பலஸ்தீன் விவகாரத்தில் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டினை வெளியிட வேண்டும்

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டு

0 107

(ஏ.ஆர்.ஏ. பரீல்)

காஸாவின் வடக்­கி­லி­ருந்து தெற்கு நோக்கி நக­ரு­மாறு இஸ்ரேல் பிறப்­பித்த உத்­த­ர­வுக்­க­மைய தெற்­குக்கு நகரும் மக்­களை இலக்கு வைத்து இஸ்ரேல் மேற்­கொள்ளும் தாக்­கு­தல்­க­ளினால் மக்கள் நடு வீதியில் வீழ்ந்து உயிர் துறக்­கி­றார்கள். இந்­நி­லையில் யுக்ரேன் பிரச்­சி­னையின் போது ஜனா­தி­பதி உட­ன­டி­யாக தனது நிலைப்­பாட்­டினை கொள்­கை­யினை வெளி­யிட்­டது போன்று பலஸ்­தீன விவ­கா­ரத்­திலும் திறந்த தெளி­வான நிலைப்­பாட்­டினை மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது என வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி பலஸ்தீன் விவ­காரம் தொடர்பில் தன­து நிலைப்­பாட்­டினை விளக்­கு­கையில் தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­று­கையில்,
இன்று நாம் எமது வாழ்­நாளில் மிகவும் துய­ர­மான சம்­ப­வங்­களை மத்­திய கிழக்கில் கண்­டு­கொண்­டி­ருக்­கிறோம். இன்று இரண்டு மாதங்­க­ளுக்கும் அதி­க­மாக பலஸ்­தீ­னர்­களின் பூமிக்கு மேலால் வானி­லி­ருந்து இஸ்ரேல் விமானப் படை­யினர் குண்­டு­களைப் பொழிந்து வரு­கின்­றனர்.

காஸாவில் வடக்கில் வதியும் பலஸ்­தீ­னர்கள் அனை­வரும் தமது பிறந்த பூமியை விட்டும், வாழ்­வி­டங்­களைக் கைவிட்டும் உயிர்­களைக் காப்­பாற்றிக் கொள்­வ­தற்­காக தெற்குப் பகு­திக்குச் செல்­லு­மாறு இஸ்ரேல் அறி­வித்­தது. அதன் பின்பு அந்தப் பிர­தே­சங்­க­ளி­லி­ருந்த பாட­சாலை, வைத்­தி­ய­சா­லைகள், வீடுகள், இஸ்­லா­மிய மற்றும் கிறிஸ்­தவ மத நிலை­யங்­களை இஸ்ரேல் படை­யினர் அழித்து நிர்­மூ­ல­மாக்­கி­னார்கள். உணவு, குடிநீர் மற்றும் வழங்­கப்­படும் மருந்­துகள் அனைத்­துக்கும் இஸ்ரேல் படை­யினர் தடை விதித்­தனர். எண்­ணெய்க்கு தடை விதித்­தனர். முழு பிரா­ந்­தி­யத்­தையும் இருளில் மூழ்கச் செய்­தனர். இந்த இரண்டு மாத­கால எல்­லைக்குள் சுமார் 17 ஆயிரம் பேரைக் கொலை செய்­தனர். இவர்­களில் 75 வீத­மானோர் பெண்­களும் சிறு­வர்­க­ளு­மா­வார்கள். இலட்சக் கணக்­கானோர் மாற்றுத் திற­னா­ளி­க­ளாக மாறி­யுள்­ளனர்.
கண்கள், தலை, கை, கால்­களில் இரத்தம் வழிய வரும் சிறிய பிள்­ளைகள், தாய்­மார்­களை நாம் சமூக வலைத் தளங்­க­ளிலும் அல்­ஜெ­ஸீரா ஊட­கத்­திலும் காண்­கிறோம். இவர்கள் எங்­க­ளது பிள்­ளை­களைப் போன்­ற­வர்கள். எங்­க­ளது தாயாரைப் போன்ற பெண்கள், சகோ­த­ரிகள்.

