தனது பன்முக ஆற்றல்களால் கல்வி, கலை, ஊடக பரப்பில் தடம்பதித்தவர் கலைவாதி கலீல்

0 341

என்.எம். அமீன்,
ஏற்பாட்டாளர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம்

தமிழ் பேசும் உலகில் புகழ் பூத்த கலை­ஞ­ராகப் பெயர் பெற்ற கவிஞர் கலை­வாதி கலீல் அவர்கள் கடந்த ஒன்­பதாம் திகதி பாணந்­துறை எழு­வி­லயில் உள்ள தனது இல்­லத்தில் கால­மானார்.

மன்­னாரின் புக­ழுக்­கு­ரிய நொத்­தா­ரிசு குடும்­பத்தில் மதா­று­மொ­ஹிதீன் மீரா­ உம்மா தம்­ப­தி­களின் மக­னாக முஹம்மத் கலீல், கலை­வாதி கலீல் என்றே பிர­சித்­த­மானார்.
ஆசி­ரி­ய­ராக, விரி­வு­ரை­யா­ள­ராக, ஊட­க­வி­ய­லா­ள­ராக, கவி­ஞ­ராக, சித்­திரக் கலை­ஞ­ராக, வானொலிக் கலை­ஞ­ராக ஆறு தசாப்­தங்­க­ளுக்கு மேலாக ஓயாது பணி­பு­ரிந்து தனது 80 ஆவது வயதில் அவர் கால­மானார்.

கலை­வா­திக்கு கடந்த நவம்பர் இரண்டாம் திகதி மார­டைப்பு ஏற்­பட்டு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று தேறிய பின்பும் வழ­மை­போன்று இலக்­கிய, சமூகப் பணி­க­ளிலே ஈடு­பட்டு வந்தார். கடந்த 9ஆம் திகதி காலை மீண்டும் மார­டைப்பு ஏற்­பட்டு அவர் வீட்­டிலே தனது குடும்­பத்­தவர் சூழ இவ்­வு­லகைப் பிரிந்தார்.
இறப்­ப­தற்கு சில தினங்­க­ளுக்கு முன் கொழும்பில் முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணி­களின் சம்­மே­ளனம் தலை­மை­ய­கத்தில் இடம்­பெற்ற மூத்த எழுத்­தாளர் மானா மக்­கீனின் பிறந்த தினம் மற்றும் நூருல்ஐன் நஜ்முல் ஹுஸைன் எழு­திய நூல் வெளி­யீட்டில் ஏற்­பாடு செய்­தி­ருந்த விழாவில் கலந்து கொண்டார். இதுவே அவர் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்­சி­யாகும். அவர் அங்கு ஆற்­றிய உரையை யாழ். அஸீம் தனது முக­நூலில் பதி­விட்­டி­ருந்தார். அதில் அவர் ஆற்­றிய உரையை அவ­ரு­டைய பிரியா விடை உரை இன்றே குறிப்­பி­டலாம்.

பன்­முக ஆளுமை மிகு கலை­வாதி வடக்­கி­லி­ருந்து 1990 முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­டபின் மன்­னாரில் இருந்து இடம்பெயர்ந்து பாணந்­துறை எழு­வில என்ற முஸ்லிம் கிரா­மத்தில் வசித்து வந்தார்.

தனது பள்ளிப் பருவ காலத்­திலே அதா­வது 1956ஆம் ஆண்டில் ‘லட்டு’ என்ற மாசி­கையில் ‘மறைந்த இருள்’ எனும் மகு­டத்தில் இவ­ரது முதல் ஆக்கம் வெளி­யா­னது. அன்று முதல் சிற்­பக்­கலை, கரும்பு, கலைக்­கடல், செய்தி, மக்கள், தின­கரன், வீர­கே­சரி, தினக்­குரல், மல்­லிகை, ஈழ­நாடு, ஞானம், பாமிஸ் மாசிகை, தீப்­பொறி, தொழி­லாளி, தேசா­பி­மானி, நவ­மணி ஆகிய பத்­தி­ரி­கை­களில் கவிதை, சிறு­கதை, கட்­டுரை, துணுக்கு எனப் பல்­வேறு கோணங்­களில் தனது எழுத்­தா­ளு­மையை பறை­சாற்­றி­யவர்.

