இலங்கையுடனான அரபு நாடுகளின் உறவு

0 695

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா

இன்­றைய பொரு­ளா­தார நெருக்­க­டிக்குப் பரி­காரம் காண்­ப­தற்­காகப் பல வழி­க­ளிலும் சர்­வ­கட்சி காபந்து அர­சாங்­கமும் அதனை ஆட்­டு­விக்கும் ஜனா­தி­ப­தியும் முயற்­சிக்கும் அதே வேளையில் சரிந்­து­கி­டக்கும் இலங்­கை­யு­ட­னான அரபு நாடு­களின் உறவை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய அவ­சி­யத்தைப் பற்றிச் சில சிந்­த­னை­களை விடி­வெள்ளி வாச­கர்­க­ளுடன் பகிர்ந்து கொள்­வதே இக்­கட்­டு­ரையின் நோக்கம். இது ஒரு நீண்ட ஆய்­வுக்­கு­ரிய விடயம். பல்­க­லைக்­க­ழகப் பட்­ட­தா­ரி­க­ளுக்கும் விரி­வு­ரை­யா­ளர்­க­ளுக்கும் பொருத்­த­மான ஓர் ஆய்வு விடயம். அதன் சுருக்­கத்­தைத்தான் இங்கே குறிப்­பிட முடியும். இதன் ஆங்­கில ஆக்­கத்தை கொழும்பு டெலி­கிறாப் இணைய இத­ழிலும் டெய்லி பைனான்­சியல் ரைம்ஸ் இத­ழிலும் வாசிக்­கலாம்.

ஆயிரம் ஆண்­டு­களைக் கடந்த உறவு
இலங்­கை­யு­ட­னான அர­பு­லக உற­வுக்கு ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கும் மேலான அகவை உண்டு. எட்டாம் நூற்­றாண்­டிலோ அதற்குச் சற்று முன்­னரோ இலங்கை மண்ணில் அர­பு­லக வணி­கர்கள் கால் பதித்த நாள் தொடக்கம் பதின்­மூன்று நூற்­றாண்­டு­க­ளாக எந்த முறி­வு­மின்றி (1915ல் ஏற்­பட்ட சிங்கள் முஸ்லிம் கல­வ­ரத்தைத் தவிர) 1948ல் குடி­யேற்­ற­வா­தி­களின் ஆதிக்கம் முடியும் வரை அந்த உறவு நீடித்­தது. அந்த உறவில் உரு­வாகி சந்­ததி சந்­த­தி­க­ளாகப் பெருகி பல்­லி­னக்­க­லப்­புடன் வளர்ந்­ததே இன்­றைய இலங்கை முஸ்லிம் சமூகம். அந்த உறவின் வலி­மையை கோடிட்­டுக்­காட்ட வேண்­டு­மாயின் பின்­வரும் ஒரு வர­லாற்று உண்­மையை முன்­வைக்­கலாம். ஆசி­யாவின் வர­லாற்­றி­லேயே ஒரு பௌத்த பெரும்­பான்மை இனத்­துக்கும் இஸ்­லா­மிய சிறு­பான்மை இனம் ஒன்­றுக்கும் இலங்­கையில் வளர்ந்த இறுக்­க­மான நேச உற­வைப்­போன்று வேறெந்த ஒரு நாட்­டிலும் வள­ர­வில்லை. அந்தப் பெருமை இலங்­கையை ஆண்ட பௌத்த மன்­னர்­க­ளையும் அவர்­களின் குடி­க­ளை­யுமே சாரும். அரசன் எவ்­வழி குடி­களும் அவ்­வழி. அவர்­க­ளு­டைய தயாளம், பொறுமை, விருந்­து­ப­சாரம், வேற்­று­மையில் ஒற்­றுமை காணும் மனப்­பான்மை ஆகி­ய­ன­வெல்லாம் ஒன்­று­சேர்ந்து ஈழ­மணித் திரு­நாட்டை அர­பு­ல­கெங்கும் ஜெசீ­ரத்துல் யாக்கூத் அல்­லது பொன்னும் மணியும் பூத்துக் குலுங்கும் நாடெனப் புகழ்­பெறச் செய்­தது. ஏன் இந்த நெருக்­கமும் உறவும் உரு­வா­கி­யது என்­பதை முதலில் விளங்­க­வேண்டும்.

இலங்­கைக்கு அரபு வணி­கர்கள் வரும்­போது அர­பு­லகில் அப்­பா­சியர் ஆட்சி ஆரம்­ப­மாகி அவர்­களின் கிலாபத் பேர­ரசு அக்­கா­லத்தில் உல­கி­லேயே மிகப்­பெரும் பொருட்­செல்­வமும் கலைச்­செல்­வமும் நிறைந்த ஒன்­றாக மிளிரத் தொடங்­கிற்று. அதனால் அப்­பா­சியப் பேர­ரசுச் சந்­தையில் இலங்­கையின் வாசனைத் திர­வி­யங்­களும் முத்தும் பவ­ளமும் வன உற்­பத்திப் பொருட்­களும் விலை­போ­வதை எந்த மன்­னன்தான் விரும்­பா­தி­ருப்பான்? எந்த நாடுதான் விரும்­பா­தி­ருக்கும்;? ஆக­வேதான் அரபு வணி­கர்­களை பௌத்த மன்­னர்கள் வர­வேற்­றதில் எந்த வியப்பும் இல்லை. அதே சமயம் இலங்­கையின் புகழ்­பெற்ற சம­ன­ல­கந்தை மலைக்­குன்று ஆதி­ம­னிதன் ஆதம் (அலை) கால் பதித்த புனித இடம் என்ற நம்­பிக்கை முஸ்­லிம்­க­ளி­டையே தொன்­று­தொட்டு நில­வு­கின்­றது. அதனைத் தரி­சிப்­பதில் சூபிகள் மிகவும் ஆர்வம் கொண்­டி­ருந்­தனர். ஆதலால் வணி­க­ருடன் சேர்ந்து அவர்­களும் வர­லா­யினர். அந்தச் சூபி­களே இலங்­கையின் முத­லா­வது சுற்­றுலாப் பய­ணிகள் என்று கூறு­வ­திலும் தவ­றில்லை.

ஆனால் இவற்­றை­வி­டவும் ஒரு முக்­கிய சம்­பவம் இவ்­வ­ர­வேற்­புக்குக் கார­ணமாய் அமைந்­ததை இலங்­கையின் வர­லாற்­றா­சி­ரி­யர்கள் குறிப்­பிட மறந்­தது ஆச்­ச­ரி­யமே. அதுதான் இலங்­கைக்கும் அப்­பா­சி­யரின் பக்­தா­துக்கும் இடை­யே­யுள்ள பௌத்த உறவு. பக்­தாதின் அப்­பா­சிய கிலாபத் மன்னர் சபையில் பரா­ம­கி­யரின் குடும்­பத்­தினர் கொடி­கட்­டிப்­ப­றந்­தமை இலங்­கையின் வர­லாற்­றா­சி­யர்­களுள் எத்­தனை பேருக்குத் தெரி­யுமோ? இந்த பரா­ம­கியர் குடும்பம் பார­சீ­கத்தின் பல்க் நகரின் நவ்­பகார் பௌத்­த­பீ­டத்தின் பரம்­பரைப் பரா­ம­ரிப்­பா­ளர்கள். அக்­கு­டும்­பத்திற் பிறந்த காலித் என்­பவர் அப்­பா­சிய குலத்தின் முத­லா­வது மன்னர் அல்-­சி­பா­வுடன் நட்­பு­ற­வு­பூண்டு இஸ்­லாத்தைத் தழுவி சிபாவின் ஆட்­சியில் பிர­தம மந்­தி­ரி­யானார். அவரின் புதல்வன் யஹ்யா, ஹாருன் அல் றஷீத் அப்­பா­சிய மகு­டத்தைக் கைப்­பற்றத் துணை­பு­ரிந்து அவரின் ஆட்­சியில் மிகவும் அதி­கா­ர­முள்ள ஒரு தலை­வ­ரானார். பின்னர் ஏற்­பட்ட ஒரு பிரச்­சி­னையில் (அது என்ன பிரச்­சினை என்­பதில் கருத்­து­வே­று­பா­டுகள் உண்டு) பரா­ம­கியர் யாவ­ருமே சிரைச்­சேதம் செய்­யப்­பட்­டாலும் பௌத்­தத்தின் செல்­வாக்கு அப்­பா­சியர் ஆட்­சியில் நில­வு­வ­தற்கு அக்­கு­டும்­பத்­தி­னரே காரணம் என்­பதை மறுக்க முடி­யாது. உதா­ர­ண­மாக, அவர்­க­ளா­லேதான் அப்­பா­சிய அறி­வா­ளிகள் அது­வரை கிரேக்க ஏடு­களைப் புரட்­டிப்­ப­டித்துக் கொண்­டி­ருந்­த­போது இந்­திய இந்து பௌத்த அறிவுப் பொக்­கி­ஷங்­க­ளையும் தேடு­வ­தற்கு ஊக்கம் பிறந்­தது. அல் பிரூணி இந்­தி­யா­வுக்கு வந்து இந்து பௌத்த ஏடு­களைப் படித்து அவற்றுட் சில­வற்றை அரபு மொழி­யிலே கொண்­டு­வந்­ததும் அந்த ஊக்­கத்தின் ஒரு விளைவே.

இவ்­வாறு பௌத்த செல்­வாக்கு அப்­பா­சியர் ஆட்­சியில் நில­வி­யமை இலங்கை மன்­னர்­க­ளுக்குத் தெரிந்­தி­ருக்­குமா என்ற ஒரு கேள்வி எழலாம். புதினத் தாள்­களும் நவீன செய்திச் சாத­னங்­களும் இல்­லாத அக்­கா­லத்தில் சுற்­றுலாப் பய­ணி­களும் கட­லோடி வர்த்­த­கர்­க­ளுமே செய்தி ஊட­கங்­க­ளாகச் செயற்­பட்­டனர். பக்­தா­திலே பிர­ப­ல­மான ஒரு பௌத்த குடும்பம் இஸ்­லாத்­தைத்­த­ழுவி உயர்­ப­த­வி­களில் அங்கம் வகித்­தி­ருந்­தது அங்­குள்ள வணிகர் சமூ­கத்தின் செவி­க­ளையும் சூபி­களின் கவ­னத்­தையும் பல வழி­க­ளிலும் எட்­டி­யி­ருக்கும். பள்­ளி­வா­சல்­களில் தினம்­தினம் முஸ்­லிம்கள் தொழு­கைக்­காகக் கூடிக்­க­லை­யும்­போது அவர்கள் நாட்டின் நடப்­பு­க­ளைப்­பற்றி தமக்குள் கலந்­து­ரை­யா­டு­வது இன்றும் நடை­பெறும் ஒரு நிகழ்வு. இலங்­கைக்கு வந்த வணி­கர்­களும் சூபி­களும் அந்தச் செய்­தியை இலங்­கை­யிலே அவர்­களின் வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டை­யேயும் ஏன் அர­சாங்க அதி­கா­ரி­க­ளி­டை­யே­யுமே பேசி அது ஈற்றில் மன்­னனின் மன்­றத்­தி­னையும் அடைந்­தி­ருக்க வாய்ப்­புண்டு. இவ்­வா­றெல்லாம் இஸ்­லா­மிய சாம்­ராஜ்­யத்தில் பௌத்­தத்தின் மகிமை தெரிந்­தி­ருந்­தமை இலங்­கையின் பௌத்த மன்­னர்­க­ளுக்கு முஸ்­லிம்­க­ளின்மேல் ஒரு தனி­ம­திப்பு ஏற்­படக் கார­ணமாய் அமைந்­தது என்ற வாதத்தை இல­குவில் தட்டிக் கழித்­து­விட முடி­யாது.

