இலக்கற்று பயணிக்கும் முஸ்லிம் கட்சிகள்

0 807
  • எஸ்.றிபான்

உலகத்தில் எந்தவொரு நாடும் எதிர் கொள்ளாததொரு அரசியல் பிரச்சினையில் இலங்கை உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒக்டோபர் 26ஆம் திகதி எடுத்த முடிவுதான் இந்நிலைக்கு காரணமாகும். இன்று நாட்டில் அரசாங்கமொன்றில்லை. இந்த அரசியல் நெருடிக்கையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் ஒரு அறைக்குள் அடைத்து விட வேண்டுமென்று ஜே.பி.வியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பி.பி.சி சிங்கள சேவை சந்தேசயவுக்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும், தெரிவித்துள்ளதாவது, ‘ஒன்றில் அவர்கள் ஒருவரை மற்றவர் கொலை செய்யட்டும். அல்லது ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக் கொள்ளட்டும். எவ்வாறாயினும் இரண்டு தனிநபர்களின் தனிப்பட்ட பிரச்சினைக்காக முழு நாடுமே பணயம் வைக்கப்படக் கூடாது. தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு, முதலில் ஜனாதிபதி யாருக்குப் பெரும்பான்மை இருக்கிறதோ, அவர்களிடம் அரசாங்கத்தைக் கொடுக்க வேண்டும். ஒரு சரியான அரசாங்கம் இல்லாமல், நாட்டை நீண்ட நாட்களுக்கு ஆட்சி செய்ய முடியாது. அதற்கென சில பணிகள் உள்ளன. முதல் நடவடிக்கையாக, புதிய அரசாங்கத்தை கொண்டு வந்து, அரசியலமைப்பு சதியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு சிறப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும். புதிய அரசாங்கம் நிறைவேற்று அதிகார ஆட்சி முறையை ஒழிப்பதுடன், அதற்குப் பின்னர் பொதுத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்தகையதொரு அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தாம் இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். நாட்டில் என்ன அரசியல் நெருக்கடி ஏற்பட்டாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டுமென்பதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முனைப்பாக இருந்து கொண்டிருக்கின்றது. அக்கட்சியின் நடவடிக்கைகள் குறித்து பலத்த விமர்சனங்கள் உள்ள போதிலும் ஒரு நெகிழ்ச்சித் தன்மையுடன் தமது இலக்கை அடைந்து கொள்வதற்குரிய முயற்சியில் அக்கட்சி இருக்கின்றதென்பது தெளிவானதாகும்.

ரணிலுக்கு ஆதரவு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒரு போதும் ஆட்சியை அமைப்பதற்கு ஆதரவு வழங்கியதில்லை. எதிர்க் கட்சி அரசியல் மூலமாக தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கே அக்கட்சி போராடிக் கொண்டிருக்கின்றது. இத்தகைய அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியான இன்றைய சூழலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணைக்கு தமிழ்த் தேசிய கூட்மைப்பு ஆதரவு அளித்தமையால்தான் குறிப்பிட்ட பிரேரணை 117 வாக்குகளை பாராளுமன்றத்தில் பெறக் கூடியதாக இருந்தது.

இந்த ஆதரவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம் கட்சிகளைப் போன்று நிபந்தனையில்லாது வழங்கவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு, புதிய அரசியல் யாப்பு ஆகியவற்றிக்கு வாய்மொழி மூல உத்தரவாதத்தைப் பெற்றுக் கொண்டே ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்துள்ளது. இதே வேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எக்காரணம் கொண்டும் மஹிந்தராஜபக்ஷ பிரதம மந்திரியாக வந்து விடக் கூடாதென்பதில் இறுக்கமான முடிவினைக் கொண்டுள்ளது. மஹிந்தராஜபக்ஷ பிரதமராக வந்தால் தமிழர்களின் குறைந்த பட்ச அபிலாசைகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படும் என்பதே அக்கட்சியின் முடிவாகும்.

