சுகாதாரத்துறை மீதான நம்பிக்கை பாதுகாக்கப்படுமா?

0 223

ஒரு நாடு வளர்ச்­சிப்­பா­தையில் முன்­னோக்கிச் செல்­வ­தற்கு நாட்டின் பிர­ஜைகள் ஆரோக்­கி­ய­மா­ன­வர்­க­ளாக இருக்க வேண்டும். அப்­போதே ஒரு நாடு சகல துறை­க­ளிலும் தன்­னிறைவு பெறும்.

ஆனால் அண்­மைக்­ கா­ல­மாக சுகா­தா­ரத்­து­றையில் பல நெருக்­க­டிகள், சிக்­கல்கள், பின்­ன­டை­வுகள் நிலவி வரு­கின்­றமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.
அண்­மையில் பேரா­தனை வைத்­தி­ய­சா­லையில் தடுப்­பூசி ஏற்­றப்­பட்ட யுவ­தி­யொ­ருவர் உடம்­பெங்கும் நீல நிற­மாகி உட­ன­டி­யாக உயி­ரி­ழந்­தமை, இதே­போன்று குளி­யாப்­பிட்டி பகு­தியில் 4 மாத குழந்­தை­யொன்று தடுப்­பூசி ஏற்­றப்­பட்­டதன் பின்பு உயி­ரி­ழந்­தமை மற்றும் ஏற்­க­னவே கண் சத்­திர சிகிச்சை செய்து கொண்ட பலர் பார்வை குறை­பா­டு­க­ளுக்கு உள்­ளா­னமை உட்­பட பல விரும்பத்தகாத சம்பவங்கள் பதி­வா­கி­யுள்­ளன.

இது மட்­டு­மல்ல நாடெங்கும் வைத்­தி­ய­சா­லை­களில் மருந்துப் பற்­றாக்­குறை நில­வு­கி­றது. பல ஸ்கேன் இயந்­தி­ரங்கள் செய­லி­ழந்து பல மாதங்­க­ளாக ஒதுக்கி வைக்­கப்­பட்­டுள்­ளன. இது தொடர்பில் சுகா­தார சேவை தொழிற்­சங்­கங்கள், மருத்­துவ அமைப்­புகள் தொடர்ச்­சி­யாக குற்றம் சுமத்தி வரு­கின்­றன. அரச வைத்­தி­ய­சா­லை­களில் மாதாந்த மருத்­துவ சேவையை பெற்­றுக்­கொள்ளும் மக்­க­ளுக்கு வழங்­கப்­படும் மருந்­து­க­ளுக்கும் தட்­டுப்­பாடு நில­வு­கி­றது.

இதனால் பொது மக்கள் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொள்­கின்­றனர்.
பேரா­தனை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்டு உயி­ரி­ழந்த யுவ­திக்கு ஏற்­றப்­பட்ட தடுப்­பூ­சியை செலுத்­திய மேலும் இருவர் கண்டி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர். குறிப்­பிட்ட தடுப்­பூசி பாவ­னை­யி­லி­ருந்து தற்­கா­லி­க­மாக நீக்­கப்­பட்­டுள்­ளது. உயி­ரி­ழப்­புக்­கான உண்­மை­யான கார­ணத்தைக் கண்­ட­றிய ஐவர் அடங்­கிய குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்டு தற்­போது விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் கடந்த வியா­ழக்­கி­ழமை சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­களை அழைத்து மருந்துப் பற்­றாக்­குறை உள்­ளிட்ட சுகா­தா­ரத்­து­றையில் காணப்­ப­டு­கின்ற சிக்­கல்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டியுள்ளார்.
சுகா­தா­ரத்­து­றையில் பெரும்பாலான வைத்­தி­யர்கள் ஓய்வு பெற்றுச் செல்­கின்­றமை மற்றும் வெளி­நா­டு­க­ளுக்குச் செல்­கின்­ற­மையும் பாரிய பிரச்­சி­னை­யாக உரு­வா­கி­யுள்­ளது. கடந்த ஒரு வருட காலத்தில் ஆயி­ரக்­க­ணக்­கான வைத்­தி­யர்கள் புலம்பெயர்ந்­துள்­ளமை புள்ளி விப­ரங்­க­ளுடன் மருத்­துவ சங்­கங்­களால் வெளிச்­சத்­துக்கு கொண்டு வரப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில் வைத்­தி­யர்­களின் ஓய்வு பெறும் வய­தெல்லை 63 ஆக உயர்த்­தப்­பட்­டுள்­ளது.

வரு­டத்தின் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் 500க்கும் மேற்­பட்ட மருந்­துகள் பதி­வு­க­ளுக்கு அப்பால் இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்­ளன. பதிவு செய்­யப்­பட்டு கொண்டு வரப்­பட்­டுள்ள அனைத்து மருந்­து­களும் மீண்டும் ஆய்­வுக்­குட்­ப­டுத்தப்பட வேண்டும் என சுகா­தார தொழில் வல்­லு­னர்கள் கூட்­ட­மைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் கோரிக்கை விடுத்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இலங்கை மக்களில் பெரும்பான்மையானோர் அரச வைத்­தி­ய­சா­லை­க­ளையே தமது சிகிச்சைகளுக்காக நம்பியிருக்கின்றனர். பொரு­ளா­தார நெருக்­க­டியினால் அன்றாட உணவுக்குக்கூட அல்லல்படும் மக்கள் தனியார் வைத்­திய சேவையை நாட முடி­யா­துள்­ளனர். எனவே அர­சாங்கம் இதனை ஓர் அவ­சர நிலை­யாகக் கருதி தேவை­யான மருந்­து­களை வைத்­தி­ய­சா­லை­க­ளுக்குப் பெற்­றுக்­கொ­டுக்­க ­வேண்டும்.

தர­மற்ற மருந்­துகள் இறக்­கு­மதி உட்­பட இத்­து­றையில் மாபி­யாக்­க­ளுக்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது. இது விட­யத்தில் அர­சாங்கம் பொறுப்­புடன் செயற்­பட வேண்டும்.

இதே­வேளை சுகா­தார அமைச்சர் அண்­மைக்­கா­ல­மாக நிகழ்ந்­துள்ள மருந்து ஒவ்­வாமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்கு டாக்டர் தேதுனு டயஸ் தலை­மையில் வைத்­திய நிபு­ணத்­துவக் குழு­வொன்­றினை நிய­மித்­துள்­ளார். பிரச்சினை ஒன்று வரும்போது குழுக்கள் நியமிக்கப்படுவதே நமது நாட்டின் கலாசாரம். எனினும் இக் குழுவின் சிபாரிசுகளை நியாயமாக நடைமுறைப்படுத்த அமைச்சர் இடமளிக்க வேண்டும்.

சமகால சுகாதாரத்துறை நெருக்கடிகளை சரியாக முகாமை செய்யவில்லை எனக் குற்றம்சாட்டி சுகா­தார அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெல்­ல­ பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமென எதிர்க்கட்சி கோரியுள்ளது. பதவி விலகக்கோரி சுகாதார அமைச்சின் முன்பாக உண்ணாவிரதப் போராட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் வைத்தியர்கள், சட்டத்தரணிகள், சிவில் சமூகப்பிரதிநிதிகள் பங்கு கொண்டுள்ளனர்.
நாட்டின் சுகாதாரத்துறை பெரும் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளதையே இந்த சம்பவங்கள் காண்பிக்கின்றன. இது விடயத்தில் உரிய தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவேண்டும். சுகாதாரத் துறையின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை பாதுகாக்கப்பட வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.