முஸ்லிம் தலைவர்களும் சமூகமும்

0 413

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

இலங்கை முஸ்­லிம்­களின் இன்­றைய தலை­மைத்­து­வத்­தைப்­பற்­றியும் முஸ்லிம் சமூ­கத்­தைப்­பற்­றியும் அவை இரண்­டுக்­கு­முள்ள உற­வு­பற்­றியும் இதற்கு முன்­னரும் இப்­பத்­தி­ரி­கையிற் சில கட்­டு­ரைகள் வெளி­வந்­துள்­ளன. எனினும் இன்று நாடு போகின்ற போக்­கி­னையும் அதனால் ஏற்­ப­டப்­போகும் ஒரு தவிர்க்­க­மு­டி­யாத மாற்­றத்தின் தேவை­பற்­றியும் அது சம்­பந்­த­மான முஸ்லிம் சமூ­கத்­தி­னதும் அதன் தலை­மைத்­து­வத்­தி­னதும் நிலைப்­பாடு பற்­றியும் எழுந்த ஓர் எண்­ணக்­க­ருத்­தினை வாச­கர்­க­ளுடன் இக்­கட்­டுரை பகிர்ந்­து­கொள்ள விரும்­பு­கி­றது.

தலை­வர்கள் இரு­வகை
ஒரு சமூ­கத்தின் தலை­வர்­களை இரண்டு வகை­யி­ன­ராகப் பிரிக்­கலாம். ஒரு வகை­யினர் சமூ­கத்தின் பொது­ஜன அபிப்­பி­ராயம் எதை விரும்­பு­கி­றதோ அதையே எவ்­வ­ழி­யி­லேனும் நிறை­வேற்றிக் கொடுத்து சமூ­கத்தின் பாராட்­டுக்­களைப் பெறு­ப­வர்கள். அடுத்த வகை­யினர் சமூ­கத்தின் எதிர்­கால நிலை­யென்ன, அதற்­கான அதன் தேவை­க­ளென்ன என்­பதை உணர்ந்து அவற்றை அடை­வ­தற்­காக இன்­றைய நிலையில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தி எதிர்­கால முன்­னேற்­றத்­துக்கு வழி­வ­குத்துக் பொடுப்­பப்­ப­வர்கள். இவ்­வா­றான தலை­வர்­க­ளுக்கு சென்ற கால வர­லாற்றைச் சரி­யாகப் புரிந்­து­கொண்டு நிகழ்­காலச் சம்­ப­வங்­களை அவ­தா­னித்து வருங்­காலம் பற்­றிய தெளி­வான சிந்­தனை அவ­சியம். கம்­பனின் இரா­மா­ய­ணத்­திலே தச­ர­தனின் அமைச்­சர்­களைப்பற்றி அவன் வரு­ணிக்­கையில் “மும்­மையும் உண­ர­வல்லார்” என்று கூறி­யது நினை­வுக்கு வரு­கி­றது. இவர்­களை பொது ஜனங்கள் பாராட்­டா­விட்­டாலும் வர­லாறு நினை­வூட்டிக் கொண்டே இருக்கும்.

உலக முஸ்­லிம்­களின் நவீ­ன­கால வர­லாற்றில் மூன்று தலை­வர்­களை இரண்­டா­வது வகை­யி­ன­ருக்கு எடுத்­துக்­காட்­டாகக் கொள்­ளலாம். துருக்­கியின் தந்தை முஸ்­தபா கமால், எகிப்தின் அப்துல் நாசர், மலே­சி­யாவின் முகம்­மது மஹாதிர் ஆகி­யோரே அம்­மூ­வ­ரு­மாவார். உது­மா­னி­யரின் இஸ்­லா­மிய கிலா­பத்தின் வர­லாற்­றையும் அதனால் துருக்கி அடைந்த இழப்­புக்­க­ளையும் உணர்ந்த கமால் அத­னையும் அது­வ­ளர்த்த அர­பு­மொ­ழி­யையும் தூக்­கி­வீசி எறிந்­து­விட்டு Nசியம் என்ற அர­சியல் கோட்­பாட்டின் அடிப்­ப­டையில் துருக்­கி­மொ­ழியை அரச மொழி­யாக்கி ஐரோப்­பிய அர­சியல் விழு­மி­யங்­களைத் தழுவி நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பி­யவர் கமால் அத்­தாதுர்க். அவரை இன்று வர­லாறு புகழ்­கின்­றது.

