ஸகாத்தின் சமூகப் பொருளாதார தாக்கங்கள்

0 611

உஸ்தாத் எம்.ஏ.எம் மன்ஸூர்

ஸகாத் சமூக வாழ்வில், குறிப்­பாக பொரு­ளா­தார வாழ்வில் ஏற்­ப­டுத்தும் தாக்கம் மிகவும் கவ­ன­மாக அவ­தா­னிக்கத் தக்­க­தாகும். அல்­குர்­ஆனில் அல்லாஹ் ஸகாத் எவ்­வாறு விநி­யோ­கிக்­கப்­பட வேண்டும் என விளக்­கி­யுள்­ளமை இங்கு கவ­னத்­திற்­கொள்­ளப்­பட வேண்டும்.

ஸகாத் என்­பது பரம ஏழை­க­ளுக்கும், ஏழை­க­ளுக்கும், ஸகாத்தின் செயற்­பாட்­டுக்­காக உழைப்­போ­ருக்கும், இஸ்­லாத்­தின்பால் அவர்­க­ளது உள்­ளங்கள் ஈர்க்­கப்­ப­டு­வ­தற்­கா­கவும், அடி­மை­களை விடு­தலை செய்­வ­தற்­கா­கவும், கடன் பட்­டி­ருப்­ப­வர்­க­ளுக்கும், இறை­பா­தை­யி­லான உழைப்­புக்கும்,வழிப்­போக்­கர்­க­ளுக்­குமே உரி­யவை. இது அல்லாஹ் விதித்த கட­மை­யாகும். அல்லாஹ் யாவும் அறி­பவன், மிக்க ஞான­மு­டை­யவன். (அல்­குர்ஆன் : 9:60)

இந்த வசனம் தரும் கருத்­துக்­களை கீழ்­வ­ரு­மாறு விளக்­கலாம் :
வறுமைப் பட்டோன் : இதனை இரு தர­மாக அல்­குர்ஆன் பிரிக்­கி­றது:
1) பகீர் : இவர் தனக்குத் தேவை­யான வரு­மா­னத்தில் மிகச் சிறிய பகு­தி­யையே சம்­பா­திக்கும் பரம ஏழை­யாவார். வரு­மா­னத்தில் 50% இற்கும் கீழ் உழைப்­பவர் எனலாம்.

