சவூதி அரேபியாவின் 93வது தேசிய தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்டானி அவர்களின் செய்தி

0 610

சவூதி அரேபியாவின் 93வது தேசிய தினத்தை நாம் கொண்டாடும் இவ்வேளையில், எமது கடந்த காலத்தை கொண்டாடுவது மட்டுமல்லாமல், ஒளிமயமான எதிர்காலத்தையும், அனைத்தையும் உள்ளடக்கிய, நிலையான, புதுமைகள் நிறைந்த மற்றும் வளமான எதிர்காலத்தை சவூதி அரேபிய இராச்சியத்தின் புத்திசாதுர்யமான தலைமைத்துவத்தின் கீழ் கற்பனை செய்கிறோம்.

இன்று, சவூதி அரேபியா அதன் 93 ஆவது தேசிய தினத்தைக் கொண்டாடுகிறது. மன்னர் அப்துல் அசீஸ் பின் அப்துல் ரஹ்மான் ஆல் ஸுஊத் அவர்கள்  தொண்ணூற்று மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இது போன்ற ஒருநாளில்தான் சவூதி அரேபியாவை நிறுவினார். இந்நாளில் ஒவ்வொரு ஆண்டும், நிறுவனர் எடுத்த வீர நிலைப்பாடுகளை நாம் நினைவுகூறுகிறோம். இராச்சியத்தை ஒன்றிணைத்து, ஒருங்கிணைத்து, அதனைக் கட்டியெழுப்பினார். பின்னர் அவர் ஆரம்பித்து வைத்த பயணத்தை, தொடர்ந்து  வந்த அனைத்து மன்னர்களும் தொடர்ந்தது மட்டுமல்லாது சவூதி அரேபிய இராச்சியத்தை, பிராந்திய மற்றும் உலக அளவில் உயர் பொருளாதார மற்றும்  வளர்ச்சி அடைந்த நாடக மாற்றுவதில் பெரும் பங்களிப்புச் செய்தனர்.

இச்சந்தர்ப்பத்தில், இரண்டு புனிதத்தலங்களின்  பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல்அசீஸ் அவர்களுக்கும், பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முகம்மது பின் சல்மான் பின் அப்துல்அசீஸ்  அவர்களுக்கும், சவூதி அரேபியா மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போதய உயர் தலைமைகளின் கீழ் இராச்சியம் மேலும் முன்னேற்றமும்  மற்றும் அபிவிருத்தியும் அடைய வாழ்த்துகின்றேன்.

சவூதி அரேபிய இராச்சியம், இரண்டு புனிதத்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல்அசீஸ் ஆல் ஸுஊத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரி ஆகியோரின் வழிகாட்டுதல்கள் மற்றும் திட்டங்களின் கீழ், சவூதி அரேபிய இராச்சியத்தின் மூலோபாயத் திட்டமான”விஷன் 2030″ ஊடாக பல்வேறு துறைகளிலும், அனைத்து மட்டங்களிலும், பாரிய வளர்ச்சிகளைக் கண்டுள்ளது. சவூதி அரேபிய இராச்சியத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கான நம்பிக்கையளிக்கும் எதிர்கால திட்டங்கள் மற்றும்  அதன் குடிமக்களை அனைத்து மட்டங்களிலும் மேன்மை அடையச்செய்வதற்க்கான ஆழமான மிக முக்கிய திட்டங்களை  இம்மூலோபாயத் திட்டம் உள்ளடக்கியுள்ளது. உதாரணமாக: மன்னர் சல்மான் பூங்கா, நியோம், தி லைன், தி நியூ ஸ்கொயர் திட்டம், சவூதி அரேபிய பசுமை முன்னெடுப்பு , மத்திய கிழக்குபசுமை  முன்னெடுப்பு, திரியா கேட் திட்டம், கிடியா திட்டம், அல்-உலா மேம்பாட்டு திட்டம், ராஃபிக் உவர் நீர் சுத்திகரிப்புத்திட்டம், அமலா திட்டம், சகாகா சூரிய சக்தி மின் உற்பத்தித்திட்டம், செங்கடல் திட்டம் மற்றும் மன்னர் சல்மான் சக்திவள நகரத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் இதில் அடங்கும்.

சவூதி அரேபியா, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுவதில்  ஒரு இன்றியமையாத பங்காளியாக விளங்குகிறது. இந்த ஆண்டு, சவூதி அரேபியா இராச்சியமானது சர்வதேச பாதுகாப்பு மற்றும் உலக அளவில் அமைதியை நிலைநாட்டும் நோக்கத்துடன் பல உச்சிமாநாடுகள், மாநாடுகள் மற்றும் சந்திப்புகளை அங்கு நடாத்தியது. அவ்வாறே சவூதி அரேபியாவானது உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் மக்களின் துன்பங்கள், துயரங்களைப் போக்கும் நோக்கோடு   7.12 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவிகளை (மனிதாபிமானம் மற்றும் அபிவிருத்தி ) வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில், 2022ஆம் ஆண்டில் உலகில் நன்கொடை வழங்கும் நாடுகளில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், பூமியைப் பாதுகாப்பதற்கும், காலநிலை அபாயங்களைக் குறைப்பதற்கும் சவூதி அரேபிய இராச்சியம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. சவூதி அரேபிய பசுமை முன்னெடுப்பு , மத்திய கிழக்குபசுமை  முன்னெடுப்பு,  ரியாத்தை தளமாகக் கொண்ட உலகளாவிய நீர் அமைப்பை நிறுவுவதற்கான பட்டத்து இளவரசர் மற்றும் பிரதம மந்திரி அவர்களின் அறிவிப்பு மற்றும் சுத்தமான சக்தி வளத்தில் தங்கியிருத்தல்  உட்பட பல முன்னெடுப்புகள் மூலம் இம்முயற்சியானது மேலும் மெருகூட்டப்பட்டது.

சவூதி அரேபிய இராச்சியம் மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசானது நீண்ட கால மிக உன்னதமான இருதரப்பு உறவுகளை பேணி வருகிறது. இரு நாடுகளுக்கிடையிலான இவ்வுறவுகள் பரஸ்பர  ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டது. இவ்விரு நாடுகளுக்கிடையில் பல ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இரு நாடுகளின் மூத்த அதிகாரிகளின் பரஸ்பர விஜயங்கள் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை வளர்ப்பதில் மேலும் பங்களிப்புச் செய்துள்ளன. வளைகுடா பிராந்தியத்தில் இலங்கையின் மிக முக்கியமான வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக சவூதி அரேபிய இராச்சியம் கருதப்படுகிறது. 2022ஆம் ஆண்டில், இலங்கைக்கான இராச்சியத்தின் ஏற்றுமதியின் மொத்த அளவு 714 மில்லியன்  சவூதி ரியால்களை எட்டிய அதே வேளை,  இலங்கையிலிருந்தான இராச்சியத்தின் மொத்த இறக்குமதியின் அளவு508.863 சவூதி ரியால்களை எட்டியுள்ளது. சவூதி அரேபிய இராச்சியம் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யும் மிக முக்கியமான பொருட்களில் உலோகம், பிளாஸ்டிக் பொருட்கள், தோல் பதனிடும் பொருட்கள், வண்ணப்பூச்சுகள், கடதாசி மற்றும் அலுமினியம் ஆகியவை அடங்கும். அதேவேளை சவூதி அரேபிய இராச்சியம், கோபி, தேயிலை, வாசனைத்திரவியங்கள்,  ஆடைகள், பழங்கள் மற்றும் மீன் போன்ற பொருட்களை இறக்குமதி செய்கிறது. சவூதி-இலங்கை கூட்டுக் குழு, சவூதி அரேபியா இராச்சியத்தின் ரியாத் நகரில் இவ்வருடம் மே மாதம் அதன் முதல் சந்திப்பை நடத்தியது. இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, கலாசாரம், சுற்றுலா போன்ற துறைகளோடு தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.  இச்சந்திப்புக்களைத் தொடர்ந்து, இலங்கை வர்த்தகர்களுக்கும், சவூதி அரேபிய வர்த்தக சம்மேளனத்தின் அதிகாரிகளுக்கிடையிலான சந்திப்பு ஒன்றும் ரியாத் நகரில் இடம்பெற்றது. மேலும் விரைவில் இரு தரப்பினருக்கும் இடையே மேலும் பல சந்திப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சவூதி அரேபியா இராச்சியமானது இலங்கை குடியரசின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு முக்கிய பங்காளியாகக் கருதப்படுகிறது. இந்த வகையில் இலங்கையின் கல்வி, நீர்ப்பாசனம், விவசாயம் மற்றும் சாலை வலையமைப்பு திட்டங்களின் அபிவிருத்திப்பணிகளுக்காக மொத்தமாக  455 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வழங்கியுள்ளது. சுமார்  இரண்டு இலட்சம் இலங்கையர்கள் சவூதி அரேபியா இராச்சியத்தில் கடமை புரிவதோடு , ஆயிரக்கணக்கான இலங்கை முஸ்லிம்கள் உம்ரா மற்றும் ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதற்காக இராச்சியத்திற்கு வருகை தருகின்றனர். மேலும் பல சவூதி பிரஜைகளுக்கு இலங்கை ஒரு முக்கியமான சுற்றுலா மற்றும் முதலீட்டு தலமாக கருதப்படுகிறது.

இறுதியாக,  எமது இரு நட்பு நாடுகளுக்கும் மற்றும் அதன் மக்களுக்கும் முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தியை நல்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Leave A Reply

Your email address will not be published.