உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள்: குற்றச்சாட்டுக்களை வாசிக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன

0 136

(எம்.எப்.அய்னா)
உயிர்த்த ஞாயிறு தின­மான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்­தப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வங்கள் குறித்து குற்றம்சாட்­டப்­பட்­டுள்ள 25 பிர­தி­வா­தி­க­ளுக்கும் எதி­ரான விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில், சிறப்பு ட்ரயல் அட்பார் நீதி­மன்றம் முன் நேற்று 2 ஆவது நாளா­கவும் குற்­றச்­சாட்­டுக்கள் வாசித்துக் காட்­டப்­பட்­டன.

இந்த விவ­காரம் குறித்த வழக்கு இந்த குண்டுத் தாக்­குதல் தொடர்­பி­லான விவ­கா­ரத்தை விசா­ரிக்­க­வென நிய­மிக்­கப்­பட்­டுள்ள, கொழும்பு மேல் நீதி­மன்றின் தலைமை நீதி­பதி தமித் தொட­வத்த தலை­மையில் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளான அமல் ரண­ராஜ மற்றும் நவ­ரத்ன மார­சிங்க ஆகியோர் அடங்­கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதி­மன்ற குழாம் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது.

23270 குற்­றச்­சாட்­டுக்கள் 24 பிர­தி­வா­திகள் மீது சுமத்­தப்­பட்­டுள்ள நிலையில், அவற்றை சுருக்க முறையில் வாசித்து காட்டும் நட­வ­டிக்­கைகள் கடந்த தவ­ணையில் ஆரம்­பிக்­கப்­பட்­டது. அந் நட­வ­டிக்­கைகள் நேற்றும் தொடர்ந்­தன.

நேற்று விஷே­ட­மாக 8 இடங்­களில் தற்­கொலை குண்­டு­களை வெடிக்கச் செய்த தற்­கொலை குண்­டு­தா­ரி­க­ளு­ட­னான பிர­தி­வா­தி­களின் தொடர்­பு­களை மையப்­ப­டுத்­திய குற்­றச்­சாட்­டுக்கள் வாசித்து காட்­டப்­பட்­டன.

அந்த குற்றச்­சாட்­டுக்கள் தொடர்பில் பிர­தி­வா­திகள், தாம் நிர­ப­ரா­திகள் என அறி­வித்­தனர்.

இந் நிலையில் மேல­திக குற்­றச்­சாட்­டுக்­களை வாசித்து காட்டும் பணிகள் எதிர்­வரும் ஜூன் 2 ஆம் திக­தி­வரை ஒத்தி வைக்­கப்­பட்­டன.

கொழும்பு மேல் நீதி­மன்றின் முதலாம் இலக்க விசா­ரணை அறையில் இந்த வழக்கு விசா­ர­ணைக்கு வந்த நிலையில், நீதி­மன்றின் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. பொலி­சாரும் பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யி­னரும் குவிக்­கப்­பட்­டி­ருந்­தனர்.
குறிப்­பாக வழக்கு விசா­ர­ணைக்கு வந்த கொழும்பு மேல் நீதி­மன்றின் முதலாம் இலக்க விசா­ரணை அறைக்குள் மூன்றாம் தரப்­பினர் உள் நுழைய அனும­தி­ய­ளிக்­கப்­ப­ட­வில்லை. நீதி­மன்ற செய்­தி­யா­ளர்கள் உள்­ளிட்ட அனை­வ­ருமே சோதனை செய்­யப்­பட்ட பின்­ன­ரேயே நீதி­மன்­றுக்குள் அனு­ம­திக்­கப்­பட்­டனர்.

இந் நிலையில், இந்த விவ­கா­ரத்தில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள 24 பிர­தி­வா­தி­களும் நேற்று நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், மெகஸின், அங்­கு­ண­கொ­ல­பெ­லஸ்ஸ, மஹர, நீர்­கொ­ழும்பு, போகம்­பறை உள்­ளிட்ட பல சிறைச்­சா­லை­களில் இருந்து அவர்கள் 24பேரும் அழைத்து வரப்­பட்­டனர்.

பிர­தி­வா­தி­க­ளுக்­காக ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனுர மெத்­தே­கொட, சிரேஷ்ட சட்­டத்­த­ரணி என்.எம். சஹீட், சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கஸ்­ஸாலி ஹுசைன், சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப், சட்­டத்­த­ரணி ஜி.கே. கரு­னா­சே­கர, சட்­டத்­த­ரணி வஸீமுல் அக்ரம், சட்­டத்­த­ரணி சுரங்க பெரேரா, சட்­டத்­த­ரணி ரிஸ்வான் உவைஸ், சட்­டத்­த­ரணி அசார் முஸ்­தபா, சட்­டத்­த­ரணி இம்­தியாஸ் வஹாப், சட்­டத்­த­ரணி சச்­சினி விக்­ர­ம­சிங்க உள்­ளிட்டோர் ஆஜ­ரா­கினர்.

நேற்­றைய தினம் இந்த வழக்கில் சட்ட மா அதிபர் சார்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி ஹரிப்பிரியா ஜயசுந்தரவின் தலைமையில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழுவினர் ஆஜராகினர்.

பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பிலும் சட்டத்தரணிகள் இருவரைக் கொண்ட குழாம் பிரசன்னமாவதாக அறிவிக்கப்பட்டது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.