2) மிஸ்கீன் : தனக்குத் தேவை­யான வரு­மா­னத்தில் ஓர­ளவு உழைத்துக் கொண்டு கஷ்­டத்­தோடு வாழ்வைக் கொண்டு செல்­பவர். 50% இற்கு மேல் வரு­மா­னத்தை உழைப்­பவர், 100% வரு­மா­னத்தைப் பெற்றுக் கொள்ள முடி­யா­தவர் என இவரை வரை­ய­றுக்­கலாம். வறு­மையை ஒழிக்கும் வகை­யி­லான இந்த வழி­காட்­டலைக் கீழ்­வ­ரு­மாறு புரிந்து கொள்­ளலாம்:
1. வறுமை ஒழிப்பில் பங்கு கொள்­வதே ஸகாத்தின் முதன்­மை­யான இலக்­காகும். இது ஆழ­மாக விளக்கத் தேவை­யில்­லாத அளவு தெளி­வா­ன­தாகும். எனவே ஸகாத்தின் கூடுதல் பகுதி இதற்கு ஒதுக்­கப்­பட வேண்டும்.
2. வறுமை ஒழிப்பை ஸகாத்தால் மாத்­திரம் சாத்­தி­யப்­ப­டுத்த முடி­யாது. கட்­டாய செல­வி­னங்கள் அதா­வது ஓர் ஆணின் செல­வி­னத்­திற்கு உட்­ப­டுவோர், வஸிய்யத், குற்­றங்­க­ளுக்குப் பரி­காரம் செய்தல், ஸகாத் அல்பித்ர், உழ்­ஹிய்யா, அகீகா, வக்ப், பரிசு, நேர்ச்சை, கடன் இவற்­றோடு அண்டை வீட்டார் உரி­மையும் சம்­பந்­தப்­படும். ஒரு முஸ்லிம் சமூ­கத்தில் இவை அனைத்தும் இணைந்து இயங்கும் போதுதான் வறுமை ஒழிப்பு சாத்­தி­ய­மாகும். எனவே இது பற்­றிய விழிப்­பு­ணர்வு ஊட்­டப்­ப­டலும், ஆர்­வ­மூட்­டப்­ப­டலும், மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். இப்­ப­கு­தியில் முஸ்லிம் அல்­லா­த­வர்­களும் பங்கு பெறு­வார்கள் என்­பது இங்கு கவ­னத்திற் கொள்­ளப்­பட வேண்டும்.
3. இப்­பங்கு விநி­யோ­கிக்­கப்­படும் போது மிஸ்கீன், பகீர் என்ற இரு சாரா­ருமே கவ­னத்திற் கொள்­ளப்­ப­ட­வேண்டும்.
i. அல்­லாஹ்வே இவ்­வாறு வறுமைப்பட்­டோரைப் பிரித்துச் சொல்லி இருப்­பதால் அதனைக் கடைப்­பி­டிப்­பது எமது கட­மை­யா­கி­றது.
ii. மிஸ்கீன் என்­பவர் பொரு­ளா­தார ரீதி­யாக நடுத்­தர வர்க்­கத்தைச் சேர்ந்­தவர் எனக் குறிப்­பி­டலாம். இத்­த­கை­ய­வர்­களை பொரு­ளா­தார ரீதி­யாகப் பலப்­ப­டுத்­து­வது இல­கு­வா­னது என்­ப­தோடு அது சமூகம் பலம் பெறவும் கார­ண­மாகும். இந்த வகையில் வறு­மைக்கு ஒதுக்­கப்­படும் தொகை இந்த இரு சாரா­ருக்­குமே தனித்­த­னி­யாக ஒதுக்­கப்­பட வேண்டும். மிஸ்கீன் ஒரு தனிப்­பி­ரி­வாகக் குறிக்­கப்­பட்­டுள்­ள­மை­யையும், ஸகாத் பெறத் தகு­தி­யானோர் எட்டுக் கூட்­டத்­தினர் என்­பது அப்­பி­ரி­வினர் தனிப் பிரி­வாகக் கொள்­ளப்­பட்­டுத்தான் என்­ப­தையும் கவ­னத்திற் கொள்ள வேண்டும்.
4. கணிப்­பீடு : குறிப்­பிட்ட ஊரின் வறுமை பற்­றியும், வறு­மைப்­பட்ட குடும்­பங்கள் பற்­றியும் ஒரு சரி­யான கணிப்­பீடு செய்­யப்­படல் மிகவும் அவ­சி­ய­மாகும்.
அத்­த­கைய கணிப்­பீட்டின் ஊடாக இரண்டு விட­யங்­களை அடை­யாளம் காண வேண்டும்.
I. வறு­மையை ஒழிக்கும் முறைமை பற்­றிய தெளிவு.
II. குறிப்­பிட்ட வறுமை ஒழிப்­ப­தற்­கான காலப்­பி­ரிவைத் திட்­ட­மிடல். அதா­வது இவ்­வ­ளவு பணத்­தொகை வருடா வருடம் செல­வி­டப்­பட்டால், இன்ன வகை­யான படி­மு­றை­களைக் கையாண்டால் வறு­மையை ஒழித்து விடலாம் என்ற படி­மு­றை­களைத் திட்­ட­மி­டலாம்.
5. நுகர்வுத் தேவைக்­காக இப்­பங்­கி­லி­ருந்து கொடுப்­பதை நன்கு குறைத்து முத­லீடு, தொழில் முயற்சி என்­ப­வற்றை முதன்­மை­யாகக் கொள்ளல்.
அதா­வது இத்­த­கைய பிரி­வி­னர்­களில் பொருத்­த­மா­ன­வர்­க­ளுக்குப் பொருத்­த­மான தொழிற் பயிற்­சியைக் கொடுத்தல், குறிப்­பிட்ட தொழிலை ஆரம்­பித்து இவர்­களை பங்­கு­தா­ரர்­க­ளாக்கல்.
இவ்­வி­ட­யங்கள் பற்­றிய துறை சார்ந் தோரின் ஆலோ­ச­னையின் பின்னர் இதனைச் செய்­வதே மிகப் பொருத்­த­மாக அமையும்.
6. மனோ­தத்­துவ, ஆன்­மீகப் பயிற்­சி­களை வழங்கல்:
பொரு­ளா­தார ரீதியில் அடி­மட்­டத்தில் இருப்­ப­வர்­க­ளான பகீர் என்போர் ஆன்­மீகப் பலப்­ப­டுத்­தப்­படும் தேவை­யு­டை­யோ­ராவர். கை நீட்­டாது வாழ்ந்து சுய­ம­ரி­யா­தையைக் காத்துக் கொள்ளல், நாமும் வாழ்வில் உழைத்து முன்­னேற முடியும் என்ற கருத்­துக்­களை மனதில் பதியச் செய்யும் ஆன்­மீக மனோ தத்­துவப் பயிற்­சி­க­ளையே இங்கு கூறு­கிறோம்.
இன்­னொரு வகையில் சொன்னால் இத்­த­கைய மனி­தர்­க­ளிடம் ஒரு மன மாற்­றத்தை உரு­வாக்கி அவர்­க­ளது வாழ்வில் ஒரு வித்­தி­யா­ச­மான போக்கை உரு­வாக்­கி­விடல் எனக் கூறலாம்.
7. நுகர்வுக் கலா­சாரம் வறு­மையின் பின்னால் உள்ள முக்­கிய கார­ணி­களில் ஒன்று. உணவு, உடை, வீடு, திரு­மணம் போன்ற நிகழ்­வுகள் போன்­ற­வற்றில் ஆடம்­பரப் போக்கைப் பர­வ­லாகக் காண முடியும். இதனால் நுகர்வை செயற்­கை­யாக அதி­க­ரித்துக் கொண்டு நுகர்­வையே வாழ்க்கைப் போக்­காகக் கொள்­பவன் வறு­மை­யையும் பல சந்­தர்ப்­பங்­களில் செயற்­கை­யாக உரு­வாக்கிக் கொள்­கிறான்.
இந்­நி­லையில் ஜுஹ்த் – உலகப் பற்­றற்ற வாழ்வு, கனாஆ – – திருப்தி காணல் என்ற இஸ்­லா­மிய விழு­மி­யங்கள் பற்­றிய விழிப்­பு­ணர்­வூட்­டலும், அதற்­கான பயிற்­சிகள் வழங்­கப்­பட்டு ஆர்­வ­மூட்­டலும் மிகவும் அவ­சி­ய­மான சமூக வேலைத்­திட்­ட­மாக கொண்டு செல்­லப்­படல் இப்­ப­கு­தியில் அடிப்­ப­டை­யா­ன­தாகும்.

