எப்.பி.ஐ.யினர் எடுத்துச் சென்று பகுப்பாய்வு செய்த சஹ்ரானின் தொலைபேசி குறித்த அறிக்கை எங்கே?

சாரா, சாராவின் தாயாரின் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கையும் வேண்டும்; சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் வாதம்

0 506

எம்.எப்.எம். பஸீர்

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு தலைமை வகித்­த­தாக கூறப்­படும் பிர­தான தற்­கொலை குண்­டு­தாரி சஹ்ரான் ஹஷீம் பயன்­ப­டுத்­தி­ய­தாக கூற­ப்படும் கைய­டக்கத் தொலை­பேசி, அமெரிக்­காவின் எப்.பி.ஐ. விசா­ர­ணை­யா­ளர்­களால் எடுத்துச் செல்­லப்­பட்டு பகுப்­பாய்வு செய்­யப்­பட்ட நிலையில், அது குறித்த அறிக்­கையை மன்றில் சமர்ப்­பிக்க உத்­த­ர­விட வேண்டும் என சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் கல்­முனை மேல் நீதி­மன்றில் வாதிட்டார்.

‘சஹ்­ரானின் தொலை­பேசி தொடர்­பி­லான பகுப்­பாய்வு அறிக்கை மன்றில் முன் வைக்­கப்­ப­ட­வில்லை என்­பதும், அது சான்­றாக முன் வைக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும் எனவும் நான் கடந்த தவ­ணையின் போது சுட்­டிக்­காட்­டினேன். எனினும் பிர­தி­வாதி அல்­லது சஹ்ரான் தொடர்பில் எந்த தொலை­பேசி பகுப்­பாய்வு அறிக்­கை­களும் பெறப்­ப­ட­வில்லை என புல­னாய்­வா­ளர்கள் தெரி­வித்­த­தாக பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் கடந்த தவ­ணையில் கூறினார்.

அப்­ப­டி­யானால், அம­ரிக்­காவின் எப்.பி.ஐ. யினர் எடுத்துச் சென்று பகுப்­பாய்வு செய்த சஹ்­ரானின் தொலை­பேசி பகுப்­பாய்வு அறிக்கை எங்கே? அவ்­வாறு சஹ்­ரானின் தொலை­பேசி எடுத்துச் செல்­லப்பட்­டி­ருப்பின் அதனை மன்றில் சமர்ப்­பிக்­கவும், அத்­த­கைய அறிக்­கையை பெற நீதி­மன்றம் தலை­யீடு செய்ய வேண்டும்’ என சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் மன்றில் குறிப்­பிட்டார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திக­திக்கும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் சாரா ஜஸ்மின் என்­ற­ழைக்­கப்­பட்ட புலஸ்­தினி மகேந்­திரன் என்­பவர் வெடி­பொ­ருட்­களை தயா­ரித்­தமை மற்றும் அவற்றை சேக­ரித்து வைத்­தி­ருந்­தமை தொடர்பில் நிந்­த­வூரில் வைத்­து ­அ­றிந்­தி­ருந்தும் (சாரா ஜெஸ்மின் தெரி­வித்ததன் ஊடாக), அந்த தக­வலை பொலி­ஸா­ருக்கு அறி­விக்­காமை குறித்து பாத்­திமா ஹாதி­யா­வுக்கு எதி­ராக பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 5 ஆம் அத்­தி­யா­யத்தின் அ, ஆ பிரி­வு­களின் கீழ் குற்றப் பகிர்வுப் பத்­திரம் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

எச்.சி. 653/ 21 எனும் குறித்த குற்றப் பகிர்வுப் பத்­திரம் கடந்த 2021 நவம்பர் 12 ஆம் திகதி தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

அந்த குற்றப் பகிர்வுப் பத்­தி­ரத்தில், கோட்டை முன்னாள் நீதிவான் ரங்க திஸா­நா­யக்க, சி.ஐ.டி. அதி­கா­ரிகள், ஒரு இரா­ணுவ வீரர் உள்­ள­டங்­க­லாக 30 சாட்­சி­யா­ளர்கள் பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்­ள­துடன், சான்­றா­வ­ண­மாக ஒரே ஒரு ஒப்­புதல் வாக்குமூலம் மட்டும் நிர­லி­டப்­பட்­டுள்­ளது.

