ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி: ஞானசாரரின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளமாட்டேன்

மு.கா.வுடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில் திட்டவட்டம்

0 335

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவின் எண்­ணக்­க­ருவில் அவரால் நிய­மிக்­கப்­பட்ட ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­ல­ணியின் சிபா­ரி­சுகள் அடங்­கிய அறிக்­கையை தான் ஏற்­றுக்­கொள்ளப் போவ­தில்லை எனவும், அது குறித்து எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­மாட்­டா­தெ­னவும் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று மு.கா. தலைவரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்­கீ­மிடம் உறு­தி­ய­ளித்தார்.

நேற்று மாலை ஜனா­தி­ப­திக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் பிரதிநிதி­க­ளுக்­கு­மி­டையில் சந்­திப்­பொன்று ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெற்­றது. இச்­சந்­திப்­பின்­போது பொது­ப­ல­சேனா அமைப்பின் தலைவர் ஞான­சா­ர­தே­ரரின் தலை­மை­யி­லான ஜனா­தி­பதி செய­ல­ணியின் அறிக்கை தொடர்பில் ரவூப் ஹக்கீம் ஜனா­தி­ப­தி­யிடம் கேள்வி யெழுப்­பினார். அதற்குப் பதி­ல­ளிக்­கை­யிலேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

சர்­வ­கட்சி அர­சொன்­றினை நிறு­வு­வது தொடர்பில் இடம்­பெற்ற இப்­பேச்­சு­வார்த்­தையில் ரவூப் ஹக்கீம் சில கோரிக்­கை­களை ஜனா­தி­ப­தி­யிடம் முன்­வைத்தார்.

சர்­வ­தே­சத்தில் நாட்­டுக்கு நற்­பெ­யரைத் தேடித்­த­ராத, நாட்­டுக்கு உகந்­த­தல்­லாத அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட வேண்டும். ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­ப­டுவோர் கைது செய்­யப்­ப­டு­வது தவிர்க்­கப்­ப­ட­வேண்டும். கிழக்­கினை இலக்கு வைத்து இன­ரீ­தி­யாக முன்­னெ­டுக்­கப்­படும் தொல்­பொருள் நட­வ­டிக்­கைகள் தவிர்க்­கப்­ப­ட­வேண்டும். இது ஒரு சமூ­கத்தை இலக்கு வைத்து முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாகும் என்றும் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

மேலும் தற்­போ­தைய அர­சாங்கம் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை தர­மு­யர்த்தி வரு­கின்­ற­மைக்கு நன்றி தெரி­வித்த முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர், இந்­தப்­பட்­டி­யலில் சம்­மாந்­துறை, மூதூர் போன்ற உள்­ளூ­ராட்சி மன்­றங்­களும் உள்­வாங்­கப்­ப­ட­வேண்­டு­மெ­னவும் வேண்­டினார்.

மாகாண சபை தேர்தல் நடாத்­து­வ­தற்கு தயா­ரா­கும்­போது அது பழைய முறையில் தாம­தி­யாது நடத்­தப்­ப­ட­வேண்டும். தமிழ் முஸ்லிம் சமூகம் தொடர்­பாக பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வின்­போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புடன் கலந்­து­ரை­யா­டப்­ப­ட ­வேண்டும்.

சர்­வ­கட்சி அர­சாங்கம் நிறு­வப்­ப­டு­வ­தற்கு முன்பு தேசிய சபை­யொன்று உரு­வாக்­கப்­ப­டு­வ­துடன் தேசிய வேலைத்­திட்­ட­மொன்று தயா­ரிக்­கப்­படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் பிர­தி­நி­தி­க­ளிடம் ஜனா­தி­பதி தெரி­வித்தார்.

கண்டி மாவட்­டத்தில் நாவ­லப்­பிட்­டியில் அண்­மையில் ஏற்­பட்ட வெள்ள அனர்த்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கப்­ப­ட­வேண்­டு­மெ­னவும், அவர்கள் அவ்­வி­டத்­தி­லி­ருந்து வேறு இடத்­துக்கு குடி­யேற்­றப்­ப­ட­ வேண்­டு­மெ­னவும் ரவூப் ஹக்கீம் ஜனா­தி­ப­தியை வேண்­டிக்­கொண்டார்.

ரவூப் ஹக்கீம் மற்றும் பேச்­சு­வார்த்­தையில் கலந்து கொண்ட ஏனைய முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் கோரிக்­கை­களை ஜனா­தி­பதி குறிப்­பெ­டுத்துக் கொள்­ளு­மாறு தனது அதி­கா­ரிக்கு உத்­த­ர­விட்டார்.

அத்­துடன் தேசிய சபை­யொன்று நிறு­வப்­ப­ட­வுள்­ள­துடன் மாகாண மட்­டத்­திலும் ஆலோ­சனை சபை உரு­வாக்­கப்­படும் என்று ஜனா­தி­பதி தெரி­வித்தார்.

ஜனா­தி­ப­தி­யு­டான பேச்சு வார்த்தையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், எம்.எஸ். தெளபீக், கட்சியின் செயலாளர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர், பிரதி தவிசாளர் எம்.நயீமுல்லா, பிரதி தேசிய அமைப்பாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் உடனிருந்தனர். பிரதமரும் பேச்சுவார்த்தையில் பங்கு கொண்டிருந்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.