முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்ட திருத்தம்: விவா­க­ரத்து தொடர்­பாக நியா­ய­மா­னதும் சம­மா­ன­து­மான சட்­டங்­களை உரு­வாக்குவதன் அவசியம்

0 1,126

ஹஸனாஹ் சேகு இஸ்­ஸதீன்
(சட்­டத்­த­ரணி, சட்­ட­மு­து­மாணி)
ஹிஷாமா ஹாமின்
(குடும்பச் சட்ட பரப்­பு­ரை­யாளர்)

கிர­வுன்ட்­வியுஸ் இல் வெளி­யான
கட்­டு­ரையை அடிப்­ப­டை­யாகக் கொண்டு எழு­தப்­பட்­டது.

முஸ்லிம் விவாக மற்றும் விவா­க­ரத்துச் சட்­டத்தின் (MMDA) மீது திருத்­தங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற தேவை மிக நீண்­ட­கா­ல­மாக உண­ரப்­பட்டு காலா­கா­லத்­துக்கு பல கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்டு வந்­துள்­ளன. இந்த வகையில் இறு­தி­யாக 2021ஆம் ஆண்டில் ஒரு குழு நிய­மிக்­கப்­பட்­ட­துடன், அது தனது பரிந்­து­ரை­களை நீதி­ய­மைச்­சிடம் கைய­ளித்­தி­ருந்­தது. இக்­குழு முன்­வைத்த பரிந்­து­ரை­களின் அடிப்­ப­டையில் சட்ட மூல மசோ­தா­வொன்று தயா­ரிக்­கப்­பட்­டது. ஆயின், இதற்குப் பதி­ல­ளிப்­பாக, MMDA இனைத் திருத்­து­வ­தற்­கான சட்ட மூல வரை­புக்கு பதி­ல­ளிக்கும் விதத்தில் 18 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தமது பரிந்­து­ரை­களை நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக்­ச­வுக்கு ஜூன் 08, 2023 திக­தி­யி­டப்­பட்ட கடி­தத்தின் ஊடாக சமர்ப்­பித்­துள்­ளனர்.

MMDA இனைத் திருத்­து­வ­தற்­காக 2021 இல் நிய­மிக்­கப்­பட்ட குழு அண்­மையில் வெளி­யிட்ட அறிக்­கையின் அடிப்­ப­டையில் உரு­வாக்­கப்­பட்டு நீதி­ய­மைச்­சினால் சமர்ப்­பிக்­கப்­பட்ட சட்ட மூல வரைபில் பிர­தி­ப­லிக்கும் அனைத்து முன்­னேற்­ற­க­ர­மான திருத்­தங்­க­ளையும் நிரா­க­ரிக்கும் வகையில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் பரிந்­து­ரைகள் அமைந்­துள்­ளன. அது­மட்­டு­மன்றி, 2009 ஆம் ஆண்டு நீதி­பதி சலீம் மர்சூப் தலைமை வகித்த குழு­வினால் உரு­வாக்­கப்­பட்டு ஏக­ம­ன­தாக ஏற்றுக் கொள்­ளப்­பட்ட முன்­னேற்­ற­க­ர­மான நிலைப்­பா­டு­களைக் கூட பின் தள்ளும் வகையில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் தற்­போ­தைய பரிந்­து­ரைகள் அமைந்­துள்­ளன. (அவற்றை இங்கே காணலாம்- https://www.mmdasrilanka.org/statment-tamil-15-07-23/)

இவை அனைத்தும் சிக்­க­லுக்­கு­ரி­ய­ன­வாக இருக்­கின்­ற­போதும், இக்­கட்­டு­ரையில் விவா­க­ரத்து தொடர்­பாக காணப்­படும் சட்ட ஏற்­பாட்­டி­னையும், நடை­மு­றையில் அவை பெண்கள் மீது செலுத்தும் விளை­வு­க­ளையும் முன்­வைக்­கிறோம்.

தற்­போது அமுலில் இருக்கும் 1951 ஆம் ஆண்டின் இலங்கை முஸ்லிம் விவாக மற்றும் விவா­க­ரத்துச் சட்­டத்தின் மிகவும் பிரச்­சி­னைக்­கு­ரிய அம்­சங்­களில் ஒன்­றாக விவா­க­ரத்­துக்­கான சம­மற்ற வகை­களும், செயன்­மு­றை­களும் காணப்­ப­டு­கின்­றன. 2021 ஜூன் மாதம், சட்­டத்­த­ர­ணிகள், துறை­சார்­நி­பு­ணர்கள் மற்றும் இஸ்­லா­மிய மார்க்க அறி­ஞர்கள் ஆகி­யோரை உள்­ள­டக்கி அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்ட MMDA திருத்­தத்­திற்­கான ஆலோ­சனைக் குழு, MMDA இன் கீழ் விவா­க­ரத்­தினை பெண்­க­ளுக்கும், ஆண்­க­ளுக்கும் மிகவும் நியா­ய­மா­ன­தா­கவும், சம­மா­ன­தா­கவும் ஆக்­கு­வது உள்­ளிட்ட தங்­களின் பரிந்­து­ரை­களை நீதி அமைச்­சிடம் சமர்ப்­பித்­தி­ருந்­தது. இதன் பிர­காரம், நீதி அமைச்­சினால் ஒரு சட்­ட­மூலம் வரை­யப்­பட்­டது. இந்தச் சட்­ட­மூலம், வாழ்க்கைத் துணை­யி­ன­ரான இரு பாலா­ருக்கும் விவா­க­ரத்துச் செயன்­மு­றை­களைச் சமப்­ப­டுத்தி, இரு தரப்­பி­னர்­களும் தனித்தும், பரஸ்­பர இணக்­கத்­து­டனும் விவா­க­ரத்­தினை மேற்­கொள்­வ­தற்­கான சமச்­சீ­ரான அடிப்­ப­டை­யினை உறு­திப்­ப­டுத்­தி­யது.

