மேற்கு நாடுகள் ஆயுதங்களை விற்கவே பலஸ்தீன் போன்ற நாடுகளில் மோதல்களை ஊக்குவிக்கின்றன
பலஸ்தீன தூதரக கிறிஸ்மஸ் நிகழ்வில் கர்தினால் தெரிவிப்பு
(எம்.வை.எம்.சியாம்)
உலக நாடுகள் மத்திய கிழக்கு நாடுகளை எல்லாம் காலத்துக்கு காலம் மோதலை ஏற்படுத்துவது அவர்களது ஆயுதங்களை விற்பனை செய்வதற்காகும். அதனை விற்றால் தான் அவர்களது பொருளாதாரம் நிலைத்து நிற்கும். இதே போன்று தான் இலங்கையிலும் மோதலை உருவாக்கினார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை ஏற்படுத்தி இங்கு முஸ்லிம் கிறிஸ்தவ பிரச்சனை ஏற்படுத்த முனைந்தார்கள். நாம் அதனை உணர்ந்தோம். அவ் விடயத்தில் மிகவும் அவதானமாக செயல்பட்டோம் என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பலஸ்தீன் தூதுவராலயத்தில் இவ் வருடமும் கிறிஸ்மஸ் நிகழ்வுகள் பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் தார் ஸைத் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் அருட் தந்தை மெல்கம் கர்தினால் ரஞ்சித் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டுத் தூதுவர்கள், கிறிஸ்தவ பாரதியார்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு கிறிஸ்மஸ் அனுஷ்டானங்களில் ஈடுபட்டனர்.
இதன்போது பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்ந்து உரையாற்றுகையில், பலஸ்தீன் யுத்தத்தை நிறுத்துவதற்கு நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் முன்வைக்கப்பட்ட போது அதனை வீட்டோ பலத்தை பாவித்து அமெரிக்கா தடுத்துள்ளது. அவர்களுக்கு தேவைப்படுவதெல்லாம் அவர்கள் உற்பத்தி செய்யும் ஆயுதங்களை விற்பனை செய்வதேயாகும். அதனை விற்றால் தான் அவர்களது பொருளாதாரம் நிலைத்து நிற்கும்.
இவ்வாறு தான் உலக நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் காலத்துக்கு காலம் மோதலை ஏற்படுத்தி ஆயுதம் விற்பனை செய்கின்றனர். இதே போன்று தான் இலங்கையிலும் மோதலை உருவாக்கினார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை ஏற்படுத்தி இங்கு முஸ்லிம் கிறிஸ்தவ மோதலை ஏற்படுத்த முனைந்தார்கள். நாம் அதனை உணர்ந்தோம். அவ் விடயத்தில் மிகவும் அவதானமாக செயல்பட்டோம்.
பலஸ்தீன் நாட்டில் தொடர்ந்தும் மோதல்கள் நடந்து வருகின்றன. அங்கு வாழ்ந்த கிறிஸ்தவ மக்களையும் யூதர்கள் தாக்கினார்கள். அவர்கள் எகிப்து வழியாக அகதிகளாக வெவ்வேறு நாடுகளில் இடம்பெயர்ந்தார்கள். நான் 1974 களில் ஜெருசலேம் சென்றிருந்தேன். அங்கு வீடு வாசலை இழந்து ஓர் அரபுத்தாய் கதறிக் கொண்டிருந்தார். அவர் அதற்காக நஷ்ட ஈடு கேட்டு அங்கு கதறினார். அந்த அரபுத் தாயிடம் அருகில் சென்ற விசாரித்தேன். நான் இலங்கையர். என்னால் அவருக்கு அங்கு உதவ முடியாது என்றேன். அதன் பின்னர் அங்குள்ள அதிகாரிகள் அப் பெண்ணை அங்குள்ள அகதி முகாமிற்கு அனுப்பி வைத்தார்கள். பலஸ்தீன் மக்கள் 1947 களிலிருந்து பாரிய அவலங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் என்றும் கர்தினால் தனது உரையில் சுட்டிக்காட்டினார். அத்துடன் பலஸ்தீனில் அமைதி திரும்பவும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டார்.