வக்பு சபை நியமனத்தில் அரசியல் தலையீடு வேண்டாம்

0 328

கடந்த மூன்று வரு­ட­கா­ல­மாக பத­வியில் இருந்த சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்­தீனின் தலை­மை­யி­லான 7 பேர் கொண்ட வக்பு சபையின் பத­விக்­காலம் கடந்த ஜன­வரி மாதம் 30 ஆம் திக­தி­யுடன் நிறை­வுக்கு வந்­துள்­ளது. இந்­நி­லையில் புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் வக்பு சபைக்கு புதிய நிய­ம­னங்­களை வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்ளார்.

புதிய வக்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதில் பலத்த அரசியல் தலையீடுகள் இடம்பெற்று வருவதாக அறிய முடிகிறது. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தமக்கு விருப்பமானவர்களை வக்பு சபைக்கு நியமிக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அழுத்தங்களை வழங்கி வருகின்றனர். இதுவரை 50க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அமைச்சு பாரிய நெருக்குதல்களை எதிர்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் வக்பு சபைக்கான நியமனத்தைப் பெறுவதற்காக அரசியல்வாதிகள் ஊடாக முயற்சித்து வருகின்ற விடயமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வக்பு சபைக்கான நியமனம் என்பது ஓர் அமானிதமான பணியாகும். இது அரசியல்வாதிகளினால் வழங்கப்படுகின்ற நியமனம் அல்ல. எனினும் எல்லாமே அரசியலாகிவிட்ட முஸ்லிம் சமூக சூழலில், வக்பு சபையும் அதன் நியமனங்களும் கூட அரசியல்மயப்பட்டிருப்பது ஆச்சரியமானதொன்றல்ல. எனவே வக்பு சபைக்கான அங்கத்தவர்களை நியமிக்கும் விடயத்தில் அரசியல் தலையீடு தவிர்க்கப்பட வேண்டும்.
வக்பு சொத்துக்கள் முன்னெப்போதுமில்லாதவாறு பாரிய சவால்களைச் சந்தித்துள்ள நிலையில், அரசியல்வாதிகளுக்கு அடிபணியாது இறைவனுக்கு மாத்திரமே அஞ்சிக் கருமமாற்றுகின்ற நேர்மையான, தைரியமானவர்களே அங்கத்தவர்களாக நியமிக்கப்பட வேண்டும். அரசியல் சிபாரிசுகளால் இப் பதவிக்கு வருபவர்களால் வக்பு சொத்துக்கள் பாதுகாக்கப்படமாட்டாது. மாறாக அரசியல் நலன்களுக்கே அவை தாரை வார்க்கப்படும் என்பதே எமது கணிப்பாகும். எனவேதான் இது விடயத்தில் புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க முஸ்லிம் அரசியல்வாதிகளின் அழுத்தங்களைப் புறந்தள்ளி சமூகத்தில் நன்மதிப்புப் பெற்ற நேர்மையான மனிதர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.

இதேவேளை நாட்டில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சல்­களின் எண்­ணிக்கை சுமார் 2544 ஆகும். அத்­தோடு நூற்­றுக்கும் மேற்­பட்ட பள்­ளி­வா­சல்கள் பதி­வின்­றியே இயங்கி வரு­கின்­றன.

நாம் அல்­லாஹ்வின் மாளி­கை­யாகக் கருதும் பள்­ளி­வா­சல்­களில் பெரும் எண்­ணிக்­கை­யா­னவை நிர்­வாகச் சீர்­கே­டு­களும், ஊழல்­களும் நிறைந்து காணப்­ப­டு­வதை அண்­மைக்­கால சம்­ப­வங்கள் உறுதி செய்­துள்­ளமை கவலை தரு­கி­றது.இந் நிலையில் பள்­ளி­வா­சல்­களை சீராக இயங்கச் செய்­வ­தற்கு திணைக்­களம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். இது தொடர்பில் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் விசேட கவனம் செலுத்ததுவார் என நம்புகிறோம்.