எவ்­வா­றா­யினும், கடந்த சில வாரங்­களின் முன்னர் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சமர்ப்­பித்­தி­ருந்த திருத்­தங்கள், MMDA இன் கீழ் தற்­போது உள்­ளதைப் போன்றே பாகு­பா­டு­மிக்­கதும், அதீ­த­மான அள­விற்கு நியா­ய­மற்­ற­து­மான விவா­க­ரத்துச் செயன்­மு­றை­யினைத் திட்­ட­வட்­ட­மாகக் கொண்­டி­ருக்­கின்­றன.

தற்­போது அமுலில் உள்ள MMDA இன் கீழ் விவா­க­ரத்து
MMDA ஆனது தற்­போது ஆண்கள் மற்றும் பெண்­க­ளுக்­கான விவா­க­ரத்­துக்­கான வகைகள், நிபந்­த­னைகள் மற்றும் நட­ப­டி­மு­றைகள் ஆகி­ய­வற்­றுக்கு இடையில் வித்­தி­யா­சத்­தினைக் கொண்­டுள்­ளது. MMDA சட்­டத்தின் கீழ், தலாக் விவா­க­ரத்­துக்­களைப் பிர­க­ட­னப்­ப­டுத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களைக் கண­வர்கள் கொண்­டுள்ள அதே­வேளை, பஸஹ் விவா­க­ரத்­தினைப் பெற்றுக் கொள்ளும் ஏற்­பா­டு­க­ளையே மனை­விகள் கொண்­டுள்­ளனர்.

தலாக் (“நான் உன்னை விவா­க­ரத்துச் செய்­கின்றேன்” எனும் அர்த்­தத்­தினைக் கொண்­டது) பிர­க­டனம் என்­பது கண­வ­ரினால் முன்­னெ­டுக்­கப்­படும் விவா­க­ரத்தின் ஒரு வகை­யாகும். இந்தத் தலாக் விவா­க­ரத்­திற்கு ஏதா­வது குறிப்­பிட்ட அடிப்­ப­டை­யினை அல்­லது கார­ணத்­தினை வழங்­க­வேண்டும் என்ற எது­வித தேவைப்­பாட்­டையும் சட்டம் கண­வ­னுக்கு விதிக்­க­வில்லை. பூர­ண­மான தற்­று­ணி­புடன் கண­வர்கள் விவா­க­ரத்­தினைத் தாக்கல் செய்ய முடியும். மனை­வியைக் குறை­கூ­று­வதில் இருந்தும் கணவர் தடுக்­கப்­பட்­டுள்ளார் மற்றும் மனை­விக்கு எதி­ராகப் பகி­ரங்­க­மாகக் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைப்­பதில் இருந்தும் அவர் தடுக்­கப்­பட்­டுள்ளார் என்­பது இதற்­கா­ன­தொரு கார­ண­மாக இருக்­கின்­றது.

செயன்­மு­றை­யினைப் பொறுத்த அளவில், தலாக் கூற விரும்பும் கணவர், அவரின் மனைவி வசிக்கும் பிர­தே­சத்தில் உள்ள காதிக்கு (முஸ்லிம் நீதி­பதி) அறி­வித்தல் வழங்­க­வேண்டும் என MMDA தேவைப்­ப­டுத்­து­கின்­றது. எவ்­வா­றா­யினும், தலாக் இனைப் பிர­க­டனம் செய்­கையில் மனை­வியின் பிர­சன்­னத்­தினை இச்­சட்டம் கோர­வு­மில்லை; கட்­டா­ய­மாக்­க­வு­மில்லை. குறிப்­பிட்ட மனை­விக்கு அறி­விக்­கப்­படும் வரையில் கணவர் தன்னை விவா­க­ரத்துச் செய்யும் நோக்­கத்­தினைக் கொண்­டி­ருந்­ததை அல்­லது விவா­க­ரத்துச் செய்­தி­ருந்­ததை மனைவி அறி­யா­தி­ருந்த பல வழக்­குகள் பெண்கள் குழுக்­க­ளிடம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன. ஒரு சம்­ப­வத்தில், தலாக் கூறி­யி­ருந்தும் மனை­விக்கு அறி­விக்­காமல், ஒரு வரு­டத்தின் பின்னர் மீண்டும் அந்தப் பெண்­ணுடன் குறு­கிய காலம் வாழ்ந்­த­மையும், பின்னர் குடும்­பத்தில் பிரச்­சினை ஏற்­பட்­ட­போது அவ்­வி­டயம் தெரிய வந்து காதி­யிடம் சென்று உறு­திப்­ப­டுத்திக் கொண்­ட­மையும் முறை­யி­டப்­பட்­டுள்­ளது. தலாக் விவா­க­ரத்­தினை மனை­வி­மா­ருக்குக் காதிகள் அறி­விக்கத் தவ­றிய பல சந்­தர்ப்­பங்­களும் உள்­ளன. இச்­சந்­தர்ப்­பங்­களில் மிக அடிப்­ப­டை­யான இஸ்­லா­மிய விதி­முறை மீறப்­ப­டு­வ­தனைக் காண­மு­டியும்.

