ஜனநாயகத்தை காக்கும் அறப்போராட்டத்தில் முஸ்லிம் கட்சிகளின் உறுதியான நிலைப்பாடு

0 1,246
  • நாச்சியாதீவு பர்வீன்

இந்த வருடத்தின் ஒக்டோபர் மாதத்தின் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்ததாக நாளாக பதியப்படும். இதற்கான காரணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி, ஏற்கெனவே பதவியில் இருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்துவிட்டு புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை நியமித்ததாகும். மைத்திரியின் இந்த திடீர் அரசியல் ரீதியான முன்னெடுப்புக்கு அவர் சொன்ன காரணங்கள் சிறுபிள்ளைத்தனமானது மட்டுமல்ல, சாதாரண நடுநிலை வகிக்கின்ற பொதுமகனால்கூட  அதனை ஜீரணிக்க முடியாமல் இருந்தமையை கடந்த நாட்களில் அவதானிக்க முடிந்தது. மைத்திரியின் இந்த திடீர்  சர்வாதிகார முடிவினால் ஜனநாயகம் கேள்விக்குற்படுத்தப்பட்டதோடு அவருக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கும் செங்குத்தாக கீழிறங்கத் தொடங்கியது.

தன்னைக் கொலை செய்ய ரணில் தரப்பினர் முயற்சி செய்வதாகவும், தனக்குத் தெரியாமல் மிகமுக்கியமான முடிவுகளை அவர்  எடுப்பதாகவும் அதனால் ரணிலுடன் தொடர்ந்தும் ஆட்சியில் இணைந்து பயணிக்க முடியாது என்பதனாலும், நாட்டின் எதிர்காலம் கருதி இவ்வாறான அவசரமான தீர்மானத்தை தான் எடுத்ததாகவும் அவர் பொதுவெளியில் அறிவித்தார். மீண்டும் தாம் ஆட்சிக்கு வந்துவிட்டோம் என்கின்ற பதகளிப்பில் மகிந்த தரப்பினரும் கூடுதலாகவே ஆட ஆரம்பித்தனர். புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமருக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதாகவும் ஏற்கனவே 113 ஆசனங்களை உறுதி செய்துவிட்டுத்தான் நான் இந்த விடயத்தில் இறங்கினேன் என்றும் பகிரங்கமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு ராஜதந்திரிகளோடு கதைக்கின்றபோது ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதாகவும் அதனால் ரணில்  வெளிநாட்டு பிரமுகர்களை சந்திக்கின்றபோது, அந்த சந்திப்பினை வேண்டுமென்றே ஜனாதிபதி தவிர்ப்பதாகவும், ரணிலுடன் தொடர்ந்து பணியாற்ற முடியாமைக்கான பிரதான காரணம் இதுதான் என்றும் இதனை மறைத்து பொய்யான குற்றச்சாட்டை  ஜனாதிபதி முன்வைப்பதாகவும் சில ஊடகங்கள் தெரிவித்தன. இவைகள் எவற்றையும் கணக்கில் கொள்ளாது மகிந்த ராஜபக் ஷவை பிரதமராக நியமித்தது இந்த நாட்டின் இறைமையும்,பொருளாதாரத்தையும் கட்டிக்காக்கவே என்று திரும்பத்திரும்ப சொன்னதையே ஜனாதிபதி கூறிக்கொண்டு இருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபாலவின் இந்த ஜனநாயத்திற்கு எதிரான செயற்பாடானது உலகநாடுகளின் பலத்த விமர்சனத்திற்கு உட்பட்டதோடு அவரை ஜனாதிபதியாக்கி, அந்தக் கதிரையில் வைத்து அழகுபார்த்த எல்லாக்கட்சிகளினதும் அதிருப்தியை அவருக்கு வழங்கியது. குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டனி போன்ற சிறிய மற்றும் சிறுபான்மைக்கட்சிகள் ஜனாதிபதியின் இந்த எதேச்சாதிகார முடிவினை எதிர்த்தன. பகிரங்கமாக விமரிசனத்திற்கு உட்படுத்தின நல்லாட்சியின் பிரதானமான கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி இந்த விடயத்தை வன்மையாகக் கண்டித்ததோடு மைத்திரிக்கு எதிரான செயற்பாடுகளை நாடளாவிய ரீதியில் முடுக்கி விட்டது.