முஹிந்தராஜபக்ஷவை புதிய பிரதமராக நியமித்தவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு, கிழக்கு இணைப்புக்கும், சமஸ்டிக்கும் நான் ஒரு போதும் அனுமதிக்கமாட்டேன் என்று தெரிவித்தமை. மஹிந்தரப்பினர் பிரபாகரன் ஆயுதத்தினால் அடைந்து கொள்ள முடியாததை சுமந்திரன் பேனா மூலமாக அடைந்து கொள்ளவுள்ளார். இதற்கு ரணில் விக்கிரமசிங்க துணை போய் உள்ளார் என்று பிரச்சாரங்களும் செய்து கொண்டிருக்கின்றார்கள். பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டதன் பின்னர் யுத்த காலத்தில் வழங்கிய ஒத்துழைப்பைப் போன்று தமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று பெரும்பான்மையின மக்களிடம் மஹிந்தராஜபக்ஷ கேட்டுக் கொண்டமை. மேலும், தமிழ் மக்கள் மத்தியில் மஹிந்தராஜபக்ஷவுக்கு இருக்கின்ற எதிர்ப்புணர்வு போன்றவைகளின் காரணமாக மஹிந்தராஜபக்ஷவை ஆதரிக்க முடியாமலும், ரணில் விக்கிரமசிங்கவை நிபந்தனையுடன் ஆதரிக்க வேண்டியதொரு நிலையிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இருந்து கொண்டிருக்கின்றது.

முஸ்லிம் கட்சிகள்

முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்துக் கொண்டிருக்கின்றன. இக்கட்சிகள் தங்களுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே எத்தகைய விசேட உறவுகளும் கிடையாதென்றும், ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கே ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துக் கொண்டாலும் எந்தவொரு நிபந்தனையும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே வேளை, ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் நிபந்தனைகளை விதிப்பது என்பது அரசியல் நாகரிகமாக பார்க்கவும் முடியாது. இக்கட்சிகள் எற்கனவே ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நிபந்தனைளற்ற வகையில் ஆட்சியை அமைத்து அமைச்சர் பதவிகளையும் பெற்றிருந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென்று எடுத்துக் கொண்ட முடிவுக்கு எதிராக போராடுவது இக்கட்சிகளின் கடமையுமாகும். ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும்பான்மை உள்ள போதிலும் அவரை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துக் கொண்டிருக்கின்றமை நாட்டின் எதிர் கால அரயசிலுக்கும், ஜனநாயகத்திற்கும் பிழையான வழிகாட்டுதலாக அமைந்துவிடும் என்ற ஆபத்தை இல்லாமல் செய்வது சிறுபான்மையினரான முஸ்லிம்களின் கடமையுமாகும். அந்த வகையில் முஸ்லிம் கட்சிகள் நிபந்தனையற்ற வகையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருப்பது கூட ஒரு வகையில் முஸ்லிம் சமூகத்திற்குரிய எதிர் காலத்தை பாதுகாப்பதாகவும் இருக்கின்றது.

இதே வேளை, தேசிய காங்கிரஸும் இன்னும் ஒரு  சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் மஹிந்தராஜபக்ஷவை பிரதமராக்க வேண்டும். பொதுத் தேர்தல் நடத்த வேண்டுமென்ற கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், இவர்கள் கூட மஹிந்தராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு எந்தவொரு நிபந்தனையையும் விதிக்கவில்லை. இவர்களும் ஜனநாயகத்திற்காகவே போராடிக் கொண்டிருப்பதாக தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

முஸ்லிம் கட்சிகளை எடுத்துக் கொண்டால் உள்ளக ஜனநாயகம் மிகவும் மோசமாகவே இருக்கின்றன. அது மட்டுமன்றி கூட்டுப் பொறுப்பு என்பதும் இல்லாதுள்ளன. இத்தகையதொரு நிலையில்தான் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் முஸ்லிம் கட்சிகள் ஜனநாயகத்திற்காக போராடிக் கொண்டிருப்பதாக தெரிவித்துக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பொதுவாக முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் பேரினவாத கட்சிகளுடன் இணைந்து செய்றபடும் போதும், ஆட்சி அமைக்கும் போதும் எந்தவொரு நிபந்தனையையும் விதிக்காமலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் சமூகம் பல தேவைகளையும், பிரச்சினைகளையும் கொண்டதாக இருக்கின்ற போதிலும் அவற்றையிட்டு முஸ்லிம் கட்சிகள் கவலை கொள்வதில்லை. அமைச்சர் பதவிகளிலும், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளிலும் காட்டும் நாட்டம் முஸ்லிம் சமூகத்தின் மீது காட்டுவதில்லை. அத்தகையதொரு நிலைப்பாட்டையே முஸ்லிம் கட்சிகள் இன்றைய அரசியல் நெருக்கடியிலும் கையாண்டு கொண்டிருக்கின்றது. ஆதலால், எல்லா முஸ்லிம் கட்சிகளும் சமூகத்தின் இலக்கை மறந்தே செயற்பட்டுக் கொண்டிருக்கிறன. முஸ்லிம் சமூகம் தமது எதிர்காலம் சுபிட்சமாக இருக்க வேண்டுமென்று விரும்புகின்றது. ஆனால், அதற்குரிய திசையில் எந்தவொரு முஸ்லிம் கட்சியுமில்லை என்பதனை உணர்வதற்கும் முடியாத நிலையில் இருக்கின்றது. ஆதலால், முஸ்லிம் சமூகத்தின் இலக்கு கைவிடப்பட்ட ஒன்றாகவே இருக்கின்றது.

