பொரளை சகல பரிசுத்தவான்கள் தேவாலய குண்டு : திரைக்கதை, வசனம், இயக்கம் யாருடையது ?

0 647

எம்.எப்.எம்.பஸீர்

வெலிக்­கடை சிறைச்­சா­லைக்கு அருகே, பொரளை ஆனந்த ராஜ­க­ருணா மாவத்­தையில் அமைந்­துள்ள சகல பரி­சுத்­த­வான்கள் தேவா­லய வளா­கத்தில் கைக்­குண்டு வைத்­தமை தொடர்பில் பிர­தான சந்­தேக நபர் எம்­பி­லிப்­பிட்­டிய – பனா­முர பகு­தியில் வைத்து கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. அத்­துடன் அந்த குண்­டினை வைக்க சதி செய்­த­தாக அல்­லது உதவி ஒத்­தாசை புரிந்­த­தாக கூறி பிலி­யந்­தலை பகு­தியில் வைத்து ஓய்­வு­பெற்ற வைத்­தியர் ஒரு­வ­ரையும் பொலிஸார் கைது செய்­துள்­ள­தாக ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. எனினும் அந்த இரு கைதுகள் தொடர்­பிலும் உறு­திப்­ப­டுத்த பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி நிஹால் தல்­துவ மறுத்­து­விட்டார். விசா­ர­ணை­யா­ளர்கள் அது தொடர்பில் தன்னை தெளி­வு­ப­டுத்­த­வில்லை என அவர் இது தொடர்பில் தெரி­வித்தார்.

எவ்­வா­றா­யினும் ஊடக செய்­தி­க­ளுக்கு அமைய, இந்த கைக்­குண்டு மீட்­கப்­பட்ட விவ­கா­ரத்தில் பிர­தான சந்­தேக நபர்கள் இருவர் உள்­ளனர். பொரளை பொலி­ஸாரும் சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வி­னரும் முன்­னெ­டுத்த ஆரம்ப கட்ட விசா­ர­ணை­களில் கைது செய்­யப்­பட்ட நால்­வரில் உள்­ள­டங்கும் சகல பரி­சுத்­த­வான்கள் தேவா­லய வேதியர் (தேவா­லய உத­வி­யாளர்) ஒருவர். மற்­றை­யவர் இவ்­விரு பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கும் அப்பால் சென்று இர­க­சிய விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் கொழும்பு தெற்கு வலய குற்றத் தடுப்புப் பிரி­வினர் எம்­பி­லிப்­பிட்டி – பனா­முர அன்­ன­தான வீட்டில் வைத்து கைது செய்த 65 வய­தான கம்­பஹா – கட­வத்தை பகு­தியைச் சேர்ந்த நப­ராவார்.

இந்­நி­லையில், குறித்த குண்டு மீட்­கப்­பட்ட சம்­பவம் தொடர்­பிலும், அதன் விசா­ரணைக் கோணம், கைதாகும் சந்­தேக நபர்கள், வெளிப்­படைத் தன்­மை­யற்ற நட­வ­டிக்­கைகள், பொலிஸ் தரப்பும் அதற்கு பொறுப்­பான அமைச்­ச­ரி­னதும் கருத்­துக்கள் உள்­ளிட்­ட­வற்­றையும் கத்­தோ­லிக்க தரப்­பி­ன­ரி­னது கருத்­துக்­க­ளையும் ஒன்று திரட்டி பகுப்­பாய்வு செய்­யும்­போது, இந்த சம்­ப­வத்தின் பின்­ன­ணியில், கதை, திரைக்­கதை, வசனம், இயக்கம் தொடர்பில் ஒருவர் இருப்­ப­தா­கவே தோன்­று­கி­றது.

