இந்திய தொழிலதிபர்கள் இலங்கையில் முதலீடுகளைச் செய்ய வேண்டும்

அகில இந்திய முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கோரிக்கை

0 276

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
அகில இந்திய முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவரும், முன்னாள் லோக் சபா உறுப்பினருமான பேராசிரியர் காதர் மொஹிதீன், இலங்கையில் முதலீடுகளைச் செய்யுமாறு இந்திய முஸ்லிம் தொழிலதிபர்களுக்கும், முஸ்லிம் வர்த்தகர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நிர்வாகிகள் 15 பேர் அதன் முன்னாள் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் கடந்த மாதம் 10 ஆம் திகதி முதல் 10 தினங்கள் தமிழ் நாட்டில் சுற்றுலா பயணம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

சென்னை மாநகரசபை உறுப்பினர் அகில இந்திய முஸ்லிம் லீக் பாத்திமா முஸப்பரின் அழைப்பினை ஏற்று இவ்விஜயம் மேற்கொள்ளப்பட்டது. முஸ்லிம் மீடியா போரம் நிர்வாகிகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்தில் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொஹிதீன் தலைமையில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. சென்னை புதுக்கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது என்.எம்.அமீன், இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இந்தியா உதவ வேண்டும். இந்திய தொழிலதிபர்கள் இலங்கையில் முதலீடுகளைச் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனையடுத்தே பேராசிரியர் காதர் மொஹிதீன் இந்திய முஸ்லிம் தொழிலதிபர்களுக்கு மேற்குறிப்பிட்ட அழைப்பினை விடுத்தார்.

என்.எம்.அமீன் நிகழ்வில் உரையாற்றுகையில், இலங்கை தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ளது. இதனால் இலங்கை மக்களுக்கு அயல் நாடான இந்தியா உதவ வேண்டும். இலங்கையில் வர்த்தக முயற்சிகளைச் செய்ய வேண்டும்.

காயல்பட்டணம் கீழக்கரை போன்ற இடங்களில் வாழும் முஸ்லிம்களுக்கும், இலங்கை முஸ்லிம்களுக்குமிடையில் நிறைய தொடர்புகள் இருக்கின்றன. இன்று இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது. இதனால் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தப் பின்னடைவிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு கட்சி மற்றும் இன பேதமின்றி அனைவரும் பாடுபட வேண்டியுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் தென்னிந்திய முஸ்லிம்கள், வர்த்தகர்கள் முஸ்லிம் தொழிலதிபர்கள் எமது நாட்டில் முதலீடுகளைச் செய்ய முன்வாருங்கள் என்று நான் வேண்டுகோள் விடுகிறேன்.

உங்கள் முதலீடுகள் மூலம் எமது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும். வேலைவாய்ப்பின்றி இருக்கும் எமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்க முடியும். அயல்நாடான இந்தியா இலங்கைக்கு தொடர்ந்தும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. இக்கட்டான நிலைமைகளில் இலங்கைக்கு கை கொடுத்து உதவியுள்ளது. இந்திய சகோதரர்களுக்கு நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம் என்று கூறினார்.

கடந்த மாதம் 13 ஆம் திகதி இலங்கை தூதுக்குழுவினர் திருவல்லிக்கேணி வாலாஜா பள்ளிவாசலில் தொழுகையை நிறைவு செய்து காயிதே மில்லத் ஜியாரத்தை தரிசித்தனர். அன்றைய தினம் மனித நேய கட்சித்தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ்வைச் சந்தித்து கலந்துரையாடினர்.

14 ஆம் திகதி தமிழ் நாடு வக்பு வாரியத்தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் மற்றும் மாநில துணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கே. நவாஸ்கனி ஆகியோருடனான சந்திப்பு இடம்பெற்றது. 15 ஆம் திகதி ஜெயா டி.வி நெறியாளர் சுபியானின் மகனது திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர்.

16 ஆம் திகதி தென்காசி மாவட்டம் குற்றாலம் சுற்றிப்பார்த்தனர். 17ஆம் திகதி தூதுக்குடி மற்றும் காயல் பட்டினம், 18 ஆம் திகதி இராமநாதபுரம் மற்றும் கீழக்கரை, 19ஆம் திகதி திருச்சிக்கு விஜயம் மேற்கொண்டனர். 20 ஆம் திகதி சென்னை திரும்பி பாத்திமா முஸப்பரைச் சந்தித்தனர். 21 ஆம் திகதி தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச் செயலாளர் பேராசிரியர் முனைவர் சே.மு.மு முகமது அலியைச் சந்தித்தனர். குழுவினர் 22 ஆம் திகதி இலங்கை திரும்பினர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.