நெப்­போ­லி­யனின் படை­களால் முற்­று­கை­யி­டப்­பட்டு பின்னர் பிரித்­தா­னி­யரின் குடி­யேற்ற நாடாக மாறி அவர்­களின் கைப்­பொம்­மை­யாக ஆடிய மன்னர் பாருக்கின் ஆட்­சியில் இன்­றைய இலங்­கையைப் போன்று கட­னா­ளி­யாக மாறிக்­கி­டந்த எகிப்தை அரபு மக்­களின் எழுச்சிக் கீதம்­பாடி ஒரு பல­மான நாடாக மாற்றி உலக அரங்கில் அழி­யாத்­த­டம்­ப­தித்த ஜமால் அப்துல் நாசரை வர­லாறு மறுக்­குமா? அவ­ரைப்­போன்றே வள­முள்ள சுதந்­திர நாடாக இருந்தும் இஸ்லாம் என்ற போர்­வைக்குள் வறு­மையின் அடை­யா­ள­மாகக் கிடந்த மலே­சிய மலாய் மக்­களை நவீன வளர்ச்­சிப்­பா­தையில் திருப்ப நினைத்து அவர்­களின் சிந்­த­னை­யையே மாற்­றி­ய­மைத்த மகாதிர் முகம்­மது அடுத்த ஓரு சிறந்த எடுத்­துக்­காட்டு. ஆனாலும் இவர்­க­ளெல்­லா­ருமே முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் நாடு­களின் தலை­வர்கன். ஏன்­றாலும் முக்­கா­லத்­தையும் உணரும் திறன் அவர்­க­ளுக்கு மட்­டும்தான் சொந்தம் என்று நினைப்­பது தவறு.

இலங்­கையில் இருவர்
முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யாக வாழும் இலங்­கை­யிலும் அவ்­வா­றான தலை­வர்கள் உரு­வா­கித்தான் இருக்­கி­றார்கள், இன்னும் உரு­வா­க­வேண்டும் என்­ப­தைத்தான் இக்­கட்­டுரை தொடர்ந்து அலசப் போகின்­றது.

பத்­தொன்­பதாம் நூற்­றாண்டின் இறு­தி­யிலே ஒருவர், இரு­பதாம் நூற்­றாண்டின் மூன்றாம் கால்­வா­சியில் மற்­றொ­ருவர் என்­ற­வாறு முக்­கா­லமும் உணர்ந்து வழி­காட்­டிய இரு தலை­வர்­களை இலங்கை முஸ்­லிம்கள் பெற்­றி­ருந்­தனர். ஒருவர் அறிஞர் சித்தி லெப்பை, மற்­றவர் பதி­யுத்தின் மஹ்மூத் ஆவர். முத­லா­மவர் இல்­லை­யென்றால் முஸ்­லிம்­களின் கல்வி ஆலிம்­களை மட்­டும்தான் உரு­வாக்கிக் கொண்­டி­ருந்­தி­ருக்கும். கொழும்பு சாஹி­ராக்­கல்­லூ­ரியே உரு­வாகி இருக்­காது. அக்­கல்­லூரி இல்­லை­யென்றால் இக்­கட்­டு­ரை­யா­ளனே உரு­வாகி இருக்­கவும் மாட்டான். அதே­போன்று இரண்­டா­மவர் இல்­லை­யென்றால் இன்­றைய உயர் உத்­தி­யோ­கத்­தோர்­களும் புத்­தி­ஜீ­விகள் பரம்­பரை ஒன்றும் முஸ்­லிம்­க­ளி­டையே வளர்ந்­தி­ருக்­காது.