கால், கைகள், கண்கள் இழக்­கப்­பட்டு ஜனா­ஸாக்கள் கொண்டு வரப்­ப­டு­கின்­றன. இவர்­களில் பெண்கள் சிறு­வர்கள் மாத்­தி­ர­மல்ல. ஐக்­கிய நாடுகள் சபையின் பணி­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள், டாக்­டர்கள் மற்றும் வைத்­திய சேவையைச் சேர்ந்­த­வர்கள் இந்தப் பட்­டி­யலில் அடங்­கு­கின்­றனர்.

இந்தக் கொடிய தாக்­கு­தல்­களை நிறுத்­து­வ­தற்கு ஐக்­கிய நாடுகள் சபை கொண்டு வந்த தீர்­மா­னங்கள் அதி­கார பலம் கொண்ட நாடு­களால் தொடர்ந்தும் நிரா­க­ரிக்­கப்­பட்டே வரு­கின்­றன. ஐக்­கிய நாடுகள் சபையில் அமெ­ரிக்கா மற்றும் இஸ்ரேல் உட்­பட பலம் வாய்ந்த நாடுகள் சில­வற்றைத் தவிர பெரும்­பான்­மை­யான உலக நாடுகள் யுத்த நிறுத்தம் மற்றும் மனி­தா­பி­மான உதவி­க­ளுக்கு வாய்ப்­ப­ளிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்தும் நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

காஸாவில் பலஸ்­தீன மக்­களை உயிரைப் பாது­காத்துக் கொள்­வ­தற்­காக வடக்­கி­லி­ருந்து தெற்­கிற்கு செல்­லு­மாறு இஸ்ரேல் இரா­ணுவம் உத்­த­ர­விட்­டது. தற்­போது தெற்­கிற்கும் வான் வழித் தாக்­கு­தல்கள் நடத்­தப்­ப­டு­கின்­றன. தரை வழித் தாக்­கு­தலும் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இதனை ஊட­கங்­களில் நாம் பார்க்­கிறோம். வடக்­கி­லி­ருந்து தெற்கு நோக்கி நகர்ந்து கொண்­டி­ருக்கும் மக்கள் இஸ்­ரேலின் தாக்­குதல் கார­ண­மாக நடு வீதியில் வீழ்ந்து உயிர் துறக்­கி­றார்கள். இவற்றை உறுதி செய்யும் படங்­களை நாம் சமூக வலைத்­த­ளங்­களில் காண்­கிறோம்.

முழு காஸா­வி­னதும் மில்­லியன் கணக்­கான மக்­க­ளையும் சினாய் பாலைவனத்­துக்கு அனுப்பி விட்டு முழு காஸா பிராந்­தி­யத்­தையும் இஸ்­ரேலின் ஒரு பகு­தி­யாக மாற்றிக் கொள்­வதே இஸ்­ரேலின் திட்டம். தற்­போது இது முழு உல­கிற்கும் இர­க­சி­ய­மா­ன­தல்ல.

‘காஸா பிராந்­தியம் பிள்­ளை­களின் சுடு­கா­டாக மாறி­யுள்­ளது. உட­ன­டி­யாக யுத்த நிறுத்­தத்தை கடைப்­பி­டி­யுங்கள்’ என ஐக்­கிய நாடுகள் சபையின் பொதுச் செய­லாளர் அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்டுக் கோரி­யுள்ளார்.
ஆனால் இஸ்ரேல் ஐ.நா.வின் பொதுச் செய­லா­ளரின் கோரிக்­கையை மறுத்­துள்­ளது. ஐ.நா. பொதுச் செய­லா­ளரைப் பத­வி­யி­லி­ருந்தும் வெளி­யேற்ற வேண்­டு­மென இஸ்ரேல் எச்­ச­ரிக்கை செய்­துள்­ளது. எனக்கு இந்­நே­ரத்தில் ஒன்று ஞாப­கத்­துக்கு வரு­கி­றது. கொங்கோ பிரச்­சி­னையின் போது டேக் ஹெமர்சல் எனும் பொதுச் செய­லா­ள­ரையும் அதி­கார பலம் கொண்ட சக்­திகள் பத­வி­யி­லி­ருந்து வில­கு­மாறு அச்­சு­றுத்தல் விடுத்­தன. அன்று அவர் ஐக்­கிய நாடு­களின் பொதுச் சபையில் ஆற்­றிய உரை எனக்கு ஞாப­கத்தில் வரு­கி­றது.

