‘வியத்மக’ எனும் பலூனில் காற்று இறங்குகிறது

0 666

சிங்களத்தில் : பேராசிரியர் சரத் விஜேசூரிய
தமிழில் : எம்.எச்.எம். நியாஸ்

கடந்த சில மாதங்களுக்கு முன் வெலிக்கடை சிறைச்சாலையின் சில கைதிகளைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. அந்தக் கைதிகளில் எவருமே தான் அநியாயமாக சிறை வைக்கப்பட்டுள்ளதாகக் கூறவில்லை. அவர்களில் எவருமே ஐந்தாம் வகுப்பு வரைக்குமாவது பாடசாலையொன்றுக்கு செல்லவில்லை. அவர்கள் அனைவரும் அப்பாவிகளே என்றுதான் எனக்குத் தோன்றியது. வறுமை காரணமாக கல்வி கற்க முடியாது போனதால்தான் இன்று சிறைக்கைதிகளானதாக அவர்கள் கூறினார்கள். தான் சிறைத் தண்டனை அனுபவிப்பதனால் தமது மூன்று பிள்ளைகள் கல்வியை இழந்து போனதாக மற்றுமொருவர் கூறினார். கண்ணீர் சிந்தியவண்ணமே அவர் கூறினார் ‘பாடசாலைகளில் எம்மைப் போன்ற குற்றவாளிகளது பிள்ளைகள் (ஆசிரியர்களாலும் மாணவர்களாலும்) கேவலப்படுத்தப்படுவதே அதற்கான முக்கிய காரணமாகும்.

 

நிலைமை எவ்வாறாயினும் முறையாகக் கல்வி கற்க இயலாமற் போனதால்தான் தமது வாழ்க்கை இவ்வாறு தடம் புரண்டதாக அவர்கள் கூறினார்கள். கல்வியை ஓரளவாவது பெற்றிருப்பின் தாம் இந்த நிலைக்கு ஆளாகியிருக்கமாட்டோம் என்பதுதான் அவர்களது கூற்றுக்களின் சாரம்சமாக காணப்பட்டது.

தவறுகள் செய்வதற்கும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கும் அடிப்படைக் காரணம் கல்வி கற்காமைதானா? தண்டனைகள் பெற்று சிறைக்கூடுகளில் இருக்கும் மனிதர்களில் அநேகர் கல்வி கற்காதவர்கள்தான் என்பது உண்மையே. எனினும் எண்ணிலடங்கா தவறுகளையும் குற்றச் செயல்களையும் புரிந்து கொண்டு, அவற்றுக்காக எவ்வித தண்டனைகளும் அனுபவிக்காது, சிறைக்குச் செல்லாது, மகிழ்ச்சிகரமாக, ஆடம்பரமாக, சகல வசதிகளையும் அனுபவித்த வண்ணம், தன்னாலான அனைத்து அநியாயங்களையும் தொடர்ந்தும் செய்தவண்ணம், பல பிரமுகர்களும், பெண்மணிகளும் எவ்வாறு வாழ்கிறார்கள்? அவ்வாறானவர்களில் அநேகர் உயர்கல்வி கற்றவர்களாவர். அவ்வாறானவர்கள் பெற்ற கல்விதான் அதற்கான காரணமா?

ஓரளவாவது கல்வி கற்காது சிறைத் தண்டனைகளை அனுபவித்துவரும் சிறைக் கைதிகளிடம் வெட்கத்தையும் பயத்தையும் நான் கண்டேன். தாம் தவறு செய்து விட்டோம் என்று கூறி அதை ஏற்றுக்கொண்ட காரணத்தினால்தான் அவர்களிடம் வெட்க சுபாவமும் பயந்த சுபாவமும் காணப்படுகிறது. அவர்கள் அதிகமாகப் பயப்படுவதெல்லாம் தாம் சிறையிலிருந்தும் விடுதலையானபின் மீண்டும் குற்றவாளிகளாக மீண்டும் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வருமே என்று அவர்கள் நினைப்பதனால்தான்.
கல்வி கற்காதவர்கள்தான் மடையர்கள் ஆவார்கள். மடையர்களுக்கு மட்டுமே கோபம் வரும். கல்வி கற்றவர்கள் அறிவாளியாவார்கள். அறிவாளிகளுக்குக் கோபம் வராது. அவர்களுக்கு கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.