60 முதல் 70 வீதமான பள்­ளி­வா­சல்­களில் நிர்­வாக சபைத் தெரி­வுகள் தொடர்பில் திணைக்­க­ளத்­திற்கு முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தாக திணைக்­களம் உறுதி செய்­துள்­ளது. பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­களில் அர­சியல் தலை­யீ­டு­களும், ஊழல்­களும் மலிந்­தி­ருப்­ப­தாக தொட­ராக குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கி­றது.
இது­மாத்­தி­ர­மல்ல பள்­ளி­வா­சல்கள் மற்றும் அரபு மத்­ர­ஸாக்கள், சமய ஸ்தலங்­களின் வக்பு சொத்­துக்­க­ளுக்கும் இன்று சவால்கள் மேலோங்­கி­யுள்­ளன.

வக்பு சொத்­துக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள சவால்­களில் ஒரு ­சி­லவே தற்­போது வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளன. கொழும்பு பெரிய பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மான வக்பு சொத்­துக்கள், கபூ­ரிய்யா அர­புக் ­கல்­லூ­ரிக்­கான வக்பு சொத்­துக்கள் போன்ற குறிப்­பிட்டுக் கூறக்­கூ­டிய சவால்கள் குறித்தே சமூகம் அறிந்து வைத்­துள்­ளது. ஆனால் நூற்­றுக்­க­ணக்­கான வக்பு சொத்­துக்கள் தனி­ந­பர்­களால், திட்­ட­மிட்ட குழு­வி­னரால் கைய­கப்­ப­டுத்தி அனு­ப­விக்­கப்­பட்டு வரு­கின்­றன.

புதிதாக நியமிக்கப்படவுள்ள வக்பு சபை இது விட­யத்தில் அதிக கரி­சனை கொள்ள வேண்டும். பள்­ளி­வா­சல்­க­ளுக்கு நிர்­வா­கி­களை நிய­மிப்­பதில் மாத்­திரம் கவனம் செலுத்­தாது வக்பு சொத்­துக்கள் தொடர்­பிலும் கூடுதல் அவ­தானம் செலுத்த வேண்டும். குறித்த சொத்­துக்கள் மூலம் கிடைக்கப் பெறும் கோடிக்­க­ணக்­கான ரூபா வரு­மா­னத்தை சமூக நலன்­க­ளுக்­காக பயன்­ப­டுத்த முன்­வர வேண்டும்.

இதற்­காக வக்பு சபை நாட்டில் அமு­லி­லுள்ள வக்பு சட்­டத்தை கடு­மை­யாக அமுல் நடத்­து­வ­தற்கு முன்­வ­ர­வேண்டும். நாட்­டி­லுள்ள வக்பு சொத்­துக்­களை பட்­டி­ய­லிட்டு, அச்­சொத்­துக்கள் எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னை­களை இனங்­கண்டு பிரச்­சி­னை­க­ளுக்கு சட்ட ரீதி­யாக தீர்வு காண­வேண்டும். இச்­செ­யற்­திட்­டங்கள் உட­ன­டி­யாக தாம­த­மின்றி மேற்­கொள்­ளப்­பட வேண்டும். இத­னையே சமூகம் வக்பு சபையிடமிருந்தும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திடமிருந்தும் எதிர்பார்க்கிறது.

அத்தோடு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தங்களது அரசியல் சுயநலன்களுக்காகப் பள்ளிவாசல்களைப் பயன்படுத்தக்கூடாது. இவ்வாறான அரசியல்வாதிகளை சமூகம் இனங்கண்டு நிராகரிக்க வேண்டும்.

ஐவேளை பள்ளிவாசல்களுக்குச் சென்று தொழுவதுடன் மாத்திரம் எமது கடமை பூர்த்தியாகிவிட்டதாக கருதக்கூடாது. பள்ளிவாசல்களையும், பள்ளிவாசல் வக்பு சொத்துக்களையும் பாதுகாப்பது ஒவ்வொருவரதும் பொறுப்பாகும். இவ்விடயத்தில் நாம் வேறுபாடுகளின்றி ஒன்றுபட வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.