முஸ்லிம் காங்கிரஸ்

இவ்வாறு முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடுகள் இருக்கின்ற நிலையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸும், அதன் தலைவர் ரவூப் ஹக்கீமும் இன்றைய நிலையில் சமூகம் சார்ந்த எதனையும் சாதித்துக் கொள்ளாது அவரது தனிப்பட்ட அரசியல் நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்று முஸ்லிம் காங்கிரஸை விட்டுப் பிரிந்தவர்களும், முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிரான அரசியலைச் செய்து கொண்டிருப்பவர்களும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இது உண்மையும் கூட, என்றாலும் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துக் கொண்டிருப்பவர்கள் அதற்கு தகுதியுடையவர்கள்தானா என்று பார்க்க வேண்டியுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸை விட்டுப் பிரிந்தவர்கள் யாரும் முஸ்லிம் சமூகத்தின் தேவைக்காக பிரியவில்லை. ரவூப் ஹக்கீம் கட்சிக்குள் ஒரு சர்வதிகாரி போன்று செயற்படுவதற்கும், சமூகம் சார்ந்த விவகாரங்களில் அக்கறையில்லாது செயற்பட்டுக் கொண்டிருப்பதற்கும் இவர்களும் காரணமென்பதற்கு  அவர்களின் மனட்சாட்சிகள் போதுமானதாகும். ரவூப் ஹக்கீம் அவர்களின் சொற்படி நடந்து கொண்டிருந்த காலமெல்லாம் முஸ்லிம் காங்கிரஸ் பிழையான பாதையிலேயே பயணித்துக் கொண்ருந்தது. இன்றும் அவ்வாறே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால், அவர்கள் அப்போதெல்லாம் ரவூப் ஹக்கீமை சமூக விரோதியாக காட்டாது, முஸ்லிம் சமூகத்தின் உத்தம புத்திரன் என்றே காட்டிக் கொண்டார்கள். அவர்கள் ரவூப் ஹக்கீமை விமர்சனம் செய்தவர்களை திட்டிய சம்பவங்களும் உள்ளன. எப்போது ரவூப் ஹக்கீம் அவர்களின் சொற்களை புறக்கணித்துச் செயற்படத் தொடங்கினாரோ, எப்போது அவர்களின் பதவி ஆசைக்கு தீனி போட மறுத்தாரோ அன்று முதல் ரவூப் ஹக்கீமை விமர்சனம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். ஆகவே, முஸ்லிம் அரசியல்வாதிகள் உண்மை பேசுகின்றவர்களாக இல்லாது சந்தர்ப்பவாத அரசியல் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

இலக்குகள்

இவர்களின் சந்தர்ப்பவாத அரசியலினால் முஸ்லிம் சமூகத்தின் இலக்குகள் கைவிடப்பட்டுள்ளன. மர்ஹும் அஸ்ரப் முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்த காலத்திலும், அதன் பின்னரும் நாட்டில் இனவாத மோதல்கள் உச்சத்தில் இருந்தன. இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டன. வடக்கும், கிழக்கும் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முஸ்லிம்களுக்கும் அரசியல் தீர்வில் விமோசனம் கிடைக்க வேண்டும். வடக்கும், கிழக்கும் நிரந்தரமாக இணைவதாக இருந்தாலும், பிரிவதாக இருந்தாலும் முஸ்லிம் காங்கிரஸ் நிபந்தனையுடன் ஆதரிக்கும் என்றெல்லாம் பல விடயங்களை அவர் சிங்கள பேரினவதத்திற்கும், தமிழ்ப் பேரினவாதத்திற்கும் சொன்னார். அவர் அன்று சொன்னது முஸ்லிம்களின் அரசியல் இலக்குகளாகக் கொள்ளப்பட்டன.

