20 க்கு ஆதரளித்தோருக்கு மன்னிப்பு வழங்கிய மு.கா.வின் 30ஆவது பேராளர் மாநாடு

0 287

றிப்தி அலி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் 30ஆவது பேராளர் மாநாடு கடந்த திங்­கட்­கி­ழமை (07) புத்­த­ளத்தில் நடை­பெற்­றது. அடுத்த நடப்­பாண்­டுக்­கான புதிய நிர்­வா­கமும் அதி­யுயர் பீடமும் பேரா­ளர்­க­ளினால் இதன்­போது அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது.

எனினும், கட்­சி­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் இருவர் மீண்டும் இணைத்துக் கொள்­ளப்­பட்­ட­மையும், மற்­றை­யவர் அதி­யுயர் பீட உறுப்­பினர் பத­வி­யி­லி­ருந்தும் நீக்­கப்­பட்­ட­மை­யுமே இரண்­டரை வரு­டங்­க­ளுக்கு பின்னர் நடை­பெற்ற இந்த பேராளர் மாநாட்டின் முக்­கிய விட­யங்­க­ளாகக் காணப்­பட்­டன.

கடந்த 2020 ஆம் ஆண்டு நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சக்­தி­யுடன் இணைந்து தொலை­பேசி சின்­னத்­திலும், தனித்து மரச் சின்­னத்தில் போட்­டி­யிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஐந்து ஆச­னங்­களை மட்­டுமே பெற்­றுக்­கொண்­டது.
இதில் கட்­சியின் தலைவர் ரவூப் ஹக்­கீ­மினை தவிர ஏனைய நான்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு வாக்­க­ளித்­தனர். இந்த விடயம் சர்­வ­தேச ரீதியில் பாரிய பேசு­பொ­ரு­ளாக மாறி­யது

கொவிட் – 19 கார­ண­மாக உயி­ரி­ழந்த முஸ்­லிம்­களை கோட்­டா­பய ராஜ­ப­க்ஷவின் அர­சாங்கம் பல­வந்­த­மாக எரித்த சூழ்­நி­லையில் ராஜ­பக்ஷ குடும்­பத்தின் தேவைக்­காக கொண்டு வரப்­பட்ட திருத்தத்­தினை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஆத­ர­வ­ளித்­த­மையே இதற்­கான பிர­தான கார­ண­மாகும்.

இதனால், குறித்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என கட்­சிக்­குள்­ளி­ருந்தும், வெளி­யி­லி­ருந்தும் பல்­வேறு அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்­டன.

“தங்கள் சொந்தத் தொகுதி மக்­களின் பிரச்­சி­னை­களை அடிப்­ப­டை­யாக வைத்தே இந்தச் சட்­டத்­திற்கு வாக்­க­ளித்தோம்” என குறித்த நான்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் கூறி­யதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் உயர் பீடம் அங்­கீ­க­ரிக்­க­வில்லை.
இதனால், குறித்த நான்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் கட்­சியின் பத­வி­களில் இருந்து நீக்க அதி­யுயர் பீடம் தீர்­மா­னித்­தது. இத­னை­ய­டுத்து கட்சித் தலை­வ­ருக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் இடை­யி­லான பனிப்போர் ஆரம்­ப­மா­னது.

“கட்சித் தலைவர் கூறியே 20ஆவது திருத்­த­த்திற்கு வாக்­க­ளித்தோம்” என பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எச்.எம்.எம். ஹரீஸும், ஹாபீஸ் நசீர் அஹ­மதும் கூறி வந்­தனர். இந்த சூழ்­நி­லையில் குறித்த நான்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜ­ப­க்ஷ­வுடன் மிகவும் நெருங்கிச் செயற்­பட ஆரம்­பித்­தனர்.