சம்­பவம் :
கடந்த 11 ஆம் திகதி பொரளை ஆனந்த ராஜ­க­ருணா மாவத்­தையில் அமைந்­துள்ள சகல பரி­சுத்­த­வான்கள் தேவா­லய வளா­கத்தில் குண்டு வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தேவா­ல­யத்­தி­லி­ருந்தே மாலை நேரம் வழங்­கப்­பட்ட தக­வ­லுக்­க­மைய அதி­ரடிப் படையின் உத­வி­யுடன் குண்டு மீட்கப் பட்­டி­ருந்­தது. தேவா­ல­யத்தில் உள்ள திருச்­சொ­ரூபம் அருகே இருந்தே கைக்­குண்டு கண்டு பிடிக்­கப்­பட்­டுள்­ளது. அது தீப்­பி­டித்து வெடிக்கும் வகையில் பசை நாடா, இறப்பர் வளை­யல்கள், தீ குச்­சிகள் மற்றும் மணக் குச்­சி­களைப் பயன்­ப­டுத்தி பொருத்­தப்­பட்­டுள்­ள­தாக குண்­டினை மீட்ட பின்னர் பொலிஸ் பேச்­சாளர் நிஹால் தல்­துவ அறி­வித்­தி­ருந்தார்.

விசா­ரணை :
இத­னை­ய­டுத்து உட­ன­டி­யாக விசா­ர­ணை­களை ஆரம்­பித்த பொரளை பொலிஸார், குறித்த தேவா­ல­யத்தில் கட­மை­யாற்றும் வேதியர் ஒருவர் உள்­ளிட்ட மூவரை கைது செய்­தனர். தேவா­லய சி.சி.ரி.வி. கம­ராக்­களின் பதி­வு­களை மையப்­ப­டுத்தி அக்­கை­துகள் இடம்­பெற்­ற­தாக கூறப்­பட்­டது.
விசா­ர­ணைகள் உட­ன­டி­யாக

சி.சி.டி.யிடம் கைய­ளிப்பு :
இந்­நி­லையில் உட­ன­டி­யாக விடயம் தொடர்பில் அவ­தானம் செலுத்­திய பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்ன, விசா­ர­ணை­களை சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரி­வி­ன­ரிடம் கைய­ளித்தார். அதன்­படி பொரளை பொலிசார் கைது செய்த மூவரும் சி.சி.டி.யின­ரிடம் கைய­ளிக்­கப்­பட்ட நிலையில் மேல­தி­க­மாக மற்­றொ­ரு­வரை சி.சி.டி.யினர் கைது செய்­தனர்.

அதன்­படி 29,25,41,55 வய­து­களை உடைய, தெமட்­ட­கொடை மாலிம்­பட மற்றும் மரு­தானை பகு­தி­களைச் சேர்ந்த சந்­தேக நபர்கள் நால்வர் கைது செய்­யப்­பட்­டனர் என பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் நிஹால் தல்­துவ தெரி­வித்­தி­ருந்தார்.

தேவா­ல­யத்தில் பணி­யா­ள­ராக கட­மை­யாற்­றிய மரு­தானை பிர­தே­சத்தை சேர்ந்த ஒரு­வரே கைக்­குண்டை வைத்­துள்­ள­தாக விசா­ர­ணை­களில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் பேச்­சாளர் தெரி­வித்­தி­ருந்தார். சந்­தேக நபர் தேவா­ல­யத்­திற்கு அருகில் வசிக்கும் 13 வயது சிறு­வனை இதற்­காக பயன்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் அவர் கூறி­யி­ருந்தார்.

கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் பிர­தான சந்­தேக நபர் ( வேதியர்) கடந்த 16 வரு­டங்­க­ளாக தேவா­ல­யத்­துடன் தொடர்பு வைத்­தி­ருந்­த­தா­கவும், கடந்த 9 மாதங்­க­ளாக தேவா­லய வளா­கத்­தி­லேயே தங்­கி­யுள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது. குண்­டினைப் பொருத்­து­வ­தற்குப் பயன்­ப­டுத்திய தடயப் பொருட்­க­ளையும் பொலிசார் அவ­ரது தங்­கு­மி­டத்­தி­லி­ருந்து கண்­டெ­டுத்­த­தா­கவும் கூறப்­பட்­டது. அத்­துடன் கைது செய்­யப்­பட்­ட­வர்­களில், தேவா­ல­யத்­துடன் தொடர்­பில்­லாத ஒரு­வரும் இருந்த நிலையில், அவர் மட்டும் 72 மணி நேர விசா­ர­ணையின் பின்னர் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார். ஏனையோர் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் சி.சி.டி.யில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

13 வயது சிறுவன் :
இந்­நி­லையில் சி.சி.டி. முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் 13 வயது சிறுவன் ஒருவன் அவர்­க­ளது பொறுப்பில் எடுக்­கப்­பட்­டி­ருந்தான். அவன் குறித்த தேவா­ல­யத்­துக்கு அருகில் வசிப்­பவன். அவ­னிடம் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் பல தக­வல்கள் வெளிப்­பட்­ட­தாகக் கூறி அவரை கொழும்பு மேல­திக நீதிவான் ரஜீந்ரா ஜய­சூ­ரிய முன்­னி­லையில் சி.சி.டி.யினர் ஆஜர் செய்து குற்­ற­வியல் சட்­டக்­கோ­வையின் 127 ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமைய இர­க­சிய வாக்கு மூலம் வழங்க அச்­சி­றுவன் விரும்­பு­வ­தாக கூறினர். அதன்­படி அவ­னிடம் இர­க­சிய வாக்கு மூலம் பதிவு செய்­யப்­பட்­டது.

கர்­தினால் மெல்கம் ரஞ்­சித்தின் வெளிப்­ப­டுத்தல் :
இவ்­வா­றான பின்­ன­ணியில் முழு விசா­ர­ணை­க­ளையும் கர்­தினால் மெல்கம் ரஞ்­சித்தின் ஊடக சந்­திப்­பொன்று மீளாய்வு செய்­யப்­படல் வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­தி­யது. அப்­போதும் கைது செய்­யப்­பட்­டி­ருந்த சந்­தேக நபர்கள், சாட்­சி­யாக கூறி பொலிஸ் பொறுப்பில் எடுக்­கப்­பட்­டி­ருந்த சிறுவன் ஆகியோர் சம்­பவம் பதி­வான 11 ஆம் திகதி பி.ப.3.00 மணி­யி­லி­ருந்து அவ­தா­னிக்­கப்­பட்ட தேவா­லய சி.சி.ரி.வி. காணொ­ளி­க­ளுக்கு அமை­யவே கைது செய்­யப்­பட்­டி­ருந்­தமை அவ்­வூ­டக சந்­திப்­பூ­டாக வெளிச்­சத்­துக்கு வந்­தது. எனினும் அன்­றைய தினம் மு.ப. 9.52 மணி­ய­ளவில் தேவா­ல­யத்­துக்குள் நுழையும் நபர் ஒருவர் (ஊன­முற்­றவர் போன்று வருகை தந்­தவர்), கையில் ஒரு பொதி­யுடன் வந்து, பின்னர் குண்டு மீட்­கப்­பட்­டி­ருந்த இடத்தில் ஏதோ சந்­தே­கத்­துக்கு இட­மான நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வதும், தேவா­லய ஊழி­யர்கள் அப்­ப­கு­திக்கு வரும் போது அங்­கி­ருந்து தப்பிச் செல்­வ­தையும் முழு­மை­யான சி.சி.ரி.வி. காட்­சி­களை ஆராயும் போது தெரிந்­தது.
இதனால் பொலிஸ் விசா­ர­ணைகள் எந்த கோணத்தில் பய­ணிக்­கி­றது எனும் சந்­தேகம் எழுந்­தது.

அருட் தந்­தையை கைது செய்ய முஸ்­தீபு :
இந்­நி­லையில் இந்த விசா­ர­ணை­களில் குறித்த தேவா­லய அருட் தந்­தையை கைது செய்ய விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தாக ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தன. இது தொடர்பில் நீதி மன்­றுக்கும் அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக ஊடக செய்­தி­களில் கூறப்­பட்­டி­ருந்­தன. இது­தே­வா­லய அருட் தந்­தைக்கும் தெரிந்தே நடந்த அர­சாங்­கத்தை அசெ­ள­க­ரி­யத்­துக்கு உட்­ப­டுத்தும் நட­வ­டிக்கை எனும் கோணத்தில் தக­வல்கள் பரப்­பப்­பட்­டன.
சி.சி.ரி.வி. காட்­சி­களால் உடைந்த

