விபசாரத் தொழிலுக்காக பெண்களை கடத்தும் முகவர்கள் விழிப்பாக இருங்கள்!

0 271

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வீட்டு பணிப்­பெண்­க­ளா­கவும் ஏனைய தொழில்­க­ளுக்­கா­கவும் வெளிநா­டு­க­ளுக்கு சென்ற இலங்கை பெண்கள் ஓமானில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்டு, பாலியல் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக விற்­பனை செய்­யப்­பட்­டமை தொடர்­பாக குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­களம் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது.

இது தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளுக்­காக உதவி பொலிஸ் அத்­தி­யட்­ச­கர்கள் இருவர் தலை­மை­யி­லான குழு ஓமா­னுக்கு சென்று விசா­ர­ணை­களை நடத்­தி­யுள்­ள­தாக பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் நிஹால் தல்­துவ தெரி­வித்­துள்ளார்.
ஓமானில் தொழில் வாய்ப்­பு­களை பெற்­றுத்­த­ரு­வ­தாகக் கூறி சில வெளிநாட்டு முகவர் நிறு­வ­னங்கள் பெண்­களை அந்­நாட்­டிற்கு அழைத்­துச்­சென்­றுள்­ளன. அவர்­களில் அநே­க­மா­ன­வர்கள் சுற்­றுலா விசாவில் அழைத்­துச்­செல்­லப்­பட்­டுள்­ளமை தெரிய வந்­துள்­ளது.
அங்­குள்ள தொழில் முகவர் நிலை­யத்தில் பெண்­களை வரி­சைப்­ப­டுத்தி வயது, தோற்­றத்­திற்கு அமைய பாலியல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு விற்­பனை செய்­யப்­பட்­டமை பொலி­சாரின் விசா­ர­ணை­களில் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் அறிக்கை கிடைத்­ததன் பின்னர் அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும் என வெளி­நாட்டு வேலை­வாய்ப்புப் பணி­யகம் தெரி­வித்­துள்­ளது.

ஓமா­னி­லுள்ள இலங்கை தூத­ர­கத்தில் நடத்­திச்­செல்­லப்­ப­டு­கின்ற பாது­காப்பு இல்­லத்தில் தங்­கி­யுள்ள 90-க்கும் மேற்­பட்ட பெண்­களில் இந்த ஆட்­க­டத்­தலில் சிக்­கிய பெண்­களும் இருப்­ப­தாக ஓமா­னி­லுள்ள இலங்கை தூத­ரகம் தெரி­வித்­துள்­ளது.

குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­களம் முன்­னெ­டுக்கும் விசா­ர­ணை­க­ளுக்கு தமது பூரண ஒத்­து­ழைப்பை வழங்­கு­வ­தா­கவும் தூத­ரகம் குறிப்­பிட்­டுள்­ளது.

பாதிக்­கப்­பட்ட பெண்கள் அவலக் குரல்
இலங்­கை­யி­லி­ருந்து டுபாய் நாட்­டிற்கு சுற்­றுலா விசாவில் அழைத்துச் சென்று பின்னர் அங்­கி­ருந்து ஓமான் நாட்டில் தாங்­கள்­ அ­டி­மை­க­ளாக விற்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தங்­களை மீட்­டெ­டுக்­கு­மாறும் கோரி ஓமா­னி­லி­ருந்து 150 இற்கு மேற்­பட்ட பெண்கள் அவலக் குரல் எழுப்பியுள்­ளனர்.

அவர்­களால் வெளி­யி­டப்­பட்ட தக­வல்­களில் நிர்க்­க­திக்­குள்­ளா­கி­யுள்ள சிங்­க­ள­,தமிழ்,முஸ்லிம் பெண்கள் ஜனா­தி­ப­தி­யிடம் உருக்­க­மாக இந்த வேண்­டு­கோளை முன்­வைக்­கின்­றனர்.

