இனவாதத்தை தோற்கடிக்க ஒன்றிணையுங்கள்

தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரகுமார விடிவெள்ளிக்கு விஷேட செவ்வி

0 1,255

2005, 2010, 2015 ஆகிய ஜனாதிபதித் தேர்தல்களின்போது பிரதான வேட்பாளர்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவளித்த நிலையில், இம்முறை ஏன் தனித்துப் போட்டியிடுகின்றது?

குறிப்பாக அந்த ஜனாதிபதி தேர்தல் நடைபெறும்போது நாட்டில் விசேட காரணங்கள் இருந்தன. அந்த  நிலைமைகளை வைத்து நாம் விசேட உபாயங்கள் தேர்ந்தெடுத்தோம். இம்முறை நாம் அவற்றுக்கு மாற்றான உறுதியான மாற்று சக்தியொன்றை கட்டியெழுப்பும் தேவையை உணர்ந்துள்ளோம்.

கடந்த காலங்களில் பிரதான கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கான விசேட காரணங்களாக எதனை குறிப்பிடுகின்றீர்?

குறிப்பாக, இந்தப் பிரதான இரண்டு கட்சிகளும் 71 வருடம் நாட்டை ஆண்டுள்ளன. அதேபோன்று நாட்டுக்குள் அனைத்து விதமான அழிவுகளும் நடைபெற்றுள்ளன. 2015 இல் அன்றுவரை இருந்த ஆட்சிகளில் எமது நாடு அழிவுப்படுகுழியில் தள்ளப்பட்டிருந்தது. ஆகவே இன்னுமொரு முறை ராஜபக் ஷ வெற்றி பெற்றிருந்தால் 2022 வரை அவர்கள் ஆண்டிருப்பார்கள். அதாவது 17 வருட நீண்டகாலம். அவ்வாறான நீண்ட ஆட்சியை இரத்தம் சிந்தித்தான் விரட்டியடிக்க  வேண்டியேற்படும். எனவே இரத்தம் சிந்தாமல் அந்த ஆட்சியை தோற்கடிக்கும் தேவை இருந்தது. எனவேதாம் நாம் 2015 இல் இணைந்திருந்தோம்.

2010 இலும் நாங்கள் முயற்சி செய்தோம். அன்று அவரைத் தோற்கடித்திருந்தால் தாஜுதீன், எக்னொலிகொட போன்ற பலர் உயிருடன் இருந்திருப்பார்கள். அன்றே நாம் அழிவைக்கண்டோம்.

2005 இல் ரணில் ‘Regaining Sri Lanka’ வேலைத்திட்டத்தால் எமது நாட்டு பொருளாதாரத்தை அழிவுக்குக் கொண்டு செல்ல திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார். மின்சாரம், நிலம், துறைமுகச்சேவை போன்றவற்றை வெளிநாட்டு Company களுக்கு வழங்கும் திட்டம் இருந்தது. எனவே அவர்களைத் தோற்கடிக்கும் தேவை இருந்தது. இவை அனைத்தும் நாட்டு மக்களுக்கு குறுகியகால நலன்களைப் பெற்றுக்கொடுத்தாலும்

நீண்டகால அரசியல் கட்சியாக எமக்கு பாதகமாகவே அமைந்தன. இருந்தபோதும் நாம் எமது அரசியலை பொருட்படுத்தாமல் நாட்டின் நலனையே கருதினோம்.

2005 இல் நீங்க ரணிலை தோற்கடிக்க பாடுபட்டீர்கள், 2015 இல் அவரை பிரதமராக்க வழியமைத்தீர்கள்., அதுபோல 2005 மஹிந்தவை அதிகாரத்துக்கு கொண்டுவந்தீர்கள், பின்னர் அவரை தோற்கடிக்கும் வேலைகளை செய்தீர்கள். இப்படி ஒன்றுக்கொன்று முரண்படும் வேலைகளையே மக்கள் விடுதலை முன்னணி செய்கிறது.

மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது ஒன்றுக்கு ஒன்று முரணாகத்தான் இருக்கின்றன. மகிந்தவை கொண்டு வரும்போது இருந்த அதே காரணிகள்தான் மகிந்தவை விரட்டும்போது காரண கருத்தாவாக இருந்தன. ஆகவே வெவ்வேறு ஒன்றுக்கொன்று முரண்செயலாக இருந்தபோதிலும் எமது இலக்கு ஒன்றுதான். அதேபோன்றுதான் நாம் ஆட்சிக்கு சென்றோம். அதேபோன்று ஆட்சியிலிருந்து வெளியேறினால் இதுவும் மேலோட்டமாக பார்த்தால் ஒன்றுக்கொன்று முரண். ஆனால் ஆட்சிக்கு சென்ற அதே காரணம் தான் ஆட்சியிலிருந்து வெளியே வருவதற்கும் காரணமாக அமைந்தது. எனவே எமது நோக்கம், இலக்கு, உபாயங்கள் ஒன்றேதான் அதில் எந்த மாற்றமுமில்லை.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளர்களுக்கு மத்தியில் உங்களால் 50 வீதத்திற்கும் மேல் வாக்குகளை பெற்று வெற்றிபெற முடியாத நிலைமை இருக்கின்றபோது, ஏன் தேர்தலில் களமிறங்க வேண்டும்?

வெற்றி பெறமுடியும். எமது எதிர்பார்ப்பில் வெற்றி இருக்கின்றது. எமது வெற்றிக்காக மக்கள் ஒத்துழைப்பார்கள் என நாம் நம்புகிறோம்.

சஜித் பிரேமதாசவுக்கு செல்லும் வாக்குகளை பிரித்து கோத்தாவுக்கு வெற்றிவாய்ப்பை அதிகரிக்கச் செய்வதற்காகவே இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் நீங்கள் போட்டியிடுவதாக பொதுவான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இதற்கு உங்கள் பதில் என்ன?

குறிப்பாக 2015 இல் மக்கள், ராஜபக் ஷ குடும்பத்தினரைத் தோற்கடித்தனர். பசில் ராஜபக் ஷ அமெரிக்காவுக்கு ஓடிவிட்டார். கோத்தாபய ராஜபக் ஷ யானைகளை பனாகொட முகாமுக்கு வழங்கிவிட்டு வீட்டிலிருந்த (மோரா) மீன் தொட்டியை உடைத்துவிட்டு மிரிஹான வீட்டுக்குச் சென்றுவிட்டார். மஹிந்த ராஜபக் ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒப்படைத்துவிட்டார். ஒருமுறை மைத்திரிபால கூறினார். நாமலின் முதுகில் கையை வைக்கும் பொழுது பயத்தில் நடுங்கியதாக. அந்த ராஜபக் ஷாக்களுக்கு மீண்டும் உயிர்கொடுத்தவர்கள் யார். ராஜபக் ஷாக்களை பாதுகாத்து மீண்டும் ஜனாதிபதி வேட்பாளர்களாக ஆக்கியது ரணில், மைத்திரி, சாகல மற்றும் சஜித்தான்.

எனவே, மீண்டும் ராஜபக் ஷாக்களை தோற்கடிக்க மக்கள் வரம் கேட்பதற்கு அவர்களுக்கு எந்தவித நியாயமான உரிமையும் இல்லை. அதேபோன்று சஜித் பிரேமதாசவுக்கு ஒருபோதும் உரிமையே கிடையாது. சஜித் 19 வருடங்கள் பாராளுமன்றத்தில் இருக்கிறார். நானும் இருக்கிறேன். தர்கா நகரில், அலுத்கமவில்

அடிக்கும்போது, லசந்தவை கொல்லும் போது, எக்னெலிகொடவை கடத்தும்போது, ரதுபஸ்வவெவ, சிலாபம், கட்டுநாயக்க போன்ற இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தும்போது மௌனமாக இருந்தார். இந்த அனைத்து சம்பவங்களுக்கும் சூத்திரதாரியாக இருந்தவர் கோத்தாபய.

19 வருடங்களில் சஜித் ஒருமுறையாவது கோத்தாவின் பெயரை கூறப்பட்டதை ஹன்சாட்டில் காட்டுங்கள். ஏசத் தேவையில்லை. பெயரைக் குறிப்பிட்டதைக் காட்டுங்கள். அவர்கள் நண்பர்கள். ஒருவரை ஒருவர் பாதுகாத்துக்கொள்கின்றனர். பாராளுமன்றத்தில் மட்டுமல்ல தேர்தல் பிரசாரத்தில் கூட கோத்தாபயவின் பெயரை சஜித் கூறவில்லை. எனவே கோத்தாபயவை தோற்கடிக்க சஜித்துக்கு வாக்களியுங்கள் என்பது நகைச்சுவையான விடயம்.

அவர்கள் நண்பர்கள் கோத்தாபய பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கும் பாதுகாப்பை விட அதிக பாதுகாப்பு சஜித்துக்கு வழங்கினார். அதேபோன்றுதான் இந்த அரசாங்கமும் அவர்களை பாதுகாக்கின்றது.

எனவே தான் முஸ்லிம் சமூகத்திடம் வேண்டிக் கொள்கின்றேன். “அவர்கள் வருவார்கள் என்று இவர்களுக்கு வாக்களியுங்கள்” என்று ஆட்சியை கேட்கும் உரிமை இன்றைய ஆட்சியாளர்களுக்கு இல்லவே இல்லை.

62 இலட்சம் மக்கள் இணைந்து ராஜபக் ஷவை விரட்டியடித்தனர். அந்த ராஜபக் ஷாக்களுக்கு மீண்டும் ஒட்சிசன் கொடுத்தது இவர்கள். எனவே உண்மையிலே ராஜபக் ஷாக்களை தோற்கடிக்க வேண்டுமென்றால் சஜித் பிரேமதாச தேர்தல் பிரசாரத்திலிருந்து நீங்கி எமக்கு இடமளிக்க வேண்டும். உண்மையிலே ராஜபக் ஷ குடும்பத்தினரைத்  தோற்கடிக்கும் முஸ்லிம்களின் வாக்குகளை உடைப்பவர்கள் நாமல்ல சஜித் தான். எனவே ராஜபக் ஷவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென்றால் சஜித்துக்கு வழங்கி வேலையில்லை. சஜித் அவர்களை பாதுகாக்கும் அவர்களின் நண்பராவார்.

தேசிய மக்கள் சக்தி அதிகமாக முஸ்லிம் பிரதேசங்களில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. உங்களுக்கு எந்தளவுக்கு வரவேற்பு இருக்கிறது?

தெற்குத் தலைமைத்துவத்தை ஏற்க கிழக்கு மக்கள் ஆயத்தமாவதை முன்னிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர்களுக்கு நான் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்கள் மதவாத, இனவாத அரசியல் முகாம்களில் இருந்து மீண்டும் நாட்டின் தேசிய அரசியலுக்கு வந்து அவர்களுடைய பாரிய ஒத்துழைபையும் உற்சாகத்தையும் எமக்குத் தருவதை முன்னிட்டு பெருமையடைகிறேன்.

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுக் கூட்டங்களுக்கும் பேரணிகளுக்கும் ஆள் பலம் கூடுதலாக இருக்கும், ஆனால் தேர்தல்களில் வாக்குப்பலம் குறைவானதாகத்தானே காணப்படுகின்றது?

அதை மாற்றுவதுதான் எமது போராட்டம். மக்கள் இம்முறை மாறுவார்கள் என்று நாம் நம்புகிறோம். மாறவில்லை என்றால் நாம் மீண்டும் மக்களுக்குக் கூறுவோம் மாறுங்கள் என்று.

முஸ்லிம் மக்கள் மக்கள் தேசிய சக்தியை ஏன் ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறீர்?

முஸ்லிம் சமூகம் முஸ்லிம் மக்களுக்கேயான தனித்துவமான பிரச்சினைகளில் மாத்திரம் அரசியல் செய்வதிலிருந்து மாறவேண்டும் என நான் நினைக்கின்றேன் . தமது மதத்திற்கு தமது கலாசாரத்திற்கு தமது வியாபாரத்திற்கு எதிர்ப்புகள் வரும்பொழுது மாத்திரம் அரசியலில் செயற்பாட்டுக்கு வருவது போதுமானதல்ல.

மொத்தமாக எடுத்துக்கொண்டால் சிங்கள, தமிழ், முஸ்லிம் என நாம் அனைவரும் வாழும்பொழுது அதன் கடன் சுமையில் ஆட்சியாளர்கள் எம்மை நசுக்கி விட்டனர். அதேபோன்று மக்களிடம் அறவிடும் விரியிலிருந்து கோடிக்கணக்கில் திருடுகின்றனர். ஆட்சியாளர்கள் எமது நாட்டை ஏழ்மைக்குத் தள்ளிவிட்டனர். நாடு ஏழை நாடாக இருந்தாலும் ஆட்சியாளர்கள் பணக்காரர்கள். எமது கிராம மக்களின் விவசாயத்தை, மீன்பிடித்தொழிலை நாசமாக்கி விட்டனர். கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற துறைகளையும் பாரிய வீழ்ச்சியில் வீழ்த்திவிட்டனர். அவற்றை அரசியலாக்கி விட்டனர். அங்குமிங்கும் பாயும் கோடி ரூபாய்களுக்கு விற்கப்படும் மந்திரிகளாக இருக்கின்றனர். எனவே நாம் முஸ்லிம்களிடம் இந்த நாசகரமான அழிவு அரசியலை எதிர்த்து நில்லுங்கள்.

அதே வேளை உங்களுடைய பிரச்சினைகளான மத  ஸ்தலங்களுக்கு தாக்குதல், மத வழிபாடுகளுக்கு தீங்கு விளைவித்தல் என்ற பிரச்சினைகளை சிந்தித்தாலும் நாட்டின் பொதுப் பிரச்சினைகளை இந்த இரண்டு கட்சிகளாலும் தீர்க்க முடியாது. எனவே தனிப்பட்ட முறையில் மக்களுக்காகவும் பொதுவாக நாட்டுக்காகவும் முஸ்லிம்கள் எங்களை தேர்ந்தெடுப்பீர்கள் என நாம் எண்ணுகிறோம்.

முஸ்லிம் சமூகமட்டத்தில் எவ்வாறான அரசியல் ரீதியிலான மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என நீங்கள் கருதுகின்றீர்?

முஸ்லிம்கள் சிக்கியிருக்கின்ற தமது பிரதேச, கலாசாரம், சமயம் போன்ற குறுகிய வட்டாரத்திலிருந்து மீண்டு வெளியேறுவதையே நாம் விரும்புகின்றோம். நீங்களும் வாழுகின்ற நாட்டில் உங்கள் பிள்ளையும் வளர்கின்ற நாட்டில் மக்களுடைய பொருளாதாரம் இருக்கின்ற நாட்டில் அனைத்தையும் பற்றி சிந்திக்கின்ற அரசியல் கருத்தாடலுக்கு முஸ்லிம் சமூகம் வரவேண்டும். குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் பழைய சம்பிரதாய அரசியலில் இருந்து மீண்டு புதிய அரசியல் கருத்தாடலுக்கு வருவதை நாம் பார்க்கின்றோம். அவர்கள் முஸ்லிம்களுக்கு மாத்திரம் தனித்துவமான பிரச்சினைகளைத் தாண்டி, நாட்டின் பிரச்சினை. பொதுமக்களின் பிரச்சினை என கலந்துரையாடும் நிலைக்கு வந்துவிட்டன. அது ஒரு நல்ல நிலை.

மக்கள் விடுதலை முன்னணி இனவாதமில்லாத கட்சி என குறிப்பிடுகின்றீர். .வி.மு. ஆரம்பகாலம்முதல் இனவாதத்திலிருந் விலகி பயணித்ததா?

நிச்சயமாக.

அப்படியானால் விமல் வீரவங்க, உதய கம்மன்பில, சம்பிக ரணவக்க போன்ற இனவாதப் போக்குடைய அரசியல்வாதிகள் மக்கள் விடுதலை முன்னணிக்குள் இருந்துதானே உருவாகியிருக்கின்றனர். எப்படி சாத்தியமானது?

கம்மன்பில எமது கட்சியில் இருக்கவில்லை. சம்பிக்க எமது கட்சியில் இருக்கவில்லை. எமது கட்சி இனவாத, மதவாத கட்சி இல்லை என்பதால் தான் இவனாதிகளுக்கு எமது கட்சியில் நிலைத்திருக்க முடியாமல் போனது. இது அவ்வாறான கட்சியென்றால் அவர்கள் இங்கு இருந்திருப்பார்கள்.

கட்சியின் பொது நிலைப்பாட்டிற்கு எதிரான கருத்து, குழுக்கள் வளரமுடியும். அவ்வாறான குழுக்களை கட்சியில் தங்கவைத்துக் கொள்வது பெரும் பயங்கரம். நாம் அவ்வாறானவர்களை கட்சியிலிருந்து விலக்கத்தயார் என்பதை காட்டியிருக்கிறோம். எனவே அவர்களை நீக்கியதன் மூலம் நாம் ஆரம்பத்திலிருந்தே இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் எதிரானவர்கள் என்று காட்டியிருக்கிறோம்.

நான் ஏனைய கட்சிகளுக்கு சவால் விடுக்கிறேன். இனவாத, மதவாத கருத்துகளை வெளியிடுபவர்களை நீக்கும்படி கோத்தாபயவை சூழ்ந்திருக்கும் பெருந்தொகையினர் இனவாத, மாதவாத கருத்து சொல்பவர்கள். சஜித்தை சூழவும் இனவாத, மதவாத கருத்து முன்வைக்கும் பலர் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் ஆட்சியாளர்களின் பங்காளர்கள். ஆனால் நாம் எமது உறுப்பினர்கள் அவ்வாறு செயற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம்.

அண்மையில் கல்முனை பிரதேச செயலக விவகாரம் குறித்து இனவாதப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க முஸ்லிம் தரப்பு நியாயங்களை தெரிந்துகொள்ளாமல் ஒருபக்க நியாயத்தை முன்னிருத்தி பாராளுமன்றில் உரையாற்றியதை நீங்கள் கவனிக்கவில்லையா?

இனவாதப் பிரச்சினையொன்றுக்கு இனவாதம் இல்லாத தீர்வெபன்று கிடைக்கும்போது, இனவாத கோணத்தில் பார்த்து சிலருக்கு வலிக்கும். இது முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரமல்ல.

நாம் திகன, தர்கா நகர் பிரச்சினைகளின்போது சிங்கள இனவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்தபோது “முஸ்லிம்களின் இனவாதம் உங்களுக்கு தெரிவதில்லையா?”  என சிங்கள சமூகம் எம்மிடம் கேட்டார்கள். நாம் இனவாதமில்லாத ஓர் அரசியல் முகாம். ஒரு பிரச்சினையை பற்றி பேசும்போது எந்தவொரு இனவாதத்திற்கும் வலிக்கும் என்பது இயல்பாகும்.

கல்முனை பிரச்சினையைப் பற்றி நாம் முற்றாக ஆராய வேண்டும். கல்முனை பிரச்சினையின்போது  நாம் இருந்த நிலைப்பாடு தமிழ் சபை, முஸ்லிம் சபை என்று பிரிக்கத் தேவையில்லை. எமது தேவை அந்த மக்களுக்கு சமீபமாக இருந்து செயற்படும் சபைகள்.  அதேபோல உள்ளூராட்சி சபைகள் மற்றும் பிரதேச செயலகங்களை துண்டு துண்டாகப் பிரிவதை நாம் விரும்பமாட்டோம். இவைகள் பிரிக்கப்பட்ட காலத்தில் தொடர்பாடல், போக்குவரத்து மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் இப்பொழுது எல்லாம் இலகுவாக இருக்கிறது. எனவே நாம் சபைகள் மேலும் பிரிப்பதை விட பெரிதாகினால் சந்தோஷப்படுவோம். நாம் இந்தப் பிரச்சினைகளைப் பார்ப்பது இந்த விடயத்தில்தான்.

முஸ்லிம் சமூகம் முஸ்லிம் இனவாத அரசியலுக்கு பின்னாள் செல்வதை அவதானிக்கிறீரா?

அனைத்து சமூகங்களிடமும் பிரபல்யமாவது இனவாத அரசியல் தான். சிங்கள சமூகத்தில் சிங்கள இனவாதம். முஸ்லிம் சமூகத்தில் முஸ்லிம் இனவாதம். தமிழ் சமூகத்தில் தமிழ் இனவாதம்.

இனவாத அரசியல் போக்கை தகர்ப்பதற்கு உங்களின் நிகழ்ச்சித் திட்டம் என்ன?

அதற்காகத்தான் எமது தலைப்பாக தேசிய ஒற்றுமை அமைந்துள்ளது. இனவாதம் மக்களிடமிருந்து வருவதொன்றல்ல. மக்கள் இனவாதிகள் அல்லர். இந்தியாவை பாருங்கள், அங்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இரவும் சண்டை நிலவுகின்றது. சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒன்றாக வாழுமிடங்கள் இருக்கின்றன. இந்த மக்களிடையில் அரசியல் செய்வதற்காக குறுகிய நோக்குடைய அரசியல்வாதிகளே இனவாதத்தை தூண்டுகின்றனர். இந்த இனவாத அரசியலை இந்த இனவாதமில்லாத அரசியலால் தான் தாண்டமுடியும்.

மக்கள் தேசிய சக்கதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பொதுவான பாடசாலை கல்வித் திட்டம் உட்புகுத்தப்பட்டிருக்கிறது. இதனால் இன, மத ரீதியிலான பாடசாலைகள் இல்லாமலாக்கப்படலாம். மத ரீதியிலான பாடசாலைகள் இல்லாமலாக்கப்படும்போது கலாசாரத்தை பாதுகாக்க முடியாமல் போகுமென முஸ்லிம் சமூகத்தில் அச்சம் நிலவுகிறது. இதுகுறித்து உங்களின் நிலைப்பாடு என்ன?

இந்த சமூகத்தில் எமது தனித்துவம் ஏனையவர்களிடமிருந்து தூரமாவதற்காக இருக்கக்கூடாது. எனது மொழி தமிழ். எனது சமயம் இஸ்லாம். எனது உடை இதுதான் என்று ஏனையவர்களிடமிருந்து விலக முடியும். எமது தனித்துவத்தை பாதுகாத்துக் கொண்டு சமாதானமாக வாழவேண்டும்.

அதுதான் முக்கியம். ஒரு கலாசாரத்தை தகர்த்து விட்டோ/ விதித்து விட்டோ இன்னொரு கலாசாரம் மேலோங்க முடியாது. தமிழ் பெண்ணின் நெற்றியிலிருக்கும் பொட்டை கழற்றுமாறு கூற எமக்கு உரிமை இல்லை. முஸ்லிம் பெண்ணின் பர்தாவை கழற்றுமாறு கூற எமக்கு உரிமையில்லை. சிங்களப் பெண்ணின் ஒஸரி சாரியை கழற்றுமாறு கூற எமக்கு உரிமை இல்லை. அது அவரவரது கலாசாரம். எமது முயற்சி பொட்டு வைக்கும், பர்தா அணியும், ஒஸரி அணியும் பிள்ளைகளை ஒன்றாக வாழவைப்பது தான்.

தமது தனித்துவங்களை வைத்து ஏனையவர்களிடமிருந்து தூரமாவதற்கு யாராவது முயற்சி செய்வார்கள் என்றால் அது தவறானது. எமது ஆட்சியில் மாத்திரம் தான் அனைத்து தனித்துவங்களும் அனைத்து கலாசாரங்களும் மதிக்கப்படும், பாதுகாக்கப்படும், சமவுடமை வழங்கப்படும். அதுவரைக்கும் தனித்துவங்களை வைத்து ஏனையோரை துன்புறுத்துவர். சில கட்டங்களில் தனித்துவங்கள் ஏனையோரை கஷ்டப்படுத்துவதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன. எனவே தனித்துவங்கள் எதிர்ப்புக்காக அல்ல ஒன்றிணைவதற்காக அமையவேண்டும்.

நாட்டின் அபிவிருத்திக்கு அமைதியற்ற, சமாதானமற்ற சூழல் தடையாக இருக்கிறது. சமாதானத்தை நிலைநிறுத்த சிறந்த கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்தி எதிர்கால சந்ததியை மீட்க உங்களிடம் ஏதும் திட்டம் இருக்கின்றதா?

சமாதானத்தை கட்டியெழுப்ப கல்வி மிக முக்கியமானது. விஞ்ஞானத்தை ஒன்றாகக் கற்கிறோம். கணிதத்தை ஒன்றாகக் கற்கிறோம். சமயத்தைக் கற்கப் பிரிந்து கொள்கிறோம். எனது பாடசாலையில் இரண்டு கத்தோலிக்க மாணவர்கள் இருந்தனர். நாம் பௌத்த மதத்தைக் கற்கும்போது அவர்கள் வெளியே சென்றுவிடுவார்கள்.

நாம் கூறுகின்றோம் எல்லா மதமும் கூறும் மனித விடுதலைக்கான போதிப்பு அனைத்து மாணவர்களுக்கும் கற்பிக்கப்பட வேண்டும். மேலதிகமானவற்றை அந்தந்த மதஸ்தலங்களால் போதிக்கப்படும். ஆனால் கல்வியில் எல்லா மதங்களினதும் அடிப்படை அனைத்து மாணவர்களுக்கும் போதிக்கப்பட வேண்டும். எனவே நாம் மார்க்கத்தை வைத்து பிரிந்து போவதற்கு பதிலாக எல்லா மதத்தையும் போதித்து கல்வியால் தேசிய சமாதானத்தை கட்டியெழுப்பலாம். நாட்டின் அபிவிருத்திக்கும் கல்வி மிகமுக்கியம்.

ஊழல் மேசடிகள் பற்றி நீங்கள் அதிகம் பேசுவீர்கள், எதிர்காத்தில் ஊழல் மோசிடிகளை இல்லாமலாக்க உங்களின் திட்டம் என்ன?

இம்முறை ஊழல் என்பது ஒரு அரசியல் பிரசாரத்தில் தலையங்கமாக இல்லை. ஏனென்றால் இருசாராரும் ஊழலில் ஈடுபட்டவர்கள்.

ஊழல்வாதிகள் தப்பிக்க சட்டத்தின் ஓட்டை காரணமா? அல்லது அரசியல் அதிகாரத்தால் தப்புகின்றனரா?

அரசியல், அரசியலைப் போன்று ஊழலில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களால் பிரித்துக் கொள்வதற்காகச் சண்டையிட்ட உத்தியோகத்தர்களும் இருக்கின்றனர். சில அமைச்சர்கள் ஊழலுக்கு ஒத்துழைத்தவர்களிடமிருந்து வீடுகள் பெற்றுள்ளனர்.

நீங்கள் ஆட்சிக்கு வந்தாலும் அதே அதிகாரிகள் தானே இருக்கப்போகின்றனர்?

ஆனால் அந்த ஜனாதிபதி இல்லையே

ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் வெற்றிபெற்று ஆட்சியமைத்தால் அடுத்த பொதுத் தேர்தல் வரை யார் பிரதமராக இருப்பார்?

நவம்பர் 17 இலிருந்து அடுத்த மார்ச் வரை எமது நாட்டில் ஸ்தம்பிதமான காலம் நிலவும் நான் எண்ணுகின்றேன் . அதில் பிரதமர் பெரும்பான்மையாளரால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அவர் பிரதமராக இருந்தாலும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருந்தாலும் மக்களின் ஆதரவு கிடையாது.

இவ்வாறு மூன்று மாத காலங்கள் இடைநிற்கும் பிரதமர் ஒருவர் இருப்பார். அவருடைய அதிகாரம் செயற்பாடுகள் எல்லாம் மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒருவர் என்பதால் செல்லுபடியாக இருக்காது. இவ்வாறு தான் 3 மாத காலம் செல்லும்.

இதனால் நாட்டின் அரசியல் தேக்கநிலை உருவாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த அதிரடி முடிவால் கடந்த வருடம் இவ்வாறானதொரு சூழ்நிலையை கண்டோம். மீண்டும் இதுபோன்ற நிலைமை உருவாகின், உங்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடுமே?

எனவே தான் 3 மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும். ஒரு ஆட்சி மாறி இன்னொரு ஆட்சி வந்தால் நாடு ஸ்திரமாவதற்கு ஒரு காலம் எடுக்கும். அதற்கும் அப்பால் இம்முறை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமையால் அதிலும் ஒரு ஸ்தம்பிதத்தன்மை ஏற்படும். இவை அனைத்தும் குறுகிய காலத்தில் நீங்கிவிடும். காலத்தால் ஆட்சி ஸ்தாபரம் அடையும் அரசியல் அஸ்தாபரம் பாராளுமன்ற தேர்தலில் தீர்க்கப்படும். எனவே யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த ஸ்திரமற்ற காலத்திற்கு முகங்கொடுக்க வேண்டும்.-vidivelli

  • நேர்காணல் : எஸ்.என்.எம்.ஸுஹைல்

Leave A Reply

Your email address will not be published.