திரு­கோ­ண­மலை, புல்­மோட்டை: பொன்­மலை குடாவில் அத்­து­மீறும் பிக்­குகள்!

0 465

எஸ்.என்.எம்.சுஹைல்

கிழக்கு மாகா­ணத்தில் திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தி­லேயே காணி தொடர்­பி­லான அதி­க­மான சிக்கல்கள் இருக்­கின்­றன. குறிப்­பாக முப்­ப­டை­யி­னரின் அத்­து­ மீ­றல்கள், தொல்­பொருள் திணைக்­களம் மேற்­கொண்டு வரும் அடா­வ­டிகள், இன­வாத நிகழ்ச்சி நிர­லுக்கு அமைய முன்­னெ­டுக்­கப்­படும் திட்­ட­மி­டப்­பட்ட செயற்­பா­டுகள், அரச நிர்­வா­கத்தின் ஊடாக முன்­னெ­டுக்­கப்­படும் நட­வ­டிக்­கை­களால் மக்கள் காணிகள் தொடர்ந்தும் அப­க­ரிக்­கப்­ப­டு­கி­றது. இதனால், அப்­பாவிப் பொது ­ஜ­னங்கள் தொடர்ந்தும் பல்­வேறு இன்­னல்­க­ளுக்கு முகம்­கொ­டுத்து வரு­கின்­றனர்.

இந்­நி­லையில் கடந்த வார இறு­தியில் புல்­மோட்டை, பொன்­ம­லைக்­கு­டாவில் கற்­பா­றை­யி­லான மலைப்­ப­கு­தியில் ஆயுத முனையில் மக்­களை அச்­சு­றுத்தி பிக்­கு க­ளுடன் அமைச்­ச­ரவை பாது­காப்பு பிரிவு அதி­கா­ரிகள் இணைந்து சட்­ட­வி­ரோ­த­மாக புத்தர் சிலையை நிறுவ முற்­பட்­ட­மையால் பிர­தே­சத்தில் களே­பரம் ஏற்­பட்­டது.

புத்தர் சிலையை நிறு­வு­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்து பிர­தேச மக்கள் போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தனர். இதன்­போதே, ஆயுத முனையில் அவர்கள் அச்­சு­றுத்­தப்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

பௌத்த பிக்­குகள், இலங்­கையின் தொல்­பொருள் திணைக்­கள அதி­கா­ரிகள் மற்றும் அமைச்­ச­ரவை பாது­காப்பு பிரி­வினர் சிலர் அடங்­கிய குழு­வினர் கடந்த சனிக்­கி­ழமை தமி­ழர்கள் மற்றும் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான காணியில் புத்தர் சிலையை நிறுவ முற்­பட்­டதை அடுத்தே இவ்­வாறு குழப்­ப­மான நிலைமை ஏற்­பட்­டது.

பிக்கு ஒரு­வரின் சாரதி ஒருவர் இப்­ப­குதி விவ­சா­யியின் காணி வேலியை தகர்த்து உள்ளே நுழைந்து நிலத்தைக் கைப்­பற்றி, அங்கு புத்தர் சிலையை வைக்க முயன்­றதை அடுத்து பிர­தே­ச­வா­சிகள் ஆத்­தி­ர­ம­டைந்து அங்கு திரண்­டனர். அங்கு வந்த பிக்­குகள் மற்றும் கைத்­துப்­பாக்­கி­யுடன் அங்கு நின்ற அமைச்­ச­ரவை பாது­காப்பு பிரி­வி­ன­ருடன் பிர­தேச மக்கள் கடும் வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்­டனர்.

இதன்­போது பாது­காப்பு அதி­காரி தனது கைத்­துப்­பாக்­கியை எடுத்து எதிர்ப்பு தெரி­வித்த மக்­களை சுட்­டுக்­கொல்­வ­தாக மிரட்­டினார். இதனை அங்­கி­ருந்­த­வர்கள் ஒளிப்­ப­திவு செய்து சமூக ஊட­கங்­களில் வெளி­யிட்­டுள்­ளனர்.

ஜம்­இய்­யதுல் உலமா திரு­கோ­ண­மலை மாவட்ட கிளை செய­லாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.சாலிஹீன் இச் சம்­பவம் தொடர்பில் விப­ரிக்­கையில், ஏற்­க­னவே அரி­சி­மலை பகு­தியை ஆக்­கி­ர­மித்து விகாரை மற்றும் பன்­சலை அமைத்தும் உள்ள பனா­முர தேரர் என்ற பௌத்த பிக்கு தலை­மை­யி­லான குழு­வி­னரே பொன்­ம­லைக்­கு­டாவில் உள்ள மலைப்­ப­கு­திக்கு(குன்று) வந்து அங்கு புத்தர் சிலையை நிறுவ முயன்றனர்.

எனினும் மக்கள் அதற்கு அனு­ம­திக்­க­வில்லை. இதனால் அங்கு பெரும் களே­ப­ரமே ஏற்­பட்­ட­து. இவ்­வே­ளையில் பிக்­கு­வுட னிருந்த அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த இரு­வரும் கைத் துப்­பாக்­கியை எடுத்து சுடப்போவதாக மக்­களை எச்­ச­ரித்­தனர்.
இந்தப் பிக்கு ஏற்­க­னவே திரு­கோ­ண­ம­லையில் – தமிழ் பேசும் மக்கள் வாழும் பகு­தி­யான அரி­சி­ம­லையை பௌத்­த­ம­யமாக்­கு­வதில் முன்­னின்று செயற்­பட்­டவர். தற்­போது அங்கே உள்ள விகா­ரையில் தங்­கி­யுள்ள பிக்­கு­வுக்கு அர­சினால் சகல வச­தி­களும் ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­பட்­டுள்­ளன. இந்தப் பிக்­கு­விற்கு பாது­காப்­பாக இரண்டு அமைச்­ச­ரவை பாது­காப்பு பிரி­வினர் ஆயு­தங்­க­ளுடன் எந்­நே­ரமும் உள்­ளனர். இந்த அமைச்­ச­ரவை பாது­காப்பு பிரி­வி­னரே மக்­களை சுட்டுக் கொல்­வ­தாக துப்­பாக்­கியை காட்டி எச்­ச­ரித்­தனர் எனக் கூறினார்.

இதே­வேளை, பொன்­ம­லைக்­கு­டா மலைப் பகு­தியில் எந்­நே­ரமும் மீண்டும் புத்தர் சிலையை நிறுவ பிக்கு தலை­மை­யி­லான குழு முயற்­சிக்­கலாம் என்­பதால் அந்தப் பகு­தியில் பிர­தேச மக்கள் திரண்டு நிற்­கின்­றனர்.

இத­னி­டையே, இவ்­வி­வ­காரம் நேற்­று­முன்­தினம் பாரா­ளு­மன்றில் சூடு­பி­டித்­தது. திரு­கோ­ண­மலை மாவட்ட ஐக்­கிய மக்கள் சக்தி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மகரூப் சில­மா­தங்­க­ளுக்கு முன்னர் குறித்த பிர­தே­சத்தில் இடம்­பெறும் அத்­து­மீ­றல்கள் குறித்து புத்­த­சா­சன, சமய மற்றும் கலாச்­சார அலு­வல்கள் அமைச்­ச­ரிடம் கேள்­வி­களை சமர்­பித்­தி­ருந்தார். குறித்த வினா நேற்­று­முன்­தினம் அமைச்­ச­ரிடம் கேட்­ப­தற்கு எடுக்­கப்­பட்ட போதே பாரா­ளு­மன்றம் பர­ப­ரப்­பா­னது.