ஒரு பெண் மாத­விடாய்க் காலத்தில் இருக்கும் போது அல்­லது கர்ப்­ப­மாக இருக்கும் போது தலாக் சொல்லல் தடை செய்­யப்­பட்ட விட­ய­மாகும். இது இஸ்லாம் ஏற்­ப­டுத்­தி­யுள்ள விதி­முறை. ஒரு பெண் மாத­விடாய்க் காலத்தில் இருக்­கின்­றாரா இல்­லையா என்­ப­தனை அவரைத் தவிர வேறு யாரி­டமும் கேட்க முடி­யாது. திரு­மண வாழ்க்கை முடி­வு­று­கையில் அதனைப் பற்றித் தான் தெரிந்து கொண்­டி­ருக்க வேண்­டிய அடிப்­படை நியாயம் கூட வழங்­காத இந்த சட்ட ஏற்­பா­டுகள், நீதியை அடிப்­ப­டை­யாகக் கொண்ட பரந்த இஸ்­லா­மிய சட்­டத்­தி­லி­ருந்தும் எந்­த­ளவு தூரம் விலகி நிற்­கின்­றதை என்­பதை யாரும் உணர்ந்து கொள்ள முடியும். நபி­ய­வர்­க­ளது காலத்தில் தெருவில் நின்று கூட தலாக் சொன்­னார்கள் என்ற உதா­ர­ணத்­தையும் சிலர் எடுத்துக் காட்­டு­வார்கள். ஆயின், எந்த அணு­கு­முறை நாக­ரி­க­மான, காருண்­ய­மான, சக மனி­தரில் மரி­யாதை செலுத்தும் இஸ்லாம் வழி­காட்டும் வழி­மு­றை­யாக இருக்­கின்­றது என்­ப­தனை சிந்­தித்துப் பார்க்­கலாம்.

தலாக் என்று வரும்­போது பல காதிகள் கட்­டா­ய­மான மத்­தி­யஸ்­தத்­தினைத் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுப்­ப­தில்லை என்­ப­துடன், இய­லு­மான அளவு விரை­வாக, சில வேளை­களில் ஒரு நாளி­னுள்­ளேயே, விவா­க­ரத்­தினை முற்­றாக்­கு­கின்­றனர். இங்கு பல காதி­க­ளுக்கு சட்ட ஏற்­பா­டுகள் தெரி­வ­தில்லை அல்­லது அவர்கள் பல­வந்­தப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனர் அல்­லது அவர்­க­ளுக்கு இலஞ்சம் வழங்­கப்­ப­டு­கின்­ற­தாக பல சம்­ப­வங்கள் அறிக்­கை­யி­டப்­பட்­டுள்­ளன.

பல­தாரத் திரு­மணச் சூழ்­நி­லை­க­ளி­லேயே அதி­க­ள­வான தலாக் கோரப்­ப­டு­வ­தாகச் சம்­பவக் கற்­கைகள் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன. கணவன் மனை­வி­யரை சம­மா­கவும், நியா­ய­மா­கவும் நடாத்த வேண்டும் அல்­லது கணவன் குடும்­பங்­களைப் பரா­ம­ரிக்கக் கூடிய நிலை­யி­லி­ருத்தல் என்­பது பற்­றிய எது­வித நிபந்­த­னை­களும் அற்ற MMDA இன் கீழான பல­தார மண ஏற்­பாட்டின் விளை­வாக, மனை­வி­க­ளையும் குடும்­பங்­க­ளையும் பரா­ம­ரிப்­பது சுமைமிக்­க­தாக மாறு­கையில், ஆண்கள் எது­வித தயக்­கமும் இன்றி தலாக் கூறி விடு­கின்­றனர். ‘தலாக்’ சொல்­லும்­போது மனை­விக்கு நட்­ட­ஈட்டை- மதாஹ் வினை கொடுக்கும் படி அல்­குர்ஆன் கட்­ட­ளை­யி­டு­கின்­ற­போதும் MMDA இல் இது தொடர்­பான எது­வித வெளிப்­ப­டை­யான ஏற்­பா­டு­களும் இன்­மை­யினால் மிகச் சுல­ப­மாக பெண்­களை தலாக் சொல்­லி­விடும் துர்­நி­லைமை தொடர்­கின்­றது.

எமது ஆய்வின் பிர­காரம், தமது மனை­வி­க­ளையும், குடும்­பங்­க­ளையும் பரா­ம­ரிக்க இய­லா­தி­ருக்கும் ஆண்­க­ளுக்­கான ஒரு தெரி­வாக விவா­க­ரத்­தினை சில காதி­களே பரிந்­து­ரைக்கும் சந்­தர்ப்­பங்­க­ளையும் பல பெண்கள் முகங்­கொ­டுத்­தி­ருக்­கின்­றனர். தலாக் கூறிய பின்­ன­ரான இத்தாக் காத்­தி­ருப்புக் காலப்­ப­கு­தியில், தலாக் கூறிய கண­வர்கள் தாப­ரிப்­பினை வழங்­க­வேண்டும் என சட்­ட­ரீ­தி­யாக தேவைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள போதும், பிள்­ளை­க­ளுக்­கான தாப­ரிப்புக் கொடுப்­ப­ன­வினை உறு­திப்­ப­டுத்த முன்பே, ஏற்­பட்ட பாதிப்­புக்கு எவ்­வி­த­மான நட்­ட­ஈட்­டி­னையும் உறு­திப்­ப­டுத்த முன்பே, நிதி­ ரீ­தி­யா­கவும், சமூ­க ­ரீ­தி­யா­கவும் பெண்­க­ளையும், அவர்­களின் பிள்­ளை­க­ளையும் கடி­ன­மான சூழ்­நி­லை­க­ளிலும் பாதிப்பு மிக்க சூழ்­நி­லை­யிலும் விட்­டு­விட்டு, பல காதிகள் விவா­க­ரத்­தினை வழங்­கிய சம்­ப­வங்­களும் நடை­பெற்­றுள்­ளன. இந்த அநீ­தியில், சட்ட ஏற்­பா­டு­க­ளி­லுள்ள குறை­பா­டுகள் மிகத் தெளி­வாகப் பங்­க­ளிக்­கின்ற அதே­வேளை, சட்­டத்­தினை சரி­வர செயற்­ப­டுத்­தாத காதி­களின் செய­லின்­மையும் இணைந்து காணப்­ப­டு­கின்­ற­மையை அவ­தா­னிக்­கலாம்.

