எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஐஎஸ்.ஐஎஸ்.அமைப்பிலிருந்து பயிற்சி பெற்ற சிலர் காத்தான்குடியில் இன்னும் வாழ்வதாக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக அரசாங்கம் உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் அரசாங்கத்தை கோரியுள்ளது.
இது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களினால் சம்மேளனம் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்தியது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளளத்தின் தலைவர் ரஊப் ஏ மஜீத் உட்பட சம்மேளன உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது சம்மேளன செயலாளர் ஏ.எல்.எம்.சபீல் நளீமி கருத்து வெளியிடுகையில், செனல் 4 காணொளி வெளிவந்த பின்னர் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றுமொரு குற்றச்சாட்டை காத்தான்குடி சமூகத்தின் மீது முன் வைத்துள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிலிருந்து பயிற்சி பெற்ற சிலர் இந்த காத்தான்குடியில் இன்னும் வாழ்வதாக அவர் கூறியுள்ளார்.
அவர்கள் யார்? எங்கிருக்கின்றார்கள்? என்று அடையாளப்படுத்தப்படல் வேண்டும். அவர்கள் அடையாளப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டு உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என்பது எமது காத்தான்குடி சமூகம் சார்பாக அரசாங்கத்திடம் முன் வைக்கின்ற வேண்டுகோளாகும்.
2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் எமது நாடு மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டதை நாம் அறிவோம். குறிப்பாக அந்த ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட ஒரு சிலர் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் எமது காத்தான்குடி சமூகம் பாரியளவில் பாதிக்கப்பட்டது.
வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமலிருந்தது. ஏனைய பிரதேசங்களுக்கு காத்தான்குடி முஸ்லிம்கள் செல்கின்ற போது அவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்ற நிலைமை ஏற்பட்டது.
மதங்களுக்கிடையில் இனங்களுக்கிடையில் முஸ்லிம்களை சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்ற நிலை காணப்பட்டது. இப்படியான அச்சுறுத்தல்களையும் பல்வேறு வகையான சந்தேகங்களையும் இந்த சமூகத்தின் மீது ஈஸ்டர் தாக்குதல் ஏற்படுத்தியது. இந்த ஈஸ்டர் தாக்குதல் இடம் பெற்ற பின்னர் விசாரணை செய்வதற்காக பல்வேறு விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன.
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் யார் இருந்தார்கள் யார் செய்தார்கள் என்பவைகள் சம்பந்தமாக பாராளுமன்ற தெரிவுக் குழு மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழு என்பன அமைக்கப்பட்டு விசாரணைகள் செய்யப்பட்டன.
இருந்தாலும் அண்மையில் செனல் 4 வெளியிட்ட ஆவணத் தொகுப்பின் பின்னர் இது தொடர்பான இன்னும் சில விடயங்கள் வெளி வரத் தொடங்கியுள்ளன. அஸாத் மௌலானா தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் அதன் பாரதூரத்தை கருத்திற் கொண்ட அரசாங்கம் ஜனாதிபதி இதனை விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி இமாம் அவர்களின் தலைமையில் 3 பேரடங்கிய ஆணைக்குழுவை நியமித்துள்ளார். அதற்காக ஜனாதிபதியவர்களுக்கு காத்தான்குடி சமூகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். அத்தோடு இதை சர்வதேசமும் விசாரணை செய்யவேண்டும். சர்வதேச விசாணையும் அவசியம் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம்.
அந்த ஆவணப்படத்தில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள் பாரதூரமான விடயங்கள். இந்தக் குண்டுத்தாக்குதலின் பின்னால் அரசாங்கம் இருந்திருக்கின்றது என்ற பலமான சந்தேகம் எல்லோர் உள்ளங்களிலும் எழும்பத் தொடங்கியுள்ளது. மக்கள் இதனை பேசத் தொடங்கியிருக்கின்றார்கள்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னால் எமது மாவட்டத்தைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றுமொரு குற்றச்சாட்டை காத்தான்குடி சமூகத்தின் மீது முன் வைத்துள்ளார். ஐஎஸ்.ஐஎஸ். அமைப்பிலிருந்து பயிற்சி பெற்ற சிலர் இந்த காத்தான்குடியில் இன்னும் வாழ்வதாக ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது எம்மைப் பொறுத்த வரைக்கும் ஒரு பாரதூரமான குற்றச்சாட்டாகும். கண்டிப்பாக இந்தக் குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும். அவர்கள் யார் யார் இருக்கின்றார்கள் என்று அடையாளப்படுத்தப்படல் வேண்டும். அவர்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டும்.