திரு­கோ­ண­மலை அரி­சி­மலை பொன்­மலை குடா பிர­தே­சத்­துக்கு சென்ற மதத்­த­லை­வர்­க­ளுக்கு அமைச்சு பாது­காப்பு பிரிவு அதி­கா­ரிகள் எந்த அடிப்­ப­டையில் வழங்­கப்­பட்­டது என ரவூப் ஹக்கீம், இம்ரான் மஹ்ரூப் சபையில் கேட்ட கேள்­விக்கு சபையில் முறை­யான பதில் வழங்­கப்­ப­ட­வில்லை.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை வாய்­மூல விடைக்­கான கேள்வி நேரத்­தின்­போது, எதிர்க்­கட்சி உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் இடை­யிட்டு கேள்­வி­­யொன்றை முன்­வைத்து குறிப்­பி­டு­கையில், திரு­கோ­ண­மலை அரி­சி­மலை பொன்­மலை குடா பிர­தே­சத்தில் சில தினங்­க­ளுக்கு முன்னர் பெளத்த பிக்கு ஒரு­வ­ர் புத்தர் சிலை வைக்க முற்­பட்­ட­ சம்­பவம் தற்­போது சமூக வலைத்­த­ளங்­களில் வைர­லாகி வரு­கி­றது. குறித்த மத­கு­ரு­வுக்கு அமைச்சு பாது­காப்பு வழங்­கப்­பட்­டி­ருப்­பதும் அவர்கள் அங்கு எதிர்ப்பு போராட்­டத்தில் ஈடு­பட்டு வந்த பொது மக்­க­ளுக்கு துப்­பாக்­கியை நீட்டி அச்­சு­றுத்தியமை மக்­களின் பாதுகாப்பையும் கேள்­விக்­கு­றி­யாக்கி இருக்­கி­றது.

அதே­போன்று தொல்­பொருள் நட­வ­டிக்­கையின் போது எமது பிர­தே­சத்தில் காலா­கா­ல­மாக வாழ்ந்­து­ வந்­த­வர்­களின் வீடுகள், அவர்­களின் விவ­சாய பூமிகள் அப­க­ரிக்­கப்­படும் நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இது­தொ­டர்­பாக நீங்கள் எடுக்கும் நட­வ­டிக்கை என்ன? என வினவினார்.

இதற்கு பெளத்த விவ­கார அமைச்சர் விதுர விக்­ர­ம­நா­யக்க பதி­ல­ளிக்­கையில், இந்த சம்­பவம் தொடர்­பாக எந்த தக­வலும் கிடைக்­க­வில்லை. இது­தொ­டர்­பாக தேடிப்­பார்த்து உங்­க­ளுக்கு அறிக்கை சமர்ப்­பிக்க எதிர்­பார்க்­கிறேன்.

அத்­துடன் தொல்­பொருள் நட­வ­டிக்­கையின் போது ஏதா­வது முறை­கேடு இடம்­பெற்­றி­ருந்தால் அது­தொ­டர்பில் தகவல் வழங்­கினால் நட­வ­டிக்கை எடுப்பேன் என்றார்.
இதன்­போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குறுக்­கிட்டு, திரு­கோ­ண­மலை அரி­சி­மலை பொன்­மலை குடா பிர­தே­சத்­துக்கு சில மதத் ­த­லை­வர்கள் அமைச்சு பாது­காப்பு பிரிவு அதி­கா­ரி­க­ளுடன் சென்­றி­ருக்­கின்­றனர். இதன்­போது அந்த பிர­தே­சத்தில் எதிர்ப்பு தெரி­வித்த மக்­களை நோக்கி துப்­பாக்கியை நீட்டி அச்­சு­றுத்தி இருக்­கின்­றனர். அமைச்சு பாது­காப்பு பிரிவு அதி­கா­ரிகள் எந்த அடிப்­ப­டையில் மதத்­த­லை­வர்­க­ளுக்கு பாது­காப்பு வழங்க அந்த இடத்­துக்கு சென்றார்கள் என்பது தொடர்பில் நீங்கள் தேடிப்பார்ப்பீர்களா? எமக்கு அறிக்கை சமர்ப்பீர்களா ? என கேட்டார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ‘‘அமைச்சு பாதுகாப்பு பிரிவு பெளத்த கலாசார அமைச்சுக்கு உட்பட்டது அல்ல. அந்த கேள்வியை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் முன்வையுங்கள்’’ என்றார்.

அத்தோடு, பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும் இது குறித்து பாராளுமன்றில் கேள்வி எழுப்பினர்.

தொடர்ச்சியாக திருகோணமலை மாவட்டத்தில் காணி தொடர்பான பிரச்சினைகளும் அத்துமீறல்களும் நீடித்து வருகின்றன. இது அம் மாவட்டத்தில் இனங்களுக்கிடையே தேவையற்ற முறுகலுக்கு வித்திடலாம்.இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன் பெளத்த மதத்தின் பெயரால் சிறுபான்மையினரின் நிலங்களை அபகரிக்கும் செயற்பாடுகளையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.–Vidivelli

Leave A Reply

Your email address will not be published.