காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தை இரத்துச் செய்து ஏனைய மாநிலங்களைப் போன்று இந்திய ஆட்சிக் கட்டமைப்பிற்குள் உள்வாங்கும் பிரதமர் நரேந்திர மோடியின் அதிரடி அறிவிப்பின் ஊடாக இந்தியா ஒற்றையாட்சிக்குள் நகர்வதாகவே உணர முடிகின்றது என தெரிவித்துள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க, இலங்கையில் அதிகாரப் பகிர்வு குறித்து இதன்பிற்பாடு பேசுவதற்கான தார்மீக உரிமையினை இந்தியா இழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்திய அரசாங்கத்தினால் அண்மையில் காஷ்மீர் தொடர்பில் முக்கிய தீர்மானமொன்று முன்னெடுக்கப்பட்டது. அதாவது, காஷ்மீருக்கான விசேட நிலைமையை இரத்துச் செய்து பொதுவான ஒரு பிராந்தியமாக இந்தியா அறிவித்தது. இந்திய அரசிலயமைப்பின் 370ஆவது பிரிவின் கீழ் இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கு வழங்கப்படாத விசேட சிறப்புரிமை காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் காஷ்மீருக்கு பிரத்தியேகமான தேசியக் கொடி, பாராளுமன்றம், சுயாட்சி அதிகாரங்கள் கிடைக்கப்பெற்றன.
இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட போது காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கிலே வெள்ளையர்கள் அன்று அவ்வாறானதொரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்ததுடன், இந்திய தேசிய காங்கிரஸ் அதனை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தியது. இதற்கு எதிராகக் கடுமையான எதிர்ப்புக்களை இந்துக்கள் வெளியிட்டிருந்தார்கள். இவ்வாறானதொரு வரலாற்றுப் பின்னணியில் இரண்டாவது தடவையாகவும் ஆட்சியதிகாரத்திற்கு வந்துள்ள நரேந்திர மோடி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தவாறு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இரத்துச் செய்துள்ளார்.
இதன் பிரகாரம் இந்தியாவின் ஏனைய மாநிலங்களைப் போன்று காஷ்மீரும் இந்தியாவின் ஒரு மாநிலமாக கருதப்பட வேண்டிய வகையில் அறிவிக்கப்பட்டது. தேர்தலில் வாக்குறுதிக்கமைய தான் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக இந்திய ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டது. மறுபுறம் காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் அந்த தீர்மானத்திற்கு எதிராக செயற்படுவதை தவிர்த்துக் கொண்டன.
இந்தியாவின் இந்த செயற்பாட்டின் காரணமாக இலங்கைக்கு முக்கியமான சில விடயங்கள் குறித்து அவதானம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையின் தமிழ் பிரிவினைவாதிகள் பெரும்பாலும் மாகாண சபை முறைமையினை நடைமுறைப்படுத்தி காஷ்மீர் போன்று சிறப்பு அதிகாரங்களுடன் சுயாட்சியை கோரினர். தற்போது அந்த நிலைப்பாட்டை மீறும் வகையில் இந்தியா செயற்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் இந்தியாவிற்கு கருத்துரைப்பதற்கான தார்மீக உரிமை கிடையாது.
பொருளாதார ரீதியில் பிராந்தியத்தில் வலுவான இராஜ்ஜியமாக இந்நியா முன்னகர்கையில் அரச கட்டமைப்பை கூடியளவில் ஒற்றையாட்சிக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றமை இயற்கையான ஒரு விடயமாகும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய செயற்பாடுகளும், இந்நியா முழுவதிலும் பயன்படுத்தும் அதிகாரங்களை கவனத்தில் கொள்ளும்போது ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவே அவரைக் கருத முடிகின்றது.
இலங்கை இரத்துச் செய்ய முயற்சிக்கும் நிறைவேற்று அதிகாரத்தை, இந்நிய பிரதமர் நரேந்திர மோடி கையிலெடுத்து செயற்படுகின்றார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
vidivelli