இதனால், கட்­சியின் தீர்­மா­னத்­தினை மீறி குறித்த நான்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் பசில் ராஜ­ப­க்ஷவின் வரவு – செலவுத் திட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளித்­தனர்.
இதனால் கட்­சியின் உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்து இடை­நி­றுத்­து­வ­தற்கும் ஒழுக்­காற்று நட­வ­டிக்கை மேற்­கொள்­ளவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. இந்த விசா­ர­ணைக்­காக ஓய்­வு­பெற்ற நீதி­ப­தி­யொ­ருவர் நிய­மிக்­கப்­ப­டுவார் என கட்­சியின் செய­லாளர் நிசாம் காரி­யப்பர் ஊட­கங்­களில் கூறிய போதிலும் இறுதி வரை அப்­ப­டி­யொரு நிய­மனம் மேற்­கொள்­ளப்­ப­ட­வு­மில்லை, அதன் அறிக்கை அதி­யுயர் பீடத்­திற்கு சமர்ப்­பிக்­கப்­ப­ட­வு­மில்லை.

இவ்­வா­றான சூழ்­நி­லையில், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஹாபீஸ் நசீர் அஹமட் ஆளும் அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வ­ளித்து அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்சர் பத­வி­யினை பெற்­றுக்­கொண்டார்.

இத­னை­ய­டுத்து அவர் கட்­சியின் உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்து நீக்­கப்­பட்டார். இதற்கு எதி­ராக அவர் உயர் நீதி­மன்­றத்தில் தற்­போது மனு­வொன்­றினை தாக்கல் செய்­துள்ளார்.
இவ்­வா­றான நிலையில் கட்­சியின் பேராளர் மாநாட்டுக்கு முன்­ன­தாக நடை­பெற வேண்­டிய கட்­டாய அதி­யுயர் பீடக் கூட்டம் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை (06) கட்­சியின் தலை­மை­ய­க­மான தாருஸ்­ஸ­லாமில் நடை­பெற்­றது.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கையே இதில் முக்­கிய விட­ய­மாக காணப்­பட்­டது. இது தொடர்­பான வாதப்பிர­தி­வா­தங்கள் சுமார் ஒரு மணி நேரத்­திற்கு மேல் நீடித்­தது.

இதில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான பைசால் காசீம் மற்றும் எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் மன்­னிப்பு கோரி­யுள்­ள­மை­யினால் அவர்­களை மன்­னித்து கட்­சிக்குள் உள்­வாங்க தலைவர் தன்­னிச்­சை­யாக மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­யினை முன்னாள் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான எம். நயீ­முல்லாஹ் மற்றும் ஏ.எல். தவம் ஆகியோர் கடு­மை­யாக விமர்ச்­சித்­தனர்.

எனினும், அதி­யுயர் பீடத்தின் தீர்­மா­னத்­திற்­க­மைய, குறித்த இரண்டு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் மன்­னிப்பு வழங்கி கட்­சிக்குள் மீண்டும் இணைத்துக் கொள்­ளவும், முன்னர் வகித்த பத­வி­களை வழங்­கவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இதனை கண்­டிக்கும்முக­மாக முன்னாள் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான எம். நயீ­முல்லாஹ் மற்றும் ஏ.எல். தவம் ஆகியோர் எந்தப் பத­வி­க­ளையும் புதிய நிர்­வா­கத்தில் பொறுப்­பேற்­கா­த­துடன், பேராளர் மாநாட்­டிலும் பங்­கேற்­க­வில்லை. எனினும் இவர்கள் அதி­யுயர் பீட உறுப்­பி­னர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இதே­வேளை, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மன்­னிப்புக் கோரா­மை­யி­னாலும், அமைச்சர் நசீர் அஹ­ம­திற்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­கான சத்­தியக் கட­தாசி வழங்­கா­மை­யி­னாலும் அவ­ருக்கு எதி­ரான தடை­யினை தொடரத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இதனால் அவர் வகித்த பிரதித் தலைவர் பத­விக்கு முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மௌலானா நிய­மிக்­கப்­பட்­ட­துடன், ஹரீஸ் அதி­யுயர் பீடத்­தி­லி­ருந்தும் நீக்­கப்­பட்­டுள்ளார். இதற்கு மேல­தி­க­மாக மேலும் பல­ருக்கு புதிய பத­விகள் வழங்­கப்­பட்­டன.
இந்த கட்­டாய அதி­யுயர் பீட கூட்­டத்தில் மேற்­கொள்­ளப்­ப­ட்ட தீர்­மா­னங்கள் மறுநாள் நடை­பெற்ற பேராளர் மாநாட்டில் சமர்ப்பிக்­கப்­பட்டு பேரா­ளர்­களின் அங்­கீ­காரம் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.