இந்த இரு­வருள் இரண்­டா­மவர் எவ்­வாறு முஸ்லிம் சமூ­கத்தின் அன்­றைய நிலையைச் சரி­யாகப் புரிந்­து­கொண்டு அந்த நிலையே தொட­ரு­மானால் எதிர்­கா­லத்தில் முஸ்லிம் சமூகம் கையேந்திப் பிச்­சை­யெ­டுக்கும் ஒரு சமூ­க­மா­கவே மாறும் என்­பதை உணர்ந்து அவர் எடுத்த சில துணி­க­ர­மான நட­வ­டிக்­கைகள் பல­வற்றை இக்­கட்­டு­ரை­யாளன் நேரிலே கண்­ட­றிந்­தவன். அது மட்­டு­மல்ல. அதைப்­பற்றி அவர் என்­னுடன் நேரிலே கலந்­து­ரை­யா­டி­ய­தையும் இங்கே நினை­வு­கூர வேண்­டி­யுள்­ளது. அவ்­வாறு அவர் எடுத்த ஒரு நட­வ­டிக்­கை­யை­மட்டும் இங்கே உதா­ர­ணத்­துக்­காக விளக்­குவோம்.

அது இலங்கையின் இட­து­சா­ரிகள் சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்து கூட்­டணி அர­சாங்­கத்தை அமைத்த காலம். அந்த அர­சாங்­கத்தில் பதி­யுத்தீன் மஹ்மூத் கல்வி அமைச்­ச­ராகக் கட­மை­யாற்­றினார். அந்த அர­சாங்­கத்­தினால் பல பொரு­ளா­தா­ரத்­து­றைகள் அரச உடை­மை­க­ளாக மாறின. அவற்றுள் வர்த்­த­கமும் ஒன்று. வர்த்­த­கத்­து­ட­னேயே இலங்­கையில் குடி­யே­றிய முஸ்­லிம்கள் அத­னையே தமது வாழ்­வா­தா­ர­மாகக் கொண்டு பரம்­பரை பரம்­ப­ரை­யாக வழ்ந்­து­கொண்­டி­ருந்­தனர். அவர்­களின் ஜீவ­னோ­பா­யத்­துக்கு இடி விழுந்­த­துபோல் அமைந்­தன அரசின் சில நட­வ­டிக்­கைகள். முஸ்­லிம்கள் கொதிப்­ப­டைந்­தனர். அந்தச் சூழ­லி­லேதான் 1972ல் ஒரு நாள் பின்­னேரம் கொழும்பு முஸ்லிம் தலை­வர்­களை ஒரு சிற்­றுண்­டிக்கு வரு­மாறு அமைச்சர் தனது இல்­லத்­துக்கு அழைத்தார். அங்கே அவர்­க­ளைப்­பார்த்து அமைச்சர் கூறிய அனைத்­தையும் ஒரே வரியிலே சுருக்­கினால், “எதிர் நீச்சல் போட­வேண்டாம், எதிர்­கா­லத்தை உணர்ந்து உங்கள் பாதையை மாற்றிக் கொள்­ளுங்­கள்”என்­ப­தாகும். அந்­தப்­பாதை எது என்­பதை தனது அமைச்­சின்­மூலம் எடுத்­துக்­காட்­டி­யவர் அப்­பெ­ருந்­த­லைவர். சலு­கை­களால் வளர்ந்த ஒரு சமு­தா­யத்தை மற்­றைய இனங்­க­ளுடன் போட்­டி­போட்டு முன்­னேறும் சமு­தா­ய­மாக மாற்ற விளைந்­த­வரே பதி­யுத்தீன். இந்தப் பின்­ன­ணி­யி­லேதான் இன்­றைய முஸ்லிம் தலை­மைத்­து­வத்­தைப்­பற்­றிய ஒரு கருத்­தினை வாச­கர்­களின் சிந்­த­னைக்கு முன்­வைக்­கி­றது இக்­கட்­டுரை. இது ஒரு தூரத்­துப்­பார்­வை­யா­ளனின் கருத்­தென்­றாலும் இலங்­கையின் தின­சரி நிகழ்­வு­களை கூர்ந்து அவ­தா­னிக்கும் ஒரு சமூ­க­நே­சனின் பார்வை என்­ப­தையும் நினைவிற் கொள்­ளுதல் நல்­லது.