அதில் அவர்கள் தெரி­விப்­ப­தா­வது, “ஓமான் நாட்டில் நிர்க்­க­தி­யா­கிய நிலையில் இலங்­கைக்கு திரும்ப முடி­யாமல் தினமும் கண்­ணீ­ருடன் காலத்தைக் கழித்துக் கொண்­டி­ருக்கும் இலங்கைப் பெண்கள் 150 பேரின் துயரக் கதையை இத­னூ­டாக இலங்கை ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் அர­சாங்­கத்­துக்கும் தூத­ர­கங்­க­ளுக்கும் அறி­விக்­கிறோம்.
இலங்­கை­யி­லுள்ள ஏஜென்­ஸியும் இங்கே ஓமான் நாட்­டி­லுள்ள ஏஜென்­ஸியும் எங்­களை ஏமாற்றி சுற்­றுலா விசாவில் அழைத்து வந்து எங்­களை ஓமானில் விற்று விட்­டார்கள். இதனால் நாங்கள் இப்­போது அடி­மை­க­ளாக இங்கே அகப்­பட்டுக் கொண்­டுள்ளோம்.
இந்த ஏஜென்­ஸிகள் எங்கள் ஒவ்­வொரு பெண்ணின் சார்­பா­கவும் சுமார் 18 இலட்ச ரூபாவை வாங்கிக் கொண்டே எங்­களை அடி­மை­க­ளாக விற்­றி­ருக்­கி­றார்கள்.
கையில் பாஸ்­போட்டும் இல்லை. அத­னையும் பறித்துக் கொண்­டார்கள். அதனால் நாங்கள் எங்­க­ளது நாட்­டுக்குத் திரும்ப முடி­யா­துள்­ளது. தொடர்­பாடல் வழிகள் அடைக்­கப்­பட்­டுள்­ளன. தொடர்பு கொள்ளக் கூடிய கைப்­பே­சிகளையும் நாம் ­பா­விக்க முடி­யாது மறுக்­கப்­பட்­டுள்ளோம்.

எங்­க­ளது துய­ரங்­களை ஏறெ­டுத்துப் பாருங்கள். எமது தாய், தந்­தையர், சகோ­த­ரங்கள், பிள்­ளைகள் அவர்­க­ளது நிலைமை அவர்கள் என்ன ஆனார்கள் என்­பது கூட எமக்குத் தெரி­யாது. ஏனென்றால் எங்­க­ளுக்குத் தொடர்பு கொள்ளும் எல்லா வழி­களும் மறுக்­கப்­பட்டு விட்­டன.

சம்­பளம் இல்லை. சாப்­பாட்­டுக்கு வழி­யில்லை. சவர்க்­காரம் வாங்கக் கூட கையில் காசு இல்லை. நாங்கள் பரம ஏழைகள் என்­ற­ப­டி­யால்தான் இங்கு வீட்டுப் பணிப்­பெண்­க­ளாக வந்தோம்.

நாங்கள் அனை­வரும் பெண்கள். இங்கே சுகா­தார வச­தி­களும் பாது­காப்பும் அற்ற சூழ்­நி­லையில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளதால் நாங்கள் மிகுந்த மன உளைச்­ச­லுக்கு உள்­ளா­கி­யுள்ளோம்.

மாற்றிக் கொள்ள ஆடைகள் கூட இல்­லாது அவஸ்தைப்படு­கின்றோம்
நோயுள்ள பெண்கள் இங்கே கடும் துய­ரத்­தோடு காலங் கழிக்­கி­றார்கள். சிலர் எழுந்­தி­ருக்ககூட முடி­யாத நிலையில் உடல் உபா­தை­க­ளுக்கும் மன உளைச்­ச­லுக்கும் உள்­ளா­கி­யுள்­ளார்கள்.

நாங்கள் இங்கே வந்­தது எமது வறு­மையைப் போக்­கவும் பொரு­ளா­தார நெருக்­க­டி­யி­லுள்ள இலங்கை நாட்­டுக்கு டொலர் வரு­மா­னத்தைப் பெற்றுக் கொடுப்­ப­தற்­கு­மாகும்.
ஆனால் பெரும் தியா­கத்தின் மத்­தியில் எங்­க­ளது தாயை, தந்­தையை கண­வனை, பிள்­ளை­களை, உற­வு­களைப் பிரிந்து வந்து குடும்­பத்­துக்கும் நாட்­டுக்கும் உதவி செய்ய வந்த எங்­களை இங்கே அடி­மை­க­ளாக விற்று எங்­களை அவ­மா­னப்­ப­டுத்தி இருக்­கி­றார்கள்.
இது சம்­பந்­த­மாக நாங்கள் இங்கே துயரம் தாங்க முடி­யாமல் கடந்த 26 ஆம் திகதி ஆர்ப்­பாட்­டமும் செய்தோம். அதற்கும் எந்தத் தீர்வும் இல்லை. இங்­குள்ள இலங்கைத் தூத­ர­கமோ, இந்ந நாட்டு அர­சாங்­கமோ, எவ­ருமே கண்டு கொள்­ள­வில்லை.

