உண்­மை­களை போட்­டு­டைத்த விசா­ரணை குழு அறிக்­கை

0 392

எம்.எப்.அய்னா

வைத்­தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி. முழு நாடும் அறிந்த ஒரு வைத்­தியர். அவ­ருக்கு எதி­ராக சிங்­கள தாய்­மா­ருக்கு மலட்டுத் தன்­மையை ஏற்­ப­டுத்­தினார் எனும் குற்­ற­வியல் விசா­ரணை, குரு­ணாகல் நீதிவான் நீதி­மன்றில் இன்றும் முன்­னேற்றம் இன்றி தொடர்­கி­றது.

கடந்த 26 ஆம் திகதி வெள்­ளி­யன்றும், இது தொடர்­பி­லான வழக்கு குரு­ணாகல் நீதிவான் நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது எச்.எஸ்.ஜி. பரி­சோ­த­னைகள் தொடர்பில் நீதி­மன்றால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள வைத்­திய நிபு­ணர்கள் குழு, அப்­ப­ரி­சோ­த­னை­களை இன்னும் முன்­னெ­டுக்­காத நிலையில், அதனை துரி­தப்­ப­டுத்த நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது.

இவ்­வ­ழக்கு விசா­ர­ணையின் போது வைத்­தியர் ஷாபி, சட்­டத்­த­ர­ணிகள் எவரின் உத­வியும் இன்றி தனி­யாக முன்­னி­லை­யாகி, சந்­தேக நபர் கூண்­டி­லி­ருந்­த­வாறு நீதி­வா­னிடம் விட­யங்­களை முன் வைத்­தமை விஷேட அம்­ச­மாக அமைந்­தது.

இதன்­போது, வைத்­தியர் ஷாபி அமைச்சு மட்­டத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஒழுக்­காற்று நட­வ­டிக்கை விசா­ர­ணை­களில் தான் குற்­ற­மற்­றவர் என விடு­விக்­கப்­பட்­டுள்ள அறிக்­கையை நீதி­வானின் பார்­வைக்கு சமர்ப்­பித்தார். அவ்­வ­றிக்­கையை உடன் வைத்­தி­ருக்­கு­மாறும் குற்றப் பகிர்வுப் பத்­திரிகை எதிர்­கா­லத்தில் தாக்கல் செய்­யப்­ப­டு­மானால் அது குறித்த விசா­ர­ணையின் போது பிர­தி­வாதி தரப்பு சான்­றா­வ­ண­மாக அதனை பயன்­ப­டுத்­தலாம் என இதன்­போது நீதிவான் குறிப்­பிட்டார்.

இதன்­போது தான் 4 வரு­டங்­க­ளாக இந்த பொய்­யான குற்­றச்­சாட்­டினால் துன்­பு­று­வ­தாக வைத்­தியர் ஷாபி நீதி­வானின் கவ­னத்­துக்கு கொண்­டு­வந்த போது, தான் அதனை அறி­வ­தா­கவும், அத­னா­லேயே வைத்­திய நிபு­ணர்­களின் எச்.எஸ்.ஜி. பரி­சோ­த­னை­களை துரி­தப்­ப­டுத்த உத்­த­ர­விட்­ட­தா­கவும் நீதிவான் கூறினார்.

அத்­துடன், வைத்­தியர் ஷாபிக்கு அநீதி நடக்க இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது என திறந்த மன்றில் குறிப்­பிட்ட நீதிவான், தனக்கு விளக்கம் தேவைப்­படும் போது வைத்­தியர் ஷாபி தரப்பின் விளக்கம் கண்­டிப்­பாக பெற்­றுக்­கொள்­ளப்­படும் என அறி­வித்து வழக்கை ஆகஸ்ட் 25 வரை ஒத்தி வைத்தார்.

இது இவ்­வா­றி­ருக்க, சிங்­கள தாய்­மா­ருக்கு சட்டவிரோ­த­மாக கருத் தடை செய்­த­தாக பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்ட குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் முன்னாள் பிர­சவ மற்றும் மகப்­பேற்று வைத்­தியர் ஷாபி சிஹாப்தீன் தொடர்பில் சுகா­தார அமைச்சு முன்­னெ­டுத்த ஒழுக்­காற்று விசா­ர­ணை­களில் அவர் குற்றச் சாட்­டுக்­களில் இருந்து விடு­வித்து, விடு­தலை செய்­யப்­பட்டார்.