பஸஹ் – மனை­வி­யினால்
முன்­னெ­டுக்­கப்­படும் விவா­க­ரத்து
பஸஹ் என்­பது சுன்னி பிரிவைச் சேர்ந்த மனை­வி­யினால் முன்­னெ­டுக்­கப்­படும் விவா­க­ரத்து வகை­யாகும். இந்த வகையின் கீழ் வழக்­கிட, மனை­விக்குக் கண­வரின் சம்­மதம் தேவை இல்லை. இது கண­வனின் திரு­மண வாழ்க்கைத் தவ­றினை அடிப்­ப­டை­யாகக் கொண்ட விவா­க­ரத்து வகை­யாகும். MMDA இன் கீழ் பஸஹ் என்­பது மிகவும் பொது­வான விவா­க­ரத்து வடி­வ­மாகக் காணப்­ப­டு­கின்­றது. பஸஹ்வுக்­கான கார­ணங்­களுள், மோச­மாக நடத்­து­வது, குரூரம், வீட்டு வன்­முறை (வாய்­மொழி மூல­மான துஸ்­பி­ர­யோகம் உள்­ள­டங்­க­லாக), பரா­ம­ரித்துப் பேணு­வ­தற்குத் தவ­று­கின்­றமை மற்றும் கைவி­டுதல் போன்­ற­வையும் “தரப்­பி­னர்கள் எப்­பி­ரி­வினைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருக்­கின்­ற­னரோ அப்­பி­ரி­வினை ஆளுகை செய்யும் முஸ்லிம் சட்­டத்தின் கீழ் தவ­றாகக் கரு­தப்­படும் ஏனைய கார­ணங்­களும்”(MMDA பிரிவு 24) அடங்­கு­கின்­றன. ஆண்­மை­யின்மை மற்றும் சித்­த­சு­வா­தீனம் போன்ற கண­வனின் தவ­றற்ற கார­ணங்­களின் அடிப்­ப­டை­யிலும் பஸஹ் விவா­க­ரத்­தினைப் பெற முடியும்.

MMDA இன் கீழ் மனைவி விவா­க­ரத்­தினை முன்­னெ­டுக்­கையில், அவர் மண­வாழ்க்­கையில் கண­வனின் தவ­றுக்­கான சாட்­சி­யங்­களைக் கொண்­டு­வர வேண்டும். அத்­துடன் மனைவி, தான் முன்­வைக்கும் சான்­று­க­ளையும், கார­ணங்­க­ளையும் ஆதா­ரப்­ப­டுத்­து­வ­தற்கு குறைந்­தது இரண்டு சாட்­சி­யங்­களைக் கொண்­டு­வர வேண்டும். மேலும், இது தொடர்­பான விசா­ர­ணை­க­ளுக்கும் பல தட­வைகள் செல்ல வேண்டும். விவா­க­ரத்­துக்­கான விண்­ணப்­பத்­தினை ஏற்­றுக்­கொள்­வ­தற்குக் கூட பெண்ணின் ஆண் பாது­கா­வ­ல­ரிடம் (தந்தை, பாட்டன், அல்­லது சகோ­தரர்) இருந்து கடி­தங்­களைக் கோருதல் போன்ற சட்டத் தேவைப்­பா­டு­க­ளற்ற, தமது சொந்தப் புரி­தலின் கீழான தேவைப்­பா­டு­க­ளையும் வெவ்­வேறு பிர­தே­சங்­களைச் சேர்ந்த காதிகள் சேர்த்துக் கொள்­வ­தனால் இவை பெண்­களை மேலும் சிர­மங்­க­ளுக்­குள்­ளா­க்கு­கின்­றன.

MMDA ஆனது இலங்­கை­யி­லுள்ள அனைத்து முஸ்­லிம்­க­ளையும் ஆளு­கின்ற போதும், அதன் ஏற்­பா­டுகள் மத்ஹப் (சிந்­தனைப் பிரி­வுகள்) எனும் பிரி­வு­களின் அடிப்­ப­டையில் செயற்­ப­டு­கின்­றன. இலங்­கை­யி­லுள்ள சுன்னி மற்றும் ஷீஆ பிரி­வு­களால் ஆளப்­ப­டு­ப­வர்­க­ளா­யினும், எந்­த­வொரு மத்ஹப் – சிந்­தனைப் பிரிவைப் பின்­பற்­று­ப­வ­ரா­யினும் திரு­மண மற்றும் விவா­க­ரத்து தொடர்­பான விட­யங்­களில் MMDA இன் கீழ் ஆளப்­ப­டுவார். MMDA இன் கீழ், பஸஹ் விவா­க­ரத்­துக்கு மத்ஹப் (சிந்­தனைப்) பிரிவின் (எழு­தப்­ப­டாத) சட்­டத்­தினைப் பிர­யோ­கிப்­ப­தற்­கான ஓர் ஏற்­பாடு காணப்­ப­டு­கின்­றது. இதனை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அப்­ப­டியே வைத்­தி­ருக்க வேண்டும் என பரிந்­து­ரைத்­துள்­ளனர்.