மாறி­விட்ட சூழல்
அறிஞர் சித்தி லெப்­பையின் தலை­மைத்­து­வமும் வழி­காட்­டலும் பிரித்­தா­னி­யரின் குடி­யேற்ற நாடாகக் கிடந்த இலங்­கையில் சகோ­தர சமூ­கங்­க­ளி­டையே ஏற்­பட்ட கலா­சார விழிப்­பு­ணர்வின் எதி­ர்­காலத் தாக்­கங்­களைச் சரி­யாகப் புரிந்­து­கொண்­டதால் ஏற்­பட்­டவை. அதே­போன்று பதி­யுத்­தீனின் வழி­காட்டல் சுதந்­திர இலங்கை அர­சி­யலில் மட்­டு­மல்­லாது பொரு­ளா­தாரத் தன்­னி­றை­வுடன் சம­தர்மக் கொள்­கையின் அடிப்­ப­டையில் நடை­போடும் ஒரு எதிர்­கா­லத்தை உணர்ந்து அதற்­கேற்ப தனது சமூ­கத்தைத் தயார்­ப­டுத்தும் நோக்கில் அமைந்த ஒன்று. அவரின் அமைச்சில் கல்விப் பொதுத்­த­ரா­தரப் பரீட்­சையில் ஐந்து பாடங்­களில் மட்டும் சித்திய­டைந்த முஸ்லிம் பெண்­க­ளுக்கு ஆசி­ரியத் தொழில் வழங்­கி­யதை கண்­டித்து அது முஸ்­லிம்­களின் கல்­வித்­த­ரா­த­ரத்தை எதிர்­கா­லத்தில் குறைக்கும் என்று கருதி அவ­ரிடம் இக்­கட்­டு­ரை­யாளன் சென்று முறை­யிட்­ட­போது, “நான் இன்று அவ­ளுக்கு உத்­தி­யோகம் வழங்­கினால் நாளைக்கு அவள் தனது பிள்­ளையை கடைச் சிப்­பந்­தி­யாக்க மாட்டாள், கல்­வி­யிலே முன்­னேற வழி­காட்­டுவாள்” என்று அவர் கூறிய வார்த்­தைகள் என் காது­களில் இன்னும் ரீங்­காரம் செய்­கின்­றன. ஆனால் இன்­றையச் சூழலோ வேறு.

சுதந்­திர இலங்கை ஒரு சம­தர்ம ஜன­நா­யக நாடென்ற நிலை கைவி­டப்­பட்டு அது சிங்­கள பௌத்த இன­வா­தத்தின் கோட்­டை­யாக மாறி இந்த நாடு சிங்­கள மக்­க­ளுக்­கு­ மட்­டுமே சொந்தம், ஆதலால் மற்­றைய இனங்கள் சிங்­க­ள­வர்­களின் நீண்­ட­காலக் குத்­தகைக் குடிகள் என்ற கொள்­கையால் எந்த வழி­யிலும் முஸ்­லிம்கள் முன்­னேற முடி­யாத ஒரு நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர். வர்த்­தகம் செய்­யவும் தடை, விவ­சாயம் செய்­யவும் தடை, உத்­தி­யோகம் பார்க்­கவும் தடை என்­ற­வாறு முஸ்­லிம்­க­ளுக்கு அடிமை விலங்கு பூட்­டப்­பட்­டுள்­ளது. அது சட்­டத்­தினால் பூட்­டப்­பட்ட விலங்­கல்ல. பெரும்­பான்மை இயக்­கங்­களின் பலாத்­கா­ரத்­தி­னாலும் திரை­ம­றைவில் அவை­க­ளுக்­கி­ருக்கும் அர­சியல் ஆத­ர­வி­னா­லுமே பூட்­டப்­பட்ட ஒன்று. எனவே இது ஒரு புதிய சூழல்.

