காஸாவில் குண்டுத் தாக்குதல்களை விடவும் நோய்களால் அதிகமானோர் உயிரிழக்கும் ஆபத்து
உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
காஸாவின் சுகாதார நெருக்கடி மேலும் தொடர்ந்தால், முற்றுகையிடப்பட்ட காஸா பகுதியில் வாழும் பலஸ்தீனியர்கள் நோய்களால் உயிரிழக்கும் ஆபத்து அதிகம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
15,000 க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள், காஸாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளால் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளாவர்.
“காஸாவில் சீர்குலைந்து போயுள்ள சுகாதார கட்டமைப்பை மீள உயிர்ப்பிக்க முடியாவிட்டால் குண்டுத் தாக்குதல்களில் இறந்தவர்களை விட அதிகமான மக்கள் நோயால் இறக்க வேண்டி வரும்” என்று உலக சுகாதார நிறுவனத்தின் மார்கரெட் ஹாரிஸ் ஜெனீவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் குறிப்பிட்டார்.
வயிற்றுப்போக்கு நோய்கள் உட்பட தொற்று நோய் பரவலின் அதிகரிப்பு குறித்து அவர் கவலை தெரிவித்தார்.
“காஸாவில் மருந்துகள் இல்லை, தடுப்பூசி நடவடிக்கைகள் இல்லை, பாதுகாப்பான நீர், சுகாதாரம் மற்றும் உணவு இல்லை. குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு அதிகரித்துள்ள மிக அதிக எண்ணிக்கையிலான சம்பவங்களை நாங்கள் கண்டோம்” என இடம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கை நிலைமைகள் குறித்த ஐ.நா அறிக்கையை மேற்கோள் காட்டி ஹாரிஸ் கூறினார்.
“நான் நிறையப் பெற்றோரைச் சந்தித்தேன்… தங்கள் குழந்தைகளுக்கு என்ன தேவை என்று அவர்களுக்குத் தெரியும். அவர்களுக்கு பாதுகாப்பான தண்ணீர் கிடைக்கவில்லை, அது அவர்களை கடுமையாக பாதித்துள்ளது.” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மாத தொடக்கத்தில், முற்றுகையிடப்பட்ட பகுதியில் 70,000 க்கும் மேற்பட்ட கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள் மற்றும் 44,000 க்கும் மேற்பட்ட வயிற்றுப்போக்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியது.
பலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா. முகவரகமான UNRWA, காஸாவில் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் உவர் நீரை குடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக முன்னரே எச்சரித்துள்ளது.
கடந்த வாரம், ஐநா மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) 700 பேருக்கு ஒரு ஷவர் யூனிட் மற்றும் 150 பேருக்கு ஒரு கழிப்பறையே உள்ளதாக கூறியது.
காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனை செயலிழந்துள்ளமை ஒரு “சோகம்” என்று ஹாரிஸ் வர்ணித்தார்.
காசாவில் உள்ள ஐ.நா குழந்தைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் எல்டர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இஸ்ரேலின் குண்டுத் தாக்குதல்களால் காயமடைந்த குழந்தைகள் அழுக்கு நீரைக் குடிப்பதால் இரைப்பை குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான குழந்தைகளால் மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன என்றார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே எட்டப்பட்ட நான்கு நாள் போர் நிறுத்தத்தை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்க மத்தியஸ்தர்கள் உடன்பாட்டை எட்டியுள்ளதாக கத்தார் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், போர் நிறுத்தத்தை “நம்பிக்கை மற்றும் மனிதநேயத்தின் வெளிப்பாடு” என்று விபரித்தார். ஆனால் காஸாவில் உள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த யுத்த நிறுத்தம் போதியதாக இல்லை என்றும் அவர் எச்சரித்தார்.
“இது மிகவும் துன்பப்படும் காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை மேலும் அதிகரிக்க உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனினும் இந்த குறுகிய காலத்திற்குள் மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வது சாத்தியமற்றது” என்றும் குட்டெரெஸ் திங்களன்று செய்தியாளர்களிடம் கூறினார். – Vidivelli