இந்­நி­லையில், வைத்­தியர் ஷாபியை மீண்டும் குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லை­யி­லேயே நிய­மனம் வழங்கி கட­மையில் இணைக்க, சுகா­தார அமைச்சு குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சாலை பணிப்­பா­ள­ருக்கு எழுத்து மூலம் அறி­விக்க நட­வ­டிக்கை எடுத்­தது.

உடன் அமு­லுக்கு வரும் வகையில் வைத்­தியர் ஷாபியை இவ்­வாறு குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் கட­மை­களில் இணைத்­துக்­கொள்ள சுகா­தார அமைச்சு உத்­த­ர­விட்ட நிலையில், நேற்று முன் தினம் (30) அவர் கட­மை­களில் இணைத்­துக்­கொள்­ளப்பட்டார்.

சுகா­தார அமைச்சின் விசா­ரணைக் குழு மற்றும் நிய­மிக்­கப்­பட்ட ஒழுக்­காற்று விசா­ரணைக் குழு ஆகி­யன வைத்­தியர் ஷாபிக்கு எதி­ரான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி தனது அறிக்­கையை சுகா­தார அமைச்சின் செயலர் ஜனக ஸ்ரீ சந்­ர­குப்­த­விடம் கைய­ளித்­துள்­ளது.

அதன்­படி அந்த அறிக்­கையை அரச சேவைகள் ஆணைக் குழு­வுக்கு அனுப்ப நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

சுகா­தார அமைச்சு அளித்த அறிக்­கையை ஆராய்ந்த அரச சேவைகள் ஆணைக்­குழு கடந்த 26ம் திகதி இடப்­பட்ட கடிதம் ஒன்றை சுகா­தார அமைச்சின் செய­லா­ள­ருக்கு அனுப்­பி­வைத்­துள்­ளது.

HSC / DES/ 028/2019 எனும் குறித்த கடிதம் ஊடாக அரச சேவை ஆணைக்­கு­ழுவின் சுகா­தார சேவைகள் தொடர்­பான சபையின் செய­லாளர் கலு­கப்­பு­ஆ­ரச்­சியின் கையெ­ழுத்­துடன் இந்த கடிதம் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

அக் கடி­தத்­தி­லேயே வைத்­தியர் ஷாபி ஷிஹாப்­தீனை உடன் அமு­லுக்கு வரும் வகையில் குரு­நாகல் வைத்­தி­ய­சா­லையில் பணியில் இணைக்­கு­மாறு சுகா­தார அமைச்சின் செய­லா­ள­ருக்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

அமைச்­ச­ரவை விசா­ரணைக் குழுவின் அறிக்கை கூறு­வ­தென்ன?

வட மேல் மாகாண சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் வைத்­தியர் எம்.கே. சம்பத் இந்­திக குமார தலை­மையில் சர்­வ­தேச சுகா­தார பிரிவின் சமூக வைத்­திய நிபுணர் அனில் சம­ர­நா­யக்க, பதில் சிரேஷ்ட உதவிச் செய­லாளர் ( கொள்­முதல்) ஏ.எல். பஸ்­நா­யக்க, பிர­சவ மற்றும் மகப்­பேற்று விஷேட வைத்­திய நிபுணர் யூ.டி.பி. ரத்­ன­சிறி, சமூக வைத்­திய நிபுணர் சஞ்­ஜீவ கொட­கந்­தகே, பிர­சவ மற்றும் மகப்­பேற்று விஷேட வைத்­திய நிபுணர் டி. கடோட் கஜன், ஓய்­வு­பெற்ற பிர­சவ மற்றும் மகப்­பேற்று விஷேட வைத்­திய நிபுணர் அசோக வீரக்­கொடி, பிர­சவ மற்றும் மகப்­பேற்று விஷேட வைத்­திய நிபுணர் எஸ்.பி.எஸ். சேனா­தீர, விசா­ரணை அதி­காரி டி.டப்­ளியூ.டி.கே. தஹ­நா­யக்க, விசா­ரணை அதி­காரி எஸ். ஐ. குண­வர்­தன, ஓய்­வு­பெற்ற பேரா­சி­ரியர் ஜயந்த ஜய­வர்­தன ஆகி­யோரை உள்­ள­டக்கி இந்த விசா­ரணைக் குழு சுகா­தார அமைச்­சினால் அமைக்­கப்­பட்­டது.