சிறிய நாடு­களின் பாது­காப்­புக்­காகவே ஐக்­கிய நாடுகள் அமைப்பு கட்­டா­ய­மாகத் தேவைப்­ப­டு­கி­றது. இந்தச் சபையில் அங்கம் வகிக்கும் பெரும்­பான்­மை­யான நாடு­களின் ஆத­ரவு இருக்­கும்­வரை நான் ‘அந்தப் பொறுப்­பினை நிறை­வேற்­றுவேன்’ என அன்று அவர் தெரி­வித்தார்.

சிறிய நாடு­களின் பாது­காப்­பிற்­காக இருக்கும் ஐக்­கிய நாடுகள் அமைப்பு, மனித உரி­மைகள் ஆணைக்­குழு, சர்­வ­தேச நீதி­மன்றம் என்­பன தீர்­மானம் மேற்­கொள்ளல், அறிக்­கைகள் வெளி­யிடல் அன்றி சிறிய நாடு­களின் மக்­களின் பாது­காப்பு, சுய­நிர்­ணயம் என்­பன தொடர்பில் அந்­நா­டுகள் எத்­த­கைய நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­பட முடி­யாத அள­வுக்கு வல்­ல­ரசு நாடுகள் ஆதிக்கம் செலுத்­து­கின்­றன. இதனால் குறிப்­பிட்ட அமைப்­பு­களின் செயற்­றிறன் குன்­றி­யுள்­ளது.

பலஸ்­தீ­னர்­களின் பூமியின் மீது இவ்­வா­றான மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தல்கள் தொட­ராக மேற்­கொள்­ளப்­பட்­டமை இதுவே முதற்­த­டவை அல்ல. கடந்த இரண்டு மாதத்­திற்கும் அதி­க­மாக தினமும் பலஸ்­தீ­னர்கள் நூற்­றுக்­க­ணக்­காக இவ்­வாறு கொல்­லப்­பட்டு வரு­வதை நாம் காண்­கிறோம். இதற்கு முன்பு ஒவ்வொரு வரு­டமும் இவ்­வா­றான மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்டு வந்­துள்­ளன.

இவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் ஐக்­கிய நாடு­களின் அமைப்பு அது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்கு நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த குழுக்­களின் அறிக்­கைகள் தாள்­களில் எழு­தப்­பட்ட வெறும் வார்த்­தை­க­ளுக்கு மட்­டுப்­ப­டு­வ­தற்கு வல்­ல­ரசு சக்­திகள் கார­ண­மாக இருந்­தன.

2021ஆம் ஆண்டு பலஸ்­தீ­னர்­களின் பூமி மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்கள் தொடர்பில் ஆராய்­வ­தற்கு குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. அந்தக் குழு­வின் தலை­வ­ராக இலங்கைப் பிர­தி­நிதி மொஹான் பீரிஸ் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார். அந்தக் குழு­வின் அறிக்­கையை அவர் ஐ.நாவின் பொதுச் சபைக்குக் கைய­ளித்தார்.

தற்­போது காஸா மீது மேற்­கொள்­ளப்­படும் தாக்­கு­தல்­களை நிறுத்­தும்­படி கோரி உல­கெங்கும் இலட்­சக்­க­ணக்­கான மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்­பாட்டம் நடத்­து­வதை நாங்கள் காண்­கிறோம். ஜப்­பானின் டோக்­கி­யோ­வி­லி­ருந்து சிலி வரை அதே­போன்று ஒக்­லாந்­தி­லி­ருந்து அம்மான் வரையும் லொஸ் என்­ஜ­ல்ஸி­லி­ருந்து ஜகார்த்தா வரையும் நிரந்­தர யுத்த நிறுத்தம் கோரி இந்த மோச­மான கொலை­களை நிறுத்­து­வ­தற்­காக வீதியில் இறங்­கி­யி­ருக்­கி­றார்கள்.
உல­கெங்­கு­முள்ள புத்­தி­ஜீ­விகள், நிபு­ணர்கள், மாண­வர்கள், இளை­ஞர்கள் நிரந்­தர யுத்த நிறுத்­தத்­துக்கு குரல் கொடுத்து வரு­கி­றார்கள். அமெ­ரிக்­காவில் உள்ள யூதர் இனத்­தவர் கூட அமெ­ரிக்க காங்­கி­ரஸை சுற்றி வளைத்து அமர்ந்து போரா­டி­யதை நாம் எம் கண்­க­ளினால் கண்டோம்.

