ரணில்தான் எமது பிரதமர்: ஐ.தே. முன்னணி தீர்மானம்

0 729

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களும் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர். மேலும் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் பிரதமாராக ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு எவரையும் பிரதமராக தெரிவு செய்யப்போவதில்லையென்றும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அலரி மாளிகையில் நேற்று திங்கட்கிழமை ஐக்கிய தேசிய முன்னணி விசேட கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இதன்போதே இந்த இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பதவியில் அமர்த்தியது முதல் ஐக்கிய தேசிய முன்னணி எதிர்ப்பினையே வெளியிட்டு வந்தது. இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக தெரிவு செய்ய போவதில்லை என உறுதியாக தெரிவித்திருந்தார். அவ்வாறே ரணில் விக்ரமசிங்கவுக்கு பதிலாக வேறு எவராவது பிரதமர் பதவியை ஏற்பார்களானால் அவர்களுக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதியின் இந்த கூற்று குறித்தும் ஐக்கிய தேசிய முன்னணி கடும் கண்டனத்தினையே வெளியிட்டு வந்தது. அரசியல் அமைப்புக்கமைய பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ள ஒருவருக்கே பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும்.

அதேபோன்று 19 ஆவது அரசியலமைப்புக்கு அமைவாக பெரும்பான்மை பெற்ற ஒருவரை பிரதமராக தெரிவு செய்வது போன்று , பாராளுமன்றத்தில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிருக்கிப்பட்டால் மாத்திரமே ஜனாதிபதியால் பிரதமரை பதவி நீக்க முடியும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்தவிதமான சட்ட ஒழுங்குகளையும் பின்பற்றாமல் தனகேற்றவாறு ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி பெரும்பான்மை விருப்பு இல்லாத  மஹிந்த ராஜபக்ஷவுக்கு, சட்டத்துக்கு முரணாக பிரதமர் பதவியை வழங்கி விட்டதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்நிலையிலேயே  நேற்று அரலி மாளிகையில் ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் வகையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவே தெரிவு செய்யப்படுவார். மேலும் அவரை தவிர வேறு எவரும் பிரதமராக தெரிவுசெய்யப்படப் போவதில்லை என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விருப்பினை வெளியிட்டாலும் வெளியிடாவிட்டாலும் பெரும்பான்மையை பெற்ற கட்சியின் தலைவரே பிரதமராக தெரிவு செய்யப்படுவார் என்றும் இந்த விடயமே ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுக்கும் அறிவிக்கப்படும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.