3) கடன்­காரன்: இது குறித்த கீழ்­வரும் உண்­மை­களைக் கவ­னத்திற் கொள்ள வேண்டும்.
i. இவர் ஏழை­யாக இருக்க வேண்டும். கடனைக் கட்ட வழிகள் இல்­லா­தி­ருக்க வேண்டும் என்­பதே இதன் பொரு­ளாகும். அதா­வது கடனைக் கட்ட விற்­ப­தற்­கான மேல­திகப் பொருட்கள், செல்­வங்கள் எதுவும் இவ­ரிடம் இருக்கக் கூடாது. அதே­வேளை படிப்­ப­டி­யாக கொஞ்சம் கொஞ்­ச­மாகக் கட்டும் சக்­தியும் இவ­ரிடம் இல்­லா­தி­ருக்க வேண்டும்.
ii. பாவ காரி­யங்­களின் கார­ண­மாக இவர் கடன்­பட்­டி­ருக்கக் கூடாது. ஆடம்­பர செல­வி­னங்­க­ளுக்­காகக் கடன்­ப­டலும் இதில் அடங்கும். உதா­ர­ண­மாகத் தனது சக்­திக்கு அப்பாற்பட்ட வகையில் திரு­மண செல­வு­களை மேற்­கொண்டு கடன்­படல். தனது தேவைக்கு அதி­க­மாக வீடு கட்டி அல்­லது வீட்டை அழகு படுத்திக் கடன்­படல் போன்­றவை எல்லாம் இதில் அடங்கும்.
iii. பெரிய தொகை­யாக அமைந்­துள்ள கடன்­களை நிறைவு செய்ய முயலும் போது ஸகாத்­தாக சேர்ந்த தொகை மிகவும் பாதிக்­கப்­படும் என்­பதைக் கவ­னத்திற் கொள்ள வேண்டும். இந்­நி­லையில் கீழ்­வரும் முறை­களைக் கையா­ளலாம்.
I. சிறிய கடன்­க­ளுக்கு உத­வுதல்
II. கடன் கொடுத்­த­வ­ரோடு ஒப்­பந்தம் செய்து கொண்டு படிப் படி­யாகச் செலுத்­துதல்
III. கடனில் ஒரு பகு­தியை மாத்­திரம் செலுத்­துதல்