இதனை இன்­றைய முஸ்லிம் தலை­மைத்­து­வங்கள் உண­ரா­ம­லில்லை. ஆனால் அந்தக் கோட்­டையைத் தகர்த்­தெ­றியச் சக்­தி­யில்­லா­மலும் அதற்­கான வழி­வ­கை­யை­யேனும் அறிய முடி­யா­மலும் அதே சம­யத்தில் அந்தக் கோட்­டைக்­குள்ளே எப்­ப­டி­யா­கிலும் ஒரு மூலை­யிலே குந்­திக்­கொண்டு முஸ்­லிம்­களின் உரி­மைக்­காகப் போரா­டுவோம் என்று மேடைப்­பேச்சுப் பேசும் தலை­மை­களின் ஒரு வெட்­கக்­கே­டான நிலைப்­பாட்டில் முஸ்லிம் சமூகம் சிக்கித் தவிக்­கி­றது. இந்தக் குற்­றச்­சாட்டை எத்­த­னையோ உதா­ர­ணங்­க­ளைக்­கொண்டு உறு­திப்­ப­டுத்த முடியும். ஆனால் இரண்­டை­மட்டும் இக்­கட்­டுரை இங்கே சுட்­டிக்­காட்­டு­கி­ன­றது.

முத­லா­வது, .கெொவிட் கொள்­ளைநோய் பர­வி­ய­போது அதனால் மர­ணித்­த­வர்­களை தக­னம்­செய்ய வேண்­டு­மென எடுக்­கப்­பட்ட அன்­றைய ஜனா­தி­ப­தியின் முடிவு சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தத்தின் முடி­வே­யன்றி வேறில்லை. அப்­பே­ரி­ன­வா­தத்தின் பாது­கா­வ­ல­னாக இயங்­கி­யவர் அந்த ஜனா­தி­பதி. அம்­மு­டி­வினால் பெரிதும் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் முஸ்­லிம்­களே. ஓட்­ட­மா­வ­டியின் மஜ்மா நகர் அதற்கோர் அழியாச் சின்னம். அந்த முடி­வினை எதிர்ப்­ப­தற்­காக நாலு வர்த்­தை­களை பட்டும் படா­மலும் நாடா­ளு­மன்­றத்தில் பேசி­விட்டு அத்­துடன் அமைதி கண்ட முஸ்லிம் தலை­மை­களின் கோழைத்­த­னத்தை என்­னென்று வார்த்­தை­களால் விப­ரிப்­பதோ? அது மட்­டுமா, ஒரு வரு­டத்தின் பின்னர் உலக அரங்கு அந்த முடிவை கண்­டிக்கும் வரை முஸ்லிம் தலை­மைகள் மௌனி­களாய் இருந்­தமை ஒரு­பு­ற­மி­ருக்க, அந்த முடிவை எடுத்த ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை மேலும் அதி­க­ரி­க­ரிப்­ப­தற்குக் கைதூக்­கிய அவ­மா­னத்தை எந்த அள­வு­கோலால் அளப்­பதோ?
இரண்­டா­வ­தாக, மஹர சிறைச்­சாலை வளா­கத்­துக்குள் அமைந்­தி­ருந்த பள்­ளி­வா­சலை அப­க­ரித்­த­வர்கள் சிறைச்­சாலை அதி­கா­ரி­க­ளல்ல அவர்­க­ளுக்குள் புதைந்­து­கி­டந்த சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம். அதை எதிர்த்து ஒரு கடிதம் சமர்ப்­பித்தோம், அதற்­கென்ன நடந்­தது என்று ஒரு முஸ்லிம் தலைமை இரண்­டொரு நாட்­க­ளுக்கு முன் ஞாப­கப்­ப­டுத்­தி­யது ஞாபகம் வரு­கி­றது. ஐயோ பரி­தா­பமே! இது காலம்; கடந்­து­விட்ட கதறல் ஐயா. அப்­பள்­ளி­வாசல் பறி­போன ஒரு சில நாட்­க­ளுக்குள் அன்­றைய அமைச்சர் ஒருவர், (அவர் இப்­போதும் அமைச்­ச­ராக இருக்கும் பாக்­கி­ய­சாலி) நாடா­ளு­மன்­றத்தில் எழுந்­து­நின்று அப்­பி­ரச்­சி­னையை சுமு­க­மாகத் தீர்த்­து­வைப்போம் என்று அறை­கூ­வினார். அத்­தேர்டு நமது முஸ்லிம் தலை­மை­களும் அமை­தி­ய­டைந்­தன. இன்று ஒரு கடி­தத்தை ஞாப­கப்­ப­டுத்­து­வது எதனைச் சாதிப்­ப­தற்­கா­கவோ?

