ரிஷாத் பதி­யுதீன் மீதான வழக்கு: நடப்­பது என்ன?

0 303
  • சினமன்ட் கிராண்ட் குண்­டுத்­தாக்­குதல் வழக்கில் 7ஆவது சந்­தேக நப­ராக ரிஷாதின் பெயர்; வழக்கு முடியும் வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ரவு

  • ஹிஷா­லினி விவ­கா­ரத்­திலும் கைது செய்­ய­வுள்­ள­தாக மன்­றுக்கு அறி­விப்பு

எம்.எப்.எம்.பஸீர்

அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் மீது உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்கள் தொடர்பில் குற்­றம்­சு­மத்­தப்­பட்டு, அவர் தற்­போது 100 நாட்­க­ளுக்கும் மேலாக பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார். இந் நிலையில் அவ­ரது வீட்டில் பணிப்­பெண்­ணாக கட­மை­யாற்­றிய 16 வய­தான ஹிஷா­லினி உயி­ரி­ழந்த விவ­கா­ரத்­திலும் அவரை கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக மன்­றுக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உயிர்த்த ஞாயிறு
தாக்­குதல் விவ­காரம்:
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளுக்கு என கைது செய்­யப்­பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த முன்னாள் அமைச்­சரும் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் நேற்று முன்­தினம் கோட்டை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்ட நிலையில், அவரை குறித்த வழக்கு விசா­ரணை முடியும் வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது. அத்­துடன் குறித்த வழக்கை எதிர்­வரும் 18 ஆம் திகதி மீள விசா­ர­ணைக்கு எடுக்­கவும் கட்­ட­ளை­யிட்­டது. கோட்டை நீதிவான் பிரி­யந்த லிய­னகே இதற்­கான உத்­த­ரவை பிறப்­பித்தார்.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி கைது செய்­யப்­பட்ட ரிஷாத் பதி­யுதீன், ஏப்ரல் 27 ஆம் திகதி 90 நாள் தடுப்புக் காவலில் வைக்க பாது­காப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனா­தி­பதி வழங்­கிய அனு­ம­திக்கு அமைய தொடர்ந்து தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ரிக்­கப்­பட்டு வந்தார்.

இந் நிலை­யி­லேயே தடுப்புக் காவல் விசா­ர­ணை­களின் நிறைவில் அவர், பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 7 (2) ஆம் அத்­தி­யாயம் பிர­காரம் நேற்று முன்­தினம் கோட்டை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டார். இதன்­போது முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­க­ளான என்.எம். சஹீட், ருஷ்தி ஹபீப் மற்றும் அமீர் அலி ஆகியோர் ஆஜ­ரா­கினர்.

இந் நிலையில் கோட்டை நீதிவான் நீதி­மன்றில் விசா­ர­ணையின் கீழ் உள்ள, கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்­டலில் நடாத்­தப்­பட்ட குண்டுத் தாக்­குதல் குறித்த வழக்குக் கோவையில் 7 ஆவது சந்­தேக நப­ராக ரிஷாத் பதி­யு­தீனை முன்­னி­லைப்­ப­டுத்­து­வ­தாக சி.ஐ.டி.யினர் நீதி­வா­னுக்கு அறி­வித்­தனர்.

ஆரம்ப கட்ட விசா­ர­ணை­களில், சினமன் கிராண்ட் ஹோட்­டலில் தற்­கொலை தாக்­குதல் நடாத்­திய, குண்­டு­தா­ரி­யான இன்சாப் அஹமட் என்­ப­வ­ருக்கு, இந்த சந்­தேக நபர் (ரிஷாத்) எப்­படி உதவி செய்தார் என்­பது தொடர்பில் வெளிப்­பட்­ட­தா­கவும் அதற்­க­மை­யவே சந்­தேக நபரைக் கைது செய்து விசா­ரணை செய்து மன்றில் ஆஜர் செய்­வ­தா­கவும் சி.ஐ.டி.யினர் குறிப்­பிட்­டனர்.

