­நீதியும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படுமா?

0 242

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து சரியாக நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. உண்மையான சூத்திரதாரிகள் கண்டறியப்படவுமில்லை.

இத்தாக்குதலின் சூத்திரதாரிகளை நீதியின் முன் நிறுத்துமாறு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு அழுத்தங்கள் வழங்கப்படுகின்ற போதிலும் இதுவரை சாதகமான பலன் எதுவும் கிட்டவில்லை.
இத் தாக்குதலைப் பயன்படுத்தி பெரும்பான்மை சிங்கள மக்களை உசுப்பேற்றி ஆட்சிக்கு வந்தவர்கள் நாட்டை மேலும் சீரழித்ததைத் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை. மக்களின் எழுச்சிக்கு முகங்கொடுக்க முடியாது ஆட்சியைத் துறந்து, நாட்டை விட்டுத் தப்பியோடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியிருக்கவில்லை.

எனினும் அவர்கள் இன்று அதே சுகபோகத்துடனும் பாதுகாப்புடனும் வாழ்ந்து கொண்டிருக்க, பாதிக்கப்பட்ட மக்களோ நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இத் தாக்குதலில் கிறிஸ்தவ சமூகமே நேரடியாகப் பாதிக்கப்பட்டது. 270க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன் 500க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். தேவாலயங்கள் பாதிக்கப்பட்டன. இனங்களுக்கிடையிலான நல்லுறவு சீர்குலைக்கப்பட்டது. சுற்றுலாத்துறை முற்றாக பின்தள்ளப்பட்டது. மொத்தத்தில் இத் தாக்குதல் நாட்டை மிகப் பாரிய பின்னடைவுக்குள் தள்ளியது. எனினும் இதுவரை இத் தாக்குதலைத் திட்டமிட்டு வழிநடாத்தியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரியையும் பாதுகாப்புத்துறையுடன் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் சிலரையும் இத்தாக்குதல் தொடர்பில் குற்றவாளிகளாகக் கண்டறிந்துள்ள நீதிமன்றம், அவர்களை நஷ்டயீடு செலுத்துமாறு மட்டுமே பணித்துள்ளது. எனினும் இத் தாக்குதல் நடக்கும் வரை வாளாவிருந்த இவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்படவில்லை. அதேபோன்றுதான் சஹ்ரான் குழுவினரை வழிநடாத்திய சக்திகள் யார் என்பதும் வெளிப்படவில்லை. இத் தாக்குதலின் பின்னணியில் மூன்றாம் தரப்பொன்று இருப்பதாக முன்னாள் சட்டமா அதிபர் கூறியிருந்தார். இன்று அவரை விசாரணைக்கு வருமாறு புலனாய்வுப் பிரிவினர் அழைத்திருக்கிறார்கள். அதேபோன்று இதன் சூத்திரதாரிகளை தெளிவாகக் கண்டறியும் வகையில் பலரும் பகிரங்கமாகவே சாட்சியங்களை வழங்கியிருக்கிறார்கள். எனினும் இதுவிடயத்தில் சாதகமான முன்னேற்றங்கள் எதனையும் காண முடியவில்லை.

துரதிஷ்டவசமாக இத் தாக்குதலை நடாத்தியவர்கள் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறு தீவிரவாதக் குழுவினர் என்பதால் இதற்காக முஸ்லிம் சமூகம் பாரிய விலை கொடுக்க வேண்டி ஏற்பட்டது. தாக்குதலைத் தொடர்ந்து ஆயிரக் கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இவர்களில் கணிசமானோர் விடுவிக்கப்பட்டு விட்ட போதிலும் இன்னும் பலர் நான்கு வருடங்களுக்கும் மேலாக சிறைகளில் உள்ளனர். விடுவிக்கப்பட்டவர்கள் கூட சமூகத்தில் மீண்டும் முன்னரைப் போன்று சகஜமாக இயங்க முடியாதளவுக்கு சந்தேகக் கண்கொண்டே நோக்கப்படுகின்றனர். புலனாய்வுப் பிரிவினர் இன்றும் அவர்களைக் கண்காணித்தே வருகின்றனர். இறுக்கமான பிணை நிபந்தனைகள் காரணமாக அவர்களால் சுதந்திரமாக தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலையும் உள்ளது.

இது இவ்வாறிருக்க, திடீரென்று கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அக்குரணை நகரில் பெருநாளை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தமக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிசார் விடுத்துள்ள அறிவிப்பு அப் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெருநாளுக்காக மக்கள் தயாராகிக் கொண்டிருக்கையில் விடுக்கப்பட்டுள்ள இந்த அறிவித்தலானது மக்களைத் திக்குமுக்காட வைத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவு தினமும் நோன்புப் பெருநாளும் அடுத்தடுத்து வருகின்ற நிலையில், இவ்வாறானதொரு தகவலை பொலிசார் விடுத்து மக்களை எச்சரித்திருப்பதானது பலத்த சந்தேகங்களைத் தோற்றுவிப்பதாகவுள்ளது.

எவ்வாறிருப்பினும், எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அதே போன்று பொது மக்களும் விழிப்பாக நடந்து கொள்ள வேண்டும்.

புனித ரமழான் மாதத்தின் இறுதி நாட்களில் இருக்கும் நாம் எவ்வாறான அசம்பாவிதங்களும் ஏற்படாதிருக்கப் பிரார்த்திப்போம்.
அனைவருக்கும் புனித நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள். ஈத் முபாரக்.

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.