விசா­ரணை விம்பம் :
எவ்­வா­றா­யினும் கடந்த 11 ஆம் திகதி அந்த தேவா­ல­யத்தில் என்ன நடந்­தது என்­பது தொடர்பில் முழு­மை­யான சி.சி.ரி.வி. காட்­சிகள் வெளி­யி­டப்­பட்­டதை தொடர்ந்து, பொலிஸார் அருட் தந்­தையைக் கைது செய்யும் கோணத்தில் முன்­னெ­டுத்த விசா­ர­ணையின் விம்பம் உடைந்து சுக்கு நூறானது. விசா­ர­ணைகள் முழு­மை­யில்லை என்­ப­தையும், பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்ட 4 சந்­தேக நபர்­க­ளுக்கும் குறித்த குண்டு விவ­கா­ரத்தில் நேரடி தொடர்­புகள் இல்லை என்­ப­தையும் அந்த அறி­வியல் சான்­றுகள் பறை­சாற்றி­யதால் பொலிஸார் குழப்­ப­ம­டைந்­தனர்.

உயர் பொலிஸ் அதி­காரி :
எவ்­வா­றா­யினும் சம்­பவ தினம் பி.ப. 3.00 மணி முதல் சி.சி.ரி.விகளை ஆரா­யு­மாறு உயர் பொலிஸ் அதி­காரி ஒரு­வரே விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு அறி­வித்­தி­ருந்த நிலையில், காலை நேர காட்­சி­களைப் பார்த்­ததும் அந்த அதி­காரி குழப்­ப­டைந்­துள்ளார். தன் தவ­று­களை மறைக்க அவர், விசா­ரணை அதி­கா­ரிகள் சிலரை இட­மாற்­றி­யுள்ளார்.

இர­க­சிய வாக்கு மூலம் பொலிஸ் அமைச்­ச­ருக்கு கிடைத்­தது எப்­படி ?
இந்த கைக்­குண்டு விவ­கா­ரத்தில் சரி­யான விசா­ர­ணைகள் நடக்­க­வில்லை என்­பதை ஆதா­ரத்­துடன் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் வெளிப்­ப­டுத்­திய நிலையில், குழப்­ப­டைந்த பொலிஸ் துறைக்கு பொறுப்­பான அமைச்சர் சரத் வீர­சே­கர ஊட­கங்­க­ளுக்கு அது தொடர்பில் கருத்து தெரி­வித்­தி­ருந்தார். கடந்த 14 ஆம் திகதி தெரண தொலைக்­காட்சி செய்­தி­களில் ஒளி­ப­ரப்­பான அவ­ரது கருத்­துக்­களில் இவ்­வாறு கூறப்­பட்­டது.

‘மாலை 5.00 மணி­ய­ளவில் குறித்த இடத்­துக்கு சென்ற பொலிஸார் 4 சந்­தேக நபர்­களைக் கைது செய்­தனர். அந்த சிறு­வ­னுக்கு 14 வயது. தேவா­ல­யத்தில் 8 மாதங்­க­ளாக வேலை­பார்க்கும் தமிழர் ஒருவர் அந்த பொதியை வழங்­கி­ய­தாக அச்­சி­றுவன் நீதி­வா­னி­ட­ம் தெரி­வித்தார். குண்­டுடன் கூடிய பொதியை வழங்­கிய நபரே, திருச் செரூபம் அருகே அதனை வைத்­துள்ளார். அவர் அதனை ஏற்­றுக்­கொண்டார். அக்­குண்டை சுற்றி இறப்பர் வளையல் போடப்­பட்டு, அதன் பின் கழற்­றப்­பட்டு மணக் குச்சி ஒன்று பொருத்­தப்­பட்­டுள்­ளது. அத்­துடன் 15 தீ குச்­சிக்­களும் பொருத்­தப்­பட்டு மணக் குச்சி பற்­றி­யெ­ரிந்து முடிந்­த­வுடன் தீ குச்­சிகள் பற்றி குண்டு வெடிக்கும் வகையில் அது தயா­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது. கைது செய்­யப்­பட்ட நபரின் அறையில் பசை நாடா இருந்­தது. மணக்­குச்சி இருந்­தது. தீக்­குச்­சிகள் இருந்­தன. இந்­நி­லையில் அவ்­வா­றான ஒரு­வரைக் கைது செய்­ததும் தேவா­ல­யத்தில் உள்­ளோரைக் கைது செய்து கொடு­மைப்­ப­டுத்­து­வ­தாக கூறு­வது எந்­த­ளவு சிறு­பிள்­ளைத்­த­ன­மா­னது. காலையில், ஊன­முற்ற ஒரு­வரைப் போன்று ஒருவர் தேவாலயத்­துக்கு வந்­தது உண்மை. அந்­நபர் தொடர்பில் விசா­ரணை நடக்­கி­றது. இங்கு பொலி­ஸா­ருக்கு கொடுக்க வேண்­டிய சி.சி.ரி.வி. காட்­சி­களை ஊட­கங்­க­ளுக்கு வழங்­கினால் சந்­தேக நபர்கள் தலைமறை­வாகலாம்.

