முஸ்லிம் சமூகத்தின் அச்சத்தை போக்குவோம்

0 152

நாடளாவிய ரீதியில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிகிறது. சுகாதார அமைச்சின் நேற்றிரவு 8 மணி வரையான தரவுகளின்படி நாட்டில் 55526 பேர் இதுவரை தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் 47984 பேர் குணமடைந்துள்ளதுடன் 7268 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் தினமும் சராசரியாக 337 பேர் தொற்றுக்குள்ளாகின்றனர். 276 மரணங்கள் இதுவரை பதிவாகியுள்ளன.

மேற்படி தரவுகள் நாட்டில் தற்போது கொவிட் 19 தொற்றின் தன்மை எவ்வாறுள்ளது என்பதைக் காட்டிநிற்கிறது. இந்த தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் பல்வேறு வழிகளில் முன்னெடுத்து வருகின்ற போதிலும் அவை எந்தளவு தூரம் வினைத்திறனாகவுள்ளன எனும் கேள்வியை பலரும் எழுப்புகின்றனர்.

அதேபோன்று இலங்கையில் முஸ்லிம் சமூகத்தை பழிவாங்கும் வகையில் கொவிட் 19 தொற்றினை ஓர் ஆயுதமாக அதிகார தரப்பினர் பயன்படுத்துகின்றனரா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனும் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் இந்த விடயத்தினை பகிரங்கமாக சுட்டிக்காட்டியிருந்தார். குறிப்பாக முஸ்லிம்கள் செறிவாக வாழுகின்ற பகுதிகள் மாத்திரம் திட்டமிட்டு நீண்ட காலத்திற்கு முடக்கப்படுவது ஏன் என்ற கேள்வியை அவர் எழுப்பியிருந்தார்.

இப் பின்னணியில்தான் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்கும் விவகாரமும் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இதுவரை 130 க்கும் அதிகமான முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலவந்தமாக எரிக்கப்பட்டுள்ளன. இக் குடும்பங்கள் இன்று தமது உறவுகளை நெருப்புக்குப் பலி கொடுத்த துயரத்தில் நிம்மதியின்றித் தவிக்கின்றன. பலர் உளவியல் ரீதியாக அழுத்தங்களுக்குள்ளாகியுள்ளனர். மறுபுறம் நோய்களுக்கு சிகிச்சை பெற வைத்தியசாலைகளுக்குச் சென்றால் எங்களையும் எரித்துவிடுவார்கள் என்ற அச்சம் முஸ்லிம் சமூகத்தில் குடிகொண்டுள்ளது. வைத்தியசாலைகளுக்கு எந்தவொரு தேவைகளுக்காகச் சென்றாலும் அங்கு அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்வது சகலருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும் சில இடங்களில் குறித்த பரிசோதனை முடிவுகள் போலியானதான முன்வைக்கப்படுவதாக மக்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கை காரணமாக அவசர தேவைகளுக்கும் வைத்தியசாலைகளுக்குச் செல்வதை தவிர்க்கின்றனர். இது அவர்களது நோய் நிலைமைகளை மேலும் அதிகரித்து மரணம் வரைக்கும் இட்டுச் செல்கின்ற அவலம் தோற்றம் பெற்றுள்ளது.

எனினும் எந்தவொரு வைத்தியசாலைகளிலும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் பொய்யாக முன்வைக்கப்படுவதில்லை என முஸ்லிம் வைத்தியர்கள் பலரும் உறுதிபடக் கூறுகின்றனர். தமது நோய் நிலைமைகளை மறைக்காது வைத்தியசாலைகளுக்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு அவர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர். இது தொடர்பாக மக்கள் மத்தியில் நிலவும் வீண் சந்தேகங்களைப் போக்குமாறு முஸ்லிம் சமூகத்தின் தலைமைகளிடம் சுகாதாரத் துறை சார்ந்தவர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

உண்மையில் இது பாரதூரமான நிலைமையாகும். இது தொடர்பில் சமூகத் தலைமைகள் சீரியஸாக சிந்தித்து செயற்பட வேண்டியுள்ளது. கிராமம் தோறும் சுகாதாரக் குழுக்களை அமைத்து அவர்கள் மூலமாக மக்களை தெளிவுபடுத்தவும் சிகிச்சைகளுக்குச் செல்ல வேண்டியவர்களை அச்சமின்றி வைத்தியசாலைகளில் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சில வைத்தியசாலைகளில் நோயாளிகளை அனுமதிப்பதில் நிலவும் கெடுபிடிகள் தளர்த்தப்பட வேண்டும். தனிமனிதர்களாலன்றி கூட்டாக செயற்படுவதன் மூலமே இந்த சவாலை வெற்றி கொள்ள முடியும். இல்லாதுவிடின் கொவிட் 19 தொற்று மற்றும் அதன் பெறுபேறுகளுக்குப் பயந்து, வேறு நோய்களின் தாக்கங்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயரக் கூடும். இது தொடர்பில் சகலரையும் விரைந்து செயற்படுமாறு வலியுறுத்த விரும்புகிறோம்.

Leave A Reply

Your email address will not be published.