ஆனால், இன்று இந்த இலக்குகளை எதனையும் எந்தவொரு முஸ்லிம் கட்சியும் தமது இலக்குகளாகக் கொண்டு இயங்கவில்லை. தேர்தல் வெற்றியையும், அமைச்சர் பதவிகளையும், கொந்தராத்துக்களையும், வீதிகளை அமைத்தல் போன்ற அபிவிருத்திகளையும் இலக்கு வைத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் முஸ்லிம்களின் பிரச்சினைகள் பிச்சைக்காரனின் புண் போன்றுள்ளது. இந்தப் புண்ணின் மேல் கட்டப்பட்டுள்ள சீலை தேர்தல் காலத்தில் மாத்திரம் அவிழ்த்து பார்க்கும் நிலையாக இருக்கின்றது.

அரசியலாக இருந்தாலும், வேறு துறைகளாக இருந்தாலும் ஒவ்வொரு சமூகத்திற்கும் அதில் இலக்கு இருக்க வேண்டும். இலக்குகளற்ற சமூகம் ஒரு போதும் தமது எதிர் காலத்தை சுபிட்சமாக்கிக் கொள்ள முடியாது. ஒரு சமூகத்தின் இலக்குகளை தீர்மானிக்கின்றவர்களாக அச்சுமூகத்தில் உள்ள துறைசார்ந்தவர்களே இருக்கின்றார்கள். ஆனால், துரதிஸ்டம் என்னவென்றால், முஸ்லிம் சமூகத்தில் உள்ள துறைசார்ந்தவர்கள் தங்களின் துறைகளில் சமூகத்தை வழி நடத்தாது வெறுமனமே பார்வையாளர்களாக இருந்து கொண்டிருப்பதுதான்.

இன்று முஸ்லிம் சமூகத்தில் ஆண்களின் கல்வித் தரம் குறைவடைந்து கொண்டு செல்லுகின்றது. இதில் யாரும் அக்கறை கொள்வதில்லை. முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் பெரும்பாலும் அரசியல்வாதிகளின் ஆளுகைளுக்கு உட்பட்டதாகவே இருக்கின்றன. இதனால் பாடசாலைகள் அரசியல் செயயும் தளமாகக் காணப்படுகின்றன. அத்தோடு, முஸ்லிம் பாடசாலைகளில் கட்டிடத் தேவைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. இதே போன்று பெரும்பாலான பள்ளிவாசல்களின் நிர்வாகங்களும் அரசியல்வாதிகளின் ஆளுகைக்குரியதாகவே இருக்கின்றன. மேலும், சில சமூக அமைப்புக்கள் கூட அரசியல்வாதிகளின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

இவ்விதமாக முஸ்லிம் அரசியல்வாதிகளும், புத்திஜீவிகளும், மதத் தலைவர்களும், பள்ளிவாசல்களின் நிர்வாகிகளும் செயற்பட்டுக் கொண்டிருப்பதனாலும், முஸ்லிம் சமூகத்தின் மிகப் பெரிய பொறுப்பை ஏற்று அதற்கான ஒப்புதல்களையும் பெற்றுக் கொண்டு, தாம் ஏற்றுக் கொண்ட கடமைகளை சரியாகச் செய்வோம் என்று முஸ்லிம்களிடம் வாக்குறுதிகளை வழங்கியுள்ள முஸ்லிம் அரசியல்வாதிளும், கட்சிகளும் செயற்பட்டுக் கொண்டிருப்பதனால் முஸ்லிம் சமூகத்தின் இலக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அவை தேர்தல் காலங்களில் மாத்திரம் அலசப்படும் ஒன்றாக இருந்து கொண்டிருக்கின்றன. ஒரு சமூகத்தின் இலக்குகள் காலத்திற்கு காலம் பேசப்படும் ஒன்றாக இருக்க முடியாது. ஒவ்வொரு நிமிடமும் இலக்குகளைப் பற்றிய சிந்தனையும், செயற்பாடுகளுமாக இருக்க வேண்டும்.