இலங்கை வாழ் மக்களில் கணிசமானவர்கள் ஏதாவது ஒரு துறையில் கற்றவர்கள்தான், அவ்வாறானவர்களுக்கு ஓரளவாயினும் அறிவுண்டு என்பதும் உண்மையே. அந்த அறிவின் மூலம் தமது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள அவர்களுக்கு முடியும். இது விடயம் பற்றி ஓய்வு பெற்ற சிரேஷ்ட சிவில் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.

“வாக்குறுதிகளை மீறியவர்களுக்கு மீண்டும் மீண்டும் தமது வாக்குகளைக் கொடுப்பவர்கள் தமது கோபத்தைக் கட்டுப்படுத்தியவர்களாவர். தமது கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத இந்நாட்டு மக்கள் குறிப்பிட்ட சில குடும்பத்தினரை நம்பியிருக்கமாட்டார்களே. தமது வாழ்நாள் பூராவும் தவறு செய்தவர்களுக்கு மீண்டும் மீண்டும் தேர்தலில் போட்டி போடுவதற்கு வெட்கம் இல்லை. அவர்களுக்கு தமது வாக்குகளை அளிக்க மக்கள் பயப்படுவதில்லை. அது தான் ஸ்ரீ லங்கா…”

வியத்மக என்றால் என்ன?

‘வியத்மக’ அமைப்பிலுள்ள ஒரு முக்கிய நபர், “வியத்மக என்பது ஒரு ப்ரான்ட் (Brand) இன் பெயராகும்” என்று கூறினார்.  ஒரு காரணத்துக்காகவே அந்தப் பெயர் உருவாக்கப்பட்டது. அதற்கான காரணம் யாது?

நஷ்டத்தில் இயங்கிய கம்பனியொன்றை மீளக் கட்டியெழுப்புவதற்கு மறுசீரமைப்பு தேவைப்படும். மறுசீரமைப்பின் மூலம் கம்பனியின் பழைய பெயர் மாற்றப்படுகிறது. அதை எடுத்துக் காட்டுவதற்கு புதிய பிரான்ட்  பெயரொன்று தேவைப்படுகிறது. அதற்கான தரச்சான்றிதழும் முன்வைக்கப்பட வேண்டும்.

‘வியத்மக’ என்பது கோட்டாபய ராஜபக்ஷவுக்காக அமைக்கப்பட்ட ப்ரான்ட் பெயரொன்றாகும். அந்த ப்ரான்ட்  பெயருடன் இணைந்து செல்லும் முகமாக ‘எளிய’ என்ற அமைப்பு சமூகத்தில் ஊடுருவியது. ஆனால் ‘எளிய’ இயற்கையாகவே ஆவியாகிவிட்டது. வியத்மக நன்கு முன்னேறியது. ‘வியத்மக’ கூட்டங்களில் ஆரம்பகாலத்தில் அரசியல்வாதிகள் உரையாற்றவில்லை. ஒரு சில புலங்களில் (Fields) உள்ள கல்விமான்கள், தொழிலதிபர்கள் மற்றும் முப்படை அதிகாரிகள் போன்றவர்களே அதில் உரையாற்றினார்கள். ‘தயான் ஜயத்திலக்க’ ஆரம்பத்தில் இவ்விரண்டு அமைப்புக்களிலும் உரையாற்றுபவராக இருந்தாலும் அவர் திடீரென வெளியே தூக்கி எறியப்பட்டார். மகிந்தவின் நிழலில் வளர்ந்தவரான அவர் ‘வியத்மக’வுக்குள் புகுந்துவிட்டால் அவ்வமைப்புக்குள் ‘சகுனி’ புகுந்ததாகிவிடும் என்ற ‘பீதி’ ஏற்பட்டிருக்கலாம்.

‘வியத்மக’ நிகழ்வுகளின் ஊடாகவே சீத்தா அரம்பேபொல முன்னணிக்கு வருகிறார். சீத்தா அரம்பேபொல ‘வியத்மக’ நிகழ்வுகளில் உரையாற்றும்போது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ‘சைட்டம்’ பிரச்சினைக்கு முகம் கொடுத்துக் கொண்டிருந்தது. ஆனால் அரம்பேபொல ‘சைட்டம்’ பிரச்சினையில் ஒரு போராளியாக காட்சியளிக்கவில்லை. ‘நாட்டுப்பற்றின்’ ஊடாகவே அரம்பேபொல ஊதிப் பெருப்பிக்கப்பட்டார். அவர் குறுகிய காலத்துக்குள் அதிகாரத்துக்கான பயிற்சியைப் பெற்றுக் கொள்வதில் வெற்றியடைந்தார். அதுமட்டுமன்றி ‘வியத்மக’வை கீழே போட்டு, அதன் காற்றை இறக்கிவிடும் அளவுக்கு அவர் திறமை பெற்றார். அவரது நாட்டுப்பற்று எங்கே சென்றது? அவர் எங்கே பறந்து சென்றார்?

வியத்மகவின் மற்றுமோர் நிபுனர் ‘கமல் குணரத்தின’வாகும். அவரும் வியத்மகவின் மற்றுமோர் பிரிவை சமநிலைப்படுத்தினார். அவர் நாட்டுப்பற்றின் சின்னமாக மாறினார். அவரும் குறுகிய காலத்துக்குள் அதிகாரத்துக்கான பயிற்சியைப் பெற்றுவிட்டு வியத்மகவில் இருந்தும் விடைபெற்றார்.

நாலக்க கொடஹேவா, வியத்மகவில் மற்றுமொரு பாத்திரமானார். ‘நாட்டுப்பற்று’க்காக அவர் ‘ஜெனிவா’வுக்கும் போனார். அவர் நன்கு சந்தைப்படுத்தப்பட்டார். கம்பஹா மாவட்டத்தில் பாரிய வெற்றியை அடைந்தார். எனினும் அவர் எதிர்பார்த்த வகையில் அதிகாரத்தில் பங்கு பெற முடியாது போயிற்று.

நாட்டுப் பற்றுக்காக அவர் அன்று எழுப்பிய குரல் இப்போது கேட்பதில்லை. ‘நாட்டின் வளங்களை விற்கிறார்கள்’ என்ற பேச்சையும் இப்போது அவரிடமிருந்து கேட்க முடியாதுள்ளது.

வியத்மக எனும் நாடகத்தில் உருவாகிய அனைத்துப் பாத்திரங்களும் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே நடித்துள்ளன என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

வியத்மகவுடன் யுத்துகம

போலியான தேசப்பற்றை நாட்டிலுள்ள ஒவ்வொருவரினதும் தலையில் கொட்டிவிட்டு, வியத்மகவுடன் யுத்துகமவும் தடம்புரண்டு விழுந்தது. தற்போது அவ்விரண்டும் எங்கே போகலாம் என்பதை அறியாது திகைத்துப் போயுள்ளது. அவற்றின் நிகழ்ச்சிகளுக்கு வருகைதரும் தேரோக்களும் மிகப் பொறுமையுடன் அமர்ந்திருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. முறையாக தமது உடற்தேவைகளை (வயிற்றிலுள்ள மலத்தை வெளியேற்றாது) பூர்த்தி செய்யாவிடில் வெளியேற்றப்படவேண்டிய மலத்தை ஒருவர் தமது வயிற்றுக்குள்ளேயே வைத்துக் கொள்ள நேரிடும். அதன் விளைவாக மனித உடலிலிருந்து துர்நாற்றத்துடன் காற்று வெளியாகும். அவ்வாறானவரிடம் அந்த அசுத்தக் காற்றை வெளியேற்றுவது தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்கேயாகும்.

அவர்களது துர்நாற்றத்துடனான காற்று ஏன் வெளியாக்கப்படுகிறது. கள்ள வழியால் மீண்டும் அரசியல்  களத்துக்கு வருவதற்குத்தான். அதன் மூலம் தமக்கு வெட்கமோ பயமோ இல்லை என்பதை நாட்டு மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்குத்தான்.
வியத்மகவுக்குப் போன்றே யுதுகமவுக்கும் பொருத்தமான வகையில் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி அவை இரண்டும் பட்டுப்புடவையால் போர்த்தப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன.

ஆனால் தற்போது நாட்டில் மிக மோசமான நிலை ஏற்பட்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றதன் விளைவு போலியான நாட்டுப்பற்று நிர்வாணமானது தான். அது எந்த அளவுக்கு நிர்வாணமானதென்றால் மிகப்பெரிய விற்பன்னருக்கும் தமது ‘உள்ளாடையை’ அணிய முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது. அதன் இறுதி விளைவு அடுத்துவரும் தேர்தலில் தோல்வியடைவதே. அரசு படுமோசமாக தோல்வியடைந்தாலும் குறுகிய காலத்துக்குள் அரசு பொருளாதாரத்தில் ஒரு படி முன்னேறியிருப்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் தற்போதைய அரசு தோல்வியடைந்த பின்னர்தான் பிரச்சினை தலைதூக்கும் என்பதுதான் உண்மையாகும்.