ஒன்றை மட்டும் இத்­த­லை­மைகள் உண­ர­வேண்டும். அதா­வது சிங்­கள பௌத்த பேரி­ன­வாதக் கோட்டை தகர்த்­தெ­றி­யப்­ப­டாமல் உங்களால் உங்­களின் சமூ­கத்­துக்­காக எதையும் சாதிக்க முடி­யாது. வேண்­டு­மானால் அந்தக் கோட்­டைக்குள் அமர்ந்­து­கொண்டு அமைச்சர் பத­வி­களை நீங்கள் பெற்றுக் கொள்­ளலாம். அந்தப் பத­வி­களால் நீங்­களும் உங்­களின் உற­வு­களும் உங்­களின் கைக்­கூ­லி­களும் சம்­பா­திக்­க­லாமே ஒழிய சமூகம் நன்மை அடையப் போவ­தில்லை. இது சுமார் நாற்­பது வரு­டத்­துக்கும் மேலான ஒரு கதை.

எங்கள் மக்­களின் விவ­சாயக் காணிகள் பறிக்­கப்­ப­டு­கி­றதே பள்­ளி­வா­சல்­களின் முன் புத்தர் சிலைகள் எழு­கி­றதே என்று நாடா­ளு­மன்­றத்­துக்குள் இப்­போது எழுந்து நின்று ஒப்­பாரி வைப்­பதால் எந்தப் பயனும் இல்லை சீமான்­களே. உங்­க­ளுக்கு ஓர் அரிய சந்­தர்ப்பம் கிடைத்­த­போது அத­னையும் நழுவ விட்ட பெருந்­த­கையீர் நீங்கள். அது எப்­படி எப்­போது வந்­த­தென்று தெரி­யுமா?

இந்த வரு­டத்தின் புனித நோன்பு மாத காலத்தில் காலி­மு­கத்­தி­ட­லிலே பௌத்த சிங்­கள இளை­ஞர்கள் அந்தச் சந்­தர்ப்­பத்தை உங்­க­ளுக்கு வழங்­கி­னார்கள். உங்­களின் தலை­மைத்­து­வத்தை நாடி அல்ல. உங்கள் மக்­களின் நல­னுக்­காக அவ்­வி­ளை­ஞர்­களின் ஒரே கோரிக்­கை­யான அமைப்பு மாற்றம் வேண்டும் என்­பதை நாடா­ளு­மன்­றத்­துக்குள் குர­லெ­ழுப்பி அதற்­காக உங்­களைப் போரா­டச்­செய்­யவும் அதே சமயம் அந்தக் கோரிக்­கைக்­குப்­பின்னால் உங்கள் மக்­களை கிளர்ந்­தெழச் செய்­ய­வுமே. நீங்­களோ வேடிக்கை பார்த்து நின்­றீர்கள் ஐயா. காரணம் அந்த அமைப்­பிலே உங்­களின் சுய­நயம் தங்கி இருக்­கி­றது. இதனை மறுப்­பீர்­களா?

