ஊடகவியலாளர் லக்மால் டி சில்வா கொலை: ஓய்வுபெற்ற இராணுவ சார்ஜன்ட் கைதானார்

மேஜர் நிரோஷனை கைதுசெய்ய சர்வதேச பொலிஸார் ஊடாக நடவடிக்கை

0 628

சுதந்திர ஊடகவியலாளர் லக்மால் டி சில்வாவின் கொலை தொடர்பில் இரு இராணுவத்தினரை சி.ஐ.டி. சந்தேக நபர்களாக அடையாளம் கண்டுள்ள நிலையில், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைவாக அவர்களில் ஒருவரை சி.ஐ.டி. நேற்றுக் கைது செய்தது.  இராணுவத்தின் கெமுனு படைப் பிரிவைச் சேர்ந்த, அப்போது சாதாரண இராணுவ வீரரும் யுத்தத்தில் அங்கவீனமடையும்போது சார்ஜன்ட்தர நிலையிலும் இருந்த சிந்தக வர்ணகுமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று  முன்தினம் மாலை சி.ஐ.டி.யின் மனிதப் படுகொலைகள் குறித்த விசாரணை அறைக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவரை சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைவாக கைது செய்ததாக   கல்கிசை மேலதிக நீதிவான் லோச்சனா அபேவிக்ரம முன்னிலையில் சி.ஐ.டி. தெரிவித்தது.

சி.ஐ.டி. சார்பில் நேற்று சந்தேக நபரை, உப பொலிஸ் பரிசோதகர்களான அல்கம, இக்பால் மற்றும் ஜகத் ஜயசிங்க ஆகியோர் மன்றில் ஆஜராகி இந்த விடயத்தை நீதிவானுக்கு தெரிவித்தனர்.

சந்தேக நபருக்கு எதிராக குற்றவியல் தண்டனை சட்டக் கோவையின் 296 ஆம் அத்தியாயத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால் பிணை தொடர்பில் ஆராயும் அதிகாரம் நீதிவான் நீதிமன்றுக்கு இல்லையெனத் தெரிவித்த மேலதிக நீதிவான் லோச்சனா அபேவிக்ரம, சந்தேக நபரான இராணுவ வீரரை எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தர்விட்டார்.

இதனிடையே இந்த விவகாரத்தில் மற்றொரு சந்தேக நபரான அபோது லெப்டினன் கொமாண்டரும் தற்போது மேஜர்தர அதிகாரியுமான நிரோஷன் அல்விஸ் என்பவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக சி.ஐ.டி. மன்றுக்கு தெரிவித்தது. குறித்த சந்தேக நபரையும் கைதுசெய்ய சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளபோதும், அவர் கடந்த ஜூலை முதல் நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாட்டில் வசிப்பதால் அவரை உடன் கைது செய்ய முடியாமல் போனதாக சி.ஐ.டி. மன்றுக்குத் தெரிவித்தது.

இந்நிலையில் அவர் நாட்டுக்குள் உள்நுழையும் எந்த சந்தர்ப்பத்திலும் உடன் கைதுசெய்து சி.ஐ.டி.யினரிடம் ஒப்படைக்க குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன் சந்தேக நபரான குறித்த நிரோஷன் அல்விஸ் என்ற இராணுவ அதிகாரி தொடர்பில் சர்வதேச பொலிஸார் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுத்து கைது செய்யுமாறு நீதிவான் சி.ஐ.டி.க்கு ஆலோசனை வழங்கினார்.

அதன்படி குறித்த வழக்கு எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற இக்கொலை தொடர்பில் சி.ஐ.டி.யின் மனிதப் படுகொலைகள் குறித்த விசாரணை அறையில் முன்னெடுத்த சிறப்பு விசாரணைகளிலேயே சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது தொடர்பில் சி.ஐ.டி. கடந்தவாரம்  கல்கிசை மேலதிக நீதிவான் லோச்சனா அபேவிக்ரமவுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில் குறித்த இரு சந்தேக நபர்களையும் உடன் கைது செய்து இன்றைய  தினத்துக்குள் மன்றில் ஆஜர்செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. இறுதின, லக்பிம ஆகிய பத்திரிகைகளின் ஊடகவியலாளராகவும்  ஸத்தின பத்திரிகையின் பாதுகாப்பு விவகார ஊடகவியலாளராகவும் கடமையாற்றிய லக்மால் டி சில்வா, கடந்த 2006 இல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வுப்  பிரிவின் உயரதிகாரி ஒருவருடன் இரவு உணவுக்கு செல்வதாக முச்சக்கர வண்டியொன்றில் வீட்டைவிட்டு வெளியேறியிருந்த அவர் மறு நாள் தெஹிவளையின் குறுக்கு வீதியொன்றில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்ப்ட்டிருந்தார்.

இந்நிலையிலேயே இது தொடர்பில் மிக நீண்ட விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி. சந்தேக நபர்களை கைதுசெய்ய ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.