இதற்கிடையில் அடுத்துவந்த ஒருவாரத்தில் சிறுபான்மை கட்சிகளை அல்லது அக்கட்சிகளின் உறுப்பினர்களை காவுகொள்ளுகின்ற வேலைத்திட்டத்தில் மகிந்த தரப்பினர் இறங்கினார்கள். ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த  விஜயதாச ராஜபக் ஷ, வசந்த சேனநாயக்க, வடிவேல் சுரேஷ், துனேஷ் கங்கந்த, ஆனந்த அளுத்கமகே, அசோக பிரியந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் போன்றோர் மகிந்த தரப்புக்கு சென்றனர். இவர்களுக்கு பலகோடிகள் வழங்கப்பட்டதாக பரவலாகப் பேசப்பட்டன. ஜனாதிபதி மைத்திரி மற்றும் புதிய பிரதமர் மகிந்த ராஜபக் ஷ, அவரது சகோதரர் பசில் ராஜபக் ஷ ஆகியோர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளையும் எப்படியாவது எதைக்கொடுத்தவது வளைத்துப்போட உச்சபட்ச முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை ரவூப் ஹக்கீமும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனும் இந்த விடயத்தில் எவ்விதமான நெகிழ்வுப்  போக்கினையும் காட்டாமல் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் ஒன்றுபட்டு உறுதியாக நின்றனர்.

எவ்வளவு பகீரதபிரயத்தனம் செய்த போதும் மகிந்த தரப்பினால் 113 எனும் பாராளுமன்ற பெரும்பான்மை இலக்கை எட்ட முடியவில்லை. ஜனாதிபதி பலதடவைகள் முஸ்லிம் கட்சிகளை கூப்பிட்டு மகிந்த தரப்புக்கு ஆதரவு தருமாறு கோரிக்கை விடுத்தார், மனோ கணேசன் மற்றும் அவரது ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருபோதும் தாம் மகிந்தவை ஆதரிக்க போவதில்லை எனும் நிலைப்பாட்டில் தெளிவாக இருந்தனர். இறுதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தயவினை நாடினார்  ஜனாதிபதி .  அவர்களும் கையை விரித்துவிட வேறு வழியின்றி பாராளுமன்றத்தை கலைத்து, வர்த்தமானியை வெளியிட்டார். ஆனால் 19வது திருத்த சட்டத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளமையினால் அவரால் பாராளுமன்றத்தினை நினைத்த மாதிரி கலைக்க  முடியாது என்றும் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்யக்கோரியும் வெவ்வேறான 13 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஜனாதிபதியின் அந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவை ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு எதிரான தரப்பினர் பெற்றுக்கொண்டனர்.

ஜனாதிபதி மைத்திரியின் இந்த சர்வாதிகார நடத்தைக்கு,  ஆரம்பம் தொடக்கம் இந்த பிரச்சினை முடிவுக்கு வருமட்டுக்கும் சிறுபான்மை கட்சிகள் ஒரே நிலைப்பாட்டிலேயே இருந்தன. குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட 7 உறுப்பினர்கள் மற்றும் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசின் 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் என 12 பேரும் மைத்திரி செய்தது ஜனநாயக விரோத செயல் எனும் ஒருமித்த நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் இருந்ததோடு அதெற்கெதிராக உச்ச நீதிமன்றத்தில்  தனித்தனியாக வழக்கும் பதிவு செய்தனர். இது மகிந்த தரப்பில் இருக்கின்ற ஒரு சில முஸ்லிம்கள் மத்தியில் பேசுபொருளாகவும், விமர்சனத்திற்குற்பட்டும் காணப்பட்டது.

பேருவளை, தர்கா நகர், அலுத்கம மற்றும் அம்பாறை ,கண்டி, திகன கலவரங்களின்போது நீதிமன்றம் செல்லாத முஸ்லிம் தலைமைகள், ரணிலையும், ஐக்கிய தேசிய கட்சியையும் காப்பாற்றுவதற்காக நீதிமன்றம் சென்றுள்ளார்கள் என்கின்ற பரப்புரைகளை முடுக்கிவிட்டனர். இது ஜனநாயம் பற்றிய தெளிவற்ற மகிந்த ஆதரவாளர்களுக்கு பிரதான பேசுபொருளாக மாறியிருந்தது. கடந்த காலங்களில் இடம்பெற்ற இனவாத சம்பவங்களையும், மைத்திரியின் ஜனநாயக விரோத செயற்பாட்டையும் ஒரே தராசில் வைத்து நிறுத்திப்பார்க்கின்ற அவர்களின் பொது அறிவினை நினைக்கும் போது நம்மை நாமே நொந்து கொள்வதைவிட வேறு பரிகாரம் எதனையும் செய்ய முடியாது.