இலங்­கையின் முஸ்லிம் சாளரம்
இவ்­வாறு வளர்ந்த நெருக்­க­மான பௌத்த முஸ்லிம் உறவு இலங்கை சுதந்­திரம் அடைந்­ததன் பின்னர் எதிர்­பா­ராத ஒரு வரப்­பி­ர­சா­த­மாக மாறி­யது. அரபு நாட்டு அர­சு­களும் அரபு மக்­களும் இலங்கை முஸ்­லிம்கள் என்ற ஒரு சாள­ரத்தின் ஊடா­கவே இலங்­கை­யைப்­பற்றி அறிந்து கொண்­டனர். அதே­போன்று இலங்­கையின் அர­சாங்­கங்­களும் இந்­நாட்டு முஸ்லிம் சமூ­கத்தின் வளர்ச்­சி­யினை விளம்­ப­ரப்­ப­டுத்­தியே அரபு நாடு­களின் ஆத­ரவைத் தேடிக்­கொண்­டன. அது­மட்­டு­மல்ல, சிங்­கள மக்­க­ளுக்கும் தமிழ் மக்­க­ளுக்கும் இடையே வளர்ந்த அர­சியல் பிரச்­சி­னைகள் விரி­வ­டைந்து இலங்­கையின் சிறு­பான்மை இனங்­களை இலங்கை அர­சாங்­கங்கள் திட்­ட­மிட்டு நசுக்­கு­கின்­றன என்ற ஒரு கருத்து வெளி­யு­லகில் பர­வி­ய­போது முஸ்லிம் சமூ­கத்தின் பரஸ்­பர உற­வையும் அவர்கள் அர­சுக்கு வழங்கும் ஆத­ர­வையும் விளம்­ப­ரப்­ப­டுத்­தியே அந்தக் கருத்தை இலங்கை அர­சாங்­கங்கள் குறிப்­பாக அரபு நாடு­களில் செல்­லாக்­கா­சாக மாற்­றின. இவ்­வாறு முஸ்லிம் என்ற ஒரு சாள­ரத்தின் ஊடா­கவே அரபு நாடுகள் இலங்­கைமேல் ஒரு தனி மதிப்பை வளர்த்­தி­ருந்­தன. அந்த மதிப்­பினை ஒரு சில உதா­ர­ணங்­களைக் கொண்டு நிறு­வலாம்.

இலங்கை தனது வெளி­நாட்டு உறவில் அணி­சேராக் கொள்­கையைத் தழு­வி­யி­ருந்த காலம் அது. இந்­தியப் பிர­தமர் பண்­டிதர் நேரு, யூகோஸ்­லா­வி­யாவின் தலைவர் மார்ஷல் டிட்டோ, எகிப்தின் ஜனா­தி­பதி அப்துல் நாசர் என்ற முன்று தூண்­க­ளிலே கட்­டப்­பட்ட அணி­சேரா இயக்­கத்தில் இலங்­கையும் அங்­கத்­துவம் பெற்­றி­ருந்­தது. அந்த இயக்­கத்தின் 1976ஆம் ஆண்டின் மகா­நாடு; கொழும்பில் ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்க தலை­மையில் நடை­பெற்­ற­போது கொழும்­புக்கு வந்த அத்­தனை அரபு நாட்டுத் தலை­வர்­க­ளையும் கண்டு கொழும்பு மாந­கரே பிர­மித்து நின்­றதை யார்தான் மறுப்­பரோ? அந்தச் சில நாட்­க­ளுக்குள் அரபு நாட்டுத் தலை­வர்­க­ளுடன் இலங்­கையின் சிநேகம் மிகவும் நெருக்­கத்தை அடைந்­ததில் சந்­தே­க­மில்லை. அந்த நெருக்கம் பின்னர் எவ்­வாறு இலங்­கைக்கு ஒரு பொரு­ளா­தாரக் காப்­பு­று­தி­யாக அர­பு­லகில் மாறிற்று என்­ப­தற்கு இரு சம்­ப­வங்கள் சாட்சி பகர்­கின்­றன. ஒன்று ஸ்ரீமா­வோவின் இட­து­சாரிக் கூட்­டணி ஆட்­சியில் நடந்­தது.

