முஸ்லிம்களுக்கான தீர்வு பொதியை தயார் செய்வது யார்?

0 355

நாட்டின் தேசியப் பிரச்­சி­னைக்கு 75 ஆவது சுதந்­திர தினத்­திற்கு முன்னர் தீர்வு காணப்­படும் என அண்­மையில் வரவு செலவுத் திட்­டத்தை முன்­வைத்து உரை­யாற்­றிய ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க குறிப்­பிட்­டி­ருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் கட்­சிகள் உள்­ள­டங்­க­லாக நாட்டின் பிர­தான அர­சியல் கட்­சி­க­ளையும் அழைத்து இது தொடர்பில் ஜனா­தி­பதி கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தி­யி­ருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் கட்­சி­களும் தமக்­கி­டையே பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி வரு­கின்­றன. பல வரு­டங்­களின் பின்னர் ஊட­கங்­க­ளிலும் தேசியப் பிரச்­சி­னைக்கு தீர்வு வழங்­கு­வது குறித்த கதை­யா­டல்கள் முக்­கி­யத்­துவம் பெறத்துவங்­கி­யுள்­ளன.

மூன்று தசாப்­தங்­க­ளுக்கு மேலாக நாட்டில் நீடிக்கும் இந்த இனப்­பி­ரச்­சினை விவ­கா­ரத்தை பிச்­சைக்­கா­ரனின் புண் போல ஆட்­சிக்கு வரும் அர­சியல் தரப்­புகள் மீண்டும் மீண்டும் கிள­றியே வந்­துள்­ளன. அந்தப் புண்­ணுக்கு நிரந்­த­ர­மாக மருந்து செய்­வதை விடுத்து, தேர்­தல்­களில் வாக்கு வேட்­டையில் ஈடு­ப­டவும் மக்­களைத் தூண்டி உணர்ச்சி அர­சியல் செய்­ய­வுமே இதனைப் பயன்­ப­டுத்தி வந்­துள்­னள.

இந் நிலை­யில்தான், தான் இப் பிரச்­சி­னையை 75 ஆவது சுதந்­திர தினத்தின் பின்­னரும் விட்­டு­வைக்கப் போவ­தில்லை என ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க கூறி­யி­ருக்­கிறார். இக் கால எல்­லைக்கு இன்னும் மூன்று வாரங்­களே எஞ்­சி­யி­ருக்­கின்ற நிலையில், அதனை எவ்­வாறு சாத்­தி­ய­மாக்கப் போகிறார் என்­பதைப் பொறுத்­தி­ருந்­துதான் பார்க்க வேண்­டி­யுள்­ளது.

இத­னி­டையே, இத் தீர்வு முயற்­சிகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்ள ஜனா­தி­பதி ஊடகப் பிரிவு, வடக்­கி­லுள்ள மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களை வழங்­கி­ய­வு­ட­னேயே, பெருந்­தோட்ட மற்றும் முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் துரித நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தீர்­மா­னித்­துள்­ள­தாக குறிப்­பிட்­டுள்­ளது.

பெருந்­தோட்ட மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­பட்­டதன் பின்னர், நாட்­டி­லுள்ள முஸ்லிம் மக்கள் எதிர்­கொண்­டுள்ள பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்­ள­தா­கவும் ஜனா­தி­பதி அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது.