கலை­வா­தியின் சகோ­த­ரர்கள் ஐந்து பேரில் மூவர் கலை­ஞர்­க­ளாக தமது வாழ்­நாளை அர்ப்­ப­ணித்­தார்கள். முத­லா­வது முஸ்லிம் தமிழ் அறிஞர் வித்­துவான் ரகுமான், சினிமா துறையில் விரு­து­களை வென்று குவித்த எம்.ஏ. கபூர், சமூக சேவை­யா­ளரும் ஊட­க­வி­ய­லா­ளரு­மான கலை­வா­தியின் இரட்டைச் சகோ­த­ரர் மக்கள் காதர் ஆகியோர் கலை­வா­தியைப் போன்று தமது துறை­க­ளிலே நாடு போற்­ற வாழ்ந்து வந்­தார்கள்.

கலை­வாதி பிர­பல இட­து­சாரி செயற்­பாட்­டா­ளரும் எழுத்­தா­ள­ரு­மான மர்ஹூம் அப்துல் லத்­தீ­பினால் நடத்­தப்­பட்ட இன்சான் என்ற முற்­போக்கு பத்­தி­ரிகை மூலம் சிறு­கதை மற்றும் கவி­தை­களை எழுதி தனது பெயரை எழுத்­து­லகில் பதித்தார்.அதற்கு முன்பு பிர­தே­சங்­களில் வெளி­வந்த சிறு சிறு சஞ்­சி­கை­க­ளிலே அவ­ரு­டைய ஆக்­கங்கள் இடம் பெற்­றன.

கலை­வா­தியின் பணி­களை பலாலி ஆசி­ரியர் பயிற்சிக் கல்­லூரிக் காலம், தர்கா நகர் கல்விக் கல்­லூரிக் காலம், வானொலி முஸ்லிம் சேவை, தமிழ் சேவை­களில், பிற்­காலம் பாமிஸ் சஞ்­சிகை, நவ­மணி என வகுத்து ஆரா­யலாம்.

தர்கா நகர் கல்விக் கல்­லூ­ரியில் உப பீடா­தி­ப­தி­யாகப் பணி­பு­ரிந்த இவர், அங்­கி­ருந்து ஓய்வு பெற்ற பின் நவ­மணி பத்­தி­ரி­கையில் பிரதி ஆசி­ரி­யர்­களில் ஒரு­வ­ராக இணைந்து அந்தப் பத்­தி­ரிகை மூடப்­படும் வரை பணி­பு­ரிந்தார். ஜல­த­ரங்கம் என்ற பேரில் நடத்­திய இலக்­கிய பக்கம் ஜன­ரஞ்­ச­க­மான ஒரு பக்­க­மாக திகழ்ந்­தது. நூற்­றுக்­க­ணக்­கான இலக்­கி­ய­வா­தி­களை இவர் உரு­வாக்­கி­யுள்ளார். இளைய தலை­மு­றை­யி­ன­ருக்கு ஊட­கங்­களில் இடம்­பெற்றுக் கொடுப்­பதில் இவ­ரது பங்­க­ளிப்பு மகத்­தா­னது.