இந்த குழுவில் ஓய்­வு­பெற்ற பேரா­சி­ரியர் ஜயந்த ஜய­வர்­தன ஒரு போதும் கலந்­து­கொள்­ளாத நிலையில், விசா­ரணை அதி­காரி பஸ்­நா­யக்க 2022.11.01 ஆம் திக­திக்கு பின்னர் விசா­ர­ணை­களில் கலந்­து­கொண்­டி­ருக்­க­வில்லை.

வைத்­தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி முன்­னெ­டுத்த சிசே­ரியன் சத்­திர சிகிச்­சை­களின் போது சிங்­கள தாய்மார் மலட்டுத் தன்மை அடையும் வகையில் செயற்­பட்­ட­தா­கவும், முஸ்லிம் பெண்கள் 3 ஆவது சிசே­ரியன் செய்த பின்­னரும், செய்ய வேண்­டிய எல்.ஆர்.டி. சத்­திர சிகிச்­சையை செய்­யாது அவ்­வாறு செய்­த­தாக ஆவ­ணங்­களில் பொய்­யான பதி­வு­களை இட்­ட­தா­கவும் சுமத்­தப்­பட்ட அடிப்­படை குற்­றச்­சாட்­டினை மையப்­ப­டுத்தி, அதனை விசா­ரிக்க இக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது.

2021.12.22 முதல் 2023.01.16 வரை­யான காலப்­ப­கு­தியில் 32 அமர்­வு­களின் பின்னர் 2023.03.11 மற்றும் 2023.04.22 ஆகிய திகதிகளில் இடம்பெற்ற அமர்­வு­க­ளுடன் இக்­கு­ழுவின் விசா­ர­ணைகள் நிறை­வுக்கு வந்­தன.

அரச நிர்­வாக சுற்­ற­றிக்கை 30/2019 பிர­காரம் அடிப்­படை விசா­ர­ணைகள் இரு மாதங்­க­ளுக்குள் நிறைவு செய்­யப்­பட்­டி­ருக்க வேண்­டு­மாக இருப்­பினும், இந்த விட­யத்தின் ஆழம், கொவிட் நிலைமை, அதனைத் தொடர்ந்த பொரு­ளா­தார நெருக்­கடி, போக்­கு­வ­ரத்து சிக்கல் போன்ற கார­ணங்­களால் விசா­ரணைக் கால நீடிப்­புக்கு சுகா­தார அமைச்சின் அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

28 பக்­கங்­களைக் கொண்ட அடிப்­படை விசா­ரணை அறிக்­கையில், வைத்­தியர் ஷாபி மீது முன் வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்கள் அனைத்தும் உண்­மைக்கு புறம்­பா­னவை எனவும் அவற்­றுக்­கான எந்த ஆதா­ரங்­களும் இல்லை எனவும் விசா­ரணைக் குழு குறிப்­பிட்­டுள்­ளது.

குறிப்­பாக இந்த விசா­ரணைக் குழு 63 சாட்­சிகள் மற்றும் ஆவ­ணங்­களை மிகக் கவ­ன­மாக பரீட்­சித்­துள்ள நிலையில், தனது அனு­மதி இன்றி தனக்கு வைத்­தியர் ஷாபி எல்.ஆர்.டி. சத்­திர சிகிச்சை செய்­த­தாக கே.பி. நதீகா நிலந்தி செய்த முறைப்­பாடு தொடர்பில் விஷேட அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. குறித்த பெண்­ணுக்கு நீதி­மன்ற அனு­ம­தி­யுடன் குளி­யா­பிட்­டிய வைத்­தி­ய­சா­லையில் முன்­னெ­டுக்­கப்­பட்ட எச்.எஸ்.ஜி. பரி­சோ­த­னை­களின் பெறு­பே­று­களை கவ­ன­மாக ஆராய்ந்­துள்ள இந்த குழு, குறித்த பெண்ணின் முறைப்­பாடு பொய்­யா­னது என தனது இறுதி அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்­ளது.

