சட்டத்தரணி ஹிஜாஸ் தொடர்பில் ஒப்புதல் வாக்கு மூலம் பெற என்னை தாக்கினார்கள்

விசாரணையில் கபூர் மாமா சாட்சியம்

0 146

( எம்.எப். அய்னா)
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் பெயரைக் கூறி, அவர் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றினை வழங்க கட்டாயப்படுத்தி, சி.ஐ.டி. அதிகாரிகள் தன்னை தாக்கியதாக , வணாத்தவில்லு  ஆயுத களஞ்சியம் குறித்த வழக்கின் 3 ஆம் பிரதிவாதி கபூர் மாமா அல்லது கபூர் நாநா எனும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை சாட்சியமளித்தார்.

புத்தளம் – வணாத்தவில்லு, லக்டோஸ் தோட்டத்தில்,  வெடிபொருட்களை சேகரித்து களஞ்சியப்படுத்தும் மற்றும் உற்பத்தி செய்யும் இடமொன்றினை முன்னெடுத்து சென்றமை தொடர்பிலான வழக்கில், குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் தொடர்பிலான  உண்மை விளம்பல் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், அந் நடவடிக்கைகள் நேற்றும்  (7) தொடர்ந்தன.

இவ்வழக்கை விசாரணை செய்யவென விஷேடமாக அமைக்கப்பட்டுள்ள மூன்று நீதிபதிகளை உள்ளடக்கிய ட்ரயல் அட்பார் சிறப்பு நீதிமன்ற அமர்வு முன்னிலையில், புத்தளம் மேல் நீதிமன்றில்  விசாரணை நடந்தது. நீதிபதிகளான  ஹசித்த பொன்னம்பெரும, நிசாந்த ஹப்பு ஆராச்சி மற்றும் நயோமி விக்ரமசேகர ஆகியோர் அடங்கிய சிறப்பு ட்ரயல் அட் பார் நீதிமன்ற அமர்வு முன்னிலையிலேயே இவ்விசாரணைகள் நடந்தன.

இதன்போதே, தனது சட்டத்தரணி மொஹமட் அல்தாபின் நெறிப்படுத்தலில் சாட்சியமளித்த கபூர் மாமா அல்லது கபூர் நாநா எனும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை இந்த விடயத்தை வெளிப்படுத்தினார்.

கபூர் மாமா அல்லது கபூர் நாநா எனும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பையின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை  பதிவு செய்த பொலிஸ் அத்தியட்சரின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அதனை மையப்படுத்தி கபூர் மாமாவிடம் சாட்சியம் பெறப்பட்டு வருகின்றது.

இதன்போது பிரதிவாதிக் கூண்டிலிருந்து, சாட்சிக் கூட்டுக்கு மாற்றப்பட்டு கபூர் மாமாவிடம் சாட்சியம் பெறப்பட்டது.

சாட்சிக் கூட்டில் இருந்தவாறு நேற்று சாட்சியமளித்த கபூர் மாமா,  சி.ஐ.டி. பொலிஸ் அத்தியட்சர் ஜயசிங்க கூறியதைப்போல தன்னிட,ம் இரு நாட்கள் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் பதிவு செய்யவில்லை என குறிப்பிட்டார். மாற்றமாக சி.ஐ.டி.யின் மாதவ குணவர்தன எனும் அதிகாரி தன்னை பொலிஸ் அத்தியட்சரிடம் அழைத்து சென்றதாகவும், இதன்போது சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை தெரியுமா என தன்னிடம் அவர்கள் கேட்டதாகவும் கபூர் மாமா குறிப்பிட்டார்.

அதற்கு தான் ‘ஆம், எனது பக்கத்து செல்லில் தான் இருக்கின்றார் ‘ என பதிலளித்ததாக கபூர் மாமா குறிப்பிட்டார். சி.ஐ.டி.யினரால் கைது செய்ய முன்னர் அவரை தெரியுமா என தன்னிடம் மீள  கேட்டதாகவும் அப்போது தான் இல்லை என குறிப்பிட்டதாகவும் கபூர் மாமா இதன்போது குறிப்பிட்டார்.

இதனையடுத்து தன்னை  சி.ஐ.டி.யின்  பொலிஸ் அத்தியட்சர் தாக்கியதாகவும்,  புத்தளம் பகுதியில் சில இடங்கள் தொடர்பில் புகைப்படங்களைக் காட்டி அவ்விடங்களைத் தெரியுமா என கேட்டதாகவும், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில் வாக்கு மூலம் வழங்க வற்புறுத்தியதாகவும்  கபூர் மாமா குறிப்பிட்டார். எனினும் தான் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை  தெரியாது என இறுதி வரை  தெரிவித்ததாக  கபூர் மாமா குறிப்பிட்டார்.

