அலிசப்ரி வெளிவாவிவகார அமைச்சை பொறுப்பேற்றது கோத்தாவை காப்பாற்றவா?

0 413

றிப்தி அலி

இலங்­கையின் 8ஆவது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக பாரா­ளு­மன்­றத்தின் ஊடாக தெரி­வு­செய்­யப்­பட்ட ரணில் விக்­ர­ம­சிங்­கவின் முத­லா­வது அமைச்­ச­ரவை கடந்த வெள்­ளிக்­கி­ழமை (22) நிய­மிக்­கப்­பட்­டது. இதன்­போது 28 அமைச்­சுக்­க­ளுக்­காக 18 பேர் நிய­மிக்­கப்­பட்­டனர். முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­ப­க்ஷவின் ஆட்­சியில் ரணில் விக்­ர­ம­சிங்க பிர­த­ம­ராக செயற்­பட்ட போது நிய­மிக்­கப்­பட்ட அதே அமைச்­சர்­களே இந்த புதிய அமைச்­ச­ர­வை­யிலும் அதே பத­வி­க­ளு­ட­னேயே நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

ரணில் விக்­ர­ம­சிங்­கவின் ஆட்­சியில் நிய­மிக்­கப்­ப­டு­கின்ற புதிய அமைச்­ச­ரவை, பல்­வேறு மாற்­றங்­க­ளுடன் புது­மு­கங்­க­ளுக்கு வாய்ப்பு வழங்­கப்­படும் என நாட்டு மக்கள் எதிர்­பார்த்­தி­ருந்­தனர். எனினும், குறித்த எதிர்­பார்ப்பு நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. எனினும், இது­வொரு இடைக்­கால அமைச்­ச­ரவை எனவும், அனைத்து கட்­சி­க­ளையும் உள்­ள­டக்­கிய சர்வ கட்சி அமைச்­ச­ர­வை­யொன்று விரைவில் நிய­மிக்­கப்­படும் என அர­சாங்க தரப்­பினர் தெரி­வித்து வரு­கின்­றனர். எனினும், சர்வ கட்சி அமைச்­ச­ரவை எப்­போது நிய­மிக்­கப்­படும் என்ற விடயம் இன்று வரை உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

இதே­வேளை, ரணில் விக்­ர­ம­சிங்­கவின் இந்த அமைச்­ச­ர­வையில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி சப்ரி மாத்­திரம் புது­மு­க­மாகக் காணப்­ப­டு­கின்றார். அமைச்­ச­ர­வைக்கு இவர் பழை­யவர் என்­றாலும், ரணில் தலை­மை­யி­லான அமைச்­ச­ர­வைக்கு இவர் புது­மு­க­மாகும்.

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தவி­சா­ளரும், மூத்த அர­சி­யல்­வா­தி­யுமான பேரா­சி­ரியர் ஜீ.எல். பீரிஸ், ஜனா­தி­பதித் தேர்தல் வாக்­கெ­டுப்பில் ரணில் விக்­ர­ம­சிங்­க­வினை எதிர்த்து போட்­டி­யிட்ட டலஸ் அழ­கப்­பெ­ரு­ம­வினை ஆத­ரித்­தி­ருந்தார். இதனால், மிக நீண்ட கால­மாக வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக செயற்­பட்டு வந்த ஜீ.எல். பீரிஸ், குறித்த பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டுள்ளார்.

இப்­ப­த­விக்கு பொருத்­த­மான கல்வித் தகை­மை­யு­டைய ஒரு­வரை நிய­மிக்க வேண்­டி­யி­ருந்­தது. அந்த இடத்­தினை நிரப்­பு­வ­தற்­கா­கவே அலி சப்ரி ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

இந்த நிய­ம­னத்தின் மூலம், 28 வரு­டங்­க­ளுக்கு பின்னர் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரொ­ருவர் வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவின் மாமா­வான ஜே.ஆர். ஜெய­வர்த்­த­னவின் ஆட்சிக் காலத்தில் கண்டி மாவட்­டத்தின் ஹாரிஸ்­பத்­துவ (அக்­கு­றணை) தேர்தல் தொகு­தியின் பாரா­ளுமன்ற உறுப்­பி­ன­ரான ஏ.சி.எஸ். ஹமீட் வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்டார்.
இலங்கையின் முத­லா­வது முஸ்லிம் வெளி­வி­வ­கார அமைச்­ச­ரான அவர், 1977 முதல் 1989ஆம் ஆண்டு வரையும், 1993 ஆம் ஆண்டும் வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக பணி­யாற்­றி­யி­ருந்தார்.

இதே­வேளை, முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­ப­க்ஷவின் மிகவும் நம்­பிக்­கை­யா­ன­வ­ராக செயற்­பட்ட அலி சப்ரி, அவரின் விசேட சிபா­ரிசின் கீழ்ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக நிய­மிக்­கப்­பட்டார்.
அது மாத்­தி­ர­மல்­லாமல், பாரா­ளு­மன்ற அர­சி­யலில் எந்­த­வித முன் அனு­ப­வ­மு­மற்ற அவர், முதற் தட­வை­யி­லேயே நீதி மற்றும் நிதி ஆகிய விட­யங்­க­ளுக்கு பொறுப்­பான அமைச்­ச­ராக முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­ப­க்ஷ­வினால் நிய­மிக்­கப்­பட்டார்.
எனினும், கடந்த மே 9 ஆம் திகதி மஹிந்த ராஜ­பக்ஷ பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து இரா­ஜி­னாமாச் செய்­த­மை­யினால், அலி சப்­ரியும் தனது அமைச்சர் பத­வி­யினை இழக்க வேண்­டி­யேற்­பட்­டது.

இதன் பின்னர், பாரா­ளு­மன்­றத்தில் அவர் விசேட உரை­­யொன்­றினை நிகழ்த்­திய போது, “மீண்டும் இந்தப் பாரா­ளு­மன்­றத்­திற்கு வர­மாட்டேன், எந்­த­வித பத­வி­க­ளையும் எடுக்­க­மாட்டேன்” என அறி­வித்­தி­ருந்தார்.

இவ்­வா­றான நிலையில், வெளி­வி­வ­கார அமைச்சர் பத­வி­யினை தற்­போது இவர் பொறுப்­பேற்­றுள்­ளமை மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களுக்கு வித்திட்டுள்ளது.
முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ, கடந்த 2005ஆம் ஆண்டு அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து நாட்­டுக்கு வந்து பாது­காப்பு செய­லாளர் பத­வி­யினை பொறுப்­பேற்­றது முதல் அவர் ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­படும் வரை அவ­ரது சட்ட ஆலோ­ச­க­ராக அலி சப்­ரியே செயற்­பட்டார்.

இந்த நிலையில் தற்­போது சிங்­கப்­பூ­ருக்கு தப்­பி­யோ­டி­யுள்ள தனது சேவை நாடி­யான முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­ப­க்ஷ­வினை பாது­காத்து அவரை மீண்டும் நாட்­டுக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்­கா­கவே இந்த பத­வி­யினை இவர் பொறுப்­பேற்­றுள்­ள­தாக சந்தேகிக்­கப்­ப­டு­கின்­றது.

இது தொடர்பில் அலி சப்­ரிக்கு எதி­ராக பல விமர்­ச­னங்கள் சமூக ஊட­கங்­களில் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்த விமர்­ச­னங்­களை மறுக்கும் வகையில் எந்­த­வொரு அறிக்­கை­க­ளையும் அவர் இது­வரை வெளி­யி­ட­வில்லை.

இதே­வேளை, கடந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தில் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினால் கோட்­டா­பய ராஜ­ப­க்ஷ­விற்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களின் முக்­கிய தக­வல்­களை அப்­போ­தைய சட்டம் மற்றும் பாது­காப்பு அமைச்சர் சாகல ரத்­னா­­யக்க, அலி சப்­ரி­யுடன் பகிர்ந்த­தாக சமூக ஊட­கங்­களில் தொடர்ச்­சி­யாக குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இதனால், கோட்­டா­பய ராஜ­பக்ஷ கைது செய்­யப்­ப­டு­வதை பல தட­வைகள் அலி சப்­ரியின் சட்ட நுணுக்­கங்களின் ஊடாக தடுக்­கப்­பட்­ட­தா­கவும் தெரிவிக்கப்படுகின்றது. அது போன்று, சிங்கப்பூரிலோ அல்லது வேறு நாடுகளிலோ முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்படுவதனை இராஜதந்திர ரீதியாக தடுக்கும் நோக்கிலேயே இவர் இந்த அமைச்சர் பதவியினை பொறுப்பேற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இவ்­வாறு, அமைச்சர் அலி சப்­ரிக்கு எதி­ராக முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு அவர் நிச்­ச­ய­மாக பதில் வழங்க வேண்டும்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை, தனது வெளிவிவகார அமைச்சர் பதவியின் ஊடாக அலி சப்ரி பாதுகாப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.