இலங்கை சோஷ­லிசப் பொரு­ளா­தாரக் கொள்­கை­களைத் தழு­வி­யதால் மேற்கு நாடு­களின் வெறுப்­புக்கு ஆளா­கி­யது. அவ்­வணி பல பொரு­ளா­தார இடர்­களை இலங்­கை­மீது சுமத்­தின. அதனால் இன்­றுபோல் அன்றும் அன்­னியச் செலா­வணிப் பிரச்­சி­னை­யொன்று உரு­வா­கி­யது. அந்த வேளை­யி­லேதான் பிர­தமர் அவ­ரது கல்வி அமைச்சர் பதி­யுத்தீன் மஹ்மூத் அவர்­களை மத்­திய கிழக்­குக்கு அனுப்பி அவ­சர உத­வி­களைப் பெற்று ஓர­ளவு பிரச்­சி­னைக்குத் தீர்வு கண்டார். இரண்­டா­வது சம்­பவம் மேற்கு நாடு­களின் பக்­த­ரான ஜே. ஆர். ஜெய­வர்த்­தன ஆட்­சியில் நடை­பெற்­றது. 1982ல் ஏற்­பட்ட உலக நிதி நெருக்­கடி இலங்­கைக்கு எரி­பொருள் தட்­டுப்­பாட்டை ஏற்­ப­டுத்­திற்று. ஜே. ஆர். செய்த முதல் வேலை அவ­ரது வெளி­நாட்டு அமைச்சர் ஷாகுல் ஹமீத் அவர்­களை அவ­சர அவ­ச­ர­மாக லிபி­யா­வுக்கு அனுப்பி அந்­நாட்டின் தலைவர் கதா­பி­யி­ட­மி­ருந்து உட­ன­டி­யாக எரி­பொருள் பெற்றுக் கொண்டு பிரச்­சி­னைக்குத் தீர்வு கண்­டமை. இவ்­வாறு இரு வேறு­பட்ட காலங்­களில் இரு வேறு­பட்ட கொள்­கை­க­ளை­யு­டைய அர­சுகள் இரு முஸ்லிம் அமைச்­சர்­களைக் கொண்டு பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு கண்­டமை முஸ்லிம் சாள­ரத்தின் ஊடாக அரபு நாடுகள் இலங்­கைமேல் கொண்­டி­ருந்த நல்ல அபிப்­பி­ராயம் என்­பதை யாராலும் மறுக்க முடி­யுமா?

மூடப்­பட்ட சாளரம்
இந்தச் சாளரம் படிப்­ப­டி­யாக 2009க்குப் பின்னர் மூடப்­பட்டு வந்­ததை ஆட்­சி­யா­ளர்கள் உணரத் தவ­றி­யது இலங்­கையின் துர்ப்­பாக்­கி­யமே. இதற்­கு­ரிய கார­ணத்தை விளங்­குதல் அவ­சியம். சுமார் கால் நூற்­றாண்­டுக்கும் மேலாக இந்த நாட்டைச் சீர­ழித்த விடு­தலைப் புலி­களின் பிரச்­சினை 2009ல் பாரிய இழப்­பு­க­ளுடன் ஒரு முடி­வுக்கு வந்­தது. புலி­களைப் பூண்­டோடு ஒழித்த ராஜ­பக்ச ஆட்சி வெற்­றி­வாகை கொhண்­டாடி அந்த வெற்றிப் பிர­மி­தத்தில் மிதந்த சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம் இலங்கை இனிச் சிங்­கள நாடு, அது சிங்­க­ள­வர்­க­ளுக்கு மட்­டுமே சொந்தம், ஏனைய சிறு­பான்மை இனங்­க­ளெல்லாம் சிங்­கள பௌத்­தர்­களின் தயவில் வாழும் குடி­களே என்ற தனது நெடுங்­காலக் கனவை விரைவில் நன­வாக்க முனைந்­தது. படை­கொண்டு எதிர்த்த தமி­ழர்­க­ளையே தோற்­க­டித்து விட்டோம், மற்­ற­வர்கள் ஒரு பொருட்டா என்ற இறு­மாப்பு தலை­வி­ரித்­தா­டி­யது.

அந்த இறு­மாப்பு பேரி­ன­வா­தத்தின் பார்­வையை 2009க்குப்பின் முஸ்­லிம்­க­ளின்மேல் திருப்­ப­லா­யிற்று. ராஜ­பக்ச ஆட்சி பௌத்த சிங்­கள பேரி­ன­வா­தத்தின் பாது­கா­வ­ல­னாக மாறிற்று. பேரி­ன­வா­தத்தின் பார்­வையில் தமி­ழர்­க­ளை­வி­டவும் ஆபத்­தா­ன­வர்­க­ளாக முஸ்­லிம்கள் தோன்­றினர். தமி­ழ­ரா­வது நாட்­டைப்­பி­ரித்து தமி­ழீழம் ஒன்றை உரு­வாக்­கி­யபின் சிங்­கள ஈழத்­துடன் ஒற்­று­மையாய் வாழ விரும்­பினர். ஆனால் முஸ்­லிம்­களோ அவர்­க­ளது பெண்­களின் செழிப்­பான பிறப்பு வீதத்­தாலும், தப்லீக் ஜமாஅத், வஹ்­ஹா­பிசம் ஆகிய இயக்­கங்­களின் பிரச்­சா­ரங்­க­ளாலும் முழு இலங்­கை­யை­யுமே ஓர் இஸ்­லா­மிய நாடாக்க விளை­கின்­றனர் என்ற ஒரு பயத்தை சிங்­கள மக்­க­ளி­டையே பரப்­ப­லா­யினர். முஸ்லிம் சில்­லறை வியா­பாரத் தலங்­களும் முஸ்லிம் வைத்­தி­யர்­களும் சிங்­களத் தாய்­மார்­க­ளுக்குக் கர்ப்­பத்­த­டையை உண்­டு­பண்ண நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கின்­றனர் என்ற இன்­னு­மொரு அபாண்­டத்­தையும் அவிழ்த்­து­விட்­டனர். பேரி­ன­வா­தத்தின் இந்த விஷப்­ப­ரீட்சை சிங்­க­ள­வர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்­கு­மி­டையே ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கும் மேலாக வளர்ந்த நேச உறவை சீர்­கு­லைக்கத் தொடங்­கிற்று. 2014இல் அளுத்­க­மவில் வெடித்த சிங்­கள முஸ்லிம் கல­வரம் இந்த விஷப்­ப­ரீட்­சையின் முத­லா­வது பார­தூ­ர­மான விளைவு. அதனைத் தொடர்ந்து அம்­பாறை, திகனை, கண்டி என்­ற­வாறு பல இடங்­க­ளிலும் கல­வ­ரங்கள் வெடிக்கத் தொடங்­கின. கல­வ­ரங்கள் நடை­பெற்­ற­போது காவற்­து­றை­யினர் வெறும் பார்­வை­யா­ளர்­க­ளாக நின்­றமை முஸ்­லிம்­க­ளுக்கு பேரி­ன­வாத ஆட்­சியில் நீதியும் கிடைக்­காது என்­பதை வெளிப்­ப­டுத்­திற்று. ஒரு பக்­கத்தில் உடல் உயிர் பொருள் சேதங்­களை முஸ்­லிம்கள் அனு­ப­வித்த அதே­வேளை மறு­பக்­கத்தில் அவர்­க­ளு­டைய மதப் புத்­த­கங்கள், மத­ர­சாக்கள், விவாகம் சம்­பந்­த­மான சட்­டங்கள், ஆடைகள், என்­ற­வாறு ஒரே நாடு ஒரே சட்டம் என்ற போர்­வையில் கலாச்­சார ஒழிப்பு முயற்­சி­யையும் போரி­ன­வா­தி­களின் ஆட்­சியில் எதிர்­கொள்ள வேண்டி இருந்­தது. இந்த முயற்­சி­களின் உச்சக் கட்­ட­மாக கடந்த சுமார் இரண்­டரை வரு­டங்­க­ளாக ஆட்­சியில் இருக்கும் ராஜ­பக்ச குடும்ப அர­சாங்கம் அமைந்­தது என்­பது அரபு நாடு­க­ளுக்கு நன்கு தெரியும். சுருக்­க­மாகக் கூறு­வ­தாயின் முஸ்­லிம்கள் என்ற சாள­ரத்தின் ஊடாக இது­வரை இலங்­கையை கண்டு ரசித்து அபி­மா­னம்­கொண்­டி­ருந்த அர­பு­ல­குக்கு அந்தச் சாளரம் இப்­போது மூடப்­பட்­டுள்­ள­தாகத் தெரிந்­தது. அதன் விளைவு?