இந்த ஏற்­பா­டா­னது, பெண்­களைப் பொறுத்­த­ளவில் விவா­க­ரத்தைப் பெறு­வதில் தடை­க­ளையும், சிக்­கல்­க­ளையும் தோற்­று­விக்­கின்­றன. எமது 2016 ஆம் ஆண்டின் ஆய்வில் இருந்து தெரி­ய­வ­ரு­வது, மேமன் சமு­தா­யத்­திற்­கான காதி­யினை நேர்­காணல் செய்­ததன் அடிப்­ப­டையில், மேமன் சமூகம் ஹனபி மத்­ஹ­பினை (சிந்­தனைப் பிரிவு) பின்­பற்­று­கின்­றது என்­ப­துடன், இதன் கீழ் பஸஹ் விவா­க­ரத்துக்கு இட­மே­யில்லை என்­ப­துடன், குடும்ப வன்­மு­றையில் கண­வனால் துன்­பு­றுத்­த­லுக்கு உள்­ளாக்­கப்­படும் பெண்­ணிற்கு மேமன் காதி­ நீதிமன்றில் பஸஹ் வழக்­கிட முடி­யாது. அதே­ச­மயம், ஷீஆ பிரிவின் கீழான போராஹ் சமு­தா­யத்­தி­லுள்ள பெண்­க­ளுக்குப் பிர­யோ­கிக்­கப்­படும் ஏற்­பா­டு­களின் அடிப்­ப­டையில் கணவன் அனு­ம­தித்தால் தவிர அங்கு பெண்கள் விவா­க­ரத்துக் கோரு­வ­தற்­கான ஏற்­பா­டு­களே இல்லை. இச்­சந்­தர்ப்­பங்­களில், சூழ்­நிலை எது­வாக இருந்­தாலும், அது வீட்டு வன்­மு­றை­யா­கவோ அல்­லது துஸ்­பி­ர­யோ­கமோ எது­வாக இருந்­தாலும், விவா­க­ரத்­துக்­காகப் பெண்கள் அவர்­களின் கண­வர்­க­ளிடம் இருந்து அனு­ம­தியைக் கோர வேண்­டி­யுள்­ளது. இதனை விளங்கிக் கொள்­வ­தற்­காக, இந்த வழக்­கினைக் கூற­மு­டியும்.

ஷீஆ பிரிவின் கீழ் திரு­மணம் செய்த மனைவி, இரண்டே மாதங்­களில் அதே பிரிவைச் சேர்ந்த கண­வனின் உணர்வு, உடல்­ரீ­தி­யான வன்­மு­றை­யினைத் தாங்க முடி­யாமல் விவா­க­ரத்­தினை நாடி­ய­போது, இப்­பெண்ணின் குடும்­பத்­தி­னரும், சமு­தா­யமும், சமயத் தலை­வர்­களும் இவ்­வி­ட­யத்தில் அப்­பெண்­ணுக்குக் காத்­தி­ர­மான ஆத­ர­வினை வழங்­கி­ய­துடன் விவா­க­ரத்­திற்கு இணங்­கு­மாறு அவரின் கண­வ­ருக்கும் பாரிய அழுத்­தத்­தினை வழங்­கினர். எவ்­வா­றா­யினும், இவ்­வ­ளவு முயற்­சி­க­ளையும் தாண்டி, அக்­கு­றிப்­பிட்ட பிரிவுச் சட்டம் தொடர்­பாக MMDA இல் உள்ள (எழு­தப்­ப­டாத) ஏற்­பா­டு­களின் கீழ் தன்னால் விவா­க­ரத்­திற்­கான அனு­ம­தி­யினை வழங்­கா­தி­ருக்க முடியும் என்ற ஒரே கார­ணத்­திற்­காக அக்­க­ணவர் மூன்று வரு­டங்­க­ளாக விவா­க­ரத்­தினை வழங்­கா­தி­ருந்தார்.

அதி­க­மான பெண்­க­ளுக்கு அவர்­களின் குடும்­பங்­களில் இருந்து இவ்­வா­றான அளப்­ப­ரிய ஆத­ரவு கிடைப்­ப­தில்லை என்­பது கவ­னத்தில் கொள்­ளப்­பட வேண்டும். கண­வனால் மண்­ணெண்ணெய் ஊற்றி எரி­யூட்­டப்­பட்ட, கைகள் முறிக்­கப்­பட்ட பெண்­களைக் கூட அத்­த­கைய வன்­மு­றை­யான கண­வர்­க­ளுடன் சேர்ந்து வாழும்­படி நிர்ப்­பந்­திக்கும் சிந்­த­னை­க­ளை­யு­டைய குடும்­பங்­க­ளையும், காதி­க­ளையும் கொண்­டி­ருக்கும் எமது சமூ­கத்தில், அவற்றை எதிர்­கொள்ளும் பெண்கள், சட்டம் மாற்­றப்­ப­டா­மலும் இஸ்­லாத்தில் பொதிந்­துள்ள அன்பு மற்றும் கரு­ணைக்­கான கோட்­பா­டுகள் மறு­சீ­ராக்­கல்­க­ளுக்கு வழி­காட்­டா­மலும் இருந்தால், அதீத குரூ­ரமும் துஸ்­பி­ர­யோ­கமும் மிக்க திரு­மண வாழ்வில் தொடர்ச்­சி­யாக முடங்கிக் கிடக்க நேரிடும்.

இங்கு MMDA இன் விவா­க­ரத்­துக்­கான ஏற்­பா­டுகள், இலங்­கையில் மத்ஹப் என்ற சிந்­தனைப் பிரி­வு­க­ளினால் ஆளப்­ப­டு­வ­தனால் பெண்­க­ளுக்குச் சம­மற்­ற­தா­கவும், அநீ­தி­யி­ழைப்­ப­தா­கவும், இஸ்லாம் வழங்­கிய பரந்த உரி­மை­களை மறுப்­ப­தா­கவும் இருக்­கின்­ற­மையைக் காணலாம்.

சுன்னி பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள ஆனால், MMDA இல்
உள்­வாங்­கப்­ப­டாத விவா­க­ரத்­துகள்
முபாரத் என்­பது பரஸ்­பர இணக்­கத்தின் பேரில் மேற்­கொள்­ளப்­படும் ஒரு விவா­க­ரத்­தாகும். இது சுன்னி பிரிவின் சில மத்­ஹ­பு­களால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது என்­றாலும் இது MMDA இல் வெளிப்­ப­டை­யாகக் குறித்­து­ரைக்­கப்­ப­ட­வில்லை. எவ்­வா­றா­யினும், MMDA இன் பிரிவு 98 இனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு காதி­களால் முபாரத் விவா­க­ரத்து வழங்­கப்­பட்­டுள்­ளது. இப்­பி­ரிவு பின்­வ­ரு­மாறு குறிப்­பி­டு­கின்­றது, “…எந்த முஸ்லிம் திரு­மணம் அல்­லது விவா­க­ரத்துத் தொடர்­பான சகல விட­யங்­களும், தரப்­பி­னர்­களின் நிலை மற்றும் பரஸ்­பர உரி­மைகள் மற்றும் கடப்­பா­டுகள் ஆகி­யவை, தரப்­பி­னர்கள் எந்த மதப் பிரி­வினைச் சேர்ந்­த­வர்­களோ அந்த மதப் பிரி­வினை ஆளுகை செய்யும் முஸ்லிம் சட்­டத்தின் பிர­கா­ரமே தீர்­மா­னிக்­கப்­படும்.”