4) அல்- முஅல்­லபத் குலூ­புஹும்.
உள்­ளங்கள் இணைக்­கப்­படும் தேவை­யு­டையோர் என்பது இதன் நேரடிப் பொருள். பொது­வாக இஸ்­லாத்தை புதி­தாக ஏற்­றோரை பொரு­ளா­தார ரீதி­யாகப் பலப்­ப­டுத்­தலும், இஸ்­லா­மிய ரீதி­யாக அவர்­களைப் பயிற்­று­வித்­தலும் இதன்­மூலம் கரு­தப்­ப­டு­கி­றது என இப்­பி­ர­யோ­கத்­திற்கு விளக்கம் கொடுக்­கப்­ப­டு­கி­றது.

5) பீ ஸபீ­லில்லாஹ்.
இப்­பங்கு சிறு­பான்­மை­யாக முஸ்­லிம்கள் வாழும் நாடு­களைப் பொறுத்­த­வ­ரையில் அவர்­க­ளது இருப்பைப் பலப்­ப­டுத்தும் செயற்­பா­டு­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­ப­டலாம் என்­பது ஸகாத் ஒழுங்­கு­ப­டுத்­த­லுக்­கான சர்­வ­தேச நிறு­வ­னத்­தி­னதும் இன்னும் பல சட்­ட­மன்­றங்­க­ளி­னதும் பத்­வா­வாகும்.
இப்­ப­கு­தியில் அடிப்­ப­டை­யா­னது முஸ்­லிம்­களை ஆன்­மிக ரீதி­யாகப் பலப்­ப­டுத்தி அவர்­க­ளுக்கு மத்­தியில் காணப்­படும் சீர்­கே­டு­களைக் களைந்து ஒழுக்­க­ ரீ­தி­யாக மேம்­படச் செய்­த­லாகும்.

6) அல் ஆமிலூன்.
ஸகாத்தின் செயற்­பாட்­டுக்­காக உழைப்போர் என்­பது இதன் பொரு­ளாகும். ஸகாத் தனி நபர்கள் மூல­மாக நிறை­வேற்றப்படாது ஒரு நிறு­வன ஒழுங்கில் அது நிறை­வேற்­றப்­பட வேண்டும் என்ற கருத்தை இது கொடுக்­கி­றது.
ஏற்­க­னவே விளக்­கப்­பட்ட ஸகாத் மூல­மான இலக்­கு­களை அடைந்­து­கொள்ள இத்­த­கைய நிறு­வனம் மிக அவ­சி­ய­மா­னது என்பது தெளிவான உண்மையாகும்.
ரிகாப் -– அடி­மைகள், இப்னு ஸபீல் – – பிர­யாணி என்ற அடுத்த இரு பிரி­வு­க­ளதும் பிர­யோகம் பற்றி பல்­வேறு அபிப்­பி­ரா­யங்கள் காணப்­ப­டு­கின்­றன. அவை விரி­வான விளக்­கங்­களை வேண்டி நிற்­பன. சுருக்­க­மாக அவற்றை உள்­ள­டக்­கு­வது கடினம் என்­பதால் அவற்றை இங்கு தவிர்க்­கிறோம்.
ஸகாத் என்­பது முஸ்லிம் சமூ­கத்தை பொரு­ளா­தார ரீதி­யாகப் பலப்­ப­டுத்தும் அதே­வேளை ஆன்­மிக, ஒழுக்க ரீதி­யா­கவும் அவர்­களைப் பலப்­ப­டுத்­து­கி­றது என்­பது மேலே விளக்­கப்­பட்­டவை மூலம் தெளி­வா­கி­றது.

இந்த வகையில் முஸ்லிம் சமூகம் நாட்­டுக்கும் இதன்­மூலம் பங்­க­ளிப்பை செய்­கி­றது. அரசின் வறுமை ஒழிப்பு வேலைத்­திட்­டத்தில் பங்­கெ­டுப்­பது இதில் ஓரம்­ச­மாகும்.

இரண்­டா­வது நாட்டின் சுமுக வாழ்­வுக்கு ஒத்­து­ழைக்கும் வகையில் ஒழுக்க ரீதியாக உயர்ந்த நற்பிரஜைகளை அது உருவாக்க முனைகிறது. -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.