வார்த்தை ஜாலங்களால் இனப்பிரச்சினை தீராது

0 299

நாட்டின் இனப் பிரச்­சி­னைக்கு எதிர்­வரும் 75 ஆவது சுதந்­திர தினத்­திற்கு முன்னர் தீர்வு காணப்­பட வேண்டும் என்றும் அதற்­காக சகல அர­சியல் கட்­சி­களும் ஒன்­று­பட வேண்டும் என்றும் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்­தி­ருக்­கிறார். இனப் பிரச்­சினை தீர்வு தொடர்பில் கடந்த வாரம் இடம்­பெற்ற சர்வ கட்சி மாநாட்­டி­லேயே ஜனா­தி­பதி இவ்­வாறு குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

குறித்த சர்­வ­கட்சிக் கூட்­டத்தில் பெரும்­பான்மை மற்றும் சிறு­பான்மை கட்­சி­களின் பிர­தி­நி­திகள் பலர் கலந்து கொண்டு தமது கருத்­துக்­களை முன்­வைத்­துள்­ளனர். எனினும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் எதிர்க்­கட்­சி­களின் முக்­கி­யஸ்­தர்கள் சிலரும் இதில் பங்­கேற்­றி­ருக்­க­வில்லை.

ஏழரை தசாப்­தங்­க­ளாக சாத்­தி­யப்­ப­டாத இனப் பிரச்­சினைத் தீர்வு முயற்­சி­களை ஓரிரு மாதங்­க­ளுக்குள் சாத்­தி­யப்­ப­டுத்­து­வது எவ்­வாறு எனும் கேள்வி இந்த இடத்தில் எழு­வதை தவிர்க்க முடி­ய­வில்லை.

பொது­வா­கவே, நாட்டில் தேர்தல் ஒன்று அண்­மிக்­கும்­போது இனப்­பி­ரச்­சினைத் தீர்வு பற்­றிய கதை­யா­டல்கள் முக்­கி­யத்­துவம் பெறு­வது வழக்கம். அடுத்த வருடம் முக்­கிய தேர்­தல்கள் இடம்­பெ­றலாம் என எதிர்­பார்க்­கப்­படும் நிலையில் ஜனா­தி­ப­தியும் சிறு­பான்மை மக்­களின் வாக்­கு­களை இலக்­காகக் கொண்டே இந்த விவ­கா­ரத்தை பேசு பொரு­ளாக்­கி­யி­ருக்­கி­றாரா என்ற சந்­தே­கத்­தையும் விமர்­ச­கர்கள் எழுப்­பு­கின்­றனர்.

கடந்த காலங்­களில் இனப் பிரச்­சினைத் தீர்வு தொடர்பில் ஏரா­ள­மான பேச்­சு­வார்த்­தைகள் உள்­நாட்­டிலும் வெளி­நா­டு­க­ளிலும் இடம்­பெற்­றுள்­ளன. பிரஜா உரிமை தொடர்­பான பேச்­சு­வார்த்­தைகள், 50:50 கோரிக்கை தொடர்­பான பேச்­சு­வார்த்தை, பண்­டா-செல்வா ஒப்­பந்­தத்­துக்­கான பேச்­சு­வார்தை, இந்­திய வம்­சா­வளி மக்கள் தொடர்­பான சிறி­மா-­சாஸ்­திரி பேச்­சு­வார்த்தை, அதே பிரச்­சினை தொடர்­பான சிறி­மா-­இந்­திரா பேச்­சு­வார்த்தை, டட்­லி-­செல்வா ஒப்­பந்­தத்­துக்­கான பேச்­சு­வார்த்தை, ஜே.ஆரின் வட்ட மேசை மாநாடு, அர­சியல் கட்சி மாநாடு, இந்­திய அதி­கா­ரி­க­ளான கோபா­ல­சு­வாமி பார்த்­த­சா­ரதி மற்றும் ரொமேஷ் பண்­டாரி ஆகி­யோ­ரு­ட­னான பேச்­சு­வார்த்­தைகள், திம்புப் பேச்­சு­வார்த்­தைகள், இலங்கை இந்­திய ஒப்­பந்­தத்­துக்­கான பேச்­சு­வார்த்­தைகள், ரண­சிங்க பிரே­ம­தா­சவின் சர்வ கட்சி மாநாடு, புலி­க­ளு­டனும் தமிழ் கட்­சி­க­ளு­டனும் பல அர­சாங்­கங்கள் நடத்­திய பேச்­சு­வார்த்­தைகள் போன்ற பல பேச்­சு­வார்த்­தைகள் கடந்த 75 ஆண்­டு­களில் இடம்­பெற்­றுள்­ளன. அதே­போன்­றுதான் போர் முடி­வுக்கு வந்த பிற்­பாடும் பல பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­றுள்­ளன.

இதற்­காக பல ஆணைக்­கு­ழுக்கள் நிய­மிக்­கப்­பட்டு ஆயிரக் கணக்­கான பக்­கங்­களில் அவற்றின் அறிக்­கை­களும் சிபா­ரி­சு­களும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக போர் முடி­வுக்கு வந்த பின்னர் அமைக்­கப்­பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் தொடர்­பான நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் அறிக்கை இவற்றுள் முக்­கி­ய­மான ஒன்று. அதில் சகல சமூ­கங்­க­ளி­னதும் அபி­லாஷைகளை உள்­ள­டக்­கிய சிபா­ரி­சுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. எனினும் அவற்றில் குறிப்­பி­டத்­தக்க சிபா­ரி­சுகள் எதுவும் இது­வரை அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

இவ்­வா­றான ஏரா­ள­மான தீர்வு முயற்­சிகள் இடம்­பெற்ற போதிலும் அவற்றை சாத்­தி­ய­மாக்­கு­வ­தற்கு எந்­த­வொரு தலை­வரும் அர்ப்­ப­ணிப்­பு­ட­னான முயற்­சி­களை முன்­னெ­டுக்­க­வில்லை. தற்­போ­தைய ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க, நல்­லாட்சி அர­சாங்­கத்தில் பிர­த­ம­ரா­க­வி­ருந்­த­போதும் தீர்வு முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. எனினும் அதுவும் வெற்­றி­ய­ளிக்­க­வில்லை.

இன்று பாரா­ளு­மன்­றத்தில் நிலை­யா­ன­தொரு பலம் இல்­லாத நிலையில் தீர்­வுத்­திட்டம் ஒன்றை அவர் எவ்­வாறு சாத்­தி­ய­மாக்கப் போகிறார் என்ற கேள்­விக்கும் விடை­யில்லை.
இது ஒரு­பு­ற­மி­ருக்க, இனப்­பி­ரச்­சினைத் தீர்வு தொடர்பில் அடிக்­கடி வலி­யு­றுத்தும் சிறு­பான்­மைக்­கட்­சி­க­ளாக தமிழ் முஸ்லிம் கட்­சிகள் தமக்­கி­டையே எந்­த­ளவு தூரம் இணக்­கப்­பாட்டை எட்­டி­யி­ருக்­கி­றார்கள் என்றால் அதற்கும் விடை சாத­க­மா­ன­தாக இல்லை. வடக்கு கிழக்கு இணைப்பு விட­யத்தில் இரு தரப்­புக்­கு­மி­டையில் பாரிய கருத்து வேறு­பாடு நில­வு­கி­றது. தமிழ் – முஸ்லிம் மக்கள் வாழும் இடங்­களில் காணிப்­பி­ரச்­சினை பூதா­க­ர­மாக தொடர்­கி­றது. இவ்­விரு சமூ­கங்­க­ளி­னதும் கடந்த கால, சம­கால எதிர்­கால நல்­லி­ணக்­கத்­திற்கு இந்த விவ­காரம் பெரும் தடை­யா­க­வுள்­ளது. இதற்குத் தீர்வு காணாமல் இரு சமூ­கங்­களும் ஒரு­மித்த இனப் பிரச்­சினைத் தீர்­வுக்கோ அதி­காரப் பகிர்­வுக்கோ செல்­வது ஒரு போதும் சாத்­தி­ய­மா­காது.

அதே­போன்று தமிழ் கட்­சி­க­ளுக்­குள்­ளேயே தீர்வு தொடர்பில் மாறு­பட்ட கருத்­துக்கள் உள்­ளன. முஸ்லிம் கட்­சி­க­ளுக்கும் இது­வி­ட­யத்தில் தெளி­வான நிலைப்­பாடு ஒன்று இல்லை. இனப் பிரச்­சினைத் தீர்வு தொடர்­பான பேச்­சு­வார்த்­தை­க­ளுக்கு அழைத்தால் கூட அங்கு முன்­வைப்­ப­தற்­கான எழுத்­து­வ­டிவில் அமைந்த முஸ்லிம் சமூகம் சார்­பான கோரிக்­கைகள் கூட முஸ்லிம் கட்­சி­க­ளிடம் இல்லை.

என­வேதான், ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க தனது பதவிக் காலத்­தினுள் இனப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண வேண்டும் என இத­ய­சுத்­தி­யுடன் செயற்­ப­டுவார் எனின் அதற்கு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்­டி­யது சகல சிறு­பான்மைக் கட்­சி­க­ளி­னதும் கடப்­பா­டாகும். அந்த வகையில் தமிழ் – முஸ்லிம் கட்­சிகள் முதலில் தமக்­கி­டையே பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்து அனை­வ­ராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலைப்­பாடு ஒன்றை எட்ட வேண்டும். அதன் பிற்­பாடு அர­சாங்­கத்­துடன் சிறு­பான்மைக் கட்­சிகள் என்ற பலத்­துடன் சென்று பேரம் பேச வேண்டும். அதைவிடுத்து, சிறுபான்மைக் கட்சிகள் தமக்குள்ளேயே கருத்து வேறுபாடுகளுடன் இருப்பது அதிகாரத்திலுள்ளவர்களுக்கு சாதகமாகிவிடும். இது தொடர்பில் தமிழ் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளும் தீவிரமாக சிந்தித்து செயற்பட வேண்டும்.

அதேபோன்றுதான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கடந்த காலங்களைப் போல வெறும் வார்த்தை ஜாலங்களால் இனப் பிரச்சினைத் தீர்வை முன்வைக்காது அதனை செயலுருப்படுத்த முன்வர வேண்டும். தனது பதவிக் காலத்தினுள் இதனை அவர் செயற்படுத்திக் காட்டுவாராயின் நிச்சயம் அவர் வரலாற்றில் பேசப்படுவார் என்பதில் மாற்றுக் கருத்திருக்காது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.