பெருந்­தோட்ட மற்றும் முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­பதில் அமைச்­சர்கள் மற்றும் ஆளும், எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உள்­ளிட்ட அனை­வ­ரையும் ஈடு­ப­டுத்த ஜனா­தி­பதி உத்­தே­சித்­துள்­ள­தா­கவும் அந்த அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இது­வரை தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­படும் என்றே ஜனா­தி­பதி கூறி வந்த நிலையில், தற்­போது முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு வழங்­கப்­படும் என பிரத்­தி­யே­க­மாகக் குறிப்­பிட்­டி­ருக்­கின்­றமை வர­வேற்­கத்­தக்­க­தாகும். அந்த வகையில் ஜனா­தி­ப­தியின் இந்த வாக்­கு­று­தியை நடை­மு­றைச் ­சாத்­தி­ய­மாக்­கு­வ­தற்­கான அழுத்­தங்­களை வழங்க வேண்­டி­யது முஸ்லிம் அர­சியல் தரப்­பு­களின் கடப்­பா­டாகும்.
அதற்கு முன்­ன­ராக, முஸ்லிம் மக்கள் கடந்த காலத்தில் எதிர்­நோக்­கிய, சம­கா­லத்தில் எதிர்­நோக்­கு­கின்ற, எதிர்­கா­லத்தில் முகங்­கொ­டுக்­கலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற பிரச்­சி­னைகள் தொடர்பில் தெளி­வான ஆவ­ணப்­ப­டுத்­தல்கள் நம்­மிடம் இருக்­கின்­றதா என்ற கேள்­விக்கு விடை காணப்­பட வேண்டும்.

பேச்­சு­வார்த்­தைக்கு அழைத்து, முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் என்ன என்று கேட்ட பின்னர் அவற்றை ஆவ­ணப்­ப­டுத்த சிர­மப்­ப­டு­வதை விட, இப்­போதே முஸ்லிம் அர­சியல், சிவில் மற்றும் மார்க்க தரப்­புகள் ஒன்­றி­ணைந்து இதற்­கான ஆவணம் ஒன்றைத் தயா­ரித்து தயா­ரா­க­வி­ருப்­பதே புத்­தி­சா­லித்­த­ன­மா­ன­தாகும்.

வடக்கு கிழக்கில் முஸ்­லிம்கள் எதிர்­நோக்­கின்ற காணி மற்றும் மீள்­கு­டி­யேற்ற பிரச்­சி­னைகள், தொல்­பொ­ருளின் பெயரால் இடம்­பெறும் ஆக்­கி­ர­மிப்­புகள், யுத்த காலத்தில் இடம்­பெற்ற கடத்­தல்கள், காணா­மல்­போ­தல்கள், படு­கொ­லைகள் என்­பன முறை­யாக தொகுக்­கப்­பட வேண்டும். அதே­போன்று யுத்தம் முடி­வுக்கு வந்த பின்னர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கி­ளம்­பிய இன­வா­தத்­தினால் முஸ்லிம் சமூ­கத்­திற்கு ஏற்­பட்ட இழப்­பு­க­ளுக்கு நஷ்­ட­யீடு வழங்­குதல், வன்­மு­றை­க­ளுக்குக் கார­ண­மா­ன­வர்­களைத் தண்­டித்தல் போன்ற கோரிக்­கைகள் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட வேண்டும். மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் அநி­யா­ய­மாக கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதியும் நஷ்­ட­யீடும் வழங்­கப்­பட வேண்டும், எதிர்­கா­லத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத பிர­சா­ரங்கள், வன்­மு­றைகள் தோற்றம் பெறா­த­வாறு பாது­காப்­ப­தற்­கான பொறி­முறை ஒன்­றுக்கு அர­சாங்கம் உத்­த­ர­வாதம் வழங்க வேண்டும், முஸ்லிம் தனியார் சட்­டத்தை இல்­லா­தொ­ழிக்­காது அதனை நடைமுறைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் முஸ்லிம்களின் சம்மதத்துடன் திருத்தம் செய்ய வேண்டும். என்பன போன்ற கோரிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

எனவேதான் முஸ்லிம் சிவில் மற்றும் அரசியல் தரப்புகள் தமது வேறுபாடுகளை மறந்து முஸ்லிம் சமூகத்தின் சார்பில் தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் முன்வைக்கக் கூடிய தீர்வுப் பொதி ஒன்றை தயாரிக்க முன்வர வேண்டும். குறிப்பாக அரபு நாடுகள் மூலமாக இதற்கான அழுத்தத்தை அரசுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.