இது குறித்த வழக்கு, கல்­முனை மேல் நீதி­மன்­றத்தில் நீதி­பதி ஜெயராம் ட்ரொஸ்கி முன்­னி­லையில் கடந்த செப்­டம்பர் 30 ஆம் திகதி முன் விளக்க மாநாட்­டுக்­காக விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

இதன்­போதே பிர­தி­வாதி ஹாதி­யா­வுக்­காக சட்­டத்­த­ரணி ரிஸ்வான் உவை­ஸுடன் ஆஜ­ராகி சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் மேற்­படி விட­யங்­களை மன்றில் முன் வைத்தார்.

இத­னி­டையே, சஹ்ரான் ஹஷீமின், மனைவி அப்துல் காதர் பாத்­திமா ஹாதியா வழங்­கி­யுள்ள குற்ற ஒப்­புதல் வாக்கு மூலத்தின் சுயா­தீனத் தன்மை குறித்து தீர்­மா­னிக்க உண்மை விளம்பல் விசா­ரணை ஒன்­றினை முன்­னெ­டுக்க கல்­முனை மேல் நீதி­மன்றம் இதன்­போது தீர்­மா­னித்­துள்­ளது.

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 8 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் கோட்டை நீதி­வா­னிடம் வழங்­கப்­பட்­டுள்ள குறித்த ஒப்­புதல் வாக்குமூலத்தின் சுயா­தீனத் தன்­மையை, அப்துல் காதர் பாத்­திமா ஹாதியா சார்பில் மன்றில் ஆஜ­ராகும் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் சவா­லுக்கு உட்­ப­டுத்­திய நிலை­யி­லேயே, இந்த உண்மை விளம்பல் விசா­ர­ணையை முன்­னெ­டுக்க நீதி­மன்றம் தீர்­மா­னித்­துள்­ளது.

அவ்­வா­றான விசா­ரணை ஒன்­றுக்கு, வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் தரப்பும் எதிர்ப்பு வெளி­யி­டாத நிலையில், இந்த வழக்கில் ஒரே ஒரு சான்­றான ஒப்­புதல் வாக்குமூலம் தொடர்பில் உண்மை விளம்பல் விசா­ர­ணையை முன்­னெ­டுக்க நீதி­மன்றம் தீர்­மா­னிப்­ப­தாக கல்­முனை மேல் நீதி­மன்ற நீதி­பதி ஜெயராம் ட்ரொஸ்கி அறி­வித்தார்.
கடந்த செப்­டம்பர் 30 ஆம் திகதி முன் விளக்க மாநாட்டின் போது, வழக்குத் தொடு­நரால் முன்­மொ­ழி­யப்­பட்ட ஏற்­புகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. இதன்­போது வழக்குத் தொடு­நரால் 24 ஏற்­புகள் முன் மொழி­யப்­பட்ட போதும் அதில் பெரும்­பா­லா­னவையை ஏற்க பிர­தி­வாதி தரப்பு இணங்­க­வில்லை.

பாத்­திமா ஹாதியா பயங்­கர­வாத தடைச் சட்­டத்தின் 8 ஆம் பிரிவின் கீழ் வழங்­கிய வாக்­கு­மூ­லங்கள் கோட்டை நீதவான் நீதி­மன்­றத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­மையை பிர­தி­வாதி தரப்பு ஏற்­றுக்­கொண்ட போதும், அவ்­வாறு வழங்­கப்­பட்ட வாக்­கு­மூ­லங்கள் சி.ஐ.டி.யினரின் அச்­சு­றுத்தல், வாக்­கு­றுதி அல்­லது வேறு சட்­ட­வி­ரோ­த­மாக ஏற்­ப­டுத்­தப்­பட்ட எதிர்­பார்ப்­பு­களின் நிமித்தம் வழங்­கப்­பட்­ட­தா­கவும் அந்த குற்ற ஒப்­புதல் வாக்­கு­மூ­லங்கள் சுய­வி­ருப்பின் பேரில் வழங்­கப்­ப­ட­வில்லை எனவும் பிர­தி­வாதி சார்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லே­யே நீதி­மன்றம் குற்ற ஒப்­புதல் வாக்கு மூலம் தொடர்பில் உண்மை விளம்பல் விசா­ர­ணை­யினை முன்­னெ­டுக்க தீர்­மா­னித்­தது.
இத­னை­விட, சாய்ந்­த­ம­ருது – வெலி­வே­ரியன் கிரா­மத்தில் நடந்த சம்­ப­வத்­தையும், 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த வெடிப்புச் சம்­ப­வங்­களும் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் என வழக்குத் தொடுநர் கைய­ளித்த ஏற்­பு­களில் முன் மொழி­யப்­பட்­டி­ருந்­தன.
எனினும் பிர­தி­வாதி, குறித்த தாக்­கு­தல்கள் தற்­கொலை தாக்­கு­தல்­களா அல்­லது வேறு வடி­வங்­களைக் கொண்­ட­னவா என்­பது தொடர்பில் தனக்கு தெரி­யாது என அறி­வித்து அந்த ஏற்­பு­களை திருத்­தங்­க­ளுடன் ஏற்­றி­ருந்தார்.

பிர­தி­வாதி ஹாதி­யா­வுக்­காக ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப், ‘2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த தாக்­கு­தல்கள் தற்­கொலை தாக்­கு­தல்­களா அல்­லது வேறு உக்­தி­களைக் கொண்­டதா என இன்னும் நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை. அது குறித்த சிறப்பு ட்ரயல் அட்பார் நீதி­மன்ற விசா­ர­ணைகள் நிலு­வையில் உள்ள நிலையில், அவை தற்­கொலை தாக்­கு­தல்­களே என வழக்குத் தொடுநர் தரப்பு ஏற்­பு­களை முன் வைத்­துள்­ளனர். அதனை ஒரு­போதும் ஏற்க முடி­யாது. மற்­றை­யது, எனது சேவை பெறு­ந­ருக்கு, அந்த தாக்­கு­தல்­களின் வடிவம் தொடர்பில் எதுவும் தெரி­யாது. எனவே அதனை ஏற்க முடி­யாது.’ என குறிப்­பிட்டார்.

கடந்த செப்­டம்பர் 30 ஆம் திகதி நடந்த வழக்கின் முன் விளக்க மாநாட்டின் போது, பிர­தி­வாதி தரப்­பி­னரால் நியா­ய­மான வழக்கு விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் பொருட்டு, 5 முக்­கிய சான்­றா­வ­ணங்கள் வழக்குத் தொடு­ந­ரிடம் கோரப்­பட்­டது. அதா­வது பிர­தி­வாதி குற்­ற­மற்­றவர் என உறுதி செய்ய அந்த ஆவ­ணங்கள் அவ­சியம் என சுட்­டிக்­காட்டி இவ்­வாறு அவை கோரப்­பட்­டன.

1. உடைந்த நிலையில் மீட்­கப்­பட்­ட­தாக கூறப்­பட்ட சஹ்ரான் ஹஷீமின் தொலை­பே­சியின் பகுப்­பாய்வு அறிக்கை (அதி­லி­ருந்த மென் பொருட்கள், செய­லிகள் உள்­ள­டங்­க­லாக)
2. 0752607503 எனும் ‘கவிதா ‘ என்­பவர் (சாராவின் தாயார்)பயன்­ப­டுத்­திய தொலை­பேசி பகுப்­பாய்வு அறிக்கை
3. சாரா ஜெஸ்மின் பயன்படுத்­திய தொலை­பேசி குறித்த முழு­மை­யான பகுப்­பாய்வு அறிக்கை
4. பிர­தி­வாதி பாத்­திமா ஹாதியா, குண்டு வெடிப்பில் காய­ம­டைந்து அம்­பாறை மற்றும் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டமை, அங்­கி­ருந்து சிகிச்­சை­களை முடித்­துக்­கொண்­டமை தொட­ர்­பி­லான ஆவ­ணங்கள்
5. கல்­முனை நீதி­மன்றின் கீழ் நிலு­வையில் உள்ள 671/21 எனும் இலக்­கத்தை உடைய வழக்கின் முழு­மை­யான கோவை (சாரா தப்பிச் செல்ல உத­வி­ய­தாக கூறி கைதான பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் அபூ­பக்­க­ருக்கு எதி­ரான வழக்கு)

இந்த பிர­தான 5 கோரிக்­கை­களை மையப்­ப­டுத்தி வழக்­குதி பிர­தி­வாதி தரப்பில் முன் வைக்­கப்­பட்ட வாதங்­க­ளுக்கு வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜ­ரான பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் தமது தரப்பு நிலைப்­பாட்டை மன்றில் முன்­னி­றுத்­தினார்.