நல்லாட்சி தோல்வியடைந்தமையின் விளைவாகவே கோட்டாபய ராஜபக்ஷவுக்கு முடிசூடிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. எனினும் அவரது அரச நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள தோல்விகளால் அவர் கழுத்து வரை நீரில் மூழ்கியுள்ளது தெரிகிறது. நாட்டின் பொருளாதாரம் ஏற்கனவே தலைகீழாக விழுந்துள்ளது. அடுத்து என்ன செய்வதென்று அறியாது நாடு திக்குமுக்காடி நிற்கிறது. அனைத்து வழக்குகளையும் முடித்துக் கொள்வதும் எதிர்கால பாதுகாப்பு கருதி நீதிமன்ற அதிகாரத்தை ஸ்தாபித்துக் கொள்வதுமே உள்ளத்துக்கு ஓரளவு அமைதியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நாட்டின் எதிர்காலம்?

நாடு வங்குரோத்து நிலையில்

எமது கடன்களை மீளச் செலுத்த முடியாத நிலையில் நாமுள்ளோம் என்று ஜனாதிபதியே கூறுவதானால் இந்த நிலையை விதியின் விளையாட்டு என்று கூறுவதா? ‘சங்கிரில்லா’ ஹோட்டலில் ‘புல்சூட்’ (Full Suit) இனால் தம்மை அலங்கரித்துக் கொண்டு நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவது எவ்வாறு என்பது பற்றி அவர் ஒரு கருத்தை முன்வைத்தார். அது ஒரு வித்தை என்பது நாட்டு மக்களுக்கு தற்போது தெளிவாகிவிட்டது. ‘புத்திஜீவிகள்’ என்ற ஆடைகளால் தம்மை அலங்கரித்துக் கொண்டு, தாமே அறிவாளிகளுக்கெல்லாம் அறிவாளி என்று பேசி நடித்து நாட்டை ஏமாற்றுவதால் நாட்டுக்கு ஏற்படப்போவது அழிவு மட்டுமே.

‘வியத்மக’வில் இருக்கும் பலதரப்பட்டவர்களால் நடத்தப்பட்ட அலங்காரமான உரைகளும் அந்த திட்டங்களும் விழலுக்கு இரைத்த நீராக மாறிவிட்டன. அந்த அலங்காரமான கதைகள் கூறும் போதும், அவற்றுக்கான திட்டமிடல்  முன்னெடுத்து வைக்கும் போதும் அவை இப்பூமியில் நடைமுறைக்குச் சாத்தியமற்றவையாகும் என்பதை மற்ற அனைவரையும் விட முதன் முதலில் அவர்களே விளங்கியிருப்பார்கள். தற்போது தன் வயிற்றிலுள்ள ‘மலத்தை’ வெளியேற்றுவதற்கு ஒரு மலசல கூடமாவது இல்லாத நிலைக்கு நாடு தள்ளப்பட்டுவிட்டது.

‘வியத்மக’வுக்கு தற்போது எஞ்சியிருப்பதெல்லாம் அடக்குமுறை மட்டுமே. தமக்கு அறிவுபூர்வமாக மட்டுமன்றி வேறு வகையிலும் பிரச்சினையைத் தீர்க்க முடியுமென ஜனாதிபதி கூறியுள்ளார். அது பாதுகாப்புச் செயலாளராக செயற்படும் போது தாம் நாட்டுக்குக் காட்டிய செயல் முறையாகும். ஜனாதிபதி பதவியிலிருந்து அவர் மீண்டும் பாதுகாப்பு செயலாளர் பதவியை நோக்கி கீழிறங்கப் போவதில்லை என்றும், ஜனாதிபதி பதவியை பாதுகாப்புச் செயலாளர் பதவியாக மாற்றிக் கொள்வதே இதற்கான ஒரே தீர்வாகும். ஒரு அரசியல்வாதியல்லாத ஜனாதிபதி, தமக்கு வரும் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பார் என்பதை தமது பேச்சு மூல சுற்றறிக்கைகள் மூலம் அவர் ஏற்கனவே எடுத்துக் காட்டிவிட்டார்.

தமது அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு தமது உயிர் இருக்கும் வரை ஆட்சியை நடத்துவேன் என்று எண்ணினால் அது சில வேளை ஒரு யதார்த்தமாகலாம். ஆனால் இரத்த ஆறு ஒன்றுக்கூடாகவேனும் ஒரு நாள் ஜனநாயகம் தனது தலையைத் தூக்குமென்பது யதார்த்தமாகும். ஆனால் அந்தக் காலத்தில் நாடு எவ்வாறிருக்கும்? – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.