குலா என்­பது, மனைவி திரு­மண வாழ்வில் மகிழ்ச்­சி­யற்­ற­வ­ராக இருக்­கையில் அவரால் பெறக்­கூ­டிய விவா­க­ரத்­தாகும் என்­ப­துடன் இந்த விவா­க­ரத்தில் மனைவி கண­வ­னுக்கு நட்­ட­ஈட்டுக் கொடுப்­ப­ன­வொன்­றினைச் செலுத்தல் வேண்டும். இங்கு கண­வனின் அனு­மதி தேவை­யில்லை. மேலே குறிப்­பிட்­டது போல், கண­வனின் அனு­மதி தேவை­யாயின் இதற்கு எது­வித அர்த்­தமும் இருக்கப் போவ­தில்லை. ஆனால், கண­வனின் அனு­ம­தி­யுடன் மாத்­திரம் பெறப்­படும் குலா விவா­க­ரத்­தினை MMDA உள்­ள­டக்க வேண்டும் என முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முன்­மொ­ழி­கின்­றனர். இது நடை­மு­றையில் இருக்கும் சிக்­கல்­க­ளுக்கு எத்­த­கைய தீர்­வினைத் தரப் போகின்­றது என்­பது கேள்­விக்­குறி.

கண­வனின் இணக்­கத்­துக்­கான தேவைப்­பாடு மிகவும் சிக்­கல்­வாய்ந்­த­தாகும். ஏனெனில், கண­வன்­மார்கள் பொது­வாகத் தீய நோக்­குடன் அவர்­களின் இணக்­கத்­தினை வழங்­காது வைத்­தி­ருக்­கலாம். கண­வனின் இணக்கம் கட்­டா­ய­மா­னது எனச் சில இஸ்­லா­மிய அறி­ஞர்கள் அபிப்­பி­ராயம் கொண்­டி­ருக்கும் அதே­வேளை, குலா என்­பது மனை­வியின் உரிமை என ஏனைய அறி­ஞர்கள் பலர் வாதி­டு­கின்­றனர்.

இஸ்­லா­மியச் சட்­டத்தில், கண­வனின் அனு­ம­தி­யின்றி குலா விவா­க­ரத்­தினைக் கோரு­வ­தற்­கான உரி­மை­யினை மனைவி கொண்­டுள்ளார் என்­பதால் பங்­க­ளாதேஷ், பாகிஸ்தான், எகிப்து, அல்­ஜீ­ரியா, மற்றும் மொரி­டா­னியா ஆகிய நாடு­களில், குலா விவா­க­ரத்­துக்குக் கண­வனின் இணக்கம் கோரப்­ப­டு­வ­தில்லை. பஹ்ரைன், ஜோர்டான், கட்டார், சிங்­கப்பூர் மற்றும் ஐக்­கிய அரபு எமிரேட் ஆகிய நாடு­களில், விவா­க­ரத்­துக்­கான விண்­ணப்­பத்­தினை மதிப்­பிட்ட பின்னர், கணவன் இணக்கம் வழங்­கி­யுள்­ளாரா அல்­லது இல்­லையா என்­பதைப் பொருட்­ப­டுத்­தாது நீதி­மன்­றத்­தினால் குலா விவா­க­ரத்து வழங்­கப்­பட முடியும். 2022 நவம்­பரில், தங்­களின் கண­வர்கள் இணக்கம் தெரி­விக்­கின்­றார்­களா அல்­லது இல்­லையா என்­பதைப் பொருட்­ப­டுத்­தாது குலாவின் மூலம் விவா­க­ரத்துச் செய்­வ­தற்­கான பூரண உரி­மை­யினை முஸ்லிம் பெண்கள் கொண்­டுள்­ளனர் என இந்­தி­யாவின் கேரள உயர் நீதி­மன்றம் மீண்டும் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