முஸ்லிம் சமூகம் தமது இலக்குகளை நோக்கிப் பயணிக்க வேண்டும். சமூகத்தில் காணப்படும் சகல விதமான வேறுபாடுகளும் கலையப்பட வேண்டும். எல்லோரும் சமூகத்தின் தேவைக்காக ஒற்றுமைப்பட வேண்டும். மார்க்க ரீதியாக பல பிரிவுகள். அரசியல் ரீதியாக பல கட்சிகள், பொருளாதாரம் தொடர்பில் எந்த அமைப்புக்களும் முஸ்லிம்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. இவ்வாறுள்ள நிலையை ஒற்றுமைப்படுத்த வேண்டுமாயின் விட்டுக் கொடுப்புக்கள் அவசியமாகும். ஆனால், விட்டுக் கொடுப்புக்கள் இல்லாத நிலையே தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையை மாற்றியமைக்கக் கூடிய சூழலும் தெரியவில்லை.

ஆதலால், முஸ்லிம்கள் தங்களின் இலக்குகளை அடைந்து கொள்ள வேண்டுமாயின் முதலில் சமூகம் விளிப்படைய வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் இன்றைய அவசர தேவை அரசியல் விளிப்பாகும். முஸ்லிம் சமூகம் இன்று இலக்குகளை மறந்து பதவிகளுக்காக ஓடிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளினதும், அரசியல் கட்சிகளினதும் பின்னால் அணி திரண்டுள்ளார்கள். இந்நிலை மாற வேண்டும். சமூகத்திற்காக ஓரளவிற்கு செயற்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் கட்சியின் பின்னால் அணி திரள வேண்டும். அக்கட்சியினை இலக்குளை நோக்கி பயணிக்கச் செய்வதற்குரிய அழுத்தங்களை கொடுக்க வேண்டும். இதற்கு மாற்றமாக பாதைகளை போட்டார், தொலைபேசி அழைப்புக்கு பேசிக் கொள்கின்றார், தொழில் வாய்ப்பைத் தந்தார் அல்லது தருவார் என்று தனி மனிதர்களை அடையாளப்படுத்தி சமூகத்தின் அரசியலை சூனியமாக்கிக் கொண்டிருக்கும் சமூகமாக முஸ்லிம்கள் உள்ளார்கள்.

அரசியல் கட்சிகள் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும். அப்போதுதான் சமூகத்தின் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். முஸ்லிம்களின் அரசியல் பலத்தை நிரூபிக்கலாமென்று தேர்தல் காலங்களில் கூறப்படுவது வழக்கமாகும். அத்தகையதொரு கதை தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியிலும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமினால் தெரிவிக்கப்படுகின்றன. முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமை என்பது சமூகத்தின் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக இருக்க வேண்டும். மாறாக தேர்தல் வெற்றிக்காக மாத்திரம் ஒற்றுமைப்படுதல் முடியாது. தற்போது பேசப்படும் ஒற்றுமை கூட தேர்தல் வெற்றிக்காக மாத்திரமேயாகும். தேர்தல் வெற்றிக்காக சமூகத்தின் இலக்குகளைப் பற்றி பேசிக் கொள்வார்கள் தேர்தல் முடிந்ததும். இலக்குகள் யாவும் கிடப்பில் போடப்படும். இதனை ஒவ்வொரு அரசியல் கட்சியும் செய்து கொண்டிருக்கின்றன. முஸ்லிம் சமூகத்தின் அரசியல் இலக்கை தீர்மானித்த முஸ்லிம் காங்கிரஸ் மர்ஹும் அஸ்ரப்பின் மரணத்தோடு அத்தனை இலக்குளையும் கிடப்பில் போட்டுவிட்டு தனியான பாதையில் அரசியல் செய்து கொண்டது. இதற்கு தனியே ரவூப் ஹக்கீம் மீது மாத்திரம் குற்றம் சுமத்த முடியாது. அக்கட்சியின் உயர்பீடத்தில் அன்று முதல் இன்று வரை இருக்கின்றவர்கள், விலகியவர்கள் அனைவரும் பொறுப்பாகும்.
-vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.