சிறுபான்மை கட்சிகளுடனான பேச்சு அடுத்தவாரம் ஆரம்பம்

மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு

0 683

சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக செயற்படவேண்டும். இதன் முதற்கட்டமாக அடுத்த தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இதற்கான பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரத்தில் ஆரம்பிப்பதற்கு தமது பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் முடிவுரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்;

எதிர்வரும் காலங்களில், மலையகக் கட்சிகள் உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக செயற்படமுடியுமா என்பது பற்றி நாங்கள் சிந்திக்கின்ற காலம் வந்துள்ளது.

முஸ்லிம்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளில் நிர்வாக ரீதியில் விடை தேடவேண்டிய நூற்றுக்கணக்கான பிரச்சினைகள் இருக்கின்றன. இவ்விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துநின்று, என்ன நிபந்தனைகள் விதித்தாலும் தமிழர் தரப்புடன் பேசாமல் நிரந்தரத் தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது என்ற யதார்த்தையும் நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அரசியல் பிரச்சினை, நிர்வாகப் பிரச்சினை, இனப்பிரச்சினை போன்றவற்றுக்கு தீர்வு காண்கின்றபோது அவை யதார்த்தமாக இருக்கவேண்டுமானால் அது ஒரு புறத்திலிருந்து மாத்திரம் பெறக்கூடிய தீர்வாக இருக்கமுடியாது. பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் விடயத்தில், கூட்டு வைத்திருக்கும் தேசியக் கட்சியுடன் உடன்பாட்டுக்கு வருகின்ற அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தேவையேற்படின் மலையக கட்சிகளுடனும் சமாந்தரமாகப் பேசவேண்டும்.

தமிழ் – முஸ்லிம் மக்களிடையே ஏராளமான பிரச்சினைகள் தீர்வுகாணப்படாமல் இருக்கின்றன. இவற்றுக்கு ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரம் தீர்வை தந்துவிடும் என்ற இறுமாப்பில் எதனையும் செய்துவிட முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் தேர்தலுக்கு செல்வதற்குமுன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டுமென எமது பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரமே ஆரம்பிக்கப்படவுள்ளன.

சிறுபான்மை மக்கள் அச்சப்படுகின்ற ஆட்சியாளர்களை விரட்டுவதற்கு, நாடுதழுவிய தேர்தலில் சாதிக்க வேண்டுமாயின் சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் ஒருமித்துப் பயணிக்க வேண்டும். எங்களது நீண்டகாலப் பிரச்சினைகளை பிச்சைக்காரன் புண்போல வைத்துக்கொண்டு, தேர்தல் மேடைகளில் மாத்திரம் அவற்றை முழங்கிவிட்டுப் போகின்ற கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்கமுடியாது என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.