அந்த இளை­ஞர்கள் உணர்ந்த ஒரு மகத்­தான உண்­மையை உங்­களால் விளங்­கவும் முடி­யாமல் போனதே என்­பதை நினைக்க வருத்­த­மாக இருக்­கி­றது. அவர்கள் சுட்­டிக்­காட்­டிய அந்த அமைப்­புக்குள் அடங்கி இருந்­த­தையா சிங்­கள பௌத்த போரி­ன­வாதம். அந்தக் கோட்­டைக்குத் தீவைத்து ஒரு புதிய இலங்­கை­யையே கட்­டி­யெ­ழுப்ப­வென்று புறப்­பட்ட ஒரு புனிதப் படைதான் அந்த இளை­ஞர்கள். இப்­போது அந்தப் படை­யி­னரால் நன்மையடைந்தபின்னர் அதற்குத் துரோகியாக மாறி, அந்தப் படையையே ஒடுக்கியடக்கி, அதன் தலைவர்களையும் சிறைக்குள் தள்ளி, இனிமேலும் அப்படியொரு கோரிக்கை எழாதவண்ணம் வழிவகுத்திருக்கும் புதிய ஜனாபதிக்குக் குடை பிடிக்கிறீர்களே, உங்களின் தலைமைச் சிறப்புக்கு எந்தக் கவிதான் காப்பியம் படைக்குமோ தெரியாது.

முஸ்லிம் சமூகம்
எடுக்கவேண்டிய ஒரு முடிவு
புதிய­தொரு சமு­தாயம் இலங்­கையில் உரு­வாக வேண்­டு­மென சிங்­கள பௌத்த இளை­ஞர்கள் விழித்­தெ­ழுந்­துள்­ளனர். அதற்குப் புதி­ய­தொரு தலை­மைத்­து­வமும் உரு­வாக வேண்டும் அல்­லது உரு­வாக்­கப்­பட வேண்டும் என்­ப­தையும் அவர்­களின் “225 வேண்டாம்” என்ற சுலோகம் வெளிக்­காட்­டி­யது.

அதற்­க­மைய முஸ்லிம் சமூ­கமும் மாற­வேண்டும். நூறு பச்­சோந்­தி­களைத் தெரிந்து நாடா­ளு­மன்­றத்­துக்கு அனுப்­பு­வ­தை­விட தேசப்­பற்­றுடன் காலத்­தையும் சூழ­லையும் விளங்­கிக்­கொண்டு வளர்ந்­து­வரும் இளம் சமு­தா­யத்­துடன் கைகோர்த்து ஏனைய இனங்­க­ளையும் அணைத்து நாட்­டையே வழி­ந­டத்­தக்­கூ­டிய வல்­ல­மையும் புத்­தி­சா­து­ரி­யமும் உள்ள ஓர் ஆணையோ அல்­லது ஒரு பெண்­ணையோ தெரிந்து அனுப்­பு­வது எவ்­வ­ளவோ உயர்­வா­னது. அதனைத் தெரி­வ­தற்கு முஸ்லிம் கட்­சி­யென்ற ஒன்று அவ­சி­ய­மில்லை. எந்தக் கட்­சி­யிலும் அவ்­வா­றான ஒரு தலை­மையை தெரி­வு­செய்­யலாம். அது முஸ்லிம் சமூ­கத்தின் பொறுப்பு. அந்தத் தேட­லுக்குத் தலைமை தாங்­கு­வது புத்­தி­ஜீ­வி­களின் கடமை. அந்த உணர்வும் அதற்கான தேடலும் இன்னும்தான் முஸ்லிம்களிடையே இடம்பெறவில்லை என்பதே ஏமாற்றத்தைத் தருகிறது. –Vidivelli

Leave A Reply

Your email address will not be published.