அரசாங்கம் இது விடயத்தில் பொடுபோக்காக இருக்கக் கூடாது என்பதை நாம் தெளிவாக கூறி வைக்க விரும்புகின்றோம். இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்தவர் ஒரு பொறுப்பு வாய்ந்த அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமாவார்.
அரசாங்கத்தில் முக்கியமான பங்குகளை வகிக்கும் ஓர் இராஜாங்க அமைச்சர் காத்தான்குடியில் ஐஎஸ். ஐஎஸ். அமைப்பில் இன்னும் பயிற்சி பெற்றவர்கள் இருக்கின்றார்கள் என்று கூறியிருப்பதை நாம் பராமுகமாக விட முடியாது. ஆகவே அரசாங்கத்திடம் வினயமாக நாம் கேட்டுக் கொள்வது என்னவெனில், கடந்த காலங்களில் இப்படியான போலிப்பிரச்சாரங்கள் செய்யப்பட்டதன் காரணமாகத்தான் முஸ்லிம் சமூகம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கூறியுள்ள இந்த விடயத்தை நாங்கள் ஒரு பாரதூரமான விடயமாக பார்க்கின்றோம். அரசாங்கம் இது விடயத்தில் கூடுதலான கவனம் செலுத்தி விசாரண செய்ய வேண்டும் என்பதை நாம் அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம் என்றார்.
காத்தான்குடி தொழில்வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புக்களின் ஒன்றியம்
செனல் 4 வெளியிட்ட காணொளி தொடர்பாக நேர்த்தியான விசாரணை வேண்டுமென காத்தான்குடி தொழில்வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புக்களின் ஒன்றியத்தினர் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமையன்று (17) காத்தான்குடி கடாபி ஹோட்டலில் காத்தான்குடி தொழில் வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவரும் காத்தான்குடி நகர சபை முன்னாள் தவிசாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன் தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இது தொர்பாக முபீன் கருத்து தெரிவிக்கையில், பக்கசார்பற்ற உலகம் ஏற்றுக் கொள்கின்ற நல்ல சட்ட நிபுணர்களும் குற்றச் செயல்களை பகுப்பாய்வு செய்கின்ற வல்லுனர்களும் அடங்கிய ஒரு சர்வதேச நிபுணர் குழு இந்த விடயத்தை துல்லியமாக விசாரணை செய்து இதற்கான சூத்திரதாரிகளை கண்டறிவதோடு இதற்கான காரணத்தை மக்கள் மயப்படுத்தி உலகறியச் செய்வதுடன் சர்வதேச நியமங்கள், ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளுக்கு ஏற்ப விசாரணை செய்து இந்த சூத்திரதாரிகள் தண்டிக்கப்படல் வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நஷ்டஈடு வழங்கப்படுவதுடன் அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான நிவாரணம் வழங்கப்படல் வேண்டும்.
அத்துடன் இக்குண்டுத் தாக்குதலில் இலங்கையின் ஒட்டு மொத்த சமூகமும் பாதிக்கப்பட்டுள்ளதால் இலங்கை சர்வமத தலைவர்களின் தலைமையில் இலங்கை மக்களின் பத்து இலட்சம் பேர்களின் கையொப்பங்கள் பெறப்பட்டு பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணையை கோரும் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பப்பட வேண்டும். ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டும் அதற்கு நடந்தது என்ன என்பதை இதுவரை பொது மக்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. நல்லாட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கையின் சிபாரிசுகளுக்கு நடந்தது என்ன என்பதையும் பொது மக்கள் அறிய விரும்புகின்றனர்.
எனவேதான் சர்வதேச விசாரணை அவசியம் என வலியுறுத்துகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சட்டத்தரணி முகைதீன்சாலி, ஆசிரியர் எச்.எம்.எம்.பாக்கீர், மௌலவி கே.எல்.எம்.அனீஸ், மௌலவி ஆதம்லெவ்வை ஆகியோர் கலந்து கொண்டனர்.