சி.ஐ.டி. சார்பில் பொலிஸ் பரி­சோ­தகர் விஜே­சூ­ரிய விட­யங்­களை முன்­வைத்தார்.
“ சினமன் கிராண்ட் தற்­கொ­லை­தா­ரி­யான இன்சாப் அஹ­மட்­டுக்கு குளோசஸ் எனும் செப்பு உற்­பத்­தி­களை ஏற்­று­மதி செய்யும் நிறு­வனம் ஒன்று இருந்­தது. அந்த நிறு­வ­னத்­துக்கு விதி­மு­றை­களை மீறி சந்­தேக நபர் செப்பு உற்­பத்­தி­க­ளுக்­கான மூலப் பொருட்­களை பெற்­றுக்­கொள்ள உத­வி­யுள்ளார். செப்பு தொடர்­பி­லான உற்­பத்­தி­களில் ஈடு­படும் நிறு­வனங்­க­ளுக்கு, சந்­தேக நபர் பதவி வகித்த அமைச்சின் கீழ் இருந்த நிறு­வனம் ஊடாக முன்னர் மூலப் பொருட்கள் விநி­யோகம் செய்­யப்­பட்­டுள்­ளன. இதற்­க­மைய குளோசஸ் நிறு­வ­னத்­துக்கு அமைச்சின் கீழுள்ள நிறு­வனம் ஊடாக செப்பு மூலத் திர­வி­யங்­களை வழங்க முடி­யாது. அதனை மீறி அந் நிறு­வ­னத்­துக்கு அந்த மூலப் பொருள் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கான அனு­ம­தியை குறித்த அமைச்சின் மேல­திக செய­ல­ராக இருந்த பால­சுப்­ர­ம­ணியம் என்­பவர் வழங்­கி­யுள்ளார். சந்­தேக நபரின் (ரிஷாத்) தலை­யீட்­டுடன் அது வழங்­கப்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­களில் வெளிப்­பட்­டுள்­ளது.

உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்டுத் தாக்­கு­த­லுக்­கான நிதி பிர­தா­ன­மாக குளோசஸ் நிறு­வ­னத்தின் வரு­மானம் ஊடா­கவே பெறப்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. அந் நிறு­வ­னத்­துக்கு தனியார் வங்­கி­யொன்றின் கொழும்பு – புறக்­கோட்டை கிளையில் ஒரு கணக்கு உள்­ளது. அந்த கணக்­குக்கு டொலர்­களில் வரும் நிதி, ரூபா­வுக்கு மாற்­றப்­பட்டு அதே வங்­கியில் உள்ள பிறி­தொரு நடை­முறைக் கணக்­குக்கு மாற்­றப்­பட்­டுள்­ளது. (இதன்­போது குறுக்­கிட்ட நீதிவான் அந்த கணக்­குகள் யாரு­டை­யது என கேள்வி எழுப்­பினார். அவை குளோசஸ் நிறு­வ­னத்­தி­னு­டை­யது என சி.ஐ.டி.யினர் பதி­ல­ளித்­தனர்)
அவ்­வாறு அவ்­வங்­கிக்­க­ணக்­கி­லி­ருந்து மீளப் பெறப்­பட்ட 120 இலட்சம் ரூபா பணத்தை தற்­கொ­லை­தா­ரியின் மனை­வி­யான உம்மு ரசீனா என்­ப­வ­ரிடம் இருந்து நாம் மீட்­டுள்ளோம். தற்­கொ­லை­தா­ரியின் சகோ­தரி ஒரு­வ­ரிடம் இருந்து ஒரு தொகை பணமும், அந்த பணத்தை வங்­கி­யி­லி­ருந்து கொண்டு செல்ல பயன்­ப­டுத்­திய உறை­யையும் கைப்­பற்­றி­யுள்ளோம்.

கடந்த 2019 மார்ச் 28 ஆம் திகதி குளோசஸ் நிறு­வனம் 260 தொன் எடை கொண்ட 3 மில்லி மீற்றர் கம்­பி­களை ஏற்­று­மதி செய்ய அனு­மதி கோரி, சந்­தேக நபரின் அமைச்சின் மேல­திக செயலர் பால­சுப்­ர­ம­ணி­யத்­துக்கு கடிதம் அனுப்­பி­யுள்­ள­தாக குறிப்­பிட்ட சி.ஐ.டி. அதி­கா­ரிகள், அன்­றைய தினமே சந்­தேக நப­ரான ரிஷாத் பதி­யு­தீனும் அவ­ரது சகோ­தரர் ரியாஜ் பதி­யு­தீனும் மேல­திக செயலர் பால­சுப்­ர­ம­ணி­யத்­துக்கு அழைப்­பொன்­றினை எடுத்­துள்­ள­தா­கவும் தெரி­வித்­தனர்.

அத்­துடன் மறுநாள் 2019 மார்ச் 29 ஆம் திகதி மேல­திக செயலர், அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னையும், தற்­கொலை குண்­டு­தா­ரி­யான இன்சாப் அஹ­மட்­டையும் தொலை­பே­சியில் தொடர்­பு­கொண்­டுள்­ள­தாக சி.ஐ.டி.யினர் தெரி­வித்­தனர்.

அதன்­படி அதன் பின்னர் 6 தட­வைகள் குளோசஸ் நிறு­வனம் செப்பு கம்­பி­களை ஏற்­று­மதி செய்­துள்­ள­தா­கவும், அதில் இரு ஏற்­று­ம­திக்­கான பணம், புறக்­கோட்­டையில் உள்ள தனியார் வங்கிக் கணக்கு கிடைத்­துள்­ள­தா­கவும் அந்த பணமே உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக நம்­பு­வ­தா­கவும் சி.ஐ.டி.யினர் கூறினர்.
இதன்­போது இவ்­வ­ள­வு­தானா சந்­தேக நப­ருக்கு எதி­ரான சாட்­சியம்? என நீதிவான் பிரி­யந்த லிய­னகே சி.ஐ.டி.யிடம் வின­வினார். அதற்கு பதி­ல­ளித்த சி.ஐ.டி. பொலிஸ் அத்­தி­யட்சர் ரந்­தெ­னிய ஆம் என்றார்.

இத­னை­ய­டுத்து குறித்த நிதிக்கும் சந்­தேக நப­ருக்கும் இடை­யி­லான தொடர்பு என்ன என நீதிவான் மீளவும் வின­வினார்?

அதற்கு பதி­ல­ளித்த பொலிஸ் அத்­தி­யட்சர் ரந்­தெ­னிய, 3 மில்லி மீற்றர் கம்பி ஏற்­று­ம­தி­யினால் கிடைத்த நிதியே தாக்­கு­த­லுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும், அந்த ஏற்­று­ம­திக்­கான வாய்ப்பை இந்த சந்­தேக நபரின் தலை­யீட்­டு­ட­னேயே பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும் கூறினார்.

அத்­துடன் பல­சுப்­ர­ம­ணியம் எனும் மேல­திக செயலர் தற்­போது நாட்டில் இல்லை எனவும் அவர் வெளிநா­டொன்றில் உள்­ளதால் அவரை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்த முடி­ய­வில்லை எனவும் தெரி­வித்தார்.

இத­னை­ய­டுத்து சந்­தேக நப­ரான ரிஷாத் பதி­யுதீன் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­க­ளான என்.எம். சஹீட் மற்றும் ருஷ்தி ஹபீப் ஆகியோர் விட­யங்­களை தெளிவு­ப­டுத்­தினர். ஒரு அமைச்சர் தனது, அமைச்சின் மேல­திக செய­லா­ள­ருக்கு தொலை­பே­சியில் அழைத்­தது குற்­றமா என சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சஹீட் கேள்வி எழுப்­பினார்.

அதனைத் தொடர்ந்து இதனை மேலும் தெளிவு­ப­டுத்­திய சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப், “சி.ஐ.டி.யினர் கூறும் இந்த குளோசஸ் நிறு­வன விவ­காரம் தொடர்பில், உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் குறித்து விசா­ரித்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவும் விசா­ரித்­துள்­ளது. சாட்சிப் பெறு­ம­தி­மிக்க அவ்­வா­ணைக்­குழு அறிக்­கையில் அது தொடர்பில் முன் வைக்­கப்­பட்­டுள்ள பரிந்­து­ரைகள் மிகத் ெதளிவா­னவை. ஏன் அவற்றை சி.ஐ.டி. மன்­றுக்கு முன் வைப்­ப­தில்லை.