குறித்த பிரதேசத்தில் வாழ்கின்ற ஒரு குறிப்பிட்ட இனக்குழுமத்தை இலக்காக கொண்டு நடாத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்களாகும். குறித்த பிரதேசத்தில் பாதிக்கப்பட்டவர்களே அவர்களின் பாதிப்புக்கள், இழப்புக்கள் தொடர்பில் முதலில்  அப்பிரதேசத்தில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய வேண்டும். போலிசாரே இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து பின்னர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். இவ்வாறான இனவாத செயற்பாடுகள் எங்கு நடந்தாலும் அதனை யார் மேற்கொண்டாலும் இதுதான் சட்டத்தில் உள்ள நடைமுறை . ஆனால் முஸ்லிம் தலைமைகள் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு பழிசுமத்துகின்ற அரைவேக்காட்டு பிரதகிரிகள் இந்த இனவாத செயற்பாடுகள் தொடர்பில் எந்த அடிப்படையில் நேரடியாக நீதிமன்றுக்கு  செல்லவேண்டும்  என்று  சொல்கின்றார்களோ தெரியவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்த விடயமானது ஜனநாயக விரோத செயற்பாடுமட்டுமன்றி பச்சை துரோகத்தனமும் ஆகும். எவ்விதமான கட்சிப்பின்புலமும் இல்லாத மைத்திரியை பொதுவேட்பாளராக அடையாளப்படுத்தி அவரின் வெற்றிக்காக முன்னின்று உழைத்தவர்களில் ஐக்கிய தேசிய கட்சியினர் பிரதானமானவர்கள். அவ்வாறே சிறுபான்மை முஸ்லிம், தமிழ் மக்களின் வாக்குகளை மைத்திரிக்கு பெற்றுக்கொடுப்பதில்  முஸ்லிம், தமிழ் தலைமைகள் ஓரணியில் நின்று செயற்பட்டன. மிகவும் சவாலான அந்த தேர்தலில் ஒருவேளை முடிவுகள் மாறியிருந்தால் முஸ்லிம், தமிழ் தலைமைகள் தமது உயிரைவிட வேண்டிய நிலை தோன்றியிருக்கலாம். இவ்வாறான ஓர் இக்கட்டில் தம்மோடு இருந்தவர்களை,உதவி செய்தவர்களை கணக்கில் கொள்ளாமல், உதாசீனம் செய்து, பாராளுமன்ற சரத்துகளை புறந்தள்ளிவிட்டு தான் நினைத்தமாதிரி  தான்தோன்றி தனமாக முடிவெடுத்து செயட்பட்டமையானது அவரது நாணயத்தை கேள்விக்குற்படுத்துகின்ற செயலாகும்.

ஆகக்குறைந்தது தன்னை ஜனாதிபதியாக்கிய கட்சிகளின் தலைவர்களை கூப்பிட்டு இதுதொடர்பில் ஆலோசனை நடத்தியிருக்கலாம். அல்லது ரணிலுடன் தொடர்ந்தும் இயங்க முடியாது என்பதனை நியாயபூர்மாக பாராளுமன்றத்தில் விசேட கூட்டமொன்றினை ஏற்பாடு செய்து கூறி மாற்று ஆலோசனைகளை பெற்றிருக்கலாம். இது எதுவும் செய்யாமல் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்பட்டுள்ள விடயத்திலும் பூரண அறிவில்லாமல் யாரும் எதிர்பார்க்காத ஒரு அதிரடி முடிவை ஜனாதிபதி எடுத்ததானது அவரை நம்பி வாக்களித்த 62 இலட்சம் மக்களின் எண்ணங்களையும்,அபிலாசைகளையும் புறக்கணித்து, யாருக்கெதிராக வாக்களித்தார்களோ அந்த பொது எதிரியின் கால்களில் போய் சரணடைகின்ற செயற்பாடாகவே அமைந்தது. ஆக ஜனாதிபதியின் இந்த செயற்பாட்டுக்கு எதிராக எந்த பொலிஸ் நிலையத்தில் சென்றும் முறைப்பாடு செய்ய முடியாது.மாறாக நேராக இதற்கான தீர்வு உச்ச நீதிமன்றத்தை நாடுவதே தவிர வேறு வழியே இல்லை.