எழுத்­தா­ளர்­களின் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­காக கலை­வாதி தொடர்ந்து போரா­டியே வந்தார். கலா­சார அமைச்சு வழங்­கு­கின்ற கலா­பூ­ஷண விரு­துக்­கான பரி­சுத்­தொ­கையை அதி­க­ரிப்­ப­தற்கு நீண்ட கால­மாக கலை­வாதி குரல் கொடுத்து வந்தார். ஆரம்­பத்தில் இத்­தொகை 10,000 ரூபா­வாக இருந்­தது. சில வரு­டங்­க­ளுக்கு முன் இது 25,000 ரூபா­வாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்கை வானொ­லியில் கலை­ஞர்­க­ளுக்கு கொடுக்­கப்­பட்டு வந்த அன்­ப­ளிப்பு தொகை நிறுத்­தப்­பட்­டமை குறித்து தனது ஆட்­சே­ப­னையைத் தெரி­வித்து வானொலி நிகழ்ச்­சி­களில் பங்­கு­பற்­று­வதைத் தவிர்த்துக் கொண்டார். கொடுப்­ப­னவு வழங்­கப்­படும் வரை தான் வானொலி நிகழ்ச்­சி­களில் பங்­கு­பற்­று­வ­தில்லை என சபதம் விட்­டி­ருந்தார். கடை­சி­வரை அவ­ரு­டைய அந்தப் போராட்டம் வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. அவர் தன்­னு­டைய சப­தத்தை நிறை­வேற்றி வந்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஆரம்­ப­கால அங்­கத்­த­வ­ராக இருந்த இவர், இறக்கும் வரை அதிலே பல பத­வி­களை வகித்தார். கடை­சி­யாக இறக்­கும்­போது அவர் அதன் உப­த­லை­வ­ராகப் பணி­பு­ரிந்தார்.

மீடியா போரம் நடத்­திய சுமார் 74 ஊடகக் கருத்­த­ரங்­கு­களில் 72 கருத்­த­ரங்­கு­களில் இவர் மொழி தொடர்­பான வள­வா­ள­ராகப் பணி பரிந்தார்.

இக்­க­ருத்­த­ரங்­கு­களில் கலை­வா­தியின் கருத்­த­ரங்கு பகற் போச­னத்தின் பிறகே! தூக்கம் வராத வகையில் அவ­ரு­டைய விரி­வு­ரைகள் அமை­வ­தனால் அந்த நேரம் மிகவும் சுவா­ரஸ்­ய­மாக இருக்கும். கலை­வா­திக்கு இருந்த பிரத்­யேக ஆற்றல் இது­வாகும்.

தமிழ் பிழைகள் எங்கு ஏற்­பட்­டாலும் அதனைச் சுட்­டிக்­காட்­டு­வ­தற்கும் தட்டிக் கேட்­ப­தற்கும் தயங்க மாட்டார். இலத்­தி­ர­னியல் அறி­விப்­பா­ளர்கள் விடும் தவ­று­களை உன்­னிப்­பா­கவே அவ­தா­னித்து அதனைச் சுட்டிக் காட்­டு­வ­தற்கு தயங்­கவே மாட்டார். கலை­வாதி ஒரு சித்­திரக் கலை­ஞரும் கூட. நாட்டில் பாட­சா­லை­களில் இயக்­கங்­களில் வெளி­வந்­தி­ருக்­கின்ற அநேக சஞ்­சி­கை­களின் அட்டைப் படங்கள் கலை­வா­தி­யினால் வரை­யப்­பட்­ட­தாக இருக்­கின்­றது குறிப்­பி­டத்­தக்­கது

வடக்­கி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்­களின் அவல நிலையை பகி­ரங்­கப்­ப­டுத்­து­வ­தற்கு கலை­வாதி கடைசி வரை தனது பேனாவைப் பயன்­ப­டுத்­தினார். வட­புல முஸ்­லிம்­களின் மேற்­கூ­றிய சவால்­களில் ஒன்­றான வில்­பத்து குறித்து நூல் ஒன்றை வெளி­யிட்டார்.

வில்­பத்­துவில் இயங்­கிய முஸ்லிம் பாட­சா­லையில் ஆரம்­பத்தில் ஆசி­ரி­ய­ராக இருந்த கலை­வாதி வில்­பத்­து­வுக்கு இன­வா­திகள் விடுத்த சவால்­க­ளுக்கு தான் அங்­கி­ருந்­த­தனை உதா­ரணம் காட்­டினார்.