தற்­போது அமுலில் உள்ள விவா­க­ரத்து நடை­மு­றை­யினை நீக்­காமல் வைத்­தி­ருப்­பதில் உள்ள பிரச்­சி­னைகள்
இலங்கை முஸ்லிம் சமு­தா­யங்­க­ளினுள் அதி­கூ­டிய எண்­ணிக்­கையில் மேற்­கொள்­ளப்­படும் விவா­க­ரத்­தாக பஸஹ் விவா­க­ரத்து முறை காணப்­ப­டு­கின்­றது. MMDA இன் கீழ், பஸஹ் விவா­க­ரத்­திற்கு இறுக்­க­மா­னதும் முறை­யா­ன­து­மான நட­வ­டிக்கை முறைகள் பின்­பற்­றப்­பட வேண்டும். அவ்­வாறு பின்­பற்றத் தவ­றினால் விவா­க­ரத்துச் செல்­லு­ப­டி­யற்­ற­தா­கவும், வலி­தா­ன­தா­கவும் ஆகி­விடக் கூடும். நட­வ­டிக்கை முறையில் வழுக்கள் உதா­ர­ண­மாக, விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­டாமை அல்­லது விசா­ர­ணையின் போது ஜூரர்கள் பிர­சன்­ன­மாக இருக்­காமை அல்­லது மூன்று முஸ்லிம் ஆண் ஜூரர்­களே இருக்­கலாம் என்று சட்டம் கூறு­கின்­ற­வேளை, பெண்­களை ஜூரர்­க­ளாக வைத்து பஸஹ் விவா­க­ரத்தை வழங்கல் போன்ற வழுக்கள் காணப்­பட்­டன என்ற அடிப்­ப­டையில் காதிகள் சபை முதற்­கொண்டு உயர் நீதி­மன்றம் வரையில் கண­வர்­களால் மேன்­மு­றை­யீடு செய்ய முடியும் என்­ப­துடன் இந்த வழுக்கள் நிரூ­பிக்­கப்­பட்டால், அது பஸஹ் விவா­க­ரத்­தினைச் செல்­லு­ப­டி­யற்­ற­தாக்­கி­விடும். இந்த மேன்­மு­றை­யீட்டுச் செயன்­மு­றையின் கார­ண­மாக ஏழு வரு­டங்­க­ளுக்கும் மேலாக பஸஹ் விவா­க­ரத்து வழக்­குகள் நடை­பெற்று வரு­வ­தையும், இதனால் காதி­நீ­தி­மன்றில் விவா­க­ரத்­தான பெண்ணின் வழக்கு காதிகள் சபையில் மேன்­மு­றை­யீட்டில் இழு­ப­டு­கின்ற படியால், மறு­ திரு­மணம் செய்து அவரின் வாழ்­வினை முன்­கொண்டு செல்ல முடி­யாத நிலை காணப்­ப­டு­கின்­றது. மறு­தி­ரு­மணம் என்­ப­தற்­கப்பால் கண­வனின் திரு­மணத் தவ­றிற்­காக செய்த விவா­க­ரத்து வழக்­கா­னது, வருடக் கணக்கில் இழுத்துக் கொண்டு போவ­த­னைத்தான் எமது சமூகப் பெண்­க­ளுக்கு நாம் விதி­யாக்கப் போகி­றோமா? இது பல பெண்­களின் வாழ்­வியல் யதார்த்­த­மாக உள்­ளது. தலாக் விவா­க­ரத்து முறை மிகச் சுல­ப­மாக பெறு­வ­தோடு, கண­வர்கள் பல­தார மணம் உள்­ள­டங்­க­லாகத் தொடர்ச்­சி­யான திரு­ம­ணங்­களில் நுழை­யலாம் என்ற சந்­தர்ப்பம் காணப்­படும் அதே­வேளை, பஸஹ் விவா­க­ரத்தை நாடும் பெண்­களைப் பொறுத்­த­ளவில் வழக்கின் கார­ணத்­துக்­கா­க­வன்றி அதன் நடை­முறைக் குறை­பாட்டால் பெண்கள் வருடக் கணக்கில் அலைக்­க­ழிக்­கப்­பட சட்டம் வழி­கோ­லு­கின்­றது.

எமது ஆய்வில் ஆவ­ணப்­ப­டுத்­தப்­பட்­ட­வாறு, காதிகள் சபையின் பிர­தி­நிதி ஒரு­வரின் கருத்தின் படி, ஒரு­வேளை பஸஹ் விவா­க­ரத்து வழங்­கப்­பட்ட பின்னர் மனைவி ஏற்­க­னவே மறு­ம­ண­மாகி அவ­ருக்குப் பிள்­ளைகள் இருக்கும் நிலையில், முன்னாள் கணவர் மேன்­மு­றை­யீடு செய்து குறித்த பஸஹ் விவா­க­ரத்துச் செல்­லு­ப­டி­யற்­ற­தா­கினால், புதிய திரு­மணம் செல்­லு­ப­டி­யற்­ற­தாக மாறும் என்­ப­துடன், முன்­னைய விவா­க­ரத்து வழக்குத் தீர்க்­கப்­படும் வரையில் பிள்­ளைகள் சட்­ட­நெ­றி­மு­றை­யற்ற பிள்­ளை­க­ளா­கவே கரு­தப்­ப­டுவர். இது பெண்­க­ளுக்கும், பிள்­ளை­க­ளுக்கும் மிகவும் அநீ­தி­யான நடை­மு­றை­யாகும்.

MMDA இன் கீழ் விவா­க­ரத்து நடை­முறை தற்­போது அமுலில் உள்­ளதன் பிர­காரம், துஷ்­பி­ர­யோ­க­மிக்க திரு­மண பந்­தங்­களில் பிணைந்­தி­ருக்கும் முஸ்லிம் பெண்கள், விவா­க­ரத்­தினைப் பெறு­கையில், நடுத்­தீர்ப்­பா­ளர்­களின் முன்­னி­லையில் சான்­று­களைச் சமர்ப்­பித்தல், பிற சாட்­சி­யங்­களைச் சமர்ப்­பித்தல், மற்றும் வாக்­கு­மூ­லங்­களை வழங்­குதல் என்­பவை தொடர்பில் மேல­திக தடை­க­ளுக்கும், சவால்­க­ளுக்கும் முகங்­கொ­டுக்­கின்­றனர். குடும்ப உற­வுக்குள் நடக்கும் பாலியல் அல்­லது வன்­முறை சார் விட­யங்­க­ளுக்கும் பெண்கள் சாட்­சி­களை முன்­வைத்து நிரூ­பிக்­கும்­படி சட்டம் கூறு­கின்­றது. கடு­மை­யான உணர்வு ரீதி­யான துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு முகங்­கொ­டுத்து, அல்­லது உள­வியல் மன­வ­டுக்­க­ளுக்கு முகங்­கொ­டுத்து, தங்­களின் வழக்­குக்கு ஆதா­ர­மாகத் தயார்­நி­லையில் சாட்­சி­யங்­களைக் கொண்­டி­ரா­தி­ருக்கக் கூடிய பெண்கள், விவா­க­ரத்­தினைப் பெற்­றுக்­கொள்­வதில் கணி­ச­மான அவ­லங்­களை முகங்­கொ­டுக்­கின்­றனர். இதே­வேளை, மிகச் சுல­ப­மாக மனை­வியே இன்றி தலாக் இடம் பெற இச்­சட்டம் வழி­வ­குத்­தி­ருக்­கி­றது.