கேள்வி : சி.சி.ரி.வி. காணொ­ளி­களில் மாலை 3.00 மணிக்கு முன்­னைய காட்­சி­களை பொலிஸார் ஏன் பார்க்­க­வில்லை என கர்­தினால் கேள்வி எழுப்­பி­யுள்ளார் அல்­லவா?
அமைச்சர் : சந்­தேக நபர்­களை அவ­ச­ர­மாக கைது செய்­யவே சி.சி.ரி.வி. காட்­சிகள் பி.ப. 3.00 மணி­யி­லி­ருந்து பார்க்­கப்­பட்­டன. சம்­பவம் எமக்கு 5.00 மணிக்கே அறி­விக்­கப்­பட்­டது. எவ்­வா­றா­யினும் காலை நேர காட்­சி­களை பார்க்க வேண்டாம் என எங்கும் பொலிஸார் கூற­வில்லை. காலை நேர காட்­சி­களை அழிக்­கு­மாறும் பொலிஸார் கூற­வில்லை. அதேபோல் நாம் மக்­க­ளுக்கு ஒரு விட­யத்தை கூற வேண்டும். அப்­பலோ வைத்­தி­ய­சாலை மலசல கூடத்தில் குண்டு வைத்த நபரும், தேவா­லய குண்டு வைப்பின் பின்­ன­ணி­யிலும் யாரேனும் ஒரு சதி­காரர் உள்ளார். அர­சாங்­கத்தை அசெ­ள­க­ரி­யத்­துக்கு உள்­ளாக்க பொலி­ஸாரை, இரா­ணு­வத்தை அசெ­ள­க­ரி­யத்­துக்கு உட்­ப­டுத்த இது முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. அந்த சூத்­தி­ர­தா­ரியை மிக விரைவில் நாம் கைது செய்வோம்.’ என தெரி­வித்­தி­ருந்தார்.

இங்கு அமைச்சர் ‘தேவா­ல­யத்தில் 8 மாதங்­க­ளாக வேலை­பார்க்கும் தமிழர் ஒருவர் அந்த பொதியை வழங்­கி­ய­தாக அச்­சி­றுவன் நீதி­வா­னி­ட­ம் தெரி­வித்தார்.’ என குறிப்­பி­டுகின்றார். நீதி­வா­னிடம் வழங்­கப்­பட்ட இர­க­சிய வாக்கு மூலம் குற்­ற­வியல் சட்­டத்தின் 127 ஆவது அத்­தி­யா­யத்தின் கீழ் வழங்­கப்­பட்ட வாக்கு மூலம். அத்­த­கைய வாக்கு மூலம் மிக இர­க­சி­ய­மா­னது. அது பதிவு செய்­யப்­படும் போது பொலி­ஸாரோ வேறு எவ­ருமோ அருகில் இருக்க முடி­யாது. நீதி­வானின் உத்­தி­யோ­க­பூர்வ அறையில், நீதிவான் மட்­டுமே இருக்க அது பதிவு செய்­யப்­படும்.

அப்படி­யானால் நீதி­வா­னிடம் சிறுவன் கூறி­யது அமைச்சர் சரத் வீர­சே­க­ர­வுக்கு எப்­படி தெரிந்­தது.
அதற்கு 2 வழிகள் உள்­ளன. ஒன்று, நீதிவான் அதனை சரத் வீர­சே­க­ர­வுக்கு கூறி­யி­ருக்க வேண்டும் அல்­லது நீதி­வா­னிடம் வழங்­கிய வாக்கு மூலம் சிறு­வ­னுக்கு பொலி­சாரால் கற்­பிக்­கப்­பட்­ட­தாக இருக்க வேண்டும்.
அப்­ப­டி­யானால் மட்­டுமே நீதி­வா­னுக்கு வழங்­கிய வாக்குமூலத்தை அமைச்­சரால் இவ்­வாறு பகி­ரங்­க­மாக கூற முடியும்.