இதனைவிட தனது ஒப்புதல் வாக்கு மூலம், ஏற்கனவே  சி.ஐ.டி. அதிகாரிகளால் கணினியில் தட்டச்சு செய்யப்பட்டிருந்ததாகவும், சாய்ந்தமருதில் குண்டுவெடிப்பில் உயிரிழந்த தனது மகளின் ஆடைகள் அற்ற சடலத்தை காட்டி தன்னை நோகடித்து அதில் கையெழுத்து பெறப்பட்டதாகவும் மிக உணர்வு பூர்வமாக கபூர் மாமா சாட்சியமளித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கானது மேலதிக உண்மை விளம்பல் விசாரணைகளுக்காக எதிர்வரும் செப்டம்பர்  4, 5 மற்றும் 18,19 ஆம் திகதிகளுக்கு திகதியிடப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த வழக்கை 14 குற்றச் சாட்டுக்களின் கீழ் கடந்த 2021 ஏப்ரல் 28 ஆம் திகதி  சட்ட மா அதிபர் தாக்கல் செய்திருந்தார்.

தற்போதும் மரணமடைந்துள்ள மொஹம்மட் சஹ்ரான் ஹாஷிம் மற்ரூம்  அச்சு மொஹம்மது அஹமது ஹஸ்தூன் ஆகியோருடன் இணைந்து, வணாத்தவில்லு பகுதியில் வெடிபொருட்களை சேகரிக்கும் மற்றும் தயாரிக்கும் இடமொன்றினை முன்னெடுத்து சென்றதாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ்  6 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அபூ தஹ்தா எனும்  மொஹம்மட் முபீஸ், அபூ சாபியா எனும்  அமீன் ஹம்சா மொஹம்மட் ஹமாஸ்,  கபூர் மாமா அல்லது கபூர் நாநா எனும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை, அபூ உமர் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம்  சாதிக் அப்துல்லாஹ், அபூ செய்த் எனும் நெளபர் மெளலவி அல்லது   மொஹம்மட் இப்ராஹீம் நெளபர்,  அபூ நஜா எனப்படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்லது சாஜித் மெளலவி ஆகிய 6 பேருக்கு எதிராகவே இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாசகார அல்லது பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுக்கும் எண்ணத்துடன் வணாத்தவில்லு பகுதியில் வெடிபொருட்களை சேகரிக்க சதி செய்தமை,  யூரியா நைற்றேட், நைற்றிக் அசிட், தோட்டாக்கள் உள்ளிட்ட வெடிபொருட்களை சேகரித்தமை,  வெடிபொருட்களை உற்பத்தி செய்தமை தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) உ பிரிவின் கீழும், 3 (2) ஆம் பிரிவின் கீழும் பிரதிவாதிகளுக்கு எதிராக விஷேட குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் வெடிபொருள் சேகரிப்பு, தயாரிப்பு, ஆயுத பயிற்சி உள்ளிட்டவற்றுக்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் அனைத்து பிரதிவாதிகளுக்கும் எதிராக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

இதனைவிட,  முதல் பிரதிவாதியான அபூ தஹ்தா எனப்படும் மொஹம்மட் முபீஸ் மீது,  பயங்கரவாதத்துக்கு நிதியளித்தலை தடுக்கும் சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 ஆம் உறுப்புரையின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆயுத களஞ்சியத்துடன் கூடிய  வணாத்துவில்லு லக்டோ தோட்டத்தின் ஒரு பகுதியை ஆயுத பயிற்சிகளை முன்னெடுக்க  அபூ உமர் எனும் சாதிக் அப்துல்லாஹ்வுக்கு வழங்கியமை தொடர்பில் அந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குற்றப் பத்திரிகையின் முதல் இரு பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள, அபூ தஹ்தா எனும்  அபூ ஹனீபா மொஹம்மட் முபீஸ், அபூ சாபியா எனும்  அமீர் ஹம்சா மொஹம்மட் ஹமாஸ் ஆகியோர் சார்பில்  சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஆஜரானார்.
5 ஆம் பிரதிவாதியான அபூ செய்த் எனும் நெளபர் மெளலவி அல்லது   மொஹம்மட் இப்ராஹீம் நெளபர் சார்பில் அரசினால் அவருக்கு வழங்கப்பட்ட சட்டத்தரணியும்,  அபூ நஜா எனப்படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்லது சாஜித் மெளலவி சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுசைன் உள்ளிட்ட குழுவினரும் மன்றில் ஆஜராகி வருகின்றனர்.  4 ஆம் பிரதிவாதி, அபூ உமர் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம்  சாதிக் அப்துல்லாஹ் சார்பிலும் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப்  ஆஜராகும் நிலையில்,  கபூர் மாமாவுக்காக  அரசினால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி அல்தாப் ஆஜராகினார். –Vidivelli

Leave A Reply

Your email address will not be published.