பொரு­ளா­தார மீட்­சிக்குச் சாளரம்
திற­படல் வேண்டும்
தான்­தோன்­றித்­த­ன­மான பொரு­ளா­தாரக் கொள்­கைளால் நாடே வங்­கு­றோத்­தா­கி­யுள்­ளதை யாரும் மறுக்­க­வில்லை. அந்த நிலைக்குக் கார­ணமாய் அமைந்த ஜனா­தி­ப­தியே அதற்­காக மன்­னிப்­புக்­கோ­ரி­யுள்­ளமை அந்த உண்­மைக்கு முத்­திரை வைத்­து­விட்­டது. அத்­தி­யா­வ­சியத் தேவைகள் அனைத்­துக்கும் மக்கள் வெய்­யி­லிலும் காய்ந்து மழை­யிலும் நனைந்து நீண்ட வரி­சையில் பசி­யு­டனும் தாகத்­து­டனும் கால்கள் கடுக்­கக்­க­டுக்கக் காத்­து ­நிற்­பது இன்­றைய சாதா­ரண காட்­சி­யாகி விட்­டது. அதனால் சிலர் உயி­ரையே இழந்­துள்­ள­மையை என்­ன­வென்று கூறிப் பரி­தா­பப்­ப­டு­வதோ?

இன்­றைய பொரு­ளா­தா­ரங்கள் யாவும் எரி­பொருள் இல்­லாமல் இயங்­காது. உல­கமே இயந்­தி­ர­ம­ய­மாகி விட்­டதால் அந்த இயந்­தி­ரங்கள் இயங்­காமல் பொரு­ளா­தா­ரங்கள் இயங்க முடி­யுமா? வாக­னா­திகள் யாவற்­றிற்கும் பொருள்­க­ளையும் மக்­க­ளையும் ஏற்றிச் செல்வதற்கு எரிபொருள் அவசியம். அந்தப் பொருளில் சுமார் 40 சதவீதம் அரபுநாடுகளிடம் உண்டு. அந்த நாடுகள் பண வசதி படைத்த நாடுகளும் கூட.

இன்றைக்கு அந்த நாடுகள் வழங்கும் தொழில் வாய்ப்புகள்தான் இலங்கையின் வேலையற்றோருக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் வாழ்வளிக்கிறது. எவ்வாறு முன்னொரு முறை எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டவுடன் லிபியா கைகொடுத்து உதவியது என்பதை ஏற்கனவே கண்டோம். ஆனால் அன்றைய முஸ்லிம் சாளரம் இன்று மூடப்பட்டுக்கிடக்கிறது. அதனை மீண்டும் திறவாமல் அரபு நாடுகளின் உதவியை நாட முடியாது.

வெளி­வி­வ­கார அமைச்­ச­ரையோ வேறு அமைச்­சர்­க­ளையோ அங்கே அனுப்­பு­வ­தன்­மூலம் அந்த நாடு­களின் தயவைப் பெற முடி­யாது. ஏனெனில் இந்த அர­சாங்கம் முஸ்லிம் இனத்­துக்கும் அவர்­களின் மத, கலாசார அம்­சங்­க­ளுக்கும் செய்த அநீ­தி­களை அங்­குள்ள அர­சுகள் ஏலவே அறிந்­துள்­ளன. அத­னா­லேதான் உலக இஸ்­லா­மிய கூட்­டு­றவுத் தாபனம் இலங்கை அரசைக் கண்­டித்து ஒரு பிரே­ர­ணையை 2020ல் நிறை­வேற்­றி­யது. அதுவே அர­சாங்­கத்தின் கண்­களைத் திறந்­தி­ருக்க வேண்டும். அது நடை பெற­வில்லை. இனி­யா­வது அதன் கண்கள் திறந்து முஸ்லிம் சாள­ரமும் திற­ப­டுமா? இலங்­கையின் சார்­பாக அரபு நாடு­க­ளுடன் பேசு­வ­தற்கு அர­சி­யல்­வா­திகள் அல்­லாத ஒரு முஸ்லிம் குழு­வினை அங்கே அனுப்­பினால் என்ன? அதன் முக்­கி­யத்­து­வத்தை விளக்­கு­வ­தற்கு கட்­டு­ரையின் நீளம் போதாது. அரபு நாடு­களின் சினேக உறவை வளர்ப்­ப­தற்கு அவ்­வா­றான ஒரு தூதுக்­குழு அவ­சியம். இந்த உறவு இலங்கையின் இன்றைய நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு ஒரு நிவாரணி.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.