செப்பு வழங்­கா­மைக்­காக குளோசஸ் நிறு­வனம் ஊடாக ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்கப் போவ­தாக கூறி கேள்விக் கடி­தமும் அனுப்­பப்­பட்­டுள்­ளது.
ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடந்த செப்பு தொழி­லா­ளர்­களின் பிரச்­சி­னைகள் குறித்து கலந்­து­ரை­யாடும் கலந்­து­ரை­யா­ட­லுக்கு முன்­னைய தினம், அப்­போ­தைய ஜனா­தி­ப­தியின் தொடர்­பாடல் செயலர் சாந்த பண்­டார, மேல­திக செயலர் பால­சுப்­ர­ம­ணி­யத்­துக்கு குளோசஸ் நிறு­வ­னத்­துக்கு 500 மெட்ரிக் தொன் வழங்க பரிந்­துரை செய்து கடிதம் அனுப்­பி­யுள்ளார். எனினும் அமைச்சு அதனை வழங்­க­வில்லை.

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடந்த கலந்­து­ரை­யா­டலில், சந்­தேக நப­ரான ரிஷாத் கலந்­து­கொள்­ள­வில்லை. அங்கு அமைச்சின் செயலர் மற்றும் மேல­திக செயலர் ஆகி­யோரே கலந்­து­கொண்­டனர். (இதன்­போது மேல­திக செயலர் என்­பவர் ரிஷாத் பதி­யு­தீனின் தனிப்­பட்ட பணிக் குழுவின் உறுப்­பி­னரா என நீதிவான் வின­வினார். அதற்கு சி.ஐ.டி.யும் ரிஷாத்தின் சட்­டத்­த­ர­ணி­களும் இல்லை. அவர் அமைச்சின் மேல­திக செயலர். எஸ்.எல்.ஏ.எஸ். அதி­காரி. தற்­போது ஓய்­வு­பெற்­றுள்ள அவர் வெளிநாட்டில் வசிக்­கிறார் என தெரி­வித்­தனர்)

குளோசஸ் நிறு­வ­னத்­துக்கு ரிஷாத்தின் அமைச்சின் ஊடாக மட்டும் செப்பு விநி­யோ­கிக்­கப்­ப­ட­வில்லை. ஆகக் கூடு­த­லான செப்பு ரெலிகொம் நிறு­வ­னத்­தி­னா­லேயே அவர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளது. 2016 முதல் இந்த செப்பு அவர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் அமைச்­சா­னது குளோ­ச­சுக்கு மட்டும் செப்பு விநி­யோ­கிக்­க­வில்லை. மேலும் பல நிறு­வ­னங்­க­ளுக்கு செப்பு மூலத் திர­வி­யங்­களை விநி­யோ­கித்­துள்­ளது.

அமைச்சர் தனது அமைச்சின் மேல­திக செய­ல­ருக்கு தொலை­பே­சியில் கதைப்­பதை எப்­படி குற்­ற­மாக காணலாம். அமைச்­சரின் சகோ­தரர் ரியாஜ் பதி­யுதீன் அப்­போது அமைச்­சரின் பிரத்­தி­யேக செய­ல­ராவார். எனவே அவர்கள் மேல­திக செய­ல­ருடன் தொலை­பே­சியில் கதைப்­பது எந்த வகையில் குற்­ற­மாகும். என்ன கதைக்­கப்­பட்­டது என்ற உள்­ள­டக்­கத்தை வௌிப்­ப­டுத்­தாமல் வெறு­மனே தொலை­பேசி அழைப்பு எடுக்­கப்­பட்­டது என்­ப­தற்­காக கைது செய்து குற்றம் சுமத்­து­வது அநீ­தி­யாகும் என குறிப்­பிட்டார்.
இத­னை­ய­டுத்து மீளவும் மன்­றுக்கு விட­யங்­களை முன்­வைத்த சிரேஷ்ட சட்­டத்­த­ரணி என்.எம்.சஹீட், சந்­தேக நபர் சி.ஐ.டி.யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கும்­போது இரு தட­வைகள் இரு­தய மார­டைப்பு ஏற்­பட்­ட­தா­கவும் எனவே, பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் பிணை­ய­ளிக்க நீதி­வா­னுக்கு அதி­காரம் இல்­லா­ததால், விளக்­க­ம­றியல் உத்­த­ரவை விடுக்கும் போது அவ­ரது உடல் நிலையை கருத்தில் கொண்ட உத்­த­ர­வையும் பிறப்­பிக்­கு­மாறு கோரினார்.

இந் நிலையில் விட­யங்­களை ஆராய்ந்த நீதிவான் பிரி­யந்த லிய­னகே, முதலில் சி.ஐ.டி. சமர்ப்­பித்த அறிக்­கையில் சந்­தேக நபரை பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 7 (1) ஆம் பிரிவின் கீழ் ஆஜர் செய்­வ­தாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­ததை அவ­தா­னித்து, அது தவறு எனக் கூறி அத்­தி­யா­யத்தை 7 (2) என திருத்தி முன் வைக்க ஆலோ­சனை வழங்­கினார்.
அதனைத் தொடர்ந்து சந்­தேக நப­ரான ரிஷாத்தை சிறைச்­சா­லைகள் வைத்­தி­ய­சா­லையின் வைத்­தி­ய­ரிடம் முன்­னி­லைப்­ப­டுத்தி தேவை­யான மருத்­துவ உத­வி­களை வழங்க சிறைச்­சா­லைகள் திணைக்­க­ளத்­துக்கு பணித்­த­துடன், முறைப்­பாட்­டா­ளர்­களின் கோரிக்­கைக்கு அமைய அவரை வழக்கு முடியும் வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்டார். அதன்­படி இவ்­வ­ழக்கு எதிர்­வரும் 18 ஆம் திகதி மீள விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

ஹிஷா­லினி மரண விவ­காரம் :
வீட்டு வேலைக்கு அமர்த்­தப்­பட்ட 16 வய­தான ஹிஷா­லினி, உடலில் தீ பரவி உயி­ரி­ழந்த விவ­கா­ரத்தில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னையும், பொலிஸ் தலை­மை­ய­கத்தின் கொவிட் கட்­டுப்­பாட்டு பிரி­வுக்கு பொறுப்­பாக செயற்­படும் பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ஒரு­வ­ரையும் கைது செய்து மன்றில் ஆஜர் செய்ய நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக கடந்த திங்­கட்­கி­ழமை நீதி­மன்­றுக்கு அறி­விக்­கப்­பட்­டது. விசா­ர­ணை­யா­ளர்­க­ளுடன், முறைப்­பாட்­டா­ளர்கள் சார்பில் ஆஜ­ரான அரசின் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் இதனை மன்­றுக்கு விட­யங்­களை முன் வைக்கும் போது இரு வேறு சந்­தர்ப்­பங்­களில் குறிப்­பிட்டார்.

அத்­துடன் நீதி­வானின் ஆலோ­ச­னைக்கு அமைய, சிகிச்­சை­க­ளி­னி­டையே தனக்குத் தானே தீ வைத்­துக்­கொண்­ட­தாக ஹிஷா­லினி ெவளிப்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும், கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையின் அவ­சர சிகிச்சைப் பிரிவில் கட­மை­யாற்­றிய தற்­போது வெளிநா­டொன்­றுக்குச் சென்­றுள்­ள­தாக கூறப்­படும் வைத்­தியர் ரந்­திக்­க­விடம் விஷேட வாக்கு மூலத்­தினை பதிவு செய்­ய­வுள்­ள­தா­கவும் மன்­றுக்கு அறி­விக்­கப்­பட்­டது.
இந் நிலையில் இந்த விவ­கா­ரத்தில் ஏற்­க­னவே கைது செய்­யப்­பட்ட விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதி­யு­தீனின் மனைவி உள்­ளிட்ட நால்­வ­ரி­னதும் பிணைக் கோரிக்­கை­களை நிரா­க­ரித்த நீதி­மன்றம், அவர்­களின் விளக்­க­ம­றியல் காலத்தை எதிர்­வரும் ஆகஸ்ட் 23 ஆம் திக­தி­வரை நீடித்து உத்­த­ர­விட்­டது.

இந் நிலையில் கடந்த ஜூலை 26 ஆம் திகதி முதல் இது­வரை முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களின் தொகுப்பை மன்றில் முன் வைத்து பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் வாதங்­களை முன் வைத்தார்.

“ இவ்­வி­வ­கா­ரத்தில், ஹிஷா­லி­னியின் சடலம் கடந்த ஜூலை 31 ஆம் திகதி நுவெ­ரெ­லிய நீதிவான் முன்­னி­லையில் 2 ஆம் பிரேத பரி­சோ­த­னைக்­காக தோண்டி எடுக்­கப்­பட்­டது. இதன்­போது அங்கு ஹிஷா­லி­னியின் தாயார், தந்தை, சகோ­தரர் உள்­ளிட்­ட­வர்கள் ஆஜ­ராகி, சடலம் அடக்கம் செய்­யப்­பட்ட இடத்தை அடை­யாளம் காட்­டி­யி­ருந்­தனர்.
சடலம் மீது பிரேத பரி­சோ­த­னைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இதன்­போது சடலம் எம்.ஆர்.ஐ., சி.ரி.ஸ்கேன் பரி­சோ­த­னை­க­ளுக்கு முதலில் உட்­ப­டுத்­தப்­பட்­டது. மேல­திக பரி­சோ­த­னை­க­ளுக்­காக சட­லத்தின் பாகங்கள் அரச இர­சா­யன பகுப்­பாய்­வுக்கு அனுப்­பப்­பட்­டுள்ள நிலையில் அதன் பெறு­பே­றுகள் மிக விரைவில் கிடைக்­க­வுள்­ளன.
அதன் பின்னர், தற்­போதும் சட்ட வைத்­திய நிபுணர் ரூஹுல் ஹக்­கினால் வழங்­கப்­பட்­டுள்ள பிரேத பரி­சோ­தனை அறிக்­கையில் கூறப்­பட்­டுள்ள விட­யங்­க­ளுடன் ஒப்­பீடு செய்து விஷேட அறிக்கை மன்­றுக்கு வழங்­கப்­படும் என பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் தீலீப பீரிஸ் தெரிவித்தார்.

வழக்கின் முதல் சந்தேக நபரான தரகரே இந்த கடத்தல் அல்லது சுரண்டல் விவகாரத்தில் முக்கிய நபராவார். அவரே டயகமவிலிருந்து பெண்களை அழைத்து வந்து அங்கு சேவைக்கு அமர்த்தியவராவார்.

சி.ஐ.டி. தடுப்பில் உள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் இது தொடர்பில் விசாரணைகளை நடாத்தி வாக்கு மூலம் பெற்றுள்ளோம். அவர் இந்த தரகரை தனக்கு தெரியாது என கடந்த சனிக்கிழமை வாக்கு மூலம் அளிக்கும் போது தெரிவித்துள்ளார். அத்துடன் பணிப் பெண்கள் தொடர்பில் தனது மாமனாரே பொறுப்பாக செயற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

ஹிஷாலினியுடன் விஷேடமாக கதைத்து பழகிய ஞாபகம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எது எப்படியோ அவரது வாக்குமூலம் தொடர்பில் விசாரணை நடக்கிறது. மிக விரைவில் அவரையும் இந்த கூட்டில் ஏற்றுவோம் என்றார்.
இவ்வாறான நிலையில் இவ் வழக்கில் ஏற்கனவே கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரிஷாதின் மனைவி, மாமனார், மைத்துனர் மற்றும் தரகர் ஆகியோருக்கு பிணை வழங்க கோரி முன் வைக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய, சந்தேக நபர்களுக்கு உள்ள தொடர்புகள் காரணமாக விசாரணைகளில் தலையீடு செய்யவோ, சாட்சிகளை காணாமல் ஆக்கவோ முடியும் என தெரிவித்தும், பொது மக்கள் கொந்தளிப்பை காரணம் காட்டியும் சந்தேக நபர்களின் பிணை கோரிக்கையை நிராகரித்தார்.அதன்படி சந்தேக நபர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க அவர் உத்தரவிட்டார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.