முஸ்­லிம்­களின் கட்­டுப்­பாட்டில் தேசிய ஊட­கங்கள் உரு­வாக வேண்டும் என்­ப­தற்கு கலை­வாதி உறு­தி­யாக செயற்­பட்டார்.

நவ­மணி நாளி­த­ழாக வந்த போது அவர் அடைந்த சந்­தோ­சத்தை என்னால் அவ­தா­னிக்க முடிந்­தது. நவ­மணி ஆசி­ரியர் பீடத்தில் என்­னோடு மிகவும் ஒத்­து­ழைத்தார், ஆசி­ரியர் தலை­யங்­கங்­களில் அவர் தனது கருத்­துக்­களை வெளி­யிட்டார்.

1958 ஆம் ஆண்டில் ‘கலைக்­கடல்’ சஞ்­சி­கை­யிலும் மற்றும் அவ­ரது சகோ­தரர் மக்கள் காதர் நடத்­திய ‘மக்கள்’ (1965) சஞ்­சி­கை­யிலும் அடுத்து ‘நவ­மணி’ப் பத்­தி­ரி­கை­யிலும் ஆசி­ரியர் பீடத்தில் தடம் பதித்­தி­ருப்­பவர்.

அந்த நாட்­களில் புரட்சிக் கவிஞன் கே! என்ற புனைப்­பெ­யரில் நன்கு பரீச்­ச­ய­மா­ன­வர்தான் கலை­வாதி. இவை­க­ளோடு புரட்­சி­தாசன், மன்­னி­நகர் கலீல், சர்தார், மன்­னாரான், தீட்­சண்யன், பஸீரா மணாளன் எனப் பல புனைப் பெயர்­களில் வலம் வந்த வித்­துவான்.

‘புரட்­சிக்­க­விஞன் கே!’ என்ற பெயரில் கவி­தை­க­ளையும், ‘மன்­னீ­ ந­கர்­கலீல்’ என்ற பெயரில் சிறு­க­தை­க­ளையும் ‘மன்­னாரான்’ என்ற பெயரில் செய்­தி­க­ளையும் ‘புரட்­சி­தாசன்’ என்ற பெயரில் கட்­டு­ரை­க­ளையும் ‘சர்தார்’ என்ற பெயரில் பேனா­சித்­தி­ரங்­க­ளையும் வரைந்தும் எழு­தியும் இன்ஸான் பண்­ணையின் மூலம் ஒரு கலக்கு கலக்­கி­யுள்ளார்.

“இன்ஸான் பண்­ணையில் வளர்ந்­தவன் நான்” என மார்­தட்டிச் சொல்­லு­வதில் பெரு­மிதம் கொண்டார்.

எழுத்­துத்­துறை மாத்­தி­ர­மல்­லாது, அவர் இலத்­தி­ர­னியல் துறை­யிலும் தனது ஆதிக்­கத்தைச் செலுத்­தி­யி­ருக்­கிறார். இந்­த­வ­கையில் இரு­பத்­தைந்து வரு­டத்­துக்கும் மேற்­பட்­டது அவ­ரது வானொலி வாழ்க்கை. வானொ­லியில் பங்கு கொண்டு சேவை ஒன்று, இரண்டு, முஸ்லிம் சேவை, கல்விச் சேவை, விளை­யாட்டுச் சேவை போன்ற வானொ­லிச்­சே­வை­களில் இலக்­கிய மஞ்­சரி, சதுரச் சங்­கமம் (குறுக்­கெ­ழுத்துப் போட்டி), இலக்­கியக் களஞ்­சியம், நூல் உலா, கதை கேளீர் (சிறு­கதை கூறும் நிகழ்ச்சி), தொடர் கவி­ய­ரங்­குகள், கவிதை எழு­துவோம் வாரீர் மாணவர் மன்றம், (குட்­டிக்­க­தைகள்) பிஞ்சு மனம் – (ஆமீனா பேகம்), ‘மண­மே­டையில் ஒரு நாடகம்’ – தொடர் நாடகம், மாதர் மஜ்லிஸ் என நிகழ்ச்­சி­களை தயா­ரித்­தி­ருக்­கிறார். ஏன் இசையும் கதையும் கூட எழு­தி­யி­ருக்­கிறார். சாதித்­தி­ருக்­கிறார்.