சட்­டத்­த­ரணி ஹிஜா­ஸுக்கு எதி­ரான இர­க­சிய வாக்கு மூலம் :
இதனை ஒத்த உதா­ர­ணங்கள் கடந்த காலங்­களில் ஏராளம் உள்­ளன. உதா­ர­ண­மாக, உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்பில் என முதலில் கைது செய்­யப்­பட்டு பின்னர் அடிப்­ப­டை­வா­தத்தை போதித்­த­தாக குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ராக 3 சிறு­வர்கள் வழங்­கி­ய­தாக கூறப்­படும் இர­க­சிய வாக்கு மூலங்­களைக் குறிப்­பி­டலாம்.

மது­ரங்­குளி பாட­சா­லையின் 3 மாண­வர்கள் சி.ஐ.டி.யினரால் கோட்டை நீதிவான் முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்டு குற்­ற­வியல் சட்­டத்தின் 127 ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமைய ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் விவ­கா­ரத்தில் வாக்கு மூலம் பெறப்­பட்­டது. அன்­றைய தினம் இரவும், மறு நாளும் ஊட­கங்­களில், அம்­மா­ண­வர்கள் வழங்­கிய இர­க­சிய வாக்கு மூலம் எனக் கூறி சில விட­யங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டன.

நீதி­வா­னுக்கு வழங்கும் வாக்கு மூலம் சாட்சி பெறு­ம­தி­யு­டைய இர­க­சிய வாக்கு மூலம் என்­பதால், அங்கு கூறி­யவை எவ்­வாறு வெளியில் செல்ல முடியும் என அதன் பின்னர் ஹிஜாசின் சட்­டத்­த­ர­ணிகள் கேள்வி எழுப்ப அது குறித்து விசா­ர­ணை­க­ளுக்கும் உத்­த­ர­வி­டப்­பட்­டன. எவ்­வா­றா­யினும் அப்­போது சட்­டத்­த­ர­ணி­களால், அந்த இரக­சிய வாக்கு மூலம் பொலி­ஸாரால் சொல்­லிக்­கொ­டுக்­கப்­பட்­ட­வை­யாக இருக்க வேண்டும் எனவும் அத­னா­லேயே அவை ஊட­கங்­க­ளுக்கு சென்­றுள்­ளன எனவும் நீதி­மன்­றுக்கு கூறப்­பட்­டது.
கொட்­ட­கெத்­தன பெண்கள் கொலை,

சிறுமி சேயா விவ­காரம் :
அதேபோல் பொலிஸார் வேண்­டு­மென்றோ அல்­லது குற்­ற­வி­சா­ர­ணையை உட­ன­டி­யாக முடிப்­ப­தற்­காக அப்­பா­விகள் மீது பழியை போட்டு, அவர்கள் பொலி­ஸா­ருக்கு ஒப்­புதல் வாக்கு மூலம் வழங்­கி­ய­தாக கூறிய சம்­ப­வங்கள் பலவும் உள்­ளன.

உதா­ர­ணத்­துக்கு இரத்­தி­ன­புரி கொட்­ட­கெத்­தன தொடர் பெண்கள் கொலை­களை கூறலாம். அதில் தன் தாயை கொலை செய்­த­தாக கூறி மகனைக் கைது செய்த பொலிஸ் , அம்­மகன் பொலி­ஸா­ருக்கு வழங்­கிய ஒப்­புதல் வாக்கு மூலம் என ஒரு கதை­யையே தயா­ரித்­தி­ருந்­தது. எனினும் பின்னர் சி.ஐ.டி.யினர் ஒரு­வரைக் கைது செய்து முன்­னெ­டுத்த டி.என்.ஏ. சோத­னை­களில் பல உண்­மைகள் வெளிப்­பட்டு, குற்­ற­வா­ளி­யாக சித்­தி­ரிக்­கப்­பட்ட சிறுவன் விடு­விக்­கப்­பட்ட வர­லாறு உள்­ளது.

