சூடான் ஹெலிகொப்டர் விபத்தில் 5 அதிகாரிகள் பலி

0 601

 

சூடான் நாட்டின் அல் கடாரிப் மாநிலத்தில் தொலைத் தொடர்பு கோபுரம் மீது ஹெலிகொப்டர் மோதிய விபத்தில் அரசு அதிகாரிகள் 5 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சூடான் நாட்டின் கிழக்கு பகுதி வழியாக நேற்று அரசு அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் அல் கடாரிப் மாநிலத்தில் உள்ள வயல்வெளியின் மீது பறந்தபோது அங்கிருந்த ஒரு தொலைத் தொடர்பு கோபுரம் மீது பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் அந்த ஹெலிகொப்டர் தீப் பிடித்து எரிந்தது. எத்தியோப்பியா நாட்டின் எல்லையோரத்தில் நடந்த இந்த விபத்தில் அரசு அதிகாரிகள் 5 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் சிலர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பொதுவாக, சூடான் நாட்டில் பயன்பாட்டில் உள்ள விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் மிகவும் பழைமையான ரஷ்யா வகையைச் சேர்ந்தவையாகும். கடந்த செப்டம்பர் மாதம் இங்குள்ள நைல் நதிக்கு அருகாமையில் இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் இரு விமானிகள் உயிரிழந்தனர்.

தொடர்ந்து, ஒக்டோபர் மாதம் தலைநகர் கார்ட்டூமில் உள்ள விமான நிலையத்தின் ஓடுபாதையில் இரு இராணுவ விமானங்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 8 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.