இவை மட்­டு­மல்ல, சொற்­பொ­ழிவு, சிறப்­பு­ரைகள், உரைச்­சித்­திரம், தொலைக்­காட்சிப் பிர­திகள் எழு­துதல் -தயா­ரித்தல் – நடித்தல், மேடை நாடகம் – பிரதி – நடிப்பு – நெறி­யாள்கை, கவி­ர­யங்­கு­களிற் பங்கு கொள்ளல் -தயா­ரித்தல் – தலைமை வகித்தல், ஓவியம் வரைதல் – பத்­தி­ரி­கை­க­ளுக்கு வரைதல், முகப் போவி­யங்கள் வரைதல், சுவ­ரோ­வி­யங்கள் மற்றும் ‘பெனர்’ வரைதல், நூல் எழு­துதல் -அச்­சிடல் -வெளி­யிடல் போன்­ற­வற்­றிலும் தனது பங்­க­ளிப்பை வழங்கத் தவ­ற­வில்லை.

கலை, இலக்­கியம் இரண்டும் கலை­வா­தியின் இரு கண்கள் எனலாம்.
உலகை மாற்­றிய உத்­தமர் (இயல் இசைச் சித்­திரம்), ஒரு வெள்ளி ரூபாய் (சிறு­கதைத் தொகுதி), கரு­வ­றை­யி­லி­ருந்து கல்­ல­றைக்கு (புதுக்­க­வி­தைகள்), றோனி­யோக்கள் வாழுமா? (ஆய்வு நூல்), ஓ! பலஸ்­தீ­னமே (பலஸ்­தீனப் போர்க் கவி­தைகள்), வவு­னியா முஸ்­லிம்­களின் வர­லாறு, எனது வில்­பத்து டயறி, மன்னார் முஸ்­லிம்­களின் வர­லாறும் பண்­பாடும் என்­பவை அவர் எழு­திய நூற்­க­ளாகும்.

வட­புல முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்ற சவால்­களில் ஒன்­றான “வில்­பத்து” குறித்து ஒரு நூலையே ஆக்­கு­ம­ள­வுக்கு கலை­வாதி கலீலின் ஆளு­மைகள் இருந்­தன.
இவர் எழு­திய சிறு­க­தைத்­தொ­கு­தியில் பிர­சு­ர­மான ஒரு வெள்ளி ரூபாய், மையித்து, சகோ­த­ரத்­துவம், வர்க்கம், நோன்புக் கஞ்சி , வண்டு, எனக்கு நானே எல்லாம், இன்னும் மனி­தர்கள் இருக்­கி­றார்­களா?, யாருக்குப் பெருநாள், ஓடப்­போறேன், புதிய அலை போன்ற கதைகள் சிலா­கித்து கூறத்­தக்­கவை.

இவ­ரது கதைகள் மொழி­மாற்றம் செய்­யப்­பட்டு பல சிங்­கள நாளே­டு­களில் பிர­சு­ர­மா­கி­யுள்­ள­தோடு, அனைத்­து­லக இஸ்­லா­மிய தமி­ழா­ராய்ச்சி மாநாட்டு மல­ரிலும் இடம்­பெற்­றுள்­ளது. ஏழைச்­சி­றுமி றிஸா­னா­ நபீக் சவூ­தியில் மர­ண ­தண்­ட­னைக்­குள்­ளாக்­கப்­பட்­டதை ஒரு சிறு­க­தை­யாக வடித்­தி­ருந்தார். அது ‘விடி­வெள்ளி’ வார இதழில் பிர­சு­ர­மா­னது. பின்னர் Daily News நாளோட்டில் மொழி மாற்றம் செய்­யப்­பட்­டது. இவ்­வாறு ‘றிஸானா’ சிறு­கதை பல மொழி­களில் பெயர்க்­கப்­பட்டு, 7 தட­வைகள் பிர­சு­ர­மா­னமை குறிப்­பி­டத்­தக்­கது.

