700 கோடிக்கும் அதிக பெறுமதி வாய்ந்த வைரக்கல் கொள்ளை

தேடப்பட்டு வந்த மாத்தறை மல்லி கைது

0 658

 

  • எம்.எப்.எம்.பஸீர்

மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பன்னிப்பிட்டிய அரலியபுர பகுதியில் வைத்து அங்கீகாரம் பெற்ற மாணிக்கக் கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டுக்குள் பொலிஸ் குழு போன்று  வேடமிட்டு அத்துமீறி 700 கோடி ரூபா பெறுமதியான 750 கரட் வைரம் மற்றும் மாணிக்கங்களை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் நேற்றுமுன்தினம் பகல் 2.50 மணியளவில் கல்கிஸ்ஸை பகுதியில் வைத்து மிரிஹான விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை மல்லி என அழைக்கப்படும் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய துசித மதுரங்க என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 5 ஆம் திகதி இடம்பெற்ற இந்த கொள்ளை தொடர்பில் , மேல் மாகாணத்தின் தெற்கு பகுதிக்கு பொறுப்பான  பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த விக்ரமசிங்கவின் நேரடி கட்டுப்பாட்டில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசாத் ரணசிங்கவின் கீழ் மிரிஹானை குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பெரேரா தலைமையிலான பொலிஸ் குழுவினர் முன்னெடுத்த விஷேட விசாரணைகளுக்கு அமைய, சம்பவத்துடன் தொடர்புடையதாக இரண்டாவது சந்தேகநபராக தேடப்பட்டு வந்த மாத்தறை மல்லி என்பவர் கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலிபன் சந்தியில் வைத்து மிரிஹான விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மஹரகமை பகுதியில் உள்ள அங்கீகாரம் பெற்ற மாணிக்கக் கல் வர்த்தகரான கிரிஷான் என்பவரிடம் பெறுமதி மதிப்பீடு செய்யப்படாத தென்னாபிரிக்காவின் வைரம் ஒன்று காணப்பட்ட நிலையில் அதனை தரகர்களினூடாக விற்பனை செய்ய பல நாட்களாக முயற்சித்து வந்துள்ளார். இந் நிலையில் ஜேர்மனைச் சேர்ந்த நபர் ஒருவர் அதனை கொள்வனவு செய்ய கடந்த நவம்பர் முதலாம் திகதி அங்கு  தரகரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது அதன் பெறுமதியை மதிப்பீடு செய்ய  குறித்த ஜேர்மன் பிரஜை பயன்படுத்திய உபகரணத்தில் கோளாறு ஏற்படவே வேறு உபகரணத்துடன் வருவதாக அவர் திரும்பிச் சென்றுள்ளதோடு, மீண்டும் நவம்பர் 5 ஆம் திகதி  புதிய உபகரணத்துடன் அங்கு சென்றுள்ளார். இதன்போது அவரும், அவரது மொழி பெயர்ப்பாளர், தரகர் உள்ளிட்டோரின் முன்னிலையில் அந்த வைரக் கல் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருக்கையில், வேனொன்றில் பொலிஸ் சீருடை அணிந்த ஒருவருடன் ஐவர் அடங்கிய குழுவொன்று தம்மை பொலிஸார் எனக் கூறிக்கொன்டு அங்கு வந்து ‘ நீங்கள் சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்துவதாக தகவல் கிடைத்துள்ளது எனக் கூறி, அங்கிருந்தவர்களை  முழந்தாழிடச் செய்துள்ளது.

இதன்போது, ஜேர்மன் பிரஜையின் கையிலிருந்த வைரத்தையும் பறித்துள்ள அக்குழு, அவரின் கைகளுக்கும் ஏனையோருக்கும் விலங்கிட்டு, துப்பாக்கியால் தாக்கிவிட்டு, தேடுதல் என்ற போர்வையில் மாணிக்கக் கல் வர்த்தகரின் வீட்டிலிருந்த  மாணிக்கக் கற்கல், விற்கப்பட இருந்த வைரம் உள்ளிட்டவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளது.

அவற்றுடன் அங்கு வைரத்தை கொள்வனவு செய்வதற்காக அங்கு வந்திருந்த வெளிநாட்டவரையும் உடன் அழைத்துச் சென்றுள்ள அக்குழு அவரை மஹரகம பகுதியில் விடுவித்துள்ளது. இந் நிலையில் குறித்த  ஜேர்மன் பிரஜையை பொலிஸ் காவலில் எடுத்துள்ள மிரிஹான பொலிஸார் அவரிடம் அவரது மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் வாக்கு மூலம் பெற்றுக்கொண்டுள்ள நிலையில், மாணிக்கக் கல் வர்த்தகரின்  முறைப்பாட்டுக்கு அமைய  மேலதிக விசாரணைகள் மிரிஹான குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளது.

இதன்போது, சம்பவம் தொடர்பில் மிரிஹாண விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் உரிமையாளரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது குறித்த வைரமானது கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் அவர் வெளிநாடு சென்றிருந்த வேளையில் அவர் தொழில்பார்த்த இடத்திலிருந்து கண்டெடுத்ததாகவும், அதனை அவர் இலங்கைக்கு கொண்டு வந்து விற்பனை செய்ய முயற்சித்தும் விற்பனை செய்து கொள்ள முடியாமல், சிறிது காலம் அவர் மனநலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சம்பவ தினத்திற்கு முன்பாக மீளவும் அவர் அதனை விற்பனை செய்யும் நோக்கில் சென்றிருந்த வேளையிலேயே இவ்வாறு வைரம் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் குறித்த நபருடன் தொடர்பு கொண்ட வெளிநாட்டவரும் காணாமல் போயுள்ள நிலையில், சம்பவத்தின் இரண்டாவது சந்தேகநபராக தேடப்பட்டு வந்த மாத்தறை மல்லி நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபரை நேற்றைய தினம் நுகேகொட நீதவான் நீதிமன்ற நீதவான் முன் ஆஜர்படுத்திய வேளையில் நீதவான் அவரை 48 மணிநேர பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்த உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னரும் டுபாயில் உள்ள பாதாள உலக  குழு தலைவன் மாகந்துரே மதூஷின் சகாவான பாதுக்க – வட்டரக்க பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபரொருவர் கடந்த நவம்பர் 23 ஆம் திகதி மிரிஹான குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.