நவம்பர் 1ஆம் திகதி தொழில் நீதி­மன்­றத்­திற்கும் சென்றோம். ஆனால் அங்கும் எங்கள் சார்­பாக நீதி வழங்­கப்­ப­ட­வில்லை. நீதி­மன்றம் நாங்கள் பெற்றுக் கொண்ட 18 இலட்சம் ரூபாய் பணத்­தையும் கட்­டி­விட்டு போகு­மாறு கேட்­கி­றார்கள்.
உண்­மையில் இலங்­கை­யி­லுள்ள பணிப்­பெண்­களை இங்கே அழைத்து வரும்­பொ­ழுது இலங்கை முக­வர்கள் எங்­க­ளுக்கு ஒரு இலட்சம் அல்­லது இரண்டு இலட்­சத்தை மாத்­திரம் தந்து விட்டு மிகுதிப் பணத்தை இரு நாட்­டி­லு­முள்ள முக­வர்­களும் சுருட்டிக் கொள்­கி­றார்கள்.

இது ஒரு மோச­டியும் மனிதக் கடத்­தலும் அடிமை வியா­பா­ர­மு­மாகும்.
எனவே மனித உரிமை அமைப்­புக்கள், பெண்­ணு­ரிமை அமைப்­புக்கள் இந்த மோச­டியை உட­ன­டி­யாக நிறுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

எங்­களை இந்தத் துய­ரத்தில் இருந்து மீட்­டெ­டுத்து எங்­க­ளது உற­வு­க­ளுடன் எங்­களைச் சேர்ப்­பிக்க வேண்டும்.

இல்­லா­விட்டால் இப்­பொ­ழுது அடி­மை­களாக விற்­கப்­பட்டு நடுத்­தெ­ருவில் நிற்கும் 150 பேரைப் போல இன்னும் பல நூற்றுக்கணக்­கான பெண்கள் அடி­மை­க­ளாக இலங்­கை­யி­லி­ருந்து கொண்டு வரப்­பட்டு விற்­கப்­ப­டு­வார்கள்.

இனிமேல் சுற்­றுலா வீசாவில் எந்த இலங்கைப் பெண்ணும் இந்த நாட்­டிற்கு வீட்டுப் பணிப்­பெண்­க­ளாக வர வேண்டாம்.” என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

முகவர் நிறு­வ­னங்கள் ஊடாக பதிவு செய்யும் நடை­முறை தற்­கா­லி­க­மாக நிறுத்தம்
வெளிநாடு செல்ல எதிர்­பார்த்­துள்­ள­வர்கள் வெளிநாட்டு வேலை­வாய்ப்பு முகவர் நிறு­வ­னங்கள் ஊடாக பதிவு செய்யும் நடை­முறை தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­பட்­டுள்­ளது.
ஐக்­கிய அரபு இராச்சியத்தில் வீட்டுப் பணிப்­பெண்­க­ளா­கவும் துப்­பு­ரவு தொழி­லா­ளர்­க­ளா­கவும் பதி­வு ­செய்­யப்­பட்டு ஓமானில் வேலைக்­காக செல்லும் பெண்கள் – சுற்­றுலா விசா­வுடன் செல்­வ­தற்­கான பதி­வுகள் இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளன.