கலை­வா­திக்கு தெரி­யாத ஒரு கலை இல்லை எனலாம். தீடீ­ரெனப் பாடுவார். அவர் ஒரு பாட­கரும் கூட. இது பல­ருக்குத் தெரி­யாது.

கலை­வாதி (மன்னார்), பல்­க­லைக்­கு­ரிசில் (-அடம்பன் மன்னார்), தீந்­தமிழ்ச் செல்வன் (அட்­டா­ளைச்­சேனை நூலகம்), பல்­க­லை­வேந்தன் தாஜுல் உலூம், (முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் அமைச்சு 1991), கலா­பூ­ஷணம் 1999 -(துறந்­தது), கலா­பூ­ஷணம் (2002) , இலக்­கி­ய­வா­ருதி -(காத்­தான்­குடி நவ இலக்­கிய மன்றம்), தேச­மான்ய – (கொழும்பு) போன்ற பட்­டங்­களை தன­தாக்கிக் கொண்ட கலை­வாதி, உலக கவிஞர் தினத்­தை­யாட்டி 2015ஆம் ஆண்டு கலா­சார அமைச்சு முதற்­த­ட­வை­யாக முது­க­வி­ஞர்­க­ளுக்கு ‘காவ்­யா­பி­மானி’ என்ற பட்டம் வழங்­கி­யது. பின்னர் வழங்­கப்­ப­ட­வில்லை. அவ்­வாறு ‘காவ்­யா­பி­மானி’ பட்டம் பெற்ற ஒரேயொரு முஸ்லிம் கவிஞர் கலைவாதி மட்டுமே என்பது சிலாகிக்கத்தக்கது.

சமூகத்துக்காக, கலைக்காக என்று முற்று முழுதான பணியாக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த பல்துறை ஆளுமையை இன்று இழந்திருக்கின்றோம்.
அவரது இழப்பு இலக்கியத்திற்கு மட்டுமல்ல, கல்விச் சமூகத்திற்கும் பேரிழப்பு.
1950 முதல் 2023 வரை கலைத்­து­றையில் சளைக்­காமல் பணி­பு­ரிந்த கலை­வாதி ஒரு சிறந்த குடும்பத் தலை­வ­ராவார்.

4 பிள்­ளை­களின் தந்­தை­யான இவர், உம்மு வஸீரா என்ற தன் கிரா­மத்தின் பெண்­ம­ணியை மணந்து வாழ்ந்து வந்தார். இவ­ருக்கு ஆரிப், நஸ்வா, ரம்ஸான், சிபானி என்ற நான்கு பிள்­ளைகள் இருக்­கின்­றார்கள். இவர்­களில் இருவர் ஆண்கள். சிபானி என்­கின்ற மனை­வியின் சகோ­த­ரியின் பிள்­ளையை அவர் வளர்ப்பு மக­ளாகத் தத்­தெ­டுத்­துள்ளார்.
தனது குடும்­பத்தை கட்டி எழுப்­பு­வதை பல சவால்­க­ளுக்கு மத்­தியில் கலை­வாதி வெற்றி கண்டார். எல்­லோ­ருக்கும் திரு­மணம் செய்து தொழில்கள் செய்து வரு­கின்­றார்கள். கலை­வாதி ஒரு தந்தை என்ற வகையிலும் தனது கட­மையில் வெற்றி கண்­டி­ருக்­கிறார்.
அன்­னாரின் பாவங்­களை மன்­னித்து அன்­னா­ரு­டைய மறுமை வாழ்வு சிறப்பாக அமைய எல்லோரும் பிரார்த்திப்போமாக! -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.