MMDA மீதான திருத்­தங்கள் கட்­டாயம் நியா­ய­மா­ன­வை­யா­கவும் சம­மா­ன­வை­யா­கவும் இருக்க வேண்டும்
தற்­போது நடை­மு­றையில் உள்ள விவா­க­ரத்து நடை­மு­றையில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தாமல் அதனை அவ்­வாறே பேணு­வது MMDA இல் செய்­யப்­படும் எத்­த­கைய திருத்­தங்­க­ளி­னதும் பாரிய வீழ்ச்­சி­யாக இருக்கும். ஏனெனில், இச்­சட்­டத்தின் பிர­தான பயன்­பா­டு­களில் ஒன்று விவா­க­ரத்­தாகும். MMDA இன் மீதான திருத்­தங்கள் விவா­க­ரத்­துக்­கான செல்­லு­ப­டி­யா­கத்­தக்க கார­ணங்­க­ளுடன் மனை­விக்கும், கண­வ­னுக்கும் விவா­க­ரத்தின் சமச்­சீ­ரான தன்­மை­யினைக் கட்­டாயம் உறு­திப்­ப­டுத்த வேண்டும் என்­ப­துடன் பால்­நிலை, மதப் பிரிவு மற்றும் மத்ஹப் என்­ப­வற்றின் அடிப்­ப­டையில் அநீதி இழைக்­காமல் இலங்­கை­யி­லுள்ள சகல முஸ்­லிம்­களும் பிர­யோ­கிக்­கத்­தக்க வகையில் செயற்­தி­றனும், வினைத்­தி­றனும் மிக்க விவா­க­ரத்துச் செயன்­மு­றை­யா­கவும் அவை இருக்க வேண்டும்.

பின்­வரும் திருத்­தங்கள் முன்­னு­ரி­மைக்­கு­ரி­ய­ன­வாகும்:
தலாக், பஸஹ், குலா மற்றும் முபாரத் விவா­க­ரத்து நட­வ­டிக்கை முறைகள் ஏற்றத் தாழ்­வற்­ற­வை­யாக இருக்க வேண்டும் என்­ப­துடன் அவை குடும்­பங்­களின் நல­னோம்­புகை மற்றும் சிறந்த நலன் ஆகி­ய­வற்­றி­னையே மையப்­ப­டுத்த வேண்டும். இது பாதிப்­புக்­குள்­ளாக்­கப்­பட்­டி­ருக்கும் எந்தத் தரப்­புக்கும் ஏற்­படக் கூடிய சாத்­தி­ய­மு­டைய சகல பாதிப்­புக்­க­ளையும் கட்­டாயம் தணிக்கக் கூடி­ய­வ­கையில் அமைதல் வேண்டும்.

மேன்­மு­றை­யீட்டுச் செயன்­முறை சகல வடி­வி­லான விவா­க­ரத்­துக்கும் தன்­னி­லை­யான அடிப்­ப­டை­யிலும் நட­வ­டிக்­கை­முறை அடிப்­ப­டை­யிலும் கட்­டாயம் அனு­ம­திக்­கப்­பட வேண்டும் என்­ப­துடன் எவ்­வி­த­மான சட்டத் தாம­தங்­க­ளையும் தவிர்ப்­ப­தற்­காக அது கட்­டாயம் கால வரம்­பிற்கு உட்­பட்­ட­தா­கவும் இருக்­க­வேண்டும்.

மதப் பிரிவின் அடிப்­ப­டையில் அல்­லது மத்­ஹபின் அடிப்­ப­டையில் முஸ்லிம் பெண்­களின் வெவ்­வேறு பிரி­வி­ன­ருக்கு வெவ்­வேறு வகை­யான விவா­க­ரத்­துக்கள் பிர­யோ­கிக்­கப்­ப­டு­வது அதீத பாகு­பாடு, தீங்­கு­மிக்­க­தாக உள்­ளது. தீர்­மானம் எடுப்­ப­வர்­க­ளா­கவும், குடும்­பத்தை நிர்­வ­கிப்­ப­வர்­க­ளா­கவும் பொது­வாக ஆண்­களே காணப்­ப­டு­கின்ற சமூக அமைப்பில் வன்­மு­றையின் போது விவா­க­ரத்­தினை பெண்கள் பெற்றுக் கொள்­வ­தாயின் அதற்­கான இடம் விவா­க­ரத்தின் வகைகள் (பஸஹ், குலா மற்றும் முபாரத் உள்­ள­டங்­க­லாக), விவா­க­ரத்­துக்­கான கார­ணங்கள் மற்றும் விவா­க­ரத்தின் வினைத்­தி­றன்­மிக்க செயன்­முறை ஆகி­யன, தரப்­பி­னர்கள் எந்த மதப் பிரி­வினைச் சேர்ந்­த­வர்கள் அல்­லது மத்­ஹபைச் சேர்ந்­த­வர்கள் என்­பதைப் பொருட்­ப­டுத்­தாது, MMDA இனால் ஆளுகை செய்­யப்­படும் சகல முஸ்­லிம்­க­ளுக்கும் சம­மாகப் பிர­யோ­கிக்­கப்­ப­டத்­தக்­க­தாக இருக்க வேண்டும்.

சட்டத் திருத்தத்திற்கான பரிந்துரைகள், சுய இலாபங்களையோ வாக்கு வங்கிகளையோ கணக்கெடுக்காமல், பிற்போக்கான இறுகிய பொருள்கோடல்களாகவன்றி, முஸ்லிம் சமூகத்துக்குள் மேலும் பிரிவினைகளை வளர்ப்பதாக அல்லாமல், சமூகத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்குக் காத்திரமாக தீர்வினை முன்வைப்பனவாக இருத்தல் வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.