலம் எம்பி மற்றும் ராஜாங்க அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார் டயனா கமகே.
எதிர்கால தேர்தலொன்றில் அநேகமாக அந்த நல் வாய்ப்பு ஆசாத் சாலிக்கும் கிடைக்க முடியும். ஒரு ஆளுநர் பதவி அல்லது தேசிய பட்டியல் எம்பி போன்றவற்றுக்காக பேரம் பேசக் கூடிய ஒரு நிலை (அநேகமாக தேர்தலொன்றுக்கு முன்னர் அல்லது பின்னர்) உருவாக முடியும். அதைத் தவிர, இப்போதைக்கு இலங்கை அரசியலில் ‘நுஆ’ ஒரு பொருட்படுத்தக் கூடிய சக்தியாக எழுச்சியடைவதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாக தெரியவில்லை.
அஷ்ரப்பின் பெருமைமிகு `Legacy’ யை வாக்குகளாக மாற்றிக் கொள்ளும் சக்தியை தொடர்ந்தும் தம் வசம் வைத்துக் கொண்டிருக்கும் SLMC மற்றும் ACMC போன்ற கட்சிகளுக்கு எந்த விதத்திலும் அது ஒரு சவாலாக இருந்து வரவும் முடியாது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.