அதேபோல் கொட்­ட­தெ­னி­யாவ சிறுமி சேயா படு­கொலை விவ­கா­ரத்தில் உண்மை குற்­ற­வா­ளியைக் கைது செய்ய முன்னர், 17 வயது பாட­சாலை மாணவன் ஒரு­வ­னையும், கொண்­டயா எனும் நபர் ஒரு­வ­ரையும் கைது செய்து அவர்கள் ஒப்­புதல் வாக்கு மூலம் வழங்­கி­ய­தாக பொலிசார் கொண்டு சென்ற நாடகம் எமக்கு ஞாப­கத்தில் இல்­லா­ம­லில்லை.

எனவே பொலிஸார் கடந்த காலங்­களில் குற்றம் ஒன்று தொடர்பில் எழு­திய கதை, திரைக் கதை, வசனம், இயக்கம் போன்­றன சமூக மட்­டத்தில் பர­வ­லாக பேசு பொரு­ளா­ன­வையே.

இவ்­வா­றான நிலை­யி­லேயே, பொரளை சகல பரி­சுத்­த­வான்கள் தேவா­லய வளா­கத்தில் கைக்­குண்டு விவ­கா­ரத்­திலும் பொலி­ஸாரின் நட­வ­டிக்­கைகள் அந்த வர­லா­று­களை மீள ஞாப­கப்­ப­டுத்­து­வ­தாக உள்­ளன.

இர­க­சிய விசா­ர­ணையும் கைதும் :
இந்த கைக்­குண்டு விவ­கார விசா­ர­ணைகள் தொடர்பில் சந்­தேகம் எழுப்­பப்­பட்ட நிலையில், மேல் மாகா­ணத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதி­காரி ஒரு­வரின் நேரடி கட்­டுப்­பாட்டில் மேல­திக விசா­ர­ணைகள் மிக இர­க­சி­ய­மாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அது கொழும்பு தெற்கு வலய குற்றத் தடுப்புப் பிரிவின் அதி­கா­ரி­களின் பங்­க­ளிப்­பி­லாகும்.

அதன்­ப­டியே இந்­த­குண்டு விவ­கா­ரத்தில் பிர­தான சந்­தேக நபர் என கரு­தப்­படும் நபரை எம்­பி­லிப்­பிட்டி பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பனா­முர பகு­தியில் அன்­ன­தான வீடொன்றில் வைத்து, அரச உள­வுச்­சே­வையின் தக­வ­லுக்­க­மைய விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் இர­க­சிய சிறப்புக் குழு கடந்த 15 ஆம் திகதி மாலை கைது செய்­த­தாக ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டன. கம்­பஹா – கட­வத்தை – மங்­கட வீதி பகு­தியைச் சேர்ந்த 65 வய­தான சந்­தேக நபர் ஒரு­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கி­றது. நபர் ஒருவர் வழங்­கிய 50 ஆயிரம் ரூபா ஒப்­பந்­தத்தின் அடிப்­ப­டையில், குறித்த சந்­தேக நபர் குண்­டினை எடுத்து வந்து வைத்துச் சென்­ற­தாக ஆரம்பக் கட்ட பொலிஸ் விசா­ர­ணை­களில் தெரி­வித்­துள்­ள­தாக ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டன.

சி.சி.ரி.வி. காணொ­ளி­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணை­களில், சம்­பவ தின­மான கடந்த 11 ஆம் திகதி மு.ப. 9.52 மணிக்கு தேவா­ல­யத்­துக்குள் நுழையும் சந்­தேக நபர், கிரி­பத்­கொடை – அங்­கு­லா­னைக்­கி­டையே பய­ணிக்கும் 154 ஆம் இலக்க பஸ் வண்­டியில் வந்து அரச அச்­சக கூட்­டுத்­தா­பனம் முன்­பாக உள்ள பஸ் தரிப்பு நிலை­யத்தில் இறங்­கு­வதும் அங்­கி­ருந்து தேவா­ல­யத்­துக்கு செல்­வதும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. அங்கு தேவா­லய சொரூ­பத்­துக்கு அருகே குண்­டினை வைத்­து­விட்டு அங்கு ஊது பத்­தி­களை பற்ற வைப்­பதை ஒத்த நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வதும் தேவா­லய சி.சி.ரி.வி. காட்­சி­களில் பதி­வா­கி­யுள்­ளது.

பின்னர் தேவா­ல­யத்தில் குண்­டினை வைத்­த­தாக நம்­பப்­படும் குறித்த நபர், அங்­கி­ருந்து வெளி­யேறி மெகசின் சிறைச்­சா­லைக்கு முன்­பாக இருந்து முச்­சக்­கர வண்­டி­யொன்றில் செல்­வது தெரிய வந்­துள்ள நிலையில், அதி­லி­ருந்து சந்­தேக நபரை தேடிய விசா­ர­ணைகள் இடம்­பெற்­றுள்­ளன.

இந்­நி­லை­யி­லேயே அரச உளவுச் சேவை அளித்த தக­வ­லுக்கு அமைய, கொழும்பு தெற்கு வலயக் குற்­றத்­த­டுப்புப் பிரிவின் அதி­கா­ரிகள் குழு­வொன்று சந்­தேக நபரைக் கைது செய்­த­தாக அறிய முடி­கி­றது.

ஓய்வு பெற்ற வைத்தியரின் கைது :
இவ்­வாறு கைது செய்­யப்­பட்ட 65 வயது நபர் துறை­முக பொலிஸ் நிலை­யத்தில் உள்ள கூண்டில் தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்றார். இந்­நி­லையில் அவ­ரிடம் முன்­னெ­டுக்­கப்­பட்ட நீண்ட விசா­ர­ணை­களின் பின்னர் நேற்று முன் தினம் (18) பிலி­யந்­தலை பகு­தியில் வைத்து ஓய்வு பெற்ற வைத்­தியர் ஒரு­வ­ரைக்­கைது செய்­த­தாக பொலிஸார் உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற முறையில் அறி­வித்­தனர்.

பிலி­யந்­தலை மாவட்ட வைத்­தி­ய­சா­லையில் கட­மை­யாற்றி ஓய்­வு­பெற்ற அந்த வைத்­தியர், பிலி­யந்­த­லையில் தனியார் வைத்­திய நிலையம் ஒன்­றினை நடாத்­து­வ­தா­கவும், அவரின் வைத்­திய நிலை­யத்தில், குண்டை வைத்த நபர் பாது­காப்பு ஊழி­ய­ராக கட­மை­யாற்­றி­யுள்­ள­தா­கவும், குறித்த சந்­தேக நபர் கைது செய்­யப்­ப­டும்­போது வைத்­தி­யரும் பனா­முர அன்­ன­தான வீட்டில் இருந்­துள்­ள­தா­கவும் பொலி­சாரை மேற்­கோள்­காட்டி ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

எனினும் கைது செய்­யப்­பட்ட வைத்­தி­யரின் இன அடை­யா­ளங்­களை அவ் ஊட­கங்கள் வெளிப்­ப­டுத்­த­வில்லை.

இந்­நி­லையில், நார­ஹேன்­பிட்டி அப்­பலோ வைத்­தி­ய­சாலை குண்டு விவ­காரம், இந்த தேவா­லய குண்டு விவ­கா­ரத்தின் பின்­ன­ணியில் இந்த வைத்­தி­யரும் உள்­ள­தாக பொலிசார் கூறு­வ­தாக ஊட­கங்கள் கூறும் நிலையில், இன்னும் யாரை­யெல்லாம் பொலி சார் கைது செய்­யப்­போ­கி­றார்கள் எனத் தெரி­யாமல் வெளிப்­ப­டைத்­தன்மை இல்­லாமல் இவ்­வி­சா­ர­ணைகள் தொடர்­கின்­றன.

குறைந்தபட்சம் கைது செய்­யப்­படும் நபர்கள் மீதான குற்­றச்­சாட்­டுக்­களைக் கூட பொலிசார் வெளிப்­ப­டுத்­தாமல், ஒரு சில ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு இர­க­சி­ய­மாக கதை சொல்லி அதை சமூகமயப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கையில் விசா­ர­ணை­யா­ளர்கள் ஈடு­பட்­டுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

உத்­தி­யோ­கபூர்­வ­மான எந்த தகவல்களும் வெளிப்படுத்தப்படாத நிலையில், இந்த குண்டு விவகாரமும் மக்களை திசை திருப்புவதற்கான ஒரு திரைக் கதையே என்பதும், அக்கதை பிசு பிசுத்துப்போயுள்ளமையும் தெளிவாக தெரிகிறது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.