‘சஹ்ரான் பயன்­ப­டுத்­திய தொலை­பேசி குறித்த பகுப்­பாய்வு அறிக்கை பிர­தி­வாதி தரப்பால் கோரப்­ப­டு­கின்­றது. சஹ்ரான் பயன்­ப­டுத்­திய உறு­தி­யான இலக்­கங்கள் அளிக்­கப்­ப­டு­மாக இருந்தால், அது குறித்த தக­வல்கள் வழக்குத் தொடுநர் தரப்­பிடம் இருந்தால், இந்த நீதி­மன்றம் கட்­டளை இடு­மாக இருந்தால் அந்த தக­வல்­களை வழங்க ஆட்­சே­பனை இல்லை. எனினும் கோரப்­படும் விட­யங்­களின் காலப்­ப­கு­தியும் கூறப்­படல் வேண்டும். பிர­தி­வாதி கோரும் விட­யங்கள், வழக்­குடன் தொடர்­பு­ப­டா­தவை. எனினும் நீதி­மன்றம் தீர்­மா­னிக்­குமால் மட்டும், வழக்குத் தொடு­ந­ரிடம் அந்த தக­வல்கள் இருந்தால் வழங்க ஆட்­சே­பனை இல்லை.

எம்மை பொறுத்­தவை, இவ்­வ­ழக்கை நிரூ­பிக்க எமக்கு சஹ்­ரானின் தொலை­பேசி பகுப்­பாய்வு அறிக்கை தேவை­யற்­றது.

அதே போல கவிதா மற்றும் சாரா ஜெஸ்­மினின் தொலை­பேசி பகுப்­பாய்­வுகள் தொடர்­பிலும் வழக்குத் தொடு­நரின் நிலைப்­பாடு, சஹ்­ரானின் தொலை­பேசி பகுப்­பாய்வு அறிக்கை கோரலை ஒத்­தது.

பிர­தி­வாதி ஹாதி­யாவின் சிகிச்சை தொடர்­பி­லான ஆவ­ணங்­களை கைய­ளிக்க வழக்குத் தொடுநர் தரப்பு தயா­ராக உள்­ளது.
இம்­மன்றில் உள்ள மற்­றொரு வழக்கு ஆவணம் தொடர்பில் முன் வைக்­கப்­பட்­டுள்ள கோரிக்கை தொடர்பில், அதனை பிர­தி­வாதி தரப்பு நகர்த்தல் பத்­திரம் ஊடாக பெற்­றுக்­கொள்ள முடியும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும்.’ என பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் குறிப்­பிட்டார்.

இத­னை­ய­டுத்து மீளவும் மன்றில் வாதங்­களை முன் வைத்த சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப், ‘சஹ்ரான் மற்றும் சாரா ஆகி­யோரின் தொலை­பேசி பகுப்­பாய்வுப் பதி­வுகள் வழக்குத் தொடு­ந­ருக்கு சாட்­சி­ய­மாக தேவைப்­ப­டா­விட்­டாலும், இவ்­வ­ழக்­குக்கு மிக முக்­கி­ய­மான சாட்­சி­க­ளாக பிர­தி­வாதி தரப்பு கரு­து­கி­றது.

சஹ்­ரானின் ‘ஹுவாவி’ ரக கைய­டக்கத் தொலை­பே­சியில் இருந்த செயலி (திரிமா) உள்­ளிட்ட விட­யங்கள் குறித்த பகுப்­பாய்வு அறிக்­கையே வேண்டும். கடந்த 2018 ஒக்­டோபர் முதல் 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி வரை­யி­லான காலப்­ப­கு­திக்­கு­ரி­ய­தாக அவை அமையப் பெற்­றி­ருத்தல் வேண்டும்.’ என குறிப்­பிட்டார்.

இத­னை­ய­டுத்து வழக்குத் தொடுநர் சார்பில் ஆஜ­ரான பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் மீளவும் வாதங்­களை முன் வைத்தார்.

‘மன்றில் சட்ட மா அதிபர் முன் வைக்­கப்­பட்­டுள்ள குற்றப் பத்­தி­ரிகை பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழா­னது. அதி­லுள்ள குற்­றச்­சாட்­டினை உறுதி செய்ய வழக்குத் தொடு­ந­ருக்கு, பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 8 ஆம் பிரிவின் கீழ் பிர­தி­வாதி வழங்­கி­யுள்ள ஒப்­புதல் வாக்கு மூலம் போது­மா­னது.

குறித்த ஒப்­புதல் வாக்கு மூலம் சுயா­தீ­ன­மா­னது என தீர்­மா­னிக்­கப்­ப­டு­மாக இருந்தால், அதில் உள்­ள­டங்கும் விட­யங்­களும் உண்மை என்றே கரு­தப்­படும். மாற்­ற­மாக, ஒப்­புதல் வாக்கு மூலத்தில் கூறப்­பட்­டுள்ள விட­யங்­களை உண்மை என புறம்­பாக நிரூ­பிக்க வேண்­டிய தேவை வழக்குத் தொடு­ந­ருக்கு இல்லை. வழக்குத் தொடு­நரை பொறுத்­தவரை, பிர­தி­வாதி பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 8 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் நீதி­வா­னுக்கு வழங்­கிய வாக்குமூலம் சுயா­தீ­ன­மா­னது என கரு­து­வ­தா­லேயே நாம் அதனை மையப்­ப­டுத்தி இவ்­வ­ழக்கை தாக்கல் செய்­துள்ளோம்’ என குறிப்­பிட்டார்.

இத­னை­ய­டுத்து சஹ்ரான், சாரா, சாராவின் தாயாரின் தொலை­பேசி பகுப்­பாய்வு அறிக்­கைகள் குறித்து முன் வைக்­கப்­பட்ட நீண்ட சமர்ப்­ப­ணங்­களை மையப்­ப­டுத்தி நீதி­பதி ஜெயராம் ட்ரொஸ்கி தனது உத்­த­ரவை அறி­விக்கையில், “பிர­தி­வாதி தரப்பு கோரும் தொலை­பேசி பகுப்­பாய்வு அறிக்­கைகள், விசா­ர­ணை­யா­ளர்கள் வசம் இருக்­கு­மானால் அதனை சாட்­சி­ய­ம­ளிக்கும் போது கைய­ளிப்­ப­தற்கு இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது.’ என்றார்.

இது இவ்வாறிருக்க குறித்த அவ் வழக்கு விசாரணையின் இடையே, பிரதிவாதி பாத்திமா ஹாதியா சார்பில் பிணை கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது. அது குறித்து ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள எழுத்து மூல சமர்ப்பணங்களை மையப்படுத்தி, அவரை பிணையில் விடுவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. நீண்டகாலமாக (மூன்று வருடங்கள் 5 மாதங்கள்) தடுப்புக் காவல் அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை, விஷேட காரணிகளை மையப்படுத்தி இந்த பிணை கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் குறித்த கோரிக்கை தொடர்பில் வழக்குத் தொடுநரால் தமது ஆட்சேபனைகளை எழுத்து மூலமாக சமர்ப்பிப்பதற்கு தவணை கோரப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் வழங்கப்பட்டது.

இதனையடுத்து, இது குறித்த வழக்கு மேலதிக முன் விளக்க மாநாடு தொடர்பிலும், பிணை தொடர்பிலான தீர்மானத்துக்காகவும் எதிர்வரும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் தலைமையில், அரச சட்டவாதிகளான சத்துரி விஜேசூரிய, மாதினி விக்னேஷ்வரன் ஆகியோரும் பிரதிவாதிக்காக சிரேஷ்ட சட்டத்தரண் ருஷ்தி ஹபீப் தலைமையின் சட்டத்தரணி ரிஸ்வான் உவைஸ் உள்ளிட்ட குழுவினரும் மன்றில் ஆஜராகினர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.