புதிய அரசியலமைப்பின் மாற்றங்கள் ஏற்படுத்தக் கூடிய திருப்பங்கள் என்ன?

0 600

சட்டங்களின் அடிப்படையை அரசியலமைப்பு என்று சொல்லுவார்கள். அந்தவகையில் அரசாங்கத்தை எவ்வாறு இயக்குவது என்ற ஒழுக்கக் கோவையாக அரசியலமைப்பைக் கருதலாம். அரசாங்கத்தை எடுத்துக் கொண்டால் அதில் நீதித்துறை நிர்வாகத் துறை மற்றும் சட்டவாக்கத் துறை என்ற மூன்று துறைகள் இருக்கின்றன. இந்த மூன்று துறைகளும் சுதந்திரமாகவும் நியாயமாகவும் இயங்குவதை உறுதி செய்வதே சுதந்திரம் ஆகும். ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு அளவுக்கு அதிகமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதால் நீதித்துறை மிக மோசமானளவு பாதிக்கப்பட்டுள்ளது. நீதித்துறையின் அதிகாரம் பாதிக்கப்படும்போது சட்டவாட்சி பாதிக்கப்படுகின்றது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் என்பவற்றுக்கான நீதிபதிகளை ஜனாதிபதி நியமிப்பதால் நீதித்துறையில் சுதந்திரத்தை எதிர்பார்க்க முடியாதுள்ளது. நீதித்துறையில் இருந்து இயலுமான வரை நிர்வாக அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் தலையீட்டினை குறைக்கும்போதுதான் நீதித்துறையின் சுதந்திரத்தினை பேண முடியும். நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நீதித்துறை நிர்வகிக்கப்படலாம். நிறைவேற்றுத் துறைக்கு ஜனாதிபதி தலைவராக இருக்கலாம். அதேபோன்று சட்டவாக்கத் துறை சுயமாக இயங்குவதும் உறுதி செய்யப்பட வேண்டும்.

நீதித் துறை மற்றும் நிர்வாகத் துறை என்பவற்றில் மோசடிகள் நடைபெறாமல் இருந்தாலுமே கூட குறித்த துறைகளுக்கான தலைவர்களை ஜனாதிபதி நியமிப்பாராக இருந்தால் மக்கள் மத்தியில் அவை தொடர்பாக சந்தேகங்கள் தோன்றுவது இயல்பானது. எனவே மூன்று துறைகளினதும் தலைமை பொறுப்புகளில் இருந்து ஜனாதிபதி விலகியிருப்பதே சாலச் சிறந்தது.

அவதானிப்பு மற்றும் கட்டுப்பாடு என்பவற்றின் ஊடாக ஜனாதிபதி மூன்று துறைகளையும் நிர்வகிப்பது சிறந்ததாக அமையும். ஆனால் தலைமை பொறுப்புகளில் இருப்பது ஏற்ற முடிவு கிடையாது. நீதித்துறைக்கு அதிகமான அதிகாரம் கொடுப்பதும் தீதை ஏற்படுத்தும். நீதித்துறையின் செல்வாக்கு சட்டவாட்சி மற்றும் நிறைவேற்றுத் துறையில் இருப்பது சிறந்ததல்ல. இந்த மூன்று துறைகளும் தமது பொறுப்புகளை சரியாக செய்வதுடன் மூன்று துறைகளுக்கும் இடையில் ஒரு உறவு பேணப்பட வேண்டும். ஆனால் ஒரு துறையை இன்னொரு துறை கட்டுப்படுத்தும் நிலைமை இருக்கக் கூடாது.

இலங்கையிலுள்ள அரசியலமைப்பில் சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கக் கூடிய சாத்தியங்கள் எற்படக்கூடிய சட்ட ஏற்பாடுகள் இல்லை. ஆனால் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் விதத்தை எடுத்துக்கொள்ளும்போது அதுபற்றி சிந்திக்க வேண்டியிருக்கிறது. சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டிருக்கின்ற சலுகைகளை உரிய முறையில் அவர்கள் பெற்றுக்கொள்ள இலகுவான பொறிமுறைகளை அரசியலமைப்பில் உள்வாங்குவது இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்.

இந்தக் கட்டுரை Reform Watch என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பிஷ்ரின் மொஹமட் தொகுத்து வழங்கிய சட்டத்தரணி முஹம்மது நளீம் அவர்களுடனான நிகழ்ச்சியில் இருந்து தொகுக்கப்பட்ட விடயங்கள் ஆகும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.