ஆகவே பேருவளை,தர்கா நகர், அழுத்கம மற்றும் அம்பாறை ,கண்டி ,திகன இனவாத செயற்பாடுகளையும், ஜனாதிபதியின் ஜனநாயக விரோத செயற்பாடும் சட்டத்தின் பார்வையில் வெவ்வேறான  கோணங்களில் அணுகப்பட வேண்டியவை. சட்டம் தொடர்பில் அடிப்படை அறிவு இல்லாமல் எழுந்தகமான கருத்துக்களை பரப்புவதன்மூலம் வெறும் சலசலப்பினை மட்டுமே உண்டு பண்ண முடியும் மாறாக எதனையும் சாதிக்க முடியாது. பேருவளை,தர்கா நகர், அழுத்கம மற்றும் அம்பாறை ,கண்டி ,திகன இனவாத செயற்பாடுகள் தொடர்பில் அந்தந்த காலகட்டங்களில் சுமார் 150 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் மற்றும் அவற்றுக்கான வழக்குகளை பதிதல் போன்றவற்றுக்கான சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொடுத்தது இந்த முஸ்லிம் தலைமைகள் தான் என்பதை சிலர் வசதிக்காக மறந்து போகின்றார்கள். திகன  கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கலகக்காரர்கள் இன்னும் சிறையில் இருப்பது யாரின் முயற்சியினால் என்பதனையும் இவர்கள் சிந்திக்க வேண்டும்.

ஒட்டுமொத்த இலங்கையினதும் ஜனநாயகத்தை காப்பதில் பங்காளிகளாக முஸ்லிம்,தமிழ் தலைமைகள் இருந்துள்ளன என்பதனை வரலாறு கூறும். மாறாக பின்கதவால் அல்லது குறுக்கு வழியில் பிரதமராக வந்த ஒருவரை பாதுகாக்க இவர்கள் உதவினார்கள் என்கின்ற இழிச்சொல்லியிருந்து இவர்களால் தப்பித்து கொள்ள முடியாமல் போயிருக்கும். ரணில் -மஹிந்த -மைத்திரி இவர்கள் சிறுபான்மையினரின் எல்லா பிரச்சினைகளையும் தீர்த்துவிடப்போவத்தில்லை . அதற்காக சர்வாதிகாரமாக ஜனநாயகத்தினை கொலை செய்து ஒட்டுமொத்த இலங்கை வாழ் மக்களினதும் அடிப்படை உரிமையை கேள்விக்குற்படுத்துவதை எப்போதும் ஆதரிக்க முடியாது. இதைத்தான் சிறுபான்மை சமூக தலைமைகள் ஒற்றுமையாக செய்துள்ளன. இங்கு ரணிலை அல்லது ஐக்கிய தேசிய கட்சியை காப்பாற்றமுனைவது என்பது வெறும் கட்டுக்கதை மாத்திரமே.

ஜனநாயம் பற்றி கவலை கொள்ளாமல் பெரும் தொகையை பெற்றுக்கொண்டு தேவையான அமைச்சுக்களை பெற்றுக்கொண்டு ஜனநாயகத்திற்கு  முரணான செயற்பாட்டுக்கு முட்டுக்கொடுத்து சமூகத்திற்கும் இந்த நாட்டின் இறைமைக்கும் பெரும் துரோகத்தனத்தை செய்வதில் இருந்தும் சிறுபான்மை சமூகத்தின் எதிர்காலம் குறித்த தீர்க்கதரிசனமான பார்வையின் மூலம் முஸ்லிம் தலைமைகள் தம்மையும் தம் சமூகத்தையும் காத்துள்ளன என்பதுதான் இதன் சாராம்சம்.

அரசியல் பெற்றுக்கொள்வது மாத்திரமல்ல கற்றுக்கொள்வதும் தான். மைத்திரி மூலம் இலங்கை மிகப்பெரிய பாடமொன்றினை கற்றுக்கொண்டது என்பதனை யாரவது மறுக்கமுடியுமா?
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.