ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானம் வைரங்களால் ஜொலித்தது உண்மையா?

0 627

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தின் வெளிப்புறம் முழுவதும் வைரங்களால் ஜொலிக்கும் புகைப்படம் ஒன்று சில நாட்களுக்கு முன்னால் இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்று எமிரேட்ஸ் விமான நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு எமிரேட்ஸ் விமான நிறுவனம் தங்கள் விமானத்தின் வித்தியாசமான புகைப்படம் ஒன்றைத் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அதில் ஆயிரக்கணக்கான வைரக் கற்கள் பதிக்கப்பட்டு, எமிரேட்ஸ் விமானத்தின் வெளிப்புறம் ஜொலித்தது. அந்தப் புகைப்படம் உலக அளவிலான கவனத்தை ஈர்த்தது.

இதை பார்த்த பலர் எமிரேட்ஸ் நிறுவனத்திடம், இது சாத்தியமா என்று கேள்வி எழுப்பினர். இந்நிலையில் இது விமானத்தின் உண்மையான புகைப்படம் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.

கிறிஸ்டல் கற்களை  உருவாக்கும் கலைஞரான சாரா ஷகீல் என்பவர் சாதாரண பொருட்களை கிறிஸ்டல் கற்களுடன் சேர்த்து உருவாக்கி, சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் எமிரேட்ஸ் விமானத்தின் புகைப்படத்தில் முற்றிலும் வைரங்களால் நிறைத்தது போல எடிட் செய்து அதை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். இதைக் கண்ட எமிரேட்ஸ் நிறுவனம், சாரா ஷகீல் அனுமதியுடன் விமானத்தின் புகைப்படத்தை தங்கள் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இதுதான் உலக அளவில் பரவியது.

இதற்கிடையே சர்ச்சைகள் உருவானதை அடுத்து எமிரேட்ஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்துக் கூறிய எமிரேட்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், ”அது உண்மையான விமானம் கிடையாது. சாரா ஷகீல் என்ற கலைஞரின் புகைப்படத்தை அவரின் அனுமதியோடு நாங்கள் பயன்படுத்தினோம்” எனத் தெரிவித்துள்ளார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.