அத்­துடன் வைத்­தியர் ஷாபி சிஹாப்தீன், 2004.08.09 முதல் குரு­ணாகல், கலே­வலை மற்றும் தம்­புள்ளை வைத்­தி­ய­சா­லை­களில் கட­மை­யாற்­றி­யுள்­ளமை, அதன் போது அவ்­வைத்­தி­ய­சா­லை­களின் பணிப்­பா­ளர்­க­ளாக கட­மை­யாற்­றி­ய­வர்கள், அப்­பொ­ழுது முதல் வைத்­தியர் ஷாபிக்கு மேல் அதி­கா­ரி­க­ளாக கட­மை­யாற்­றிய பிர­சவ மற்றும் மகப்­பேற்று விஷேட வைத்­திய நிபு­ணர்­களின் பட்­டி­ய­லையும் பெற்று இந்த விசா­ரணைக் குழு ஆராய்ந்­துள்­ளது.

இக்­கா­லப்­ப­கு­தியில் வைத்­தியர் ஷாபி 4372 சிசே­ரியன் சத்­திர சிகிச்­சை­க­ளையும் 79 சுவப் பிர­ச­வங்கள் தொடர்­பிலும் சிகிச்­சை­ய­ளித்­துள்­ள­தா­கவும் குறித்த அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.

அதில் சிசே­ரியன் சத்­திர சிகிச்­சை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டோரில் 3479 பேர் சிங்­கள தாய்மார் எனவும், 860 பேர் முஸ்லிம் தாய்மார் எனவும், 33 பேர் தமிழ் தாய்மார் எனவும் விசா­ரணை அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சாலை பணிப்­பா­ளரின் அறிக்­கைக்கு அமைய, வைத்­தியர் ஷாபி 2019.05.24 இல் கைது செய்­யப்­பட்ட பின்னர் 2019.05. 25 முதல் 2019.06.22 வரையில் 850 முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்­ற­தாக கூறப்­பட்­டுள்­ளது.
அதற்­க­மை­யவே, நதிகா நிலந்­தியின் முறைப்­பாடு தொடர்பில் விரி­வாக விப­ரித்­துள்ள விசா­ரணைக் குழு, அவ­ரது முறைப்­பாடு பொய்­யா­னது என ஆதா­ர­பூர்­வ­மாக நிரூ­பிக்­கப்­பட்­ட­தாக சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இத­னை­விட வைத்­தியர் ஷாபி மீது பிர­தா­ன­மாக 6 குற்­றச்­சாட்­டுக்கள், குரு­ணாகல் வைத்­தி­ய­சா­லையில் அப்­போ­தைய பிரதிப் பணிப்­பாளர் சந்­தன கெந்­தன்­க­முவ தலை­மை­யி­லான விசா­ரணைக் குழுவால் முன் வைக்­கப்­பட்­டி­ருந்­தது.
1. சிசே­ரியன் சத்­திர சிகிச்­சையின் போது சிங்­கள தாய் மாருக்கு ஒரு தையலும், முஸ்லிம் தாய்­மா­ருக்கு இரு தையல்­களும் இடுதல்
2. சீசர் சத்­திர சிகிச்­சை­களின் போது ‘ கோஸ் டவல்’ ஒன்­றினை பயன்­ப­டுத்தி ‘பொர­டோ­னியம்’ அறை­களை சுத்தம் செய்தல்
3. மிக அவ­ச­ர­மாக அதா­வது 10 நிமி­டங்­க­ளுக்குள் சிங்­கள தாய்­மா­ருக்கு சீசர் செய்தல்
4. சிங்­கள தாய்­மாரை சிசே­ரியன் சத்­தி­ர­சி­கிச்­சை­க­ளுக்கு ஊக்­கப்­ப­டுத்­துதல், முஸ்லிம் தாய்­மா­ருக்கு அவ்­வாறு செய்­யா­தி­ருத்தல்
5. முஸ்லிம் தாய்­மா­ருக்கு விஷேட கவ­னிப்­ப­ளித்தல்
6. முஸ்லிம் குழந்­தைகள் பிறக்கும் போது இஸ்­லா­மிய வார்த்­தை­களை கூறுதல்
இந்த 6 விட­யங்கள் தொடர்­பிலும், சிரேஷ்ட பிர­சவ மற்றும் மகப்­பேற்று வைத்­திய நிபு­ணர்­களை உள்­ள­டக்­கிய 10 பேர் கொண்ட இந்த விசா­ரணைக் குழு தீவி­ர­மாக ஆராய்ந்­துள்­ளது.