இதே­வேளை, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹரீஸ் மன்­னிப்புக் கோரி கடிதம் வழங்­கினால் கட்­சியில் மீண்டும் இணைத்துக் கொள்­ளப்­ப­டு­வ­துடன், முன்னர் அவர் வகித்த பத­வி­யி­னையும் இந்த அதி­யுயர் பீடம் வழங்கும் என தலைவர் ரவூப் ஹக்கீம் பேராளர் மாநாட்டில் அறி­வித்தார்.

பலத்த பாது­காப்­பு­க்கு மத்­தியில் நடை­பெற்ற இந்த பேராளர் மாநாட்­டுக்­கு அழைப்­பி­தழ்­க­ளுடன் வந்­த­வர்கள் மாத்­தி­ரமே மாநாட்டு மண்­ட­பத்­திற்கு அனு­ம­திக்­கப்­பட்­டனர்.
இதில் கலந்­து­கொள்­­வ­தற்­காக ஏறா­வூ­ரி­லி­ருந்து வந்த சிலர் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. இவர்கள் அமைச்சர் ஹாபீஸ் நசீரின் ஆத­ர­வா­ளர்கள் என்­பதா­லேயே அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை என முஸ்லிம் காங்­கிரஸ் முக்­கி­யஸ்­தர்கள் தெரி­வித்­தனர்.

இதே­வேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பெரும்­பா­லான பேரா­ளர்கள் கிழக்கு மாகா­ணத்­தி­லேயே உள்­ள­னர். எனினும் கடந்த ஒரு தசாப்­தத்­திற்கு மேலாக பேராளர் மாநாடு கிழக்கு மாகா­ணத்தில் நடை­பெ­றவில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

பேராளர் மாநாட்டில் அறி­விக்­கப்­பட்ட முக்­கிய பத­வி­களின் விபரம்:
தலைவர் –  ரவூப் ஹக்கீம்
தவி­சாளர் – ஏ.எல்.ஏ. மஜீட்
சிரேஷ்ட பிரதித் தலைவர் –  ஏ.எம். அஸ்லம்
பிரதித் தலைவர்  – எம்.ஐ.எம். மன்சூர்
பிரதித் தலைவர் – யூ.டி.எம். அன்வர்
பிரதித் தலைவர்  – அலி சாஹிர் மௌலானா
பிரதித் தலைவர்  – எஸ்.எம்.ஏ. கபூர்
செயலாளர் – நிசாம் காரியப்பர்
பொருளாளர் – பைசால் காசீம்
மஜ்லிஸுல் ஷூரா தலைவர் –  மௌலவி ஏ.எல்.எம். கலீல்
தேசிய இணைப்புச் செயலாளர் – ரஹ்மத் மன்சூர்
தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் – யூ.எல்.எம். முபீன்
தேசிய அமைப்பாளர் – எம்.எஸ். தௌபீக்
அரசியலமைப்பு விவகார பணிப்பாளர் – எம்.பீ. பாரூக்
பிரதித் தவிசாளர் – றிஸ்வி ஜவஹர்ஷா
பிரதிச் செயலாளர் – மன்சூர் ஏ. காதர்
பிரதிப் பொருளாளர் – எஹியா கான்
பிரதித் தேசிய இணைப்புச் செயலாளர் – அப்துல் ஹை
பிரதி தேசிய அமைப்பாளர் – எம்.எஸ். உதுமாலெப்பை

–Vidivelli

Leave A Reply

Your email address will not be published.