தென்­னா­பி­ரிக்கா, இந்­தோ­னே­ஷியா, பெலிஸ், நமீபியா, பங்­க­ளாதேஷ், பொலி­வியா, கொமரோஸ், ஜிபொடி உட்­பட நாடுகள் இந்த மிலேச்­சத்­த­ன­மான கொள்­கைக்கு எதி­ராக சர்­வ­தேச நீதி­மன்­றுக்குச் சென்­றுள்­ளன. பல நாடுகள் இஸ்­ரே­லு­ட­னான இரா­ஜ­தந்­திர உற­வினை நிறுத்திக் கொள்­வ­தற்கு தீர்­மா­னித்து அறிக்கை வெளி­யிட்­டுள்­ளன. தென்­னா­பி­ரிக்கா, சிலி, பெலிஸ், கொலம்­பியா, ஹொன்­டுராஸ், பஹ்ரைன், ஜோர்தான், துருக்கி, சாட் ஆகிய நாடு­க­ளுடன் தினமும் பல நாடுகள் இணைந்து வரு­கின்­றன.

எமது நாடு போன்ற சிறிய நாடு­க­ளுக்கு உள்ள பாது­காப்பு உலக மக்­களின் நிலைப்­பா­டாகும். உலக மக்­களின் தலை­யீ­டாகும். பல வரு­ட­கா­ல­மாக தென்­னா­பி­ரிக்­காவில் நில­விய சிறு­பான்­மை­யான வெள்­ளை­யர்­களின் அடக்­கு­மு­றைக்கு மேற்­கத்­தேய நாடு­களில் சில மற்றும் ஊடக ஏகா­தி­ப­தியம் என்­ப­ன­வற்றின் ஆசிர்­வாதம் கிடைக்­காது. என்­றாலும் உலகின் சிறிய நாடுகள் மற்றும் உலக மக்கள் அந்த சிறு­பான்மை வெள்­ளை­யர்­களின் ஆட்­சிக்கு எதி­ராக ஒன்­று­பட்­டனர். அவர்­க­ளு­ட­னான இரா­ஜ­தந்­திர தொடர்­பு­களை துண்­டித்­தனர். அவர்­க­ளது உற்­பத்திப் பொருட்­களை நிரா­க­ரித்­தனர். இவ்­வா­றான அகிம்சை வாத போராட்­டங்களின் முன்னால் தென்­னா­பி­ரிக்­காவின் சிறு­பான்மை வெள்­ளை­யர்­களின் ஆட்சி மண்­டி­யிட வேண்­டி­யேற்­பட்­டது.

இன்று பலஸ்­தீன மக்­களின் நிலைமை பரி­தா­பத்­துக்­கு­ரி­ய­தாக மாறி­யுள்­ளது. ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­களின் கீழ் எமது பரம்­ப­ரையினர் அடி­மை­க­ளாக பல்­வேறு இன்­னல்­க­ளுக்கு மத்­தியில் சுரண்­டப்­பட்டு வாழ்ந்த வர­லாறு எனது நினை­வுக்கு வரு­கி­றது. அன்று ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­களால் வாரி­ய­பொல தேரர், வீர­புரன் அப்பு மற்றும் கொங்­காலே கொட பண்டா போன்ற வீரர்கள் தீவி­ர­வா­தி­க­ளாக முத்­திரை குத்­தப்­பட்­டார்கள். இது எனது நினை­வுக்கு வரு­கி­றது.

இதே­போன்றே தென்­னா­பி­ரிக்­காவின் சுதந்­திர போராட்­டத்தின் தலை­வர்­க­ளான நெல்சன் மண்­டேலா, டெஸ்மன் டுட்டு போன்­றோ­ருக்கு இந்த மேற்­கத்­தேய நாடு­களின் அடி­வ­ரு­டிகள் மற்­றும் மேலைத்­தேய ஊட­கங்கள் தீவி­ர­வா­திகள் என்று பட்டம் சூட்­டின. அன்று உலக நாடு­களின் எழுச்­சி­யினால் மற்றும் ஆபி­ரிக்க மக்­களின் போராட்­டத்தின் கார­ண­மாக அந்த ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­களின் ஆட்­சியைத் தோற்­க­டிக்க முடிந்­தது.

தென்­னா­பி­ரிக்­காவின் சுதந்­திரப் போராட்டம் வெற்­றி­ய­ளித்­தி­ருந்­தாலும் பலஸ்­தீ­னர்­களின் போராட்­டத்தை வெற்­றி­ய­டையச் செய்­வ­தற்கு உலக சமூ­கத்­தினால் இன்னும் முடி­யாமற் போயுள்­ளது.

தென்­னா­பி­ரிக்கா சுதந்­திரம் பெற்ற சந்­தர்ப்­பத்தில் நெல்சன் மண்­டேலா மற்றும் டெஸ்மன் டுட்டு வெளி­யிட்ட கருத்து எனது நினை­வுக்கு வரு­கி­றது.
நெல்சன் மண்­டெல்லா இவ்­வாறு கூறினார்.

‘தென் ஆபி­ரிக்­காவில் நாம் பெற்றுக் கொண்­டுள்ள சுதந்­திரம், பலஸ்­தீன மக்கள் சுதந்­திரம் பெற்றுக் கொள்ளும் தின­மன்றே பூர­ணத்­துவம் அடையும் என்று கூறினார்.

டெஸ்மன் டுடு இவ்­வாறு கூறினார்.
‘நான் பலஸ்­தீ­னர்­களின் பூமிக்குச் சென்றேன். பலஸ்­தீ­னர்கள் நாம் தென்­னா­பி­ரிக்­காவில் அனு­ப­விக்கும் துன்­பங்­களை விட மோச­மான துய­ரங்­களை அனு­ப­விக்­கி­றார்கள்.

தென்­னா­பி­ரிக்கா விவ­கா­ரத்தில் அன்று எமது தலைவர்கள் கொண்ட நிலைப்பாட்டுக்கு அமைவாகவும், ஆசிய, ஆபிரிக்க நாடுகளின் ஒற்றுமை மற்றும் அணிசேரா நாடுகள் உலக அபிப்பிராயத்துக்கு தலைமை வழங்கியது போன்று இன்று நாம் பலஸ்தீன விவகாரத்தில் ஏகாதிபத்திய வாதிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும். பலஸ்தீன மக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்காக நிரந்தர யுத்த நிறுத்தத்துக்காக நாங்கள் சிறிய நாடென்றாலும் உலகின் கருத்தொற்றுமையுடன் ஒன்று சேர வேண்டும். பலஸ்தீனர்களின் நாட்டின் சுதந்திரத்துக்காக குரல் கொடுக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்துடன் அச்சமின்றி ஒன்றுபட வேண்டும்.
இன்று பலஸ்தீன பிரச்சினையின் சரி பிழை, கறுப்பு வெள்ளை பிரச்சினை போன்றதாகும். இந்நிலையில் நாம் சரியான பக்கம் அணிதிரள வேண்டும். மனிதப் படுகொலைகளை நிறுத்துவதற்கு யுத்த நிறுத்தம் அவசியமாகும். இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.

யுக்ரேன் பிரச்சினை உருவானபோது ஜனாதிபதி உடனடியாக அது தொடர்பில் தனது நிலைப்பாட்டினை தெரிவித்தார். அதுபோன்று ஜனாதிபதி பலஸ்தீன விவகாரத்திலும் திறந்த, தெளிவான நிலைப்பாட்டினை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.