குறிப்­பாக , ஆரம்­பத்தில் இந்த குற்­றச்­சாட்­டுக்­களை முன் வைக்க, குரு­ணாகல் வைத்­தி­ய­சா­லையின் அப்­போ­தைய பிரதிப் பணிப்­பாளர் சந்­தன கெந்­தன்­க­முவ தலை­மை­யி­லான குழு சாட்­சி­ய­மாக பதிவு செய்த 43 சாட்­சி­யா­ளர்­களும் இந்த விசா­ரணை குழு­வுக்கு அழைக்­கப்­பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களில் பலர், சந்தன கெந்தன்கமுவ குழுவிடம் கூறியதாக கூறும் விடயங்களுக்கு மாற்றமான நிலைப்பாடுகளையே பிரஸ்தாபித்துள்ளனர்.
அதன்படி அப்போது அவர்களிடம் வைத்தியர் சந்தன கெந்தன்கமுவ குழு சாட்சியம் பெறும் போது நாட்டின் நிலைமை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு அழுத்தங்களால் அவ்வாறு வாக்கு மூலங்கள் வழங்கப்பட்டுள்ளதை இந்த 10 பேர் கொண்ட விசாரணைக் குழு வெளிப்படுத்தியுள்ளது.

அதன்படி இந்த 6 குற்றச்சாட்டுக்களில் 6 ஆவது விடயம் தவிர்த்து ஏனைய அனைத்து விடயங்களும் அடிப்படையற்றவை மற்றும் சாட்சிகள் அற்றவை என விசாரணைக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முஸ்லிம் மத வசனம் ஒன்றினை சத்திர சிகிச்சைக் கூடத்தில் வைத்தியர் ஷாபி உச்சரிப்பதாக முன் வைக்கப்பட்டுள்ள விடயத்துக்கு மட்டும் சாட்சிகள் இருப்பதாக விசாரணைக் குழுவின் அறிக்கை கூறுகின்றது.

இதனைவிட வைத்தியர் ஷாபி மீதான குற்றச்சாட்டுக்களை விசாரித்த இந்த விசாரணைக் குழு, குருணாகல் போதனா வைத்தியசாலையின் நிர்வாக மற்றும் முகாமைத்துவத்தின் பலவீனங்கள் பலவற்றையும் தோலுரித்துக்காட்டியுள்ளது.
இதனால், வைத்தியர் ஷாபி சிங்கள தாய்மாரை மலட்டுத் தன்மை அடைய செய்யும் வகையில், சிசேரியன் சத்திர சிகிச்சைகளின் போது நடந்துகொண்டதாக எந்த சான்றுகளும் இல்லாததால், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாது என இந்த விசாரணை குழு தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.

அத்துடன், நதீகா நில்மினி எனும் பெண்ணின் முறைப்பாடும் உண்மை இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதால் அதனை மையப்படுத்தியும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாது என அறிவித்துள்ள விசாரணைக் குழு, சத்திர சிகிச்சைக் கூடத்தில் முஸ்லிம் மத வசனங்களை கூற வேண்டாம் என வைத்தியர் ஷாபியை அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் மயக்க மருந்து வைத்தியர் ஒருவருடனான முரண்பாடு தொடர்பிலும் வைத்தியர் ஷாபியை அறிவுறுத்தியுள்ள இந்த விசாரணைக் குழு, வைத்தியர் ஷாபி மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் அவரை விடுவித்து விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.