நாட்­டி­லி­ருந்து அனுப்­பப்­ப­டு­வோரின் தக­வல்­களை வெளிநாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்­திற்கு 45 நாட்­க­ளுக்குள் அனுப்ப வேண்­டி­யது கட்­டாயம் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.
சில வெளிநாட்டு வேலை­வாய்ப்பு முகவர் நிறு­வ­னங்கள் தக­வல்­களை வழங்­காது விலகிச் செயற்­ப­டு­கின்­றமை உள்­ளிட்ட விட­யங்­களை கருத்­திற்­கொண்டு ஐக்­கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடு­க­ளுக்கு செல்­வ­தற்­கான பதி­வு­களை தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்த தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, வீட்­டு­வேலை உள்­ளிட்ட தொழில்­களை தேடிச்­செல்லும் இலங்கைப் பெண்கள் ஓமானில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்டு பாலியல் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக விற்­கப்­படும் வியா­பாரம் தொடர்­பாக குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­க­ளத்தால் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

உதவி பொலிஸ் அத்­தி­யட்­ச­கர்கள் இரு­வர்கள் அடங்­கிய குழு­வொன்று ஓமா­னுக்கு சென்று இது தொடர்­பான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­த­தாக பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் சட்­டத்­த­ரணி நிஹால் தல்­துவ தெரி­வித்தார்.

இருவர் கைது
சட்­ட­வி­ரோ­த­மாக சுற்­றுலா விசாவில் துபாய்க்கு தொழி­லுக்­காக பெண்­களை அனுப்­பிய பெண் ஒருவர் உள்­ளிட்ட இருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.
இலங்கை வெளிநாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தின் விசா­ரணை அதி­கா­ரி­களால் சந்­தே­க­ந­பர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

அட்­டா­ளைச்­சே­னையை சேர்ந்த பெண் ஒரு­வரை சுற்­றுலா விசா­வி­னூ­டாக துபாய்க்கு தொழி­லுக்கு அனுப்­பிய போதும், உறுதி வழங்­கப்­பட்­ட­தற்கு அமைய தொழில் பெற்­றுக்­கொ­டுக்­கப்­ப­ட­வில்லை என முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

அம்­பா­றை­யிலும் பெண் ஒருவர் இவ்­வாறு ஏமாற்­றப்­பட்­டுள்­ள­தாக வெளிநாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் தெரி­வித்­துள்­ளது.

இந்த சம்­ப­வங்கள் தொடர்பில் பெண் ஒரு­வரும் அவ­ருக்கு உதவி செய்­த­வரும் கைது செய்­யப்­பட்டு பிணை வழங்­கப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

சுற்­றுலா விசா மூலம் தொழில்
தேடி செல்ல வேண்டாம்
சுற்­றுலா விசா மூலம் தொழில் தேடி வெளிநா­டு­க­ளுக்குச் செல்ல வேண்டாம் என இலங்கை வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம், நாட்டு மக்­க­ளிடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

ஐக்­கிய அரபு இராச்­சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடு­க­ளுக்கு சுற்­றுலா விசா மூலம் சென்­ற­வர்­களில் சிலர் தொழி­லின்றி நிர்க்­க­திக்­குள்­ளா­கி­யுள்­ள­தாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்­தின பிரதிப் பொது முகா­மை­யாளர் காமினி செனரத் யாப்பா தெரி­வித்தார்.

சுற்­றுலா விசா மூலம் தொழில் நிமித்தம் வெளி­நா­டு­க­ளுக்குச் செல்­வ­தற்கு எதிர்­பார்த்­துள்ள நபர்­களை பதிவு செய்யும் நட­வ­டிக்கை தற்­போது நிறுத்­தப்­பட்­டுள்­ள­தாகவும் அவர் தெரி­வித்தார்.

இன்று பொரு­ளா­தார நெருக்­கடி கார­ண­மாக பெண்­களும் வெளி­நாடு சென்று உழைப்­ப­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்­ளனர். ஆயிரக்கணக்கான பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுச் செல்லும் நோக்கத்தில் கொழும்புக்கு படையெடுத்துள்ளனர். குறிப்பாக முகவர் நிறுவனங்கள் அமைந்துள்ள புறக்கோட்டை, மருதானை மற்றும் கிராண்ட்பாஸ் போன்ற பகுதிகளில் தினமும் நூற்றுக்கணக்கான பெண்களையும் ஆண்களையும் காண முடிகிறது. இவ்வாறு தொழில் தேடி வரும் பெண்களையும் குறிப்பாக கிராமப் புறங்களில் உள்ள பெண்களையும் இலக்கு வைத்தே இக் கும்பல் இந்த மோசடியில் ஈடுபடுகிறது.

இது தொடர்பில் சமூ­கத்தில் போதிய விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.