கொவிட் ஜனாஸாக்களை தொடர்ந்து அடக்கம் செய்வதற்கு மஜ்மா நகரில் இடமில்லை
வேறு பிரதேசங்களில் மையவாடி காணியை பெற தொடர்ந்தும் முயற்சி ஜனாதிபதி,பிரதமரிடமும் விடயம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்கிறார் நஸீர் எம்.பி.
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொவிட் 19 தொற்றினால் மரணிப்பவர்களை தற்போது அடக்கம் செய்யும் மஜ்மா நகர் சூடுபத்தினசேனை மையவாடியில் இடப்பற்றாக்குறை உருவாகி வரும் நிலையில் வேறு பிரதேசங்களில் மையவாடிக்கான காணி ஒதுக்கிக் கொள்ளும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு இவ்விவகாரம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கான கலந்துரையாடல்களும் இடம் பெற்றுள்ளன. விரைவில் தீர்வு பெற்றுக் கொள்ளப்படும். முஸ்லிம்கள் இது தொடர்பில் அச்சம் கொள்ளத்தேவையில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், புத்தளம், கிண்ணியா, இறக்காமம் மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களில் இதற்கென காணிகள் இனங்காணப்பட்டுள்ளன. அத்தோடு தற்போதைய மையவாடி அமைந்திருக்கும் மஜ்மா நகர் சூடுபத்தினசேனைக்கு அருகிலுள்ள காணிகளையும் பெற்று மையவாடியை விஸ்தரிப்பது தொடர்பாக ஓட்டமாவடி பிரதேச சபையுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அதிக எண்ணிக்கையிலான ஜனாஸாக்கள் ஓட்டமாவடியை வந்தடைகின்றன. இதன்போது ஜனாஸாக்களின் உறவினர்களும் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர். இவ்விடயமும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. கோறளைப்பற்று மத்தி மற்றும் கோறளைப்பற்று மேற்கு என்பனவற்றின் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவர் என்ற வகையில் மஜ்மா நகர் சூடுபத்தினசேனை மையவாடியை விஸ்தரிப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகிறேன்.
இந்த விபரங்களை நாம் கவனமான கையாள வேண்டும். 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்ததற்காக எம்மை ஏசுபவர்கள் இவ்விவகாரத்தை பெரிது படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். நாட்டின் கடந்த கால வரலாறு அத்தோடு தற்போதைய அரசியல் நிலைமை என்பனவற்றுக்கு மத்தியில் முஸ்லிம்கள் நாம் கவனமாக எமது பயணத்தைத் தொடர வேண்டியுள்ளது. என்னை ஏசினாலும், ஏசாவிட்டாலும் சமூகத்தின் நலன் சார்ந்த எனது பயணத்தைத் தொடர வேண்டியது எனது பொறுப்பாகும் என்றார்.
இதேவேளை, தற்போது நாளாந்தம் சுமார் 25 ஜனாஸாக்கள் அடக்கத்துக்காக வந்து சேரும் நிலையில் இன்னும் சில நாட்களில் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய இடமில்லாத நிலை ஏற்படலாம். எனவே மாற்று இடத்துக்கு எங்கு செல்வது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக ஓரிடத்தை தெரிவு செய்ய வேண்டிய அவசர நிலை உருவாகியுள்ளது என ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.
சூடுபத்தினசேனையில் தற்